Sunday, 3 July 2016

பஞ்ஜாஷரியும் மகாபெரியாவளும்

வரகூர் நண்பர் ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் மொழி பெயர்த்து எழுதியிருக்கிறேன்.
மகாபெரியவாளைப்பற்றி எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது.  அவருடைய அனுக்ரகங்கள் அளப்பரியவை.   அவரின் அனுக்ரஹத்தைப் பெற்றவர்களின் அனுபவங்கள் படிக்க கேட்க அலுக்காதவை.
விஜய் டி வி யில் போன வாரம் ஸ்ரீ கிருபானந்தவாரியாரின் அருள் பெற்ற, சிஷ்யையான தேச. மங்கையர்க்கரசி அவர்கள் பஞ்சாக்ஷர மஹா மந்திரம் பற்றி ஒரு சொற்பொழிவு ஆற்றினார்.

சிவபெருமான், ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமையை உலகுக்கு புரிய வைக்க திருநாவுக்கரசர் (அப்பர்) மூலம் ஒரு நாடகம் ஆடினார். ஜைன மதத்தை சார்ந்த திருநாவுக்கரசர் ஒரு சமயம் கடுமையான வயிற்று வலியால் அவதிப்படஅந்த நோயை எந்த மருத்துவராலும் குணப்படுத்த முடியாமல் போக அவுருடைய சகோதரியின் உதவியால் (சகோதரி சைவ மதத்தில் பற்று நிரம்பியவர்.) திரு நீறு பூசி ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்து வயிற்று வலி குணமாகி சைவ மதத்தை தழுவினார். 

நாவுக்கரசர் சைவ மதத்தை தழுவினார் என்று கேட்ட ஜைன மதத்தின் ராஜா, மகேந்தர பல்லவன் உடனே அவரை கைது செய்து பல வித கஷ்டங்களை கொடுத்து அவரை மதம் மாற்ற முயற்சி செய்தான். சிவ பெருமானின் கருணையுடன் நாவுக்கரசர் வெற்றி கண்டார்,  மிகுந்த கோபம் கொண்ட ராஜா, கடலில் அவரை இறக்கி அவருடன் ஒரு கல்லை கட்டி விட்டான்.  எல்லோரும் நாவுக்கரசர் இறந்து போய் விட்டார் என்று நினைத்தபோது அவர் ஐந்தெழுத்து மந்திரமான பஞ்சாக்ஷரியை ஜபித்து கடலில் கட்டிய கல்லோடு மிதந்தார். என்னே ஒரு அற்புதம்.

தேச.மங்கையர்க்கரசி இதை பற்றி சொல்லும்போது மஹா பெரியவாளின் அனுக்ரஹத்தால் நடந்த சுவையான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். 

ஆந்திரா மாவட்டத்தில் ஏதோ ஒரு இடத்தில் சிவன் கோவில் கட்டுவதற்காக ஸ்தபதி சிலை வடிக்க அதை தூக்கி கோவிலுக்கு கொண்டு போக நினைத்தபோது அதