Thursday, 15 June 2017

வரகூரில் பிறந்து மண்ணுக்கு பெருமை சேர்த்த மஹாமஹோபாத்யாயர்கள்

இது 1981  (20-8-1981) அன்று, வரஹூரில் நடைபெற்ற கும்பாபிஷேகம், தொடர்பாக வெளிவந்த “மலரில்” வந்த கட்டுரை.

இந்தக் கட்டுரை ஸ்ரீ வை.நடராஜ அய்யர் அவர்களால் எழுதப்பட்டது, அதனால் அவருக்கு முதற்கண் என் அனந்த கோடி நமஸ்காரங்கள்.  அவர் இந்தக் கட்டுரை எழுதாவிட்டால், வரஹூரில் பிறந்த மகான்களைப் பற்றி நமக்குத் தெரியாமல் போயிருக்கும். இதை நான் திரும்பவும் எழுதும் காரணமே, இப்போது இருக்கும் வரஹூர் ஆஸ்திகர்களும், மற்ற நண்பர்களும், இவர்களின் பெருமையை உணர்த்துவதற்கு தான்.

இப்போது பிரயாண வசதிகள் பல இருந்தும் கூட, நம்மால் ஒரு இடத்தில் இருந்து, வேறொரு இடத்திக்குப் போவது, பிரம்மப் பிரயத்னமாக இருக்கிறது. ஆனால், அந்தக் காலத்தில், இந்த வசதிகள் இல்லாதபோதே, மேல் படிப்புக்காக சிதம்பரமும், சென்னையும், ஏன், டெல்லி கூட போய் ஜனாதிபதியிடம் இருந்து பரிசு வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, மிகவும் பூரிப்பாக இருக்கிறது

நம்மிடையே, இப்போது வெகு சிலரே பழைய முறையில் ஆசார அனுஷ்டானத்துடன் குருமுகமாக பக்தி ச்ரத்தையுடன் சாஸ்திரங்களைப் படித்து, படித்த சாஸ்திரங்களை பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு பிராசீன சம்ப்ரதாயத்தில் வித்யாபியாசம் பெற்று, உலகத்திற்கு ஆத்ம வித்தையை போதித்து வந்த, இப்போது சூக்ஷ்மமாக, வரகூரில் இருந்து, நமக்கும் அனுக்ரகம் செய்து கொண்டிருக்கும்:

மகாஸ்ரீ  வரகூர் ஸ்ரீ கல்யாண சுந்தர சாஸ்த்ரிகள்

வரகூர் பிரம்மஸ்ரீ ஸ்ரீ. வி. ஏ. வி. குருஸ்வாமி சாஸ்த்ரிகள்

ப்ரும்மஸ்ரீ மார்க்க சகாயம் அவர்கள்

இவர்களுடைய அருமை பெருமைகளைத் தெரிந்துகொண்டால், வரஹுரில் பிறந்ததற்கு பெருமைப் படலாம்.

வரஹூரில் பிறந்து, இப்போது இருக்கும் வேத பாடசாலையில் படித்து, டெல்லி வரை சென்று, ஜனாபதியிடம் விருது பெற்றார்கள் என்பதை கேட்கும்போது/படிக்கும்போது  நாம் எவ்வளவு பாக்யசாலிகள் என்பது புரியும் !!

“எந்தரோ மகானுபாவுலு, அந்தரிகி வந்தனமு” என்று பக்கத்துக்கு ஊரான திருவையாறில், பிறந்து, சீதா லக்ஷ்மண அனுமன்(த்) சமேதராக ராமர் , எழுந்தருளி காட்சி கொடுத்து ஆட்கொண்ட, ஸ்ரீ தியாகராஜர் அவர்கள் சொன்னபடி, நாம் மேற்கூறிய மகான்களைப் பற்றி சற்று சிந்திப்போம்.

வரகூர் ப்ரும்ம ஸ்ரீ கல்யாண சுந்தர சாஸ்த்ரிகள்

பரம்பரையான சாஸ்த்ரக்ஞர்களுடைய வம்சத்தில் இவர் கி.பி. 1911 ல் பிறந்தார்.  ஆரம்பத்தில் கும்பகோணம் ராஜா பாடசாலையில், மகாமஹோபாத்யாய யக்ஞஸ்வாமி சாஸ்திரிகளிடம் சம்ஸ்க்ருதம் கற்றார். பிறகு  மயிலாப்பூர் சம்ஸ்க்ருத கல்லூரியின் மகாமஹோபாத்யாய கருங்குளம் கிருஷ்ணா சாஸ்த்ரிகளிடம் படித்து கி.பி 1982 ம் ஆண்டு சாஹித்ய சிரோமணி பரீக்ஷையும் அதே சாஹித்ய விசாரதா பரீக்ஷையும் பாஸ் செய்தார்.

