.இந்தக் கதை நம்மூர் அய்யனார் பற்றிய கதை. நம் ஒவ்வொருக்கும் இதில் சம்பந்தம் இருக்கும்- என்பது உண்மை.
எத்தனை
ஆழமாக, நம் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதத்தில் ஒரு படம் எடுக்கப்படுகிறதோ, அது உலக அளவில் பேசப்படும். – ஒரு
பாச மலர் போன்று. தில்லானா மோகனாம்பாள் போல
இப்போது -காந்தாரா ஒரு உதாரணம்.
ஒரு சினிமா என்பது நாம் கடந்து வாழ்ந்த
வாழ்க்கையின் சில சம்பவங்களை ஞாபகப்படுத்தும் போது, நாம் அந்த சினிமாவுடன்
ஒன்றிப் போகிறோம். சில சமயம் நெகிழ்ந்து கூடப் போகிறோம். அடுத்த தலைமுறைக்கு நாம் மிகவும் மதித்த ஆன்மீக
ஆச்சர்யங்களை கொண்டு போய் சேர்க்காமல் இருந்துவிட்டோமோ என்ற ஒரு குற்ற உணர்வு கூட நம்மை
சூழ்ந்து கொள்கிறது.
இந்தக் கன்னட படம், உலகம் முழுவதும்
வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது என்பது பெரிய விஷயமல்ல. தமிழ் நாட்டில்
லேசில், ஒரு வெளி மாநிலப் படம் ஓடாது. அதில் எனக்குத்
தெரிந்தவரை, இரண்டு படங்கள் விதி விலக்கு. ஒன்று சங்கராபரணம், இரண்டு, காந்தாரா. நான் சொல்வது கதை அம்சம் உள்ள படங்கள். Fantasy படங்கள் அல்ல.
சினிமா படங்களைத் தவிர்த்து பல வருடங்கள்
ஆகிறது. சமீபத்தில் பொன்னியின் செல்வனையும், காந்தாராவையும் பார்க்க நேர்ந்தது. முதலில்
பொன்னியின் செல்வனைப் பற்றித்தான் எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் காந்தாராவைப் பார்த்தவுடன் நான் “ஆடிப்”
போனேன். 2 நாள் நான் சரியாக பேச
முடியவில்லை. கிராபிக்ஸ் படங்களும், மிகைப்படுத்தப்பட்ட கதைகளும், துப்பாக்கி, தோட்டா, கத்தி
என்று, படம் பார்க்கும் நமக்கு ரத்தம் வரும் வரை சண்டை
போட்டுக்கொள்ளும் படங்களும் வரும் இந்தக் காலத்தில், நாம்
மண்ணை நேசித்து, மிகவும் யதார்த்தமாக,
என் இளமைப் பருவத்தில், என் கிராமத்தில் நான் பார்த்து ரசித்த,
அந்த அழகை வெளிப்படுத்திய அந்த பெயர் தெரியாத அந்த “காந்தாரா” ஹீரோ வுக்கு ஒரு
“சபாஷ்”
“வராஹ ரூபம்” – என்ற ஒரு பாடல் பிலஹரியிலும், பைரவியிலும், தோடியிலும், மிகவும் பிரபலமாகி நம்மை மயக்க, படமோ நம்மை நெகிழ வைக்கிறது
இந்தக் கட்டுரையை மூன்று பாகங்களாக
பிரிக்கலாம்:
ஒன்று படம் நமக்குச் சொல்லும் பாடம்;
நிலம்
(இயற்க்கை)
சார்ந்த வாழ்க்கை நாம் வாழாமல் போனால், இயற்கை, (பெருமாள்) எப்படி வராஹ உருவம் (பன்றி) எடுத்து,
அசுரரை அழித்தாரோ (ததோ), அதுபோல், வேறு
ஒரு உருவம் கொண்டு நம்மை அழித்துவிடும் – இதுதான் காந்தாரா படத்தின் கதை.
நம்
இயற்கை என்பது கடவுள் போட்ட பிச்சை. நாம் ஒவ்வொரு முறை இயற்கையை அழிக்கும்போது நம்மை
எச்சரிக்கிறது. அப்படியும் நாம் உணரவில்லை என்றால்- சுனாமி தான்.....என்பதும்
இந்தக் கதையில் சொல்ல வரும் முக்கியமான விஷயம்.
இந்தப் படம் முழுக்க ஆன்மீகப்
(தெய்வ) படம் அல்ல. தேவர்களின் படமும் அல்ல. சிவ பெருமான் அனுப்பிய பூத கணங்கள், அய்யனார் வடிவில் வந்து
நம்மையும, நம் நிலத்தையும் காப்பவர்கள். அதனால் நாம்
கடவுளுக்கு கொடுக்கும் மரியாதை, நிலத்திற்க்கும் கொடுப்போம்.
