Thursday 15 June 2017

வரகூரில் பிறந்து மண்ணுக்கு பெருமை சேர்த்த மஹாமஹோபாத்யாயர்கள்

இது 1981  (20-8-1981) அன்று, வரஹூரில் நடைபெற்ற கும்பாபிஷேகம், தொடர்பாக வெளிவந்த “மலரில்” வந்த கட்டுரை.

இந்தக் கட்டுரை ஸ்ரீ வை.நடராஜ அய்யர் அவர்களால் எழுதப்பட்டது, அதனால் அவருக்கு முதற்கண் என் அனந்த கோடி நமஸ்காரங்கள்.  அவர் இந்தக் கட்டுரை எழுதாவிட்டால், வரஹூரில் பிறந்த மகான்களைப் பற்றி நமக்குத் தெரியாமல் போயிருக்கும். இதை நான் திரும்பவும் எழுதும் காரணமே, இப்போது இருக்கும் வரஹூர் ஆஸ்திகர்களும், மற்ற நண்பர்களும், இவர்களின் பெருமையை உணர்த்துவதற்கு தான்.

இப்போது பிரயாண வசதிகள் பல இருந்தும் கூட, நம்மால் ஒரு இடத்தில் இருந்து, வேறொரு இடத்திக்குப் போவது, பிரம்மப் பிரயத்னமாக இருக்கிறது. ஆனால், அந்தக் காலத்தில், இந்த வசதிகள் இல்லாதபோதே, மேல் படிப்புக்காக சிதம்பரமும், சென்னையும், ஏன், டெல்லி கூட போய் ஜனாதிபதியிடம் இருந்து பரிசு வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, மிகவும் பூரிப்பாக இருக்கிறது

நம்மிடையே, இப்போது வெகு சிலரே பழைய முறையில் ஆசார அனுஷ்டானத்துடன் குருமுகமாக பக்தி ச்ரத்தையுடன் சாஸ்திரங்களைப் படித்து, படித்த சாஸ்திரங்களை பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு பிராசீன சம்ப்ரதாயத்தில் வித்யாபியாசம் பெற்று, உலகத்திற்கு ஆத்ம வித்தையை போதித்து வந்த, இப்போது சூக்ஷ்மமாக, வரகூரில் இருந்து, நமக்கும் அனுக்ரகம் செய்து கொண்டிருக்கும்:

மகாஸ்ரீ  வரகூர் ஸ்ரீ கல்யாண சுந்தர சாஸ்த்ரிகள்

வரகூர் பிரம்மஸ்ரீ ஸ்ரீ. வி. ஏ. வி. குருஸ்வாமி சாஸ்த்ரிகள்

ப்ரும்மஸ்ரீ மார்க்க சகாயம் அவர்கள்

இவர்களுடைய அருமை பெருமைகளைத் தெரிந்துகொண்டால், வரஹுரில் பிறந்ததற்கு பெருமைப் படலாம்.

வரஹூரில் பிறந்து, இப்போது இருக்கும் வேத பாடசாலையில் படித்து, டெல்லி வரை சென்று, ஜனாபதியிடம் விருது பெற்றார்கள் என்பதை கேட்கும்போது/படிக்கும்போது  நாம் எவ்வளவு பாக்யசாலிகள் என்பது புரியும் !!

“எந்தரோ மகானுபாவுலு, அந்தரிகி வந்தனமு” என்று பக்கத்துக்கு ஊரான திருவையாறில், பிறந்து, சீதா லக்ஷ்மண அனுமன்(த்) சமேதராக ராமர் , எழுந்தருளி காட்சி கொடுத்து ஆட்கொண்ட, ஸ்ரீ தியாகராஜர் அவர்கள் சொன்னபடி, நாம் மேற்கூறிய மகான்களைப் பற்றி சற்று சிந்திப்போம்.

வரகூர் ப்ரும்ம ஸ்ரீ கல்யாண சுந்தர சாஸ்த்ரிகள்

பரம்பரையான சாஸ்த்ரக்ஞர்களுடைய வம்சத்தில் இவர் கி.பி. 1911 ல் பிறந்தார்.  ஆரம்பத்தில் கும்பகோணம் ராஜா பாடசாலையில், மகாமஹோபாத்யாய யக்ஞஸ்வாமி சாஸ்திரிகளிடம் சம்ஸ்க்ருதம் கற்றார். பிறகு  மயிலாப்பூர் சம்ஸ்க்ருத கல்லூரியின் மகாமஹோபாத்யாய கருங்குளம் கிருஷ்ணா சாஸ்த்ரிகளிடம் படித்து கி.பி 1982 ம் ஆண்டு சாஹித்ய சிரோமணி பரீக்ஷையும் அதே சாஹித்ய விசாரதா பரீக்ஷையும் பாஸ் செய்தார்.