அண்ணாமலை சர்வ கலா சாலையில் பண்டித பயிற்சி முறையையும் கி. பி. 1933 ல் பூர்த்தி செய்தார். கும்பகோணம் அய்யுவய்யர் வேதாந்த பாடசாலையில், சாஸ்திர ரத்னாகரம் ப்ரும்மஸ்ரீ வேப்பத்தூர் வைத்யநாத சாஸ்திரிகளிடம் 1934-37 ல் வேதாந்தம் படித்து வேதாந்த சிரோமணி பரீக்ஷையில் சிறப்பாக தேர்வு பெற்றார்.  1938 ம் ஆண்டு இவர் மறுபடியும்
மதராஸ் சம்ஸ்க்ருத கல்லூரியில், RESEARCH SCHOLAR ஆக சேர்ந்து, “வ்ருத்தி மீமாம்ஸா” என்ற ஆராய்ச்சி கிரந்தத்தை வெளியிட்டார்.
கும்பகோணம் அத்வைத சபா, திருச்சிராப்பள்ளி அத்வைத சபா, இவைகளில், நடத்தப்பட்ட, அனேக வித்யா பரீட்சைகளில் ஸ்ரீ கல்யாண சுந்தர சாஸ்த்ரிகள் சிறப்போடு தேர்வு பெற்று, சன்மானம் பெற்றார்.
மதராஸ் Government Oriental Manuscripts லைப்ரரியில் 16 வருடங்கள் பணியாற்றினார்.  அது சமயம் கையேட்டுப் பிரதியாக இருந்த அனேக அபூர்வ கிரந்தங்களை அச்சிட்டுப் பிரசுரப்படுதினார்.  தவிர தன்னுடைய ஸ்வதந்திர க்ரந்தங்கள் பலவற்றையும் இந்தக்காலங்களில் அச்சிட்டுப் பிரசுரித்தார்.

விவேகானந்தா கல்லூரி நிர்வாகிகள் வேண்டுகோளின் பேரில் M.A வகுப்பு மாணவர்களுக்கு வேதாந்த பாடம் சொல்வதற்கு ஆசிரியராக ஒப்புக் கொண்டு பணி ஆற்றினார்.

அதிலிருந்து ஒய்வு பெற்று பிறகு யுனிவெர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் நியமனம் பெற்று விவேகானந்தா காலேஜில் RESEARCH PROFESSOR ஆக பணியாற்றினார்.

இவ்வளவு உத்தியோக அலுவல்களுக்கிடையில் 25 வருஷ காலமாக சென்னையில் நுங்கம்பாக்கம் உபநிஷத் ஆஸ்ரமத்தில்- சாந்திபாட புரஸ்காரம் சம்பிரதாய முறையில் அத்யயன தினங்களில் ஆசார்ய சங்கரருடைய பிரஸ்தானத்ரய பாஷ்யங்களை தொடர்ந்து பாடம் சொல்லிவந்தார்கள். அனத்யயன தினங்களில் இதர பல அத்வைத கிரந்தங்களை பாடம் சொன்னார்கள். இவர்களுடைய பாடப் ப்ரவஸனங்களைக் கேட்டு ஆத்ம விஷயத்தில் விழிப்பு பெற்ற லௌகிகர்கள் கணக்கில் அடங்காது.

இந்த மகத்தான சேவையைப் பாராட்டி, காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கராசார்யாள் 1963 வருடம், “பாஷ்ய பாவக்ஞ” என்ற விருதை அளித்தார். இது மதிப்பு மிக்க விருது. ஏற்கனவே, இந்த விருது, முதல் தடவையாக வரகூர் வெங்கட்ராம சாஸ்திரிகளுக்கு வழங்கப் பட்டது. அவரும், இவரது உறவினர்தான்.

ஸ்ரீ கல்யாண சுந்தர சாஸ்திரிகளுடைய சம்ஸ்க்ருத வித்வத்தை சன்மானித்து 1979 ம் ஆண்டு பாரத ராஷ்ட்ரபதி யோக்யதா சன்மான பத்திரமும் RS 5000 With Certificate of Honour வழங்கி இருக்கிறார்.
தொடரும்.




Tuesday, 6 June 2017

वेङ्कटेश समो देवो न भुतो न भविष्यति - திருவேங்கடமுடையானை நான் பார்க்கச் சென்ற கதை.....

திருப்பதி என்ற இந்த க்ஷேத்ரம் மட்டும், நாம் நினைத்தால் போகவே முடியாது. நீங்கள்  cango  போன்ற அரிதான நாட்டுக்குக் கூட போய் வரலாம். ஆனால், திருப்பதியில் உங்கள் பருப்பு வேகவே வேகாது. !!
அது “பாலாஜி” நினைக்க வேண்டும்.  நிதர்சனமாக, அருள் பாலிக்கும் தெய்வம் அவர்.. அதனால்தான் அன்னமாச்சார்யா, “மாங்கு மாங்கு” என்று திருப்பதி பாலாஜியைப் பற்றி மட்டும், கீர்த்தனைகள் எழுதி இருக்கிறார். அதில் ஒரு பாடலில். (ராகம்- வசந்தா) எழுதுகிறார்.
vADe venkaTAdri meeda vara daivamu
pODimitO poDa joope poDavaina daivamu ||

He is the God on Venkatadri that bestows boons.  He is the top most God appearing in all splendour

திருப்பதி வேங்கடேசனு(ரு)க்கு சமமான தெய்வம் கடந்த காலத்திலும் இலை, எதிர் காலத்திலும் இல்லை என்பதும், திருமலா க்ஷேத்ரம் போல, ஒரு க்ஷேத்ரம்  இந்த உலகத்தில் எங்கும் பார்க்க முடியாது என்றும், சம்ஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு.

பல முறை நான் நினைப்பதுண்டு.  நாளில்லை, கிழமை இல்லை, எப்போது பார்த்தாலும், கூட்டம்...என்ன தான் இருக்கிறது ? என்று. ஆனால் அந்த ஒரு க்ஷணம், அவர் சன்னதியில் நின்றால், பிறப்பு அற, நம்மை ஆனந்தக் கண்ணீரில் ஆழ்த்தக் கூடிய அனுபவமாகத்தான் இருக்கும்.  (அன்று (1-5-17) தர்ம தரிசனம் 12 மணி நேரம் ஆகியது என்றும், Rs. 300 ரூபாய் தரிசனம் 8 hours ஆகியது என்றும் கேள்விப்பட்டேன்.)  குழந்தைகளையும், உறவினர்களையும் அழைத்துக்கொண்டு, உச்சி வெய்யிலின் வெப்பத்தோடு, queue ல் நின்று கொண்டிருக்கும் மக்கள், ஒவ்வொருவரையும், தனித்தனியாக அருள் பாலிக்கும், கலியுகக் கடவுள். அவர் 22 மணி நேரம், ஓய்ச்சல் ஒழிவு இல்லாமல் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

தமாஷாக சொல்வதுண்டு, மற்ற தெய்வங்களெல்லாம், பாலாஜியிடம், கேட்டார்களாம் “எங்களுக்கு மட்டும் வருமானம் குறைவாக இருக்கிறது. ஆனால் உனக்கு மட்டும் கஜானா நிரம்பி வழிகிறது. இது எப்படி சாத்தியம்” என்று

அதற்க்கு பாலாஜி சொன்னாராம். “நீங்கள் 8 மணி நேரம் duty பார்க்கிறீர்கள்.  நான் sleepless, almost all shift duty பார்க்கிறேன். அதான் எனக்கு ஜாஸ்தி வருமானம்” என்றாராம்

வயதாகிவிட்ட படியால், நான் எந்த ஒரு நிகழ்வையும், கடவுளோடு தொடர்பு கொண்டு, அவர் எனக்கு கொடுக்கும் punishment ஆகவோ அல்லது அருள் ஆகவோ பார்க்கத் தொடங்கி விட்டேன்.
கடைசியில் இருந்து என் அனுபவத்தை ஆரம்பிக்கிறேன்:
திருமலா பிரயாணம் முடிந்து கீழ் திருப்பதி வந்து, தமிழ் நாடு பஸ்ஸில் உட்கார்ந்து கொண்டு நிமிர்ந்து பாத்தால், பஸ்சில் எழுதப்பட்ட இரண்டு குறிப்புகள் என்னைக் கவர்ந்தன.  (Bus No TN 54- N 1521).

முதலாவது

“நீ கடவுளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், அவர் நூறு அடி உன்னை நோக்கி எடுத்து வைக்கிறார்.

இரண்டாவது

குணம் நாடி குற்றம் நாடி, அவற்றுள், மிகை
நாடி மிக்கக் கொளல்-  குறள்

சடாரென்று ஓங்கி ஒரு அறை விட்டாற் போல், இரண்டு குறிப்புகளுமே, என்னுடைய திருப்பதி விஜயத்தில் என் அனுபவத்தை, பறை சாற்றிய உண்மை.

இன்னொரு விஷயம் என்ன என்றால் நான் போக வேண்டாம் என்று நினைத்தாலும் கூட, அவர் நினைத்தால் அவர் சன்னதிக்கு வந்துதான் ஆக வேண்டும்.  அது தான் நடந்தது எனக்கு.

நான் திருப்பதி போகவேண்டும் என்று plan பண்ணாத விஜயம் அது. திருப்பதி போக வேண்டுமென்றால் தரிசனத்திற்கு “on line booking”  தான். அங்கு போய் டிக்கெட் வாங்குவதென்பது என்பது கிடையாது. சாதாரணமாக, 3 மாதத்திற்கு முன்பே டிக்கெட் புக் ஆகி விடுவதால், திடீரென்று, தரிசனம் என்பது நடக்காத ஒன்று.  (ஒரு வேளை senior citizen - உதவியாளராக (escort) சென்றால், தரிசனம் கிடைக்கும்.  இதற்கு ஆன்லைன் புக்கிங் தேவை இல்லை.)

சேங்காலிபுரம் சுப்பிரமணிய தீட்சிதர், திருமலாவில், ஸ்ரீ மத் பாகவத சப்தாஹ பாராயணம் செய்து கொண்டிருந்தார்.  அது 7 நாள் வைபவம். திருமலாவில் SMC கல்யாண மண்டபம் ஒன்று வாடகைக்கு எடுத்து, மஹா விஷ்ணுவின் அவதார பெருமைகளைப் போற்றி சொல்லும் சப்தாஹம் மிகவும் விஷேஷமான ஒன்று. 300 சப்தாஹங்களைச் செய்து, காஞ்சி பெரியவர்களால் கௌரவிக்கப்பட்ட, தீக்ஷிதர், உபன்யாசம் செய்ய ஒப்புக்கொண்டு திருமலா வந்திருந்தார். அவருடன் 20-30 பேர் வந்திருந்தார்கள்.  காலையில் மூல பாராயணம் (in Sanskrit).  மதியமும், இரவும், பிரவசனம். நடுவில் அஷ்டபதி, திவ்ய நாமம், டோலோத்சவம், போன்ற பல நிகழ்சிகள் உண்டு.  வருபவர்களுக்கு, டிபன், சாப்பாடு காபி இத்யாதிகள். முக்யமாக VIP தரிசனம்,

கல்யாண மண்டபம், போன வருடம், இடித்துவிட்டு, ஒரு அரசு அலுவலமாக மாற்றுவதற்கு, TT Devasthanam  முடிவு செய்திருந்தார்கள். இதற்கு முன்பு 3-4 தடவை, சப்தாஹம் இங்கு நடத்தியபடியால், sentimental attachment வந்துவிட்டது. பெருமாள் அனுக்ரஹத்தில், கடைசியில், வேறு ஏதோ ஒரு காரணத்தினால், மண்டபம் இடிக்கப் பட வில்லை.  இது, இன்னொரு அணுக்ரஹம்.

