19.12.21
மைலாபூர்
ஃபைன் ஆர்ட்ஸ் ல் ராமக்ருஷ்ணன் மூர்த்தி:
பக்க வாத்யங்கள்: காரைக்குடி மணி, டெல்லி சுந்தர்ராஜன், சுரேஷ் (கடம்)
கொஞ்சம்
கச்சேரியைப் பற்றி எழுத்துவதற்க்கு முன்:
நேரில்
கச்சேரி என்பது இந்த வருடமும், அத்திப்
பூத்தாப்போல் தான். பாரதிய வித்யா பவனம் துணிந்து ஆரம்பிக்க,
மைலாபூர் ஃபைன் ஆர்ட்ஸ் அதைத்தொடர்ந்து. தியாகராய நகரில் கிருஷ்ண காண சபா வும்
ஆர்ம்பித்து இருக்கிறார்கள். நானும் 2-3 கச்சேரிகள் KGS போனேன். இப்போது துணிந்து நிறைய சபாக்கள்
...
எனக்கு
என்னமோ இந்த யூ டியூப் கசேரிகளை விட, நேரில்
கச்சேரி தான் பிடித்தது. வித்தியாசம் என்று கேட்டால், முதலில்
சாப்பாடு, சாஸ்தா கேட்டரிங் என்று ஒன்று MFAC ல் இசை விழாவுக்காக arrange பண்ணி இருக்கிறார்கள். Rs 400 ஒரு சாப்பாடு. வடையும், வெங்காய சாம்பாரும்
மணக்க மணக்க. அந்தப் பக்கம் கதவை திறந்து யாராவது அரங்கத்து உள்ளே வந்தால், அவர்களோடு கீரை வடை வாசனை, நெய் வாசனையும் கூடவே
வருகிறது. சுகர் பேஷண்டுக்கெல்லாம் ராஜ யோகம். இதெல்லாம் எங்க ஸார் வீட்டிலே பண்றாங்க.? நிறைய பணம் இருந்து ரெண்டு இட்லி பொங்கல் கூட கிடைக்காமல் போன மாதம்
கஷ்டப்பட்ட சென்னை வாசிகளை நான் பார்த்தேன்.
பல
சபாக்களுக்கு, கேட்டரிங் சாப்பாட்டினால்தான்
கூட்டம் வருகிறது. இதோ MFAC ல் உள்ளே இடைவெளி விட்டு
உட்கார்ந்த ரசிகர்கள், இடைவெளியே இல்லாமல் இங்கே சாப்பிட
உட்கார்ந்து இருந்தார்கள்.
மேலும்
ரசிகர்களின் முக பாவங்களைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு ரா.மூ. நேற்றைய கசேரியில் நாடகப்ரியா ராகம்
பாடம், பாதி பேர், ஏதோ
புத்தகத்தை புரட்டினார்கள். மொபைல் நோண்டினார்கள். என்ன தேடினார்கள் என்று
புரியவில்லை. ஆனால் காமெடியாக இருந்தது. “இதி சமயமு” என்று
வாசுதேவாசர்யார் கிருதியை பாடுவதற்கு முன்பு, ரா.மூ
ராகத்தின் பெயரைச் சொல்ல, வெள்ளம் வடிந்த சென்னை போல் மக்கள்
முகத்தில் திருப்தி. மேலும் நேரில்
கச்சேரி, முக்கியமாக,
பாடுபவர்களுக்கும், பக்க வாத்யக்காரர்களுக்கும் ஒரு பிடிப்பு, ரசிகர்களைப் பார்த்துப் பாடுவது என்பது பெரிய பலம்.
ராமக்ருஷ்ணன் மூர்த்தி மாதிரி ஒரு பாடகரின்
பாட்டை, நேரில் பார்க்காமல்,
யூ ட்யூபிலும், மொபைல் போனில் வரும் லிங்க் களிலும்
பார்ப்பது “மகா பாவம்” என்பேன்.
ரா.மூ பற்றி:
என்ன
சங்கீதம் சார் !. என்ன ஆளுமை ! . அவர் சரஸ்வதி தேவி நமக்காக அனுப்பிவைத்த சங்கீத
தூதர். நான் அவ்வப்போது நினைப்பதுண்டு.
ஒவ்வொரு காலத்திலும். ஆன்மீக செழிப்புக்காக, ஆதி சங்கரர் முதல் கொண்டு யாரோ நாம் நாட்டில்
வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். நல்ல சொற்பொழிவு,
சங்கீதம் என்று சொன்னால், முன்னோர் காலத்தில் ஒரு அனந்த ராம
தீக்ஷிதர், கிருபானந்த வாரியார், சம காலத்தில், ஸ்ரீ. சுந்தர்குமார், நொச்ச்சூர், செங்காளிபுரம் தீக்ஷிதர் பரம்பரை சொற்பொழிவாளர்கள். இந்தப் பக்கம் அரியக்குடி முதல்..இசை வித்தகர்கள். கொஞ்சம் முன்பு, சேஷாகோபாலன், TVS, மகாராஜபுரம் சந்தானம்,. சினிமாவில்
ஒரு எம்எஸ்வி பிறகு இளையராஜா என்று. சம கால சங்கீததில் சஞ்சய். மாயோன் ர.கா
2021 ல் ரா.மூ.