அந்த பூத கணங்களுக்கு மரியாதை செய்வது போல், கர்நாடகாவில்-
“கோலா நடனம்’ என்று ஒன்று இன்றும் உண்டு. நம் கிராமத்தின்
தெருக்கூத்து போல இருக்கும்.
நம்மூர் அய்யன்னாரிலேயே, பல வகை உண்டு, காத்தவராயன், மதுரை வீரன்,
கருப்பண்ண சாமி போல. நல்ல அய்யனாரும் உண்டு, எதிர் மறையும்
உண்டு. கர்நாடாகாவில், பஞ்ஜூரிலி,
குலிகா – என்று இரண்டு தெய்வங்கள் பிரசித்தம், முதல் சாது, இரண்டாவது உக்ரமான சாமி’.
மண்ணுக்காக நடந்த சண்டை தான்
மகாபாரதம். பஞ்ச பூதங்களை நாம் வணங்காவிட்டால் அது திருப்பி நம்மைத் தாக்கும்போது
எங்கே செல்வோம் ? என்ற கருத்து தான் இந்தப் படம்.
படத்தின் கதையை, சில வரிகளில் சொல்லி
விடலாம். தான் மிகவும் நேசித்த நிலத்தையும், அந்த நிலத்தை
காலம் காலமாக காத்து வரும் “அய்யனாரையும்” பயந்து போற்றி வணங்கும் அந்த கிராமத்து
மக்கள். கிராமத்தில் Forest ஆபிசர் வந்து, நிலத்தை அபகரிக்க முயல்கிறார், மறு புறம், அந்த கிராம ஜமீன்தார், நிலத்தை ஒரு புறம் அபகரிக்க
முயல்கிறார். அந்த கிராமத்தில் உள்ள ஒரு ஹீரோ- வந்து அதற்க்கு ஒரு முடிவு
கட்டுகிறார், அது எப்படி ? என்ன
என்ப்துதான் ? - இது
சினிமாத்தனமாக எடுத்திருந்தால், தெலுங்குப் படம் ரேஞ்சுக்குப்
போயிருக்கும்.. யதார்த்தமாக, ஒரு துளி கூட சினிமாத்தனம்
இல்லாமல், ஆன்மீக நெடியுடன் எடுக்கப்பட அற்புதமான படம்.
டைரக்டர்
ஒரு பேட்டியில் “இந்த பட வெற்றிக்கு, இந்த படத்தில் உள்ள ஆன்மீகம் தான் காரணம்” என்றார். அதான் உண்மை.
இந்தப் படத்தில், காதை கிழிக்கிறாற்போல்
ஒரு சத்தம் போடுவார், அந்த சத்தம் கேட்கும் வரை உள்ள நிலம்
எனக்குச் சொந்தம் – என்று நிம்மதியையும் சந்தோஷத்தையும் தர வல்ல- எல்லை சாமி
சொல்லுவது மாதிரி கதை போகிறது.
அந்த சத்ததை இப்போது நீங்கள்
செய்ய முடியமா ? என்று ஒரு நிருபர் கேட்க, “அது இப்போதும் எங்கள்
கிராமத்தில், புனிதமாக கருத்தப்படும் அந்த ஓசை, அது நாங்கள் வெளியில் சொல்லி, அந்த சப்தத்தின்
புனித்ததை கெடுக்க விரும்பவில்லை” என்றார். மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.
“பூத காலா” நடனம் என்று இந்த படத்தில் ஒன்று வரும். ஒரு மாதிரி கதகளி
நடனம் போன்று. அதிகமான மேக்கப் போட்டு, இந்த
நடனம் பார்க்கும்போதே நமக்கு ஒரு தெய்வீக உணர்வு வரும். ஹீரோ ஒரு பேட்டியில் சொல்கிறார்- “இந்த
உடையுடன் ஷூட்டிங் நடக்கும்போது நான் சாப்பிடவில்லை, ஏனெனில், இந்த வேடம், எங்கள் கிராமத்தில் பக்தியின் உச்சம்”
எனக்குத் தெரிந்த அய்யனார்:
எனக்கும் என்
குடும்பத்தினருக்கும் அய்யனார் மேல் மிக உயர்ந்த பக்தி, மரியாதை உண்டு. இந்தப் படத்தை பற்றி நான் நினைத்து எழுதும்போது, எனக்கு ஒரு ஆச்சர்யமான விஷயம் நடந்தது.
