Sunday, 16 August 2026

ஸ்ரீ குருப்யோ நமஹ.. ஸ்ரீ மாத்ரே நமஹ.. சாதுர்மாஸ்யம்......

 

மதுரையில் உள்ள ஸ்ரீ சக்ர ராஜ ராஜேஸ்வரி பீடத்தின் ஸத்குருவாக இருக்கும்  பூஜ்யஸ்ரீ  ஸ்ரீ. ராமானந்த சரஸ்வதி ஸ்வாமிகள்.  சாதுர்,மாஸ்ய விரதம் அனுஷ்டிக்கும் இந்த மாதத்தில், அவருக்கு பாத பூஜை பண்ணும் பெரும் பாக்கியம் எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த்து.

சாதாரணமாக, மதுரையில் வருடா வருடம் அனுஷ்டிக்கும் இவர், இந்த முறை. சென்னையில்.

நங்கநல்லூர், ஆஞ்சநேயர் கோவில் அருகில், மாருதாத்மஜம் (பேரே எவ்வளவு அழகாக இருக்கிறது) என்ற கட்டிடத்தில் அவருடைய பிரவேசம். மொட்டை மாடியில் மேலே பந்தல் போட்டு, பூஜை, கீழே அவர் வாசம்.

இந்த முறைதான், அவர் உபாஸனை மூர்த்தியான அம்பாளை (மதுரை மீனாக்ஷி என்று நினைக்கிறேன்) எடுத்து வந்திருந்தார்.  அத்தனை அழகு.

ஸ்ரீ பெரும்புதூரில் இதுக்கும் என்னுடைய மச்சினன், பாத பூஜை செய்கிறேன் என்று வேண்டிக்கொண்டதன் பேரில், ராஜா அண்ணாமலை புரத்தில் இருக்கும் நானும் ஒட்டிக்கொள்ள, அங்கு போய் நானும் பாத பூஜை பண்ணும்படி அமைந்துவிட்டது (பிக்ஷா வந்தனம் போதும் என்றுதான் போனேன்)

எல்லாம் குரு அணுக்ரஹம்

 அங்கே சென்றவுடன் லலிதா சஹஸ்ரநாமம் சொல்லி கொண்டு இருந்தார்கள்  மூன்று முறை சொல்வார்கள் போலும்.  பிறகு லலிதா நவரத்ன மாலை, பின் காமாக்ஷி வ்ருத்தம்..  (பத்து விரல் மோதிரம்....). பிறகு சோடசோபசாரம்.... பிறது பாத பூஜை, மஹா தீபாராதானை...

குருஜியில் பூர்வீகம் - பூஜ்யஸ்ரீ ஸ்ரீ. கோபாலக்ருஷ்ண பாகவத சுவாமி அவர்களின் குமாரர், ஸ்ரீ. சஞ்சீவி பாகவதர் அவர்களின் புத்திரன் இவர்.

எங்கள் கருமண்டபத்தில் ராதா கல்யாணம் பண்ணும்போது, ஒரு முறை சஞ்சீவி பாகவதர் வந்திருக்கிறார்.  என் அம்மா, மாடியில் வலது புர ரூமில் தங்க வைத்து மடியாக சமைத்துப் போட்டது இன்றும் நினைவு இருக்கிறது

அம்மா பண்ண அந்த புண்யம்தான், இவரின் சா.மா வரதம் வேளையில் என்னையும் பங்கு கொள்ள வைத்தது.  நான் அடிக்கடி பல நாம சங்கீர்த்தன நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன். நன்கு பாடுவார் கூட.

கருமண்டப நிகழ்வை அவரிடம் சொன்னபோது மிகவும் சந்தோஷப்பட்டார்.  நாம சங்கீர்த்தனம், பூஜை, தியானம் மூன்று விஷயத்திலும் மிகவும் ஆழமான உணர்வு பூர்வமான கீர்த்தி.  தினமும் விடியல் காலை 3  முதல்   இரவு 9 மணி வரை.  பூஜை, வேத பாராயணம், என்று மிகவும் அருமையாக  ஸ்ரவணம் பண்ணி தேஜஸுடன் இருக்கும் மகான்.

 தபோவனம் ஸத்குரு   போல் ஒரு தோற்றம்.  மிகவும் அமைதியான பேச்சு, ஒவ்வொருவரிடம் தனித்தனியாக பேசி.  நான் வரகூர் என்று சொல்லவுடன் “அப்படி சொல்லுங்கோ” வரகூரா என்றார்.

அருமையான சாப்பாடு.

அன்றைய தினத்தில் ஆச்சர்யமான ஒரு விஷயம் நடந்தது.

கொஞ்சம் தபோவனம் செல்வோம்:

தபோவனம் என்பது, திருக்கோவிலூர் அருகே திருவண்ணாமலை போகும் வழியில் இருக்கும் குருநாதர் என்று அழைக்கப்படும் ஸத்குரு ஞானாநந்தரின் அதிஷ்டானம்.

ஞானானுபவம்  என்ற ஒரு புத்தகம் நாமாஜி அவர்களால் எழுதப்பட்டது.  தபோவன ஸத்குருவுடன் குருஜி என்று அன்புடன் அழைக்கப்படும் ஹரிதாஸ் கிரி மற்றும் நாமாஜியும் இருவரும் ஸத்குருவுடன் கட்டளையின் படி நாமப் பிரசாரம் செய்வது என்பதை முழு மூச்சாகக் கொண்டார்கள்

குருஜி ஜல சமாதி ஆனவுடன், நாமாஜி அவர்கள் தேசம் முழுதும் நாமப் பிரச்சாராம் செய்து, குருநாதர் கட்டளையை நிறைவேற்றினார். 

ஸத்குரு ஞானானந்தர் எப்படியெலாம் அவர்களுக்கு அணுக்ரஹம் பண்ணினார் என்பதை பற்றி எழுதிய அற்புதமான புத்தகம்.  இன்னும் தபோவன பக்தர்கள், சாய் சரிதம் போன்று, நிதமும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.  

இந்தப் புத்தகம் படிக்கிறேன் என்று மனைவி ஸ்ரீ ஸ்ரீ. ராமானந்த சரஸ்வதி அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க, பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒருவர் “நான் தான் இந்தப் புத்தகத்தை எழுதினேன்” என்றார்.

எங்களுக்கு தூக்கி வாரி போட்டது.

அவர் பெயர் ஸ்ரீ பால குரு என்கிற ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹன்.

ஸ்ரீ பால குருவை நான் அன்று சந்திக்கும் பெரும் பாக்கியம் கிடைத்தது.  குருஜியையும், நாமாஜியையும்  பக்கத்த்தில் இருந்து பார்த்து, அவரகள் சொல்லிய அனுபவங்களை எழுதி இருக்கிறார்

அவர் சொன்ன ஆச்சர்யமான விஷயம் தான் எனக்கு பிரமிப்பும் குருநாதரின் அளப்பறியா கருணையையும் எனக்குப் புரிய வைத்தது. 

அவர் சொன்னார் “எனக்கு தமிழ் அவ்வளவாகத் தெரியாது, குறிப்பாக ல ள வித்தியாசம் தெரியாது,  மிகவும் ஸ்ரமப்பட்டு தான் ஒரு வரி எழுதுவேன்.  இந்தப் புத்தகம் முழுவது நான்தான் எழுதினேன்” என்றார் 

மேலும் சொன்னார் “யாரோ என் அம்மாவிடம் சென்று, உன் மகன் குருநாதரின் அனுபவங்களை தமிழில் எழுதுகிறான்” என்று சொல்ல என் அம்மா சிரித்து, “இதற்க்கு வாய்ப்பில்லை, அவனுக்கு தமிழ் அவ்வளவாகத் தெரியாது” என்றார்.  

“நான் எழுதியதை நினைத்துக் கொண்டு தபோவனம் சென்றால் அந்தக் காட்சிகள் குறிப்பாக, சத்குரு, குருஜி, நமாஜி சம்பாஷனைகள் நேரே நடப்பது போன்று தோன்றும்” என்றார்.

நான் மானசீகமாக அவருக்கு நமஸ்காரம் செய்தேன். குருஜி, நாமாஜி யை நேரில் பார்த்த ஒரு மகான் சர்வ சாதாரணமாக் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் ஸ்ரீ. ஸ்ரீ ராமானந்த சுவாமிகளிடம் பேசிக்கொண்டிருந்தார்.

இப்படியும் ஒரு அனுபவம்.

 

 

 

 

 

 

Wednesday, 5 August 2026

மூத்தோன் ஆயினை........

 

இன்று ஆடிக் கிருத்திகை. குரு வாரம்.  கொஞ்சம் முருகக் கடவுள்.  கொஞ்சம் குரு, கொஞ்சம் திருப்புகழ்.

ஒரு திருப்புகழில் “மூத்தோன் ஆகி” என்ற ஒரு வரியை உபயோகப் படுத்துகிறார்....

மூத்தோன் ஆகி என்ற சொல்லுக்கு பொருள் “மூத்த சகோதரனாய் விளங்கினாய்” என்று பொருள்.  இவர் எங்கே எப்படி மூத்த சகோதரன் ? என்ன புதுக் கதை ?

எத்தனை முறை சொன்னாலும்,  நான் “பால் மாறாத” ஒரே வார்த்தை. திருப்புகழ் ஒரு அமிர்தம்.  அதை பருக பருக நாம் அடையும் ஆனந்த்திற்க்கு அளவே இல்லை.

அந்த சந்தம், அந்த சொல் வார்த்தைகள். அர்த்தத்துடன் வரும் அந்த வார்த்தைகள்.  (உ.ம்)  “அ வு. ரு பிரணவா மந்திர கர்த்தவிய மாக வரு குருநாதா” என்று ஒரு வரி வருகிறது. அது அழகாக சாருகேசி ராகத்திலும் தாளத்திலும் உட்காருகிரது

திருப்புகழ் அன்பர்கள் குழு சென்னைக்கு தலைவராக இருக்கும் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது, இந்த திருப்புகழுக்கு ராகம், சந்தம் எல்லாம் போட்ட ராகவன் சார், ஆபீசில் இருந்து வந்து, முருகப்பெருமான் இருக்கும் பூஜை அறையில் கதவை சாத்திக்கொண்டு உட்கார்ந்து விடுவாராம். முருகன் ராகம் சொல்ல, சந்தம் சொல்ல இவர் எழுதுவாராம். அப்படி வந்த பொக்கிஷம் தான் திருப்புகழ்.

அந்த ராகவன் சார் என்ற மகானை, மந்தவெளி ஸ்ருங்கேரி மடத்தில் நடந்த திருப்புகழ் பஜனையில் நான் நேரே பார்த்து, நமஸ்காரம் செய்து, வீபூதி பிரசாதம் வாங்கி இருக்கிறேன். இப்போது நினைத்துப் பார்க்கும்போதும் மெய் சிலிர்க்கிறது.  மும்பையில் இருக்கும் என் சித்தி, எல்லா திருப்புகழையும் பார்க்காமல், ஒரு வரி பிறழாமல் பாடுவாள்.

ஒரு பாட்டு நான் “நெட்ரூ” பண்ணுவதற்குள், குண்டலினி சக்தி மேலே எழும்பி விடும் போல எனக்கு இருக்கிறது. திருப்புகழ் ஒரு பீஜம் போன்றது... அருணகிரிநாதர் என்ற மகான் நமக்கு அளித்த கொடை.