அது
எப்படி சார், எந்தப் பாட்டைப் பாடினாலும்
அழகாக இருக்கிறது ? நான் செம்மங்குடியில் பிறந்தாலும், பல பாடகர்களின் தீவிர ரசிகன். பல நண்பர்கள் ஒரு பாடகரை உயர்த்திப்
பேசும்போது குறுக்கே பேசாமல், கேட்டுக்கொண்டு இருப்பேன்.
“எப்படி அந்த பாடகரின் இசை, இவர்களை ஆட்கொண்டு இருக்கிறது. எப்படி
அந்த பாடகர்களின் ஆளுமையை ரசித்து இருக்கிறார்கள்” என்று ஆச்சர்யப்படுவேன். மதுரை மணி
அய்யரின் (மைலாபூர்) ரசிகர்கள் கூடும் சபையில் நானும் இருப்பேன்.
என்
தந்தை, மதுரை சோமுவின் பரம ரசிகர். இப்போ பாடும்
பாடகரைப் பற்றிப் பேசினால் அவருக்கும் மிகுந்த கோபம் வரும். சஞ்சய் சுப்ரமண்யனைத்
தான் கொஞ்சம் ஒத்துக் கொண்டிருக்கிறார். அவர் சொல்லுவார். “சோமு இரவு 9.30 மணிக்கு
ஆரம்பித்து, காலை 3 மணிக்கு 45 நிமிஷம் ஒரு காம்போதி
பாடுவான் பாரு ! கட்டிப்போட்டா மாதிரி எல்லோரும் உட்கார்ந்து இருப்பான். பக்க வாத்யக்காரன்கள்
(full bench கச்சேரி) எல்லோரும் 3 தடவை
“பாத் ரூம்” போயிட்டு வந்துருவான். இந்த கடன்காரன் (இதை விட மோசமான கெட்ட வார்த்தை
சொல்லுவார்) அப்படியே உட்கார்ந்து இருப்பான்” என்பார். சொல்லும்போது அவர் கண்களில் கர்வம் மின்னும்.
இப்படி பல பேர்களை நான் பார்த்து இருக்கிறேன். GNB
சங்கீததுக்காக, கிராமத்தை விட்டு,
சென்னை வந்து, வக்கீல் ஒருவரிடம் டைப் ரைட்டர் ஆக சேர்ந்த
ஒருவர். , இன்று சென்னையில் மிகவும் பிரபலமான ஆடிட்டரின்
தந்தை.
மதுரை சோமு உட்பட. பாலக்காடு கே.வீ.
நாராயணஸ்வாமி அவர்களின் “வெண்ணைக் குரலுக்கு” நான் எப்பவுமே அடிமை. என் பெண் அவர்
துணைவியாரிடம் (ஸ்ரீமதி பத்மா நாராயணஸ்வாமி) தான் பாட்டு சொல்லிக்
கோண்டிருக்கிறாள். ரா.மூர்திக்கு அதே
குரல் வளம். அதே வெண்ணை !!!
காரைக்குடி மணி போன்ற பெரிய வித்வான்களோடு
நேரில் பார்த்தபோது, நிஜமாகவே அத்தி பூத்தா
மாதிரியே இருந்தது.
ஆனால், பெரிய வித்வான்களோடு பாடும்போது, பக்க வாத்யம்
கொஞ்சம் தூக்கலாக வைத்துக் கொண்டு விடுகிறார்கள். ரெகார்ட் பண்ணி பிறகு
கேட்கும்போது, “சும்மா அதிருதல்ல” என்று தனியாக மிருதங்கம்
அதிருகிறது. உமாயாள்புரம் சிவராமன் அவர்களிடம் இதே பிரச்னை தான்.
இனி
கச்சேரியைப் பார்ப்போம்
சும்மா
என்ன பாடினார் என்று லிஸ்ட் கொடுப்பதற்க்கு முன்பு, மிகவும் பிரமாதம் என்ன என்று தேடுவோம்.
கல்யாண சாப்பாட்டில் எல்லா அயிட்டமும் பிரமாதமாகத்தான் இருக்கும்.
திடீரென்று, ஒரு “அன்னாசி ரசம்” என்று ஒன்று போடுவான். அது
நம்மை கிறங்க அடிக்கும். அது போல்.
சாவேரி
ராகம் தானம் பல்லவியை முதலில் எடுத்துக் கொள்வோம். பல்லவி என்னமோ “சங்கரி
சங்குரு.... அகிலாண்டேஸ்வரி” தான். அதில் பேகட, காபியையும் சேர்த்து குழைத்து ஒரு ஸ்வரம் பாடினார் பாருங்கள்.