என் மனைவி ஆச்சர்யமாக சௌந்தர்யலஹரியில்
மூன்றாவது ஸ்லோகத்தை எனக்குச் சொன்னாள். அது, “தம்ஶ்ட்றா முரரிபு வராஹஸ்ய பவதி” என்று “ஸம்ஸாரக் கடலில் மூழ்கியவனுக்கு, எப்படி, பூமியை, ஹிரண்யாக்ஷன் பாதாளத்தில் தள்ளியபோது, நாராயணன்ன் வராஹ அவதாரம் எடுத்து, தனது தெற்றுப்
பல்லால் மேலே கொண்டு வந்தாரோ, அப்படி அம்பாள் ரக்ஷிப்பாள்”
என்கிறார்.
பூமித்தாயை போற்ற வேண்டும்
என்பது என் சின்ன வயதிலேயே நான் கற்ற பாடம். எங்கள் கிராமத்தில், தைப்பொங்கல் பொது
எங்கள் வயல் நிலத்திற்க்குச் சென்று நமஸ்காரம் செய்வோம். நெல் விதை தெளிப்பதற்க்கு
முன்பு, ஆட்கள் நமஸ்காரம் செய்துவிட்டுத்தான் செய்வார்கள்.
சூர்ய வழிபாடு, பஞ்ச பூதங்கள் வழிபாடு என்பது நாம் வழி
வழியாக வரும் வழக்கம். நானும் நிலத்தில் நமஸ்காரம் செய்திருக்கிறேன். கதிர் அறுத்து
நெல் மூட்டை கட்டும், அந்த இடத்தில் நடக்கக் கூட மாட்டோம்.
அவ்வளவு மரியாதை.
செம்மங்குடியில் நான்
குழந்தையாக இருந்தபோது, ஊருக்கு வெளியே காவல் தெய்வமாக இருக்கும் அய்யனார்,
மதுரை வீரன், கருப்பண்ண ஸ்வாமி போன்ற பல தெய்வங்களை
பார்ப்பேன். சற்று தள்ளி இருக்கும் ஒரு கிராமத்தில், ஒரு
பெரிய குதிரையும், பெரிய யானையும் இருக்கும். பயமாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கும். என் தாத்தா, அந்தக்
கோவிலின் வழியாக நடந்து போகும் பொது, செருப்பை கையில்
எடுத்துக் கொண்டு நடப்பார். நாம் ஊரைக்
காப்பாற்றும் தெய்வம் என்பதும், அம்மை போன்ற கொடும்
வியாதிகள் வரும்போது, மந்திரிக்க நான் அந்தக் கோவில்
பூசாரியிடம் சென்று வீபூதி வாங்கி வருவேன்.
காஞ்சி மகா பெரியவர், செம்மங்குடி விஜயம் செய்த பொது (1935 என்று நினைக்கிறேன்) அவருக்கும் 'காளி, மகமாயீ ரூபத்தில் வந்து இருக்க" 3 மாதம் செம்மங்குடியிலேயே இருந்தாராம். "அம்பாள் என் கூடவே இருக்கிறாள்" என்று சொன்னாராம். இந்த விஷயம் இந்த ஊர் மகமாயீ கோவில் கல்வெட்டில் இன்றும் பார்க்கலாம்
செம்மங்குடியில், கரும்பாயிரம் ஸ்வாமி, மகமாயீ என்று எல்லை காவல் தெய்வங்கள் உண்டு. வருடா வருடம், அரிச்சந்த்ரா நாடகம் உண்டு. என் சித்தி சொல்லும்போது “ ஒரு முறை
அரிச்சந்திர நாடகம் பதில், ராமர் நாடகம் போடப்பட்டபோது, கிராமத்தில், அம்மை நோய்,
மிகவும் உக்ரமாக தாக்க, சாமி வந்த பூசாரியிடம் கேட்க, நாடகத்தை மாத்தக் கூடாது என்று
சொல்ல பிறகு அரிச்சந்த்ரா நாடகம் தான் வருடா வருடம் போட்டார்களாம்.
என்னுடைய குல தெய்வமான வரகூரில்
உள்ள பெரமனார் கோவிலுக்கும் ஒரு கதை உண்டு. கேரளாவில் உள்ள ஒரு பெரியவர், மாந்த்ரீகம் தெரிந்தவர், அவர் கூடவே அய்யானாரை, நமது மந்த்ர பலத்தால்
அழைத்து வர, அய்யனார் வரகூர் கிராமத்து எல்லையில் தங்கிவிட, அந்த பெரியவர் வரகூரில் தங்கியதாக சொல்வார்கள். இன்றும் அது காவல்
தெய்வமாக அந்த கிராம மக்களை ரக்ஷித்து கொண்டு இருக்கிறார் என்பதும் உண்மை.