தீக்ஷிதர், இதைப் பற்றிச் சொல்லும்போது, “நான்வரகூர் பெருமாளிடம் முறையிட்டேன். (“கல்யாண மண்டபம் இடிக்காமல்- இருக்க). அவர் அனுக்ரஹத்தில், கடைசியில், இடிக்காமல் விட்டுவிட்டார்கள்”. அதாவது ஒரு பெருமாளின் சிபாரிசு.....

என் பெற்றோர்கள், தீக்ஷிதர்க்கு மிகவும் வேண்டியவர்கள் என்பதால், திருச்சியில் இருக்கும் என் பெற்றோர்களை, மிகவும் வற்புறுத்தி, திருமலாவுக்கு வரச்சொன்னார்கள்.  ஆனால் என் பெற்றோர்களால் போக முடியாத நிர்பந்தம். அதனால், சென்னையில் இருக்கும் என்னை திருப்பதி போகச் சொன்னார்கள். எனக்கு முதலில் Rs. 300 டிக்கெட் புக் செய்யாததால், (இது நடந்த தேதி) தரிசனம் செய்யாமல், உபன்யாசம் மட்டும் கேட்க போவதா ? என்ற கேள்வி.  அப்போது VIP டிக்கெட் பற்றி எனக்குத் தெரியாது.

மே 1 லீவாகப் போனதால், திங்கள்கிழமை2 and half  நாட்கள் லீவ் எனக்குக் கிடைத்தது.  என் வீட்டிலும் மனைவி, குழந்தைகள் வெளியூர் சென்றதால், திருச்சி போகலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 

அம்மா வற்புறுத்தியதால் “சரி” திருப்பதி போகலாம் என்று முடிவு செய்தேன். 

4 மணிக்கு central station ல் சப்தகிரி.  சனிக்கிழமை ஆனதால், செம கும்பல். எதோ ஒரு reserved compartment ல். படியில் உட்கார்ந்து கொண்டு அரக்கோணம் வரை சென்றேன்.  பிறகு உட்கார இடம் கிடைத்தது
மேலே திருமலாவிற்குப் போகும்போது, மணி 10. கல்யாண மண்டபத்தை அடைந்து, இரவு சாப்பிட்டு விட்டுப் படுக்கும்போது, தலைவலி ஆரம்பித்து விட்டது.

நம்ப மாட்டீர்கள். அடுத்த நாள், Sunday, முழுவதும் நான் எழுந்திருக்கவே இல்லை. கடும் தலைவலி, ஜலதோஷம். ஜுரம் வேறு வருவது போல் ஆகிவிட்டது.  சாப்பிடவே இல்லை. ஏகாதசி பட்டினி போல்.. மனதிற்க்கு, மிகவும் கஷ்டமாக இருந்தது.  எதற்கு வந்தோமோ, - கதையும் கேட்கவில்லை, சாமி தரிசனமும் இல்லை. அவர்களுக்கு எந்த உதவியும் இல்லாமல் உபத்ரவமாக இருந்த அந்த நாள் மிகவும் வேதனையாக இருந்தது. 

அப்போது தான் நான், திரௌபதியைப் போல் பிரார்த்தித்தேன். “நான் செய்கின்ற பக்தி பொய் என்றால், இப்படியே என்னை திருப்பி அனுப்பிவிடு, உன் தரிசனம் எனக்குக் கிடைக்க வில்லை என்றால் பரவாயில்லை ஆனால், தலைவலியைக் கொடுத்து, எல்லோரும் என் மேல் அனுதாபப் படும்படி வைக்காதே” என்று

திங்கள் கிழமை, உடல் நிலை முழுவதுமாக சரியாகிவிட்டது.  அன்று எதேச்சையாக ருக்மணி கல்யாணம். மேலும் ராமானுஜ ஜெயந்தி ஆன படியால், சாயந்திரம், பெருங்களத்தூரிலிருந்து, ஒரு மகான் “லக்ஷ்மி ந்ருசிம்ஹர் விக்ரஹம்” கொண்டு வந்து ராமானுஜ ஜெயந்தியை கொண்டாட (இந்த மண்டபத்தில்) வருவதாக பிளான்.  காலையில் உஞ்ச வ்ருத்தி, மூல பாராயணம், ருக்மணி கல்யாணம் எல்லாவற்றிலும், முழுவதுமாக லயித்து, கலந்து கொண்டது மனசு திருப்தியாக இருந்தது. 
மதியம், சீனியர் சிடிசன், ஒருவரோடு  escort ஆக போகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதனால் 2 மணி நேரத்தில், சுவாமியைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.  சாயந்திரம், லக்ஷ்மி ந்ருசிம்ஹர் பூஜை- ஆக திங்கள்கிழமை, மிகவும் பக்தி பூர்வமாக கழிந்த தினம்.

இப்போது தான், முக்கிய கட்டம்:

செவ்வாய் கிழமை ஆபீஸ். அதனால் திங்கள் கிழமை இரவு திருமலாவிலில் இருந்து புறப்படவேண்டும். திடீரென்று, செவ்வாய் கிழமை, VIP டிக்கெட் இருக்கிறது, நான் வந்து தான் ஆகவேண்டும், என்று தீக்ஷிதர், மகன், ராம் பிரசாத், மிகவும் கேட்டுக் கொண்டார்.. முதலில் தயங்கிய நான், பிறகு ஒப்புக் கொண்டேன்.
நான் பார்த்த VIP தரிசனம், என் வாழ்கையில் பெற்ற மிகப் பெரிய பேறு. சுவாமியின் அருகில் சென்று பார்ப்பது என்பது, என் போன்ற சாதாரண மனிதருக்கு மிகவும் அரிது.  சுவாமியை பார்க்கும் தூரத்தில் இருந்து, வேங்கடாத்ரி வாசனின் அருகாமை வரை, “க்ஷேமம் குரு கோபாலா” என்ற நாராயண தீர்த்தர் தரங்கத்தைப் பாடிக்கொண்டே சென்றேன். இந்த பாடல் முடியும்போது, நான் திருவேங்கடமுடையானின் பாதத்தை, மிக அருகில், பாக்கும் பாக்கியம் கிடைத்தது.

நான் நினைத்தது ஒன்று.

தரிசனமே கிடையாது என்று நினைத்து, டிக்கெட் கிடைக்காமல் அதை ஊர்ஜிதம் செய்வது போல் உடல் நிலையம் மோசமாக பொய் ஏண்டா வந்தோம் என நினைத்த எனக்கு.........

நடந்தது ஓன்று:  

TWO TIMES DHARSAN,  ராமானுஜ ஜெயந்தி மற்றும் 
ருக்மணி கல்யாணம், (கோலாட்டம்)), வெண்னை தாழியை கட்டி, அதை சுற்றி டான்ஸ் , இத்யாதிகள்.....

செவ்வாய் அரை நாள் லீவ் எடுத்தாலும், எனக்கு கிடைத்த VIP தரிசனம் தான் என் திருமலா பிரயாணத்தில் டாப் கிளாஸ்.


இப்போது மேலே நான் எழுதிய பாராவைப் (பஸ்சில் நான் படித்த வாசகம்) படியுங்கள். எல்லாம் புரியும்.

Monday, 15 May 2017

எங்கள் வரஹூர் கும்பாபிஷேகம்- 2-4-2017

இந்தக் கட்டுரையை, “வரஹூர் பெருமாள் தான் உனக்கு எல்லாம்”, என்று கை காட்டி, இன்று வரை பெருமாளின் கருணையை எண்ணி எண்ணி, புளகாங்கிதம் அடையும், பல வரஹூர் வாசிகளில் ஒருவனாக, வலம் வரச் செய்த என் பெற்றோர்களுக்கும்,  இந்த கோவில் முன்னேற்றத்திற்காகவும், கிருஷ்ணா லீலா தரங்கிணியை நாடு முழுவதும் பரப்ப பாடுபட்ட பல மகான்களுக்கும், வரகூரில் வேதம் கற்று இந்தியா முழுவதும் பிரபலமான/பிரபலப்படுத்திய பல வேத பண்டிதர்களுக்கும்,  சுவடு தெரியாமல், இந்த கும்பாபிஷேகத்திருக்கு பாடுபட்ட நல்ல உள்ளங்களுக்கும் சமர்பிக்கிறேன்.  

இந்தக் கட்டுரையை நான், டிரஸ்டி ஆக உள்ள, ஸ்ரீ சாந்து மாமா, ஸ்ரீ கணேசன் மாமா அவர்களுக்கும் சமர்பிக்கிறேன்.  தன்னலம் பாராமல், பல சவால்களை சர்வ சாதாரணமாக ஏற்று வெற்றிகரமாக, விக்ரமாதித்யன் போல, சற்றும் மனம் தளராமல், கும்பாபிஷேகத்தை மிக விமர்சையாக நடத்தியது மிகவும் போற்றுதலுக்கும், மரியாதைக்கும் உரியது. 

கிருஷ்ணா லீலா தரங்கிணி இயற்றி, அதை மூலவர் முன்பு பாடி, இந்த ஒரு சிறிய கிராமத்திற்கு, பெருமை சேர்த்த, நாராயண தீர்த்தர், முக்தி அடைந்த வரஹூரில் உள்ள,

-இரட்டைப் பிள்ளையார்க்கும்

-ஆனந்தவல்லி உடனுறை மஹா கைலாசநாத சுவாமிக்கும்

-ஸ்ரீதேவி பூதேவி உடனுறை வெங்கடேச பெருமாள் கோவிலுக்கும்

ஜீர்னோத்தாரண அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் கடந்த 2-4-2017 அன்று மிகச் சிறப்பாக நடை பெற்றது.

வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தைப் பண்ணிப் பார் என்று ஒரு வசனம் உண்டு. அத்துடன் கிராமத்தில் கும்பாபிஷேகத்தை  நடத்திப் பார் என்பதையும் தாரளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். கொஞ்ச நாட்கள் முன்பு, அதாவது இந்த கும்பாபிஷேகம் நடப்பதற்கு, சிறிது நாட்கள் முன்பு, அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.

வரகூரைச் சேராமல் இருக்கும், மற்ற ஊர் காரர்களுக்கு, இந்த ஊரைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக, 4-5 வரிகள் எழுதி விட்டு பிறகு கும்பாபிஷேகத்தைப் பற்றிச் சொல்கிறேன்.

கிருஷ்ணனின் லீலைகளை, அற்புதமாக, கிருஷ்ணா லீலா தரங்கிணி என்ற எளிய சம்ஸ்க்ருத பாடல்களின் மூலம் பிரபலப் படுத்திய, நாராயண தீர்த்தர் என்ற ஒரு யோகி வாழ்ந்து, முக்தி அடைந்த இடம்சம்பிரதாய பஜனையிலோ, ராதா கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளிலோ, தரங்கிணி பாடல்களைப் பாடி, கேட்பவர்களின் நெஞ்சம் குளிரச் செய்வார்கள்.

நம் வீட்டிலேயே, சில தரங்கிணி பாடல்களைப் பாடலாம். ஒவ்வொரு பாடல்களுக்கும் ஒரு பலன் உண்டு.  “க்ஷேமம் குரு கோபாலா” என்ற ஒரு பாடல் போதும், எந்த நேரத்திலும் பாடலாம்.

பல கோவில்கள் சிதிலமடைந்து, பூஜை செய்யக் கூட,  ஆளில்லாமல் இருக்க, இன்றும், நாராயண தீர்த்தர் அமைத்துக் கொடுத்த முறையில், சுவாமி புறப்பாடோ, உற்சவமோ,  இங்கு நடந்து கொண்டு இருக்கிறது.  உறியடி உத்சவம் ஒன்று போதும்.  வெண்ணைக் குடத்தை கையில் ஏந்தியபடி பால கிருஷ்ணர், வீதியுலா வருவதைக் காண கண் கோடி வேண்டும்.

இங்கு வந்து ஒரு முறை பெருமாளையும், சிவனையும் தரிசித்து விட்டுக் சென்றால், உங்கள் பிரார்த்தனை நிறைவேறும்.  இது சத்தியம்.

எங்கள் பெருமாள், பயத்தை அல்ல, பயத்தின் மூல காரணத்தை நாசம் செய்யக் கூடியவர். இது நாராயண தீர்த்தர் பாடிய, “பய காரண விநாசா” என்ற பாடல் மூலம், தெளிவாக அறியலாம்.

கும்பாபிஷேக நடந்த நாளிலும், அதற்கு முன்பாகவும், நடந்த மிக அருமையான, ஆச்சர்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், எங்கள் ஊர் பெருமாளின் அளப்பரிய கருணை உங்களுக்குப் புரிய வைக்க முயற்சி செய்கிறேன்

·      யோசித்துப் பார்த்தால், எனக்கே பிரமிப்பாக இருக்கிறது, ஒரு சுமார் 3000 பேர் கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்தனர்.  வரஹூரில், இந்தக் கூட்டம் மிகவும் அதிகம். இருந்தாலும், ஒரு விபத்தோ, அசம்பாவிதமோ இல்லாமல், எல்லோருக்கும் உணவு, தண்ணீர் இவை அனைத்தையும் ஏற்பாடு செய்து தரப்பட்டது. 
·   வேத பிராமணாள் அவர்களுக்கு தங்குவதற்கு இடம் மற்றும் சாப்பாடு மிகப் பெரிய சவால். அத்துடன்,  50 சிவாச்சர்யாள், 30 பட்டாச்சார்யர், இவர்களுக்கும் தங்குவதற்கு இடம், சாப்பாடு, இதுவும் பெரிய சவால் என்றே சொல்லவேண்டும். எல்லோருக்கும் ஒரு விக்னமும் இல்லாலாமல் அழகாக நிர்வாகம் செய்திருந்தார்கள்

·       கோவில் சாமானோ, நல்ல மளிகை சாமான்கள் வாங்க வேண்டும் என்றாலோ, தஞ்சாவூரோ, இல்லை, திருக்காட்டுப்பள்ளிக்கோ அல்லது திருச்சிக்குப் போகவேண்டும்.
 
இது எல்லாம் இருந்தும், ஐந்து நாள் யாக சாலை அமைத்து,  50 வேத பிராமணாள் வந்து 5 நாட்கள் பூஜை பண்ணி, பூர்ணாஹுதி முதற்கொண்டு, அழகாக  arrange பண்ணியிருந்தார்கள். 

ஹோம ஆஹூதிக்காக,  75 தான்யங்கள் + சாமான்கள், மொத்தமாக 40 தட்டுக்கள், ஒரு நாளைக்கு 2 தடவை.  இவ்வளவையும், சரியாக வைத்து, சரியான சமயத்தில் கொண்டு வந்து கொடுத்து, பூர்ணாஹுதி சிறப்பாக நடை பெற, ஒரு dedicated team, அமைக்கப்பட்டது.

சாமான்கள் கிடைத்து, கொண்டு வந்ததைச் சொல்வதா, அதை சரியாக பிரித்து, தட்டில் போட்டு வைத்ததைச் சொல்லவா, அல்லது அதை சரியான நேரத்திற்கு எடுத்துச் சென்ற, அந்த ஒரு team ஐ சொல்வதா ?  அபாரம் !!
ஒரிஜினல் பட்டு, எல்லா பூர்ணாஹுதிக்கும், எல்லா காலத்திற்கும், எல்லா சுவாமிக்கும் வாங்கி இருந்தார்கள்.  எந்த விதத்திலும், compromise ஆகாமல், 100% dedication உடன் அமைந்த கும்பாபிஷேகம் இது.

·        பூஜை அன்று சன்யாசிகள் வந்தால் விசேஷம் என்று கருத  இரண்டு சன்யாசிகள் வந்து, கும்பாபிஷேகத்தை கண்டு,  வந்திருந்தவர்களையும் ஆசிர்வதித்தனர். சத் குரு கடாக்ஷம் என்பது எவ்வளவு அரிது,  சர்வ சுலபமாக எங்களுக்குக் கிடைக்கச் செயதனர்.