அடடா....மூன்று கயிறைப் பிடித்துக் கொண்டு குதிரை ஓட்டுபவர்கள், எந்த குதிரையை இழுக்க வேண்டும், எதை லேசாக
விடவேண்டும் என்று தெரிந்து, கயிற்றை நகத்துவார். அது போல்
ஒரு ஸ்வரத்தை மாற்றி, 3 ராகத்தையும்
மாற்றி மாற்றி பாடினார், குருக்ஷேத்திரத்தில், கிருஷ்ண பரமாத்மா, தேரை எவ்வளவு லாவகமாக வழி
நடத்திச் சென்றாரோ, அது மாதிரி. டெல்லி கொஞ்சம் திணறித்தான்
போனார்.
1.ரகுவர
அப்ரமேய என்ற காம்போதி தியாகராஜா கிருதியை வைத்து ஆரம்பித்தார். அதில் உள்ள சிட்டை
ஸ்வரத்திலேயே களை கட்டிவிட்டது
ராமனை
சூரியனுக்கு ஒப்பிட்டு காட்டும் தியாகராஜரின் ஒரு அருமையான பாட்டு. ஞாயிற்றுக்
கிழமை என்பதால், நன்கு பொருந்தியது.
2. கொஞ்சம் வராளியை காட்டி, திருப்பாவை. “ஆழி மழை” யை
எடுத்தார். நிரவல் “வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
..... பாவாய்”. இந்த situation க்கு ஏற்ற நிரவல்.
3.
நாடகப்ரியா ராகத்தை தேனாகக் குழைத்து கொடுத்தார். “இதி சமயமு” என்ற
வாசுதேவாச்சார்யார் பாடலை பாடினார். ஸ்வரத்துடன் அழகாக முடிந்தது. இதில் ஒரு சந்தேகம் எனக்கு வந்தது. “கருண தோணு” என்ற சரணத்தில் ஸ்வரம்
எடுத்தார். ஆனால் “சங்கீத சுதாவிலும்” “கர்நாடிக்” வரிகளைப்
பார்க்கும்போது, “கருண ஜேஸி” என்று இருந்தது எது தவறு எது
சரி. இரண்டுமே அர்த்தம் ஒன்றாக இருந்தாலும் இருக்கலாம்.
4.
அருணாசல நாதம் – சாரங்கா வில் தீக்ஷிதர் கிருதி அடுத்து.
5.
மனசுலோனி என்ற ஹிந்தோள ராக தியாகராஜர் கிருதி. வரமு, மார்க ஹிந்தோளம் என்று பாடாய் படுத்தினாலும், எனக்கு
ஹிந்தோளம் தான். ஸ்வரத்தில் “மனசுலோனி” யை ஒரு பிடி பிடித்தார்.
6.
முன்பே சொன்ன RTP. பல்லவியை பியாகடாவையும், காபியில் குழைத்துக் கொடுத்தார்.
7.
தனி முடிந்தவுடன். சங்கரி சங்குரு பாடலை முழுவதும் பாடினார்.
8 நீலாம்பரி, ஆகிரி, சிந்து பைரவி, பெஹாக்
விருத்தம்:
“லோகானா பூய சர்வாம்.......பிரணத பயஹரம்.... கலயதி
நடனம் யத் சபாயாம் நடேசஹ”
“இரக்கம்
வராமல் போனதென்ன காரணம்” - கோ.பா
9.
தில்லானா- கானடா ராகம்
மங்களம்.
வயலின்
டெல்லி, என்னமோ எனக்கு ரொம்பவும் ஒஸ்தியாகப்
படவில்லை. மூர்த்தியின் அசகாய புடிகளைத் திரும்பப் புடிக்கசில சமயம்
திணறினார். அங்கே குரு காரைக்குடி மணி
போல் இங்கே குரு ஸ்ரீராம் குமார் இருந்தால் மிக அருமையாக இருந்திருக்கும். ஸ்ரீ ராம் குமார் லாவகமாக தலையை லேசாக கோதிக்கொண்டு, ஜம் ஜம் என்று வாசித்து இருப்பார்.
தனி
– குரு காரைக்குடி மணி சுரேஷ் அவர்களுடன் சேர்ந்த தனி. சர்க்கரைப் பந்தலில் தேன் மழை
பொழிந்தது போல்.....
ரா.மூ
போன்ற விதவான்கள் இருக்கும் வரை, க இசை சிரஞ்சீவியாக
இருக்கும். இதோ, கொரொனா, ஓமைக்ரான் என்று
சொல்லி கடவுள் நாம் தூக்கத்தை தொலைக்க வைத்துக் கொண்டிருக்க,
அதே கடவுள், ராமகிருஷ்ணன் மூர்த்தியின் கச்சேரி யையும் கேட்க
வைத்து, இதுதான் மருந்து என்று சொல்லாமல் சொல்லுகிறாரோ. என்று தோன்றுகிறது.