எத்தனை பேருக்கு அருணகிரிநாதர் திருப்புகழ் எழுவதற்கு முன்பே, வில்லிப்புத்தூரரிடம் ஒரு போட்டியில் இவர் ஜெயித்த கதை தெரியும் .? அதாவது வி/பு ஒரு பாடல் பாட இவர் பதில் சொல்ல வேண்டும், அதே போல் அ.கி பாடி அவர் பதில். இல்லாவிட்டால் தோற்றவர் காதை, ஜெயி த்தவர் அறுக்க வேண்டும்.  வி/பு பாடலுக்கு இவர் அர்த்தம் சொல்லி விட்டார். இப்போது அருணகிரி பாடுகிறார்.

..திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா.....

இது முதல் வரி, இது போல் இன்னும் மூன்று வரி இருக்கிறது. இதை ஒழுங்காகப் படித்தாலே போறும். நமக்கு புஷ்பக விமானம் ரெடி.

இதற்ககு பதில் தெரியாமல் வி.பு திணற, காதை அறுக்காமல்,  அர்த்தம் சொல்லி புரிய வைத்து, பாரதம் பாடுக. என்று அணுக்ரஹம பண்ணுகிறார்..

வில்லிபுத்தூராரின் பாரதம் இப்படி வந்தது தான். 

இதற்க்கு அர்த்தம் வாரியார் ஸ்வாமிகள் சொல்லி இருக்கிறார்.  அற்புதம். கூகுளில் கிடைக்கும் தேடி படியுங்கள்..

இன்று வியாழன், குரு அணுக்ரஹம் என்பது அப்படி சாதாரணமானது அல்ல. ப்ரேமி அண்ணா சொல்வது போல், நீ “ஆதி மூலமே” என்று கூப்பிடாதே, கஜேந்திரா என்று கூப்பிடு.  நமக்கு எதற்கு ஆதி மூலம். ஆயிரம் பேர் பகவானை நினைத்து மோட்ச கதி அடைந்திருக்கிறார்க்கள்.  அவர்களில் ஒருவனாய், ஒரு பிரஹலாதனை, துருவனை, ஆஞ்சநேயர்...இப்படி

ராமாயணத்தில் ஸபரி போன்ற ஒரு பாத்திரம் எங்கு தேடினாலும் கிடைக்காது. அவள் குரு கைங்கர்யம் பண்னினாள்,  குருவின் யாக சாலையை சுத்தம் பண்ணினாள்.  தரையை மொழுகினாள்,  பாத்திரம் தேய்த்தாள்.  ஒரு நாள் எல்லோ குருமார்களும் கிளம்ப, சபரி கேட்கிறாள் “என்னை தனியாக விட்டுப் போகிறீர்களே, நான் என்ன செய்வேன்” என்று கேட்க, முனிவர்கள் “நாங்கள் யாரைத் தேடித் போகிறோமோ அந்த பரமாத்மா, ராமன் என்ற பெயரில் உன்னை தேடி வருவார்”.  என்கிறார்கள்.

அதற்குப் பிறகு அவள் ராமனுக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறாள், இந்த கனி, பழ வகைகள்... எல்லாம் ரெடியாக.

ராமன், லக்ஷ்மனனோடு வருகிறார். அவர்களைப் பார்த்து சந்தோஷப்படுகிறாள்.  உபசாரங்கள் முடிந்து, ராமர் என்ன வேண்டும் என்று கேட்கிறாள். சபரிக்குத் தெரியும், வந்தது சாக்ஷாத் பரமாத்மா என்று. முன்னமேயே (முடிவர்கள் சொன்னதன் பேரில்)