·        மிகச் சிறந்த ஜோதிடர் ஒருவர், சாந்து மாமாவிடம், கும்பாபிஷேகம் முடிந்து, சில நாட்கள் கழிந்து  சொல்லும்போது அவர் சொன்னது

“முதல் நாள், சந்நியாசி பூஜை என்று ஒரு “சம்ப்ரதாயம்” உண்டு.  அதற்கு காஞ்சி மகா பெரியவர்,  சூக்ஷ்மமாக வந்திருந்து ஆசிர்வதித்ததையும், சிவன் கோவில் கும்பாபிஷேகத்தில் பக்கத்தில் இருந்து பார்த்ததும் சத்தியம், மேலும் யாக சாலையில் “எதேஷ்டமாக” சாப்பிட்டார்” என்பதையும் சொன்னார்”

இந்த ஜன்மத்தில் வரகூர் காரர்கள் செய்த மிகப் பெரும் பாக்கியம் இது.  அவரை பக்தர்கள் நாம் பார்க்க முடியாவிட்டால் கூட, அவர் நம்மைப் பார்த்தார் அல்லவா, அது போதும்.

·      பாலாலயம் செய்த பொது, மிக சிறிய தொகைதான் இருந்தது. Demonetisation  என்ற ஒரு புதிய அரசாணை  மூலம், பண வரத்து மிகவும் குறைந்து விட்டது.    பழைய நோட்டுக்களை கொடுத்தாலும் வாங்க முடியாத ஒரு நிர்பந்தம். மேலும்  income tax exemption என்று சொல்லக்கூடிய ஒரு 80 G benefit கூட  இல்லாமல்,  ஆரம்பித்த, இந்த திருப்பணி, 22 நாட்களில்,  43 லட்சம், வசூலை  எட்டியது.

·          வேதத்திற்கு முக்யத்துவம் கொடுக்கும், வரஹூரில்,

1.   சுக்ல யஜுர் வேத பாராயணத்திற்கு, கர்நாடகாவில் இருந்து, வேத பிராமணர்கள் வந்திருந்தார்கள்.

2. அதர்வண வேத பாராயணத்திற்கு, ஆந்த்ராவிலிருந்து,  வேத பிராமணர்கள் வந்திருந்தனர்

3.   வரஹுர் பாட சாலை வாத்தியார், வரஹூர்காரர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய சொத்து.  யாக சாலையில், அவரின் அர்ப்பணிப்பு வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒன்று.   இளம் வயதுக்காரரான அவர், தன்னுடைய கணீர் குரலினால், யாக சாலையில் மந்திர உச்சாடனம் செய்து, பக்தி ப்ரவாஹத்தை கூட்டினார்.  முதல் நாளில் யாக சாலை பூஜைகள் முடிய 11 மணி ஆன பின்பும் கூட,  கொஞ்சம் கூட சிரமம் தெரியாமல், பக்தி வெள்ளத்தில்  திளைத்தோம்.

4.   வரகூரில், பாட சாலையில் படித்து வரும், வேத பண்டிதர்களின் “நிறைவான் வேத உச்சாடனம்”  வைகுண்ட நாதனான வெங்கடேச பெருமாளின் செவிக்கு மிகப் பெரும் விருந்து என்று சொன்னால் மிகை ஆகாது.

·    ஒரு பக்தர் சொல்லும்போது,  “யாக சாலை சிவன் கோவிலுக்கும்,  பெருமாள் கோவிலுக்கும் ஒரே இடத்தில் அமைந்தது, மிகவும் உசத்தி. இது போல் அமைவது மிகவும் ஆச்சர்யமான ஒன்று.  சிவ-வைஷ்ணவ பேத மில்லாத ஒரு மிகச் சிறந்த ஊராக, வரகூரை சொல்லலாம்” என்றார்.  யாக சாலை அமைந்ததின் மூலம், அந்த இடம் சுத்தபடுத்தப்பட்டு, நமக்கு ஒரு தோட்டமோ, அல்லது வேறு கோவில் சம்பந்தமான விழாக்களோ நடத்துவதற்காக, ஒரு இடம் கிடைத்து விட்டது என்பதும் ஒரு உண்மை.  ஈசான மூலையில் அமைந்த இடம். இது இன்னொரு பெருமை.
·   
   மிகவும் ஆச்சர்யமான ஒரு ஒற்றுமை, சிவன் யாக குண்டம், மூலவர் “சிவன்” விக்ரஹத்துக்கு “இணையாக” (in line), அம்பாள் யாக குண்டம், அம்பாள் சன்னதிக்கு இணையாக அமைந்ததுதான்.

·  முதல் நாள் ‘அக்னியில்” பெருமாள் எழுந்தருளியது, அந்தப் படத்தைப்  பார்த்தவர்களுக்கு புரியும்.
·  “யந்த்ரம்”-சுவாமிக்குக் கீழே வைக்கக் கூடிய யந்திரங்கள், மிகவும் பக்தி ச்ரத்தையுடன், வர வழைக்க்கப் பட்டு தினமும் நித்ய பூஜை செய்யப்பட்டு சுவாமிக்கு அர்ப்பணம் செய்யப் பட்டது.

இந்த யந்த்ரம் கிடைத்ததே ஒரு அருமையான கதை. எங்கு கிடைக்கும் என்று கேட்டு, ஒரு வழியும் புலப்படாமல் தவித்த போது, கும்பகோணத்தில் ஒரு இடத்தில் கிடைக்கும் என்று விஷயம் தெரிய, அங்கு போய் அவரிடம் பேசியபோது, யந்திரம் செய்பவர்,  “அம்பாள் எந்த திசையை பார்த்து நிற்கிறாள்”, என்று கேட்டார். பின்பு தான் தெரிந்தது, ஒவ்வொரு திசைக்கும் வேறு வேறு யந்திரம் உள்ளது என்று.  யந்திரம் செய்பவர், அதை ஆரம்பித்து செய்யும் வரை சாப்பிட மாட்டாராம். பல கடுமையான விரதம் இருந்து, இந்த யந்த்ரத்தை செய்வர்ர்கள்.