எருமைத்தலை அய்யனார் என்று சேங்காலிபுரத்தில்
(குடவாசல் அருகே) ஒரு கோவில் உண்டு.
ஆனந்தராம தீக்ஷிதர் “திரயம்பாக புராதீசம்” என்று ஒரு ஸ்லோகம்
சொல்வார். அது இந்த அய்யனார் தான்.
கல்லில் செய்து, காவல் தெய்வமாக, இன்றும் மயிலாபூரில், முண்டககன்னியம்மன், இருக்கிறாள் என்பதும் உண்மைதானே.
!
கொஞ்சம் அய்யப்பன்:
அய்யப்பன் ஒரு அவதாரமா, அல்லது அய்யனார் தான்
அய்யப்பனா என்று பல கேள்விகள் எழுகிறது. ஏனென்றால். பாற்கடல் கடையும்போது, விஷ்ணு மோஹினி அவதாரமாக வந்த்தும். சிவபெருமானுக்கும், மோகினி அவதாரத்திருக்குமாய் பிறந்தவர் தான் சாஸ்தா- என்றாலும். இந்த
சரித்திரம், ஸ்ரீ மத் பாகவத்தில் இல்லை.
பகவத்பாதாள், சிவ பாதாதி கேச
ஸ்தோத்ரம் என்று ஒரு கிரந்தம் அருளிச் செய்து இருக்கிறார். அதில் ஆரம்ப
ஸ்லோகத்தில் அய்யப்பனைப் பற்றி ஒரு ஸ்லோகம் வருகிறது. எனக்குத் தெரிந்து இதுதான்
ஆதாரபூர்வமான அத்தாட்சி”
“ஆரூடப் பிரௌட வேக ப்ரவிஜிதபவனம்
துங்க துங்கம் துரங்கம்.......மாமகீனே” – இதன் தமிழ் அர்த்தம் இப்படி இருக்குறது.
“மிகவும் உயரமான குதிரையில், ஆரோகணித்து, காற்றை விட வேகமாக செல்பவரும், கருப்பு வஸ்த்ரம்
அணிந்து இருப்பவரும், கையில் வில்,
அம்பு, வேல் வைத்து இருப்பவருமான தர்ம சாஸ்தா, நம்,
மனதில், பொறாமை, காமம், லோபம் போன்ற பலவிதமான விஷ ஜந்துக்கள்
இருந்து, பீதியக் கிளப்பும் இந்த நேரத்தில், என் மனதில் நிரந்தரமாக தங்கி இருந்து, இந்த விஷ
ஜந்துக்களை வேட்டை ஆடட்டும்.” என்கிறார்
அய்யப்பன் தான் அய்யனார்.
சபரிமலைக்குப் போகும்போது, திருச்சியில் உள்ள
இரட்டை மலை அய்யனாருக்குச் சென்று, வணங்கி விட்டுச்
செல்வதும், புது வருடம், திருச்சி, மேலூரில் உள்ள அய்யனாரை வணங்கி செல்வது, சர்வ
சாதாரணமான ஒன்று.
சபரிமலை செல்லும்போது, கரிமலை இறக்கத்தில், பகவதிக்கென்று, (காளி) கல்லில் செய்து ஒரு சிலை வைத்திருப்பார்கள்.
அது கோவில் இல்லை. கோபுரம் இல்லை. போகிற போக்கில் கல்லோடு கல்லாக இருக்கும். அதற்கு
நிறைய குங்கும், மஞ்சள் அர்ச்சனை செய்து, வழித்துணையாக வர வேண்டும் என்று வணங்கிச்
செல்வார்கள். அய்யப்ப பக்தர்கள். – இதுவும் ஒரு பக்தி.
முடிவுரை:
சினிமா
கடைசியில், ஹீரோ, வராஹ அவதாரம் (சாமி வருவது போல்) ஒன்று
எடுத்து, எதிரியை த்வம்ஸம் பண்ணுவார் பாருங்கள்- எச்சிலைக்
கூட முழுங்காமல் பார்த்தேன்.
இப்படி என் வாழ்க்கையில்
பின்னிப் பிணைந்த ஒரு கதையை, அழகாக காட்டிய இந்த நடிகருக்கு என் உளங்கனிந்த நன்றிகள்.
2 comments:
தங்கள் பதிவு அருமை முதல் தடவையாக படிக்கிறேன்
Thanks Madam
Post a Comment