சபரி உடனேயே “ததி பாண்டன்” மாதிரி, பானையோடு வைகுண்டம் போகவேண்டும் என்று கேட்கவில்லை.  “எனக்கு ஒன்றும் வேண்டாம் ராமா. எதோ உன்னைப் பார்க்க வேண்டும் என்றார்கள். பார்த்து விட்டேன். நான் கிளம்புகிறேன். எனக்கு ஏற்கனேவே புஷ்பக விமானம் ரெடியாக இருக்கிறது” என்கிறாள்.  எந்த ராமனை முனிவர்கள் கட்டி தழுவவேண்டும் என்று நினைக்கிறார்களோ, எந்த ராமன் ராமாயணத்தில்  ஜகஜ்ஜாலம் பண்ணினானோ., எந்த ராமனை ஆஞ்சநேயர் அன வரதமும்  த்யானம் செய்கிராறோ, அந்த ராமனை சபரி கண்டுக்கவே இல்லை.

குரு கிருபை அது.

இப்போது திருப்புகழுக்கு வருமோம் !!!

 ஓர் உருவாகிய தாரக பிரம்மத்து – என்று தர்பாரி கானடாவில் ஒரு பாட்டு இறுக்கியது.  இந்தப் பாடல் அமைப்பு  ஒரு தேர் போல அமைக்கப்பட்டது. தேர் தட்டு போல, தேர் தட்டு, முதல்  7 வரை கீழிருந்து மேல் பின்பு மேலிருந்து கீழ் என்று தேர் தட்டு மேலே செல்லும். இப்படி அமைப்புடன் எங்கு தேடினாலும் ஒரு பாட்டு கிடைக்காது.

இது சுவாமி மலை திருப்புகழ். ஞானம் தெறிக்கும் பாட்டு. தர்பாரி கானடாவின் அத்தனை அழகையும் கொட்டித் தீர்த்த ஒரு பாட்டு. இந்தப் பாட்டை கேட்டு “ஆஹா” என்று ஆனந்தக் கண்ணீர் விடாதவர்கள் மிகக் குறைவு.

ஒன்றாய், இருமையின், நான்முகன் என்று பல ஆரம்ப வரிகளில் வரும் இந்தப் பாடல்  ஒரு சிறிய பகுதியைத் தருகிறேன்

முன்பொரு நாள்

உமையைம்மையின் இரு மார்பிலும் சுரந்த  ஞானப் பாலை அருந்தி

இயல் இசை நாடகம் என்ற மூன்று தமிழிலும் வல்லவனாகி

நால்வகை கவிகளிலும்  வல்லவனாகி

ஐம்புலன்களுக்கு அடிமைப்படாத அவர்களை ஜெயித்த உரிமையாளன் ஆகி

ஆறு முகம் உடைய சண்முகம் இவன்தான் என்று யாவரும் கூற

இப்போது  திருப்புகழ் வரிகள் “எழில் தரும் அழகுடன் கழுமலத்து உதித்தனை” என்கிறார்.

இதில் “கழுமலத்து உத்த்தனை” என்றால் – சீர்காழியில் திருஞானசம்பந்தராக தோன்றினாய்” என்கிறார்.  அருணகிரிநாதர் என்ற குரு, சம்பந்தப் பெருமானை மேற்கோள் காட்டுகிறார்.

இந்தப் பாடலில் முடியுமோது “ஏரகத்து இறைவன் என இருந்தனையே” என்று முடிக்கிறார்.  இதை த.கா வில் பாடும்போது. நம்மை உருக்கும்.

கௌமாரம்.காம் ல் இந்தப் பாடல் ராகவன் சார் பாட நாம் இன்றும் கேட்கலாம்.

இப்போது முதல் கேள்விக்கு பதில் – வள்ளியை திருமணம் செய்ய கிழவன் ரூபத்தில்   முருகன் வந்து சேர,  இவள் பயந்து ஊட விநாயகர் யானை ரூபத்தில் வந்து  காப்பாற்றினார். . இந்த இடத்தில் முருகனுக்குப் பின்பு, விநாயகர் வந்ததால்,  முருகன் மூத்தோன் ஆகிறார்.

முருகா சரணம்