பிறகு அந்த யந்திரத்தை,  ஸ்ரீ வித்யா உபசகர்களிடமும், ஜப ஹோமங்கள் செய்து வரும் ஒரு சிறந்த “சிவசார்யாரிடம் கொடுத்து, அவர்கள் “லலிதா சஹஸ்ரநாமம்” போன்ற பல மந்திரங்கள் சொல்லி, தினமும் சர்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்து,  அந்த யந்திரத்தில், அம்பாளை, 45 நாட்கள் ஆவாஹனம் செய்து, கடைசியில்,  கோவிலுக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டது

சிவன் கோவிலில் உள்ளசுப்ரமணிய சுவாமி யந்திரத்திற்கு, ஒரு அன்பர் தனியாக நன்கொடை கொடுத்தார்.  அம்பாளின் யந்திரத்திற்காக, தன்னுடைய தாலியில் இருந்த 3 குண்டு, ஒரு மோதிரம் கழட்டிக் கொடுத்த ஒரு பெண்மணி- சொல்லிக் கொண்டே போகலாம் !!!!

·        “கைலை வாத்தியம்” என்று ஒன்று உண்டு.  15 பேர் அடங்கிய ஒரு குழு. சென்னையில் இருந்து வந்து அருமையாக வாசித்தார்கள்.  இது கிராமத்து கும்பாபிஷேகத்தில் பார்க்க முடியாத ஒன்று.

·  கேள்வி கேட்காமல் அள்ளிக் கொடுத்த பக்தர்களும்  பெயர் சொல்லாமல் பெருமாளுக்கும், சிவனுக்கும் யந்த்ரம், செய்ய முடிவு செய்த பொது, மஞ்சள் கிழங்கைக் கட்டிக்கொண்டு திருமாங்கல்யத்தைக் கழட்டிக் கொடுத்த, பெண்களும், இந்த க்ஷேத்ரத்திற்கு, பெருமை சேர்க்கும் விஷயம்.

·  வேத பாடசாலை மறைந்து வரும் இந்நாளில்,10-15 வேத பாடசாலை குழந்தைகள் எல்லா வேளையும், யாக சாலை வந்து, கற்றுக் கொடுத்த வேத பாடங்களை அழகாகச் சொன்னது, பார்க்க பார்க்க ஆனந்தம்.  வேத பாடசாலையைப் பற்றிக் குறிப்பிடும்போது,  சமீபத்தில், ஒரு வாஸ்து நிபுணர், (மிகப் பெரிய மகான் கூட) “ஈசான்யத்தில் வேத பாட சாலை வரஹுரில் தான் உள்ளது. எனக்கு தெரிந்து எங்கேயும் பார்க்க வில்லை.” என்றார்.  மேலும் சொல்லும்போது, ”வரஹுரில், வேத பாடசாலை அமைந்திருக்கும் இடம், மிகவும் உயர்ந்த இடம் என்றும் சரஸ்வதி கடாக்ஷம் பரிபூர்ணமாக இருக்கும் இடம் என்றும், இந்த இடத்தில வேதம் படிக்கும் குழந்தைகள், மிகுந்த அறிவோடும், நிறைந்த அறிவோடும் இருப்பார்கள்” என்று சொன்னார்.  இந்த பாடசாலையை அமைத்துக் கொடுத்த நம் முன்னோர்களை நினைத்துப் பெருமைப் பட வேண்டிய விஷயம் இது.

·  ராஷ்ட்ரபதி விருது வாங்கிய வரகூர் கல்யாண சுந்தர சாஸ்திரிகள், ராஷ்ட்ரபதியின் “certificate of honour” விருது வாங்கிய சம்ஸ்கருத பேராசிரியர், வரகூர் எஸ்.  வி. குருசுவாமி சாஸ்த்ரிகள்,  வரகூர் பிரமஸ்ரீ மார்க்க சகாயம் ஆகிய பல வேத வித்வான்களை உருவாகிய ஊர், நமது வரஹூர்.  இதை விட பெருமை வேறு என்ன வேண்டும் ?

·  கடைசியாக, அம்பாளுக்காக, 9 கஜம் புடவை special ஆக தறியில் நெய்யப்பட்டு வந்த புடவை. அதே போல், பெருமாளுக்கு பட்டு வஸ்திரமும் நெய்ததுதான்.

·        இது போல பல பெருமைகள்,  வரகூர் க்ஷேத்ரத்தில், சர்வ சாதாரணமாக, கும்பாபிஷேகம் அன்று அரங்கேறியது.  சொல்லிக் கொண்டே போகலாம்.

· மண்டலாபிஷேகம் முடிவதற்குள் இந்தக் கட்டுரையை பதிவு செய்ய நினைத்தேன்.  அதுவும் பெருமாள் அனுக்ராஹம்தான்.

·    தற்சமயம், சேங்காளிபுரம் சுப்ரமணிய தீட்சிதர் அவர்களின் இராமாயண நவாஹம், (9 days) உபன்யாசம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று 4 வது நாள்.  இந்த உபன்யாசம் முடியும் தினம், மண்டலாபிஷேகம் முடியும் தினம்- இரண்டும் ஒரே நாள் !!!!. இது தெய்வ சங்கல்பமா ? மனித முயற்சியா ?  பல கேள்விகளுக்கு,  ஸ்ரீதேவியை லாவகமாக அனைத்துக் கொண்டு, எல்லோருக்கும் அருள் பாலிக்கும் எங்கள் வரகூர் பெருமாளே பதில்.

·        க்ஷேமம் குரு கோபாலா...... “लोका: समस्ता: सुखिनो भवन्तु”