மகாமஹோபாத்யாய முல்லைவாசல் ப்ரஹமஸ்ரீ ஆர். கிருஷ்ணமூர்த்தி
சாஸ்த்ரிகள், அவர்கள் செப்டம்பர் 27,
2026 அன்று பிற்பகல் 1.30 மணியளவில் சிவ பதம் அடைந்தார்.
காஞ்சீபுரத்தில் நான்கு பெரியவாளுடன் சம்பந்தப்பட்டு,
கடைசியில் பால பெரியவாளின் “சாதூர் மாஸ்ய வ்ரதம்” முடிந்து விஷ்வ ரூப தரிசனம்
பார்த்துவிட்டு, வீட்டிற்கு வந்து, மாளய தர்ப்பணம் முடித்து, மரணம்.
அனாயேசேன மரணம் என்பது இதுதானோ ?
அவரின் ஸ்ரத்தாஞ்சலி சென்ற வாரம் 1.10.2026 அன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள, “ஆஸ்திக
சமாஜத்தில்” நடந்தது. பிரம்மஸ்ரீ கிருஷ்ண கனபாடிகள் (வைதீகஸ்ரீ). பிரம்மஸ்ரீ மணி
திராவிட் அவர்கள், ஸ்ரீ. ராம சுப்பு அண்ணா, ஸ்ரீ. துக்ளக் குருமூர்த்தி, ஸ்ரீ. காமகோடி
மற்றும் பல ஜாம்பவான்கள் கலந்து கொண்ட அருமையான நிகழ்ச்சி. அவரிடம் பாடம் படித்த
பல “பிரம்மஸ்ரீ” க்கள் ஒவ்வொருவரும் கண்ணீருடன் பேச, ஒரு நெகிழ்ச்சியான தருணமாக
அமைந்தது
அன்று, வர முடியாத பலர் கொடுத்த “இரங்கல் செய்திகளை” ஒரு மலராகக் (book) கொடுத்தார்கள். அதில் சில பகுதிகளையும், நான்
ஸ்ரத்தாஞ்சலியில் கேட்ட சில நிகழ்வுகளை கீழே தருகிறேன்.
நான் இவரைப் பற்றி எழுவதற்கு முன் நிறைய யோசித்தேன். எனக்கு
ஒரு யோக்யதையும் இல்லை. அவருடன் பழகினதும் இல்லை. இரண்டு- மூன்று முறை பார்த்து
இருக்கிறேன். கொஞ்சம் பேசி இருக்கிறேன். என்ன எழுதுவது ?
இதற்க்கு முன்பு சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ சுப்பிரமணிய தீக்ஷிதர்
அவர்களைப் பற்றி எழுதி இருக்கிறேன். ஏனெனில் நான் அவருடன் பழகி இருக்கிறேன். அவருடைய
உபன்யாசங்கள் நிறைய கேட்டிருக்கிறேன். என் குடும்பத்தில் என் அம்மாவுக்கு சகோதரர்
முறை. அவர் குடும்பமும் எனக்குப் பரிச்சயம்...
இதில் எதுவுமே இல்லாத எனக்கு இவரைப் பற்றி என்ன எழுதுவது என்று யோசித்தபோது, என் சம்பந்தி மாமா “ஸ்ரத்தாஞ்சலி” நினைவுபடுத்த, அங்கு போன பிறகு, இவரைப் பற்றி நிச்சயம் எழுத வேண்டும் என்று நினைத்தேன். இதுவும் மஹா பெரியவாளின் கட்டளை என்று கருதி எழுதுகிறேன்.
The Enduring legacy of Sri. Mulla vasal Sastrigal with Traveloka என்ற ஒரு
கட்டுரையில் (மலர்) ல் இருந்து. (தெரியாதவர்களுக்கு, தத்வலோகா என்பது Sringeri பீடத்தின்
சார்பில் நடத்தப்படும் ஒரு தொண்டு நிறுவனம். ஆழ்வார்பேட்டையில் இருக்கிறது)
பர்த்ருஹரியின் நீதி ஷதகத்தில் (69) ஒரு ஸ்லோகம் உண்டு:
मनसि वचसि काये पुण्य
पीयूषपूर्णा:
तिर्भुवनम्
उपकारश्रेनिभि: प्रीणयन्तः
परगुणपरमाणून् पर्वतीकृत्य नित्यं
निजहृदि विकसन्त: सन्ति संत: कियन्तः
How many noble souls whose
minds, bodies and speeches are full of nectar of good actions and who have done
good to the three worlds, who always find pleasure in elevating the lowly atoms
of other virtues to a high pitch like that of a mountain and rejoice in their
own hearts.
இது
அவருக்குத்தான் பொருந்தும்.
நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்- பிறர்
உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம் – இவை
அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்.
இது ஒரு சினிமா பாட்டு. ஆனால் பர்த்ருஹரி லெவெலுக்கு
எழுதப்பட்ட பாட்டு ..
இதுவும்...
எனக்கும் அவருக்கும், முன்பே சொன்னபடி, பெரிய பரிச்சயம் கிடையாது. சில தடவை வரகூர் உரியடி உற்சவம் வந்திருக்கிறார். கிருஷ்ண ஜனனம் உபன்யாசம் செய்திருக்கிறார். ஒரு முறை ஸ்கந்த சஷ்டி உத்சவத்திற்கு வந்திருந்தார் என் அம்மா சாப்பாடு போட்டிருக்கிறாள்.
ஒவ்வொரு வருடமும், மந்தவெளி ஸ்ருங்கேரி மடத்தில்
பஞ்சாங்கப் படனம் நடக்கும். அதற்கு அவர்
வருவார். அழகாக விளக்கிச் சொல்லுவார். போன
சித்திரை “பராபவ” வருஷத்திற்கு வந்திருந்தார். நமஸ்காரம் பண்ணினேன்.
கொஞ்சம் பேச நினைத்தேன். அவருக்கு உடம்பு முடியவில்லை.
பல தடவை (பல பாட சாலைகளுக்காக) சம்ஸ்கிருத புஸ்தகங்கள் வாங்க அவர் வீட்டுக்குப்
போகும்போது, மாமியை சந்தித்து இருக்கிறேன். மறக்காமல் குடிக்க மோர் தருவார். யார், எவர் என்று பார்க்காமல் உள்ளே வரச்
சொல்லி உட்கார வைத்து, கொஞ்சமாவது பேசி அனுப்புவார். அங்கு எப்போதும் 10 குழந்தைகள் இங்கேயும் அங்கேயும் ஓடிக் கொண்டு
இருப்பார்கள். வேத பாட சாலை போல
இருக்கும்.
சம்ஸ்க்ருத காலேஜ் அருகில் இருக்கும் அவர்
வீட்டில் எல்லா பீடாதிபதிகளும் விஜயம் செய்திருக்கிறார்கள். அவ்வளவு புண்யம் செய்த
இடம். அவர் வீட்டில் வந்து, கொஞ்சம் மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டால் போதும்.
எல்லா காருண்ய மூர்த்திகளும், பிரம்மஸ்ரீ க்களும், வேதமும் நடந்த இந்த பாத தூளிக்கு இணை எது ?
வீடே அழகாக இருக்கும், தனி வீடு. உள்ளே நுழைந்தவுடன் நந்தவனம். இரு புறமும் பல
கலரில் செம்பருத்தி, நந்த்யாவட்டை, துளசி மாடம், வில்வ மரம். அழகான திண்ணை. உள்ளே
ஒரு பெரிய பாத்திரத்தில் மோர். மண் பானையில் குடிக்க தண்ணீர்.......
ஸ்ரீ. கிருஷ்ணமூர்த்தி சாஸ்த்ரிகள் எப்போது
பேசும்போதும் கொஞ்சம் சம்ஸ்க்ருதம் பேசிவிட்டு பிறகு தமிழ் பேசுவார். (அதே பாணியை
வைதீகஸ்ரீ கிருஷ்ண கனபாடிகள் தொடர்ந்து செய்கிறார்.) எப்போது (படனம் போது) பேசினாலும், “நவக்ரஹங்கள்
இந்த இந்த நட்சத்ரத்தில் வந்து படுத்தும், இந்த ராசியில் விலகும். என்றெல்லாம்
பேசிவிட்டு, கடைசியில் “த்ரி கால ஸந்த்யாவந்தனம் ஒழுங்காக பண்ணுங்கோ, கொல்லை வழியா
வரும் சனி, கிணத்துக்கு இந்தப் பக்கம் வராது. அப்படியே ஓடிப் போய் விடும்” என்பார்
எப்போது பேசினாலும் அதில் லேசாக ஒரு ஹாஸ்யம்
இருக்கும். அது பெரிய கலை.
“எப்போது அவர் காஞ்சீபுரம் போனாலும், பெரியவாவை
பார்த்தவுடன் பெரியவா முகத்தில் பெரிய புன்னகை வரும். இது எப்படி என்றால், ராமன்,
ஆஞ்சநேயஸ்வாமியை முதலில் பார்க்கும்போது, அவரை அறியாமலேயே முகத்தில் ஒரு புன்னகை
வந்துவிட்டது. என்னதான் “ஆத்மானம் மானுஷே
மன்யே” என்று சொன்னாலும் ராமனாலேயே அந்த சந்தோஷத்தை கட்டுப் படுத்த
முடியவில்லை”.... – ஒரு சிஷ்யர் சொன்னார். ..
புதுப் பெரியவாளுடன் இவருக்கு இருந்த பக்தியை பற்றி மட்டும் நிறைய எழுதலாம்
காஞ்சி மஹா பெரியவாளைப் பற்றி பேசாத நாளே கிடையாது. கலியுக
ப்ருஹ்ம ரிஷியாகவே வாழ்ந்தார்கள் என்று வைதீகஸ்ரீ, பிரமஸ்ரீ கிருஷ்ண கனபாடிகள்
அவர்கள் கூறும்போது அவர் கண்கள் கலங்கின.