அண்ணாமலை சர்வ கலா சாலையில் பண்டித பயிற்சி முறையையும் கி. பி. 1933 ல் பூர்த்தி செய்தார். கும்பகோணம் அய்யுவய்யர் வேதாந்த பாடசாலையில், சாஸ்திர ரத்னாகரம் ப்ரும்மஸ்ரீ வேப்பத்தூர் வைத்யநாத சாஸ்திரிகளிடம் 1934-37 ல் வேதாந்தம் படித்து வேதாந்த சிரோமணி பரீக்ஷையில் சிறப்பாக தேர்வு பெற்றார்.  1938 ம் ஆண்டு இவர் மறுபடியும்
மதராஸ் சம்ஸ்க்ருத கல்லூரியில், RESEARCH SCHOLAR ஆக சேர்ந்து, “வ்ருத்தி மீமாம்ஸா” என்ற ஆராய்ச்சி கிரந்தத்தை வெளியிட்டார்.
கும்பகோணம் அத்வைத சபா, திருச்சிராப்பள்ளி அத்வைத சபா, இவைகளில், நடத்தப்பட்ட, அனேக வித்யா பரீட்சைகளில் ஸ்ரீ கல்யாண சுந்தர சாஸ்த்ரிகள் சிறப்போடு தேர்வு பெற்று, சன்மானம் பெற்றார்.
மதராஸ் Government Oriental Manuscripts லைப்ரரியில் 16 வருடங்கள் பணியாற்றினார்.  அது சமயம் கையேட்டுப் பிரதியாக இருந்த அனேக அபூர்வ கிரந்தங்களை அச்சிட்டுப் பிரசுரப்படுதினார்.  தவிர தன்னுடைய ஸ்வதந்திர க்ரந்தங்கள் பலவற்றையும் இந்தக்காலங்களில் அச்சிட்டுப் பிரசுரித்தார்.

விவேகானந்தா கல்லூரி நிர்வாகிகள் வேண்டுகோளின் பேரில் M.A வகுப்பு மாணவர்களுக்கு வேதாந்த பாடம் சொல்வதற்கு ஆசிரியராக ஒப்புக் கொண்டு பணி ஆற்றினார்.

அதிலிருந்து ஒய்வு பெற்று பிறகு யுனிவெர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் நியமனம் பெற்று விவேகானந்தா காலேஜில் RESEARCH PROFESSOR ஆக பணியாற்றினார்.

இவ்வளவு உத்தியோக அலுவல்களுக்கிடையில் 25 வருஷ காலமாக சென்னையில் நுங்கம்பாக்கம் உபநிஷத் ஆஸ்ரமத்தில்- சாந்திபாட புரஸ்காரம் சம்பிரதாய முறையில் அத்யயன தினங்களில் ஆசார்ய சங்கரருடைய பிரஸ்தானத்ரய பாஷ்யங்களை தொடர்ந்து பாடம் சொல்லிவந்தார்கள். அனத்யயன தினங்களில் இதர பல அத்வைத கிரந்தங்களை பாடம் சொன்னார்கள். இவர்களுடைய பாடப் ப்ரவஸனங்களைக் கேட்டு ஆத்ம விஷயத்தில் விழிப்பு பெற்ற லௌகிகர்கள் கணக்கில் அடங்காது.

இந்த மகத்தான சேவையைப் பாராட்டி, காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கராசார்யாள் 1963 வருடம், “பாஷ்ய பாவக்ஞ” என்ற விருதை அளித்தார். இது மதிப்பு மிக்க விருது. ஏற்கனவே, இந்த விருது, முதல் தடவையாக வரகூர் வெங்கட்ராம சாஸ்திரிகளுக்கு வழங்கப் பட்டது. அவரும், இவரது உறவினர்தான்.

ஸ்ரீ கல்யாண சுந்தர சாஸ்திரிகளுடைய சம்ஸ்க்ருத வித்வத்தை சன்மானித்து 1979 ம் ஆண்டு பாரத ராஷ்ட்ரபதி யோக்யதா சன்மான பத்திரமும் RS 5000 With Certificate of Honour வழங்கி இருக்கிறார்.
தொடரும்.




1 comment:

karthikeyan varagur said...

PROUD TO BE A VARUGURAN , THANKS FOR THE EXCELLENT INFORMATION SIR