அவரின் பிரதம சிஷ்யர், - மாமியைப் பற்றிப்
பேசும்போது “மாமி, பாரி முனை
போன்ற பல இடங்களுக்கு, பஸ்ஸில் தான் போவார். அப்போது போகும்போது மறக்காமல் மஞ்சள்
கிழங்கு எடுத்துக் கொண்டு போவார்கள். அங்கு பஸ்ஸில் இருக்கும் சுமங்கலிகளுக்கு
ஆளாளுக்கு இரண்டு மஞ்சள் கிழங்காவது கொடுத்து ஆசீர்வாதம் செய்வார்கள். யாராவது
பெண்கள் முடியை விரித்து போட்டுக்கொண்டு போனால், பதவிசாக சொல்லி முடிந்து கொள்ளச்
சொல்வார்கள்” என்றார்.
மாமாவும் மாமியும் தீவிரமான ராம பக்தர்கள். மாமா மாமியை “ராமா” என்று கூப்பிடுவார்கள்.
மாமி, மாமாவை “ராம் ராம்” என்றே கூப்பிட்டுக் கொள்வார்கள். எப்போதும் ஜே ஜே என்று
அவர் வீட்டில் வேத குழந்தைகள். ஒரு
நிமிடம் முகம் சுளித்து பேசவோ, செய்யவோ கிடையாது. எல்லோருக்கும் சாப்பாடு. ஸ்வீட்.
தடாலடி தான். Dr. காமகோடி அண்ணா
பேசும்போது ‘என் வீட்டில் சாப்பிட்ட ஸ்வீட் டை விட, மாமியாத்தில் தான் நிறைய
சாப்பிட்டிருக்கிறேன்” என்றார்
என் அம்மா சொல்லும்போது, மாமி முல்லைக்கொடி
கிராமம். சப்தரிஷிகளின் (ஒருவரின்) புத்ரி என்பதும். இளமையிலேயே கிரந்தம்,
சம்ஸ்கருதம் இவைகளில் பரிபூர்ண தேர்ச்சி -என்று சொன்னார்கள்.
நான் முல்லைக்கொடி கிராமத்திற்குப்
போயிருக்கிறேன். அங்கு இவர் க்ருஹத்த்தில் சுமார் 1000 சம்ஸ்கருத, கிரந்த, தமிழ் புத்தகங்கள் இருந்தன. அதில் போதாயன சூத்ரம் பிரயோக
புத்தகம் ஒன்று எடுத்து வந்தேன்.
பெரியவா எப்போதும் புதிதாக ஏதாவது நிகழ்ச்சி
என்றால் மாமியை தான் முதலில் சம்ஸ்க்ருதம் பேசச் சொல்வார்கள். சமீபத்தில் பெரியவா பீ. எஸ் பள்ளியின் Golden Jubilee Celebration க்காக வந்திருந்தபோது, ஆரம்பமாக மாமி சம்ஸ்க்ருதத்தில் ஒரு
5 நிமிடம் பேசினார்.
மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர் குருஜி – எழுதும்போது
“எப்போதும் ஒருவரால் சிரித்த முகத்துடன் இருக்க முடியமா ?
அப்படி ஒருவரைத் தெர்யுமா என்றால் தெரியும் என்பேன் அவர்தான் சாஸ்திர ரத்னாகர
முல்லைவாசல் சாஸ்த்ரிகள் என்று
எனக்கு அவருடன் 35 வருடங்களாகப் பழக்கம். காலையில் எழுந்து அனுஷ்டானம் முடிந்து, பிரம்ம யக்ஞம்
செய்து, அடுத்து வேத பாடம், வருபவர்களுக்கு வேத பாஷ்யம், அடுத்து பாஷ்ய பாடம்,
மாலையில்
பிரவசனம் இருக்கும். அவர் பகலில் படுத்துக் கொண்டார் என்பதே
கிடையாது.
மூன்று மடங்களில் நடக்கும் சபைகளுக்குச் செல்வார். எல்லா
மடாதிபதிகளுக்கும் சாஸ்த்ரிகள் மீது நல்ல மதிப்பு உண்டு. வித்யா கர்வம் துளி கூட
கிடையாது. இன்று அவருடைய குமாரன் பேராசிரியர் ராம சுப்ரமண்யன் மகா மேதாவி. அவருடைய
அறிவுக்காக உலகம் முழுவதும் போற்றப் படுபவர்.”
முடிக்கும்போது, நாம் சாஸ்திரிகளுக்கு தகன சம்ஸ்காரம்
செய்யவில்லை. ஒரு வித்யா கோசத்திற்கு தகன சம்ஸ்காரம் செய்ததாக எனக்குத் தோன்றியது.
Dr.V. காமகோடி
அவர்கள் சொல்லும்போது
தொடரும் -.......
No comments:
Post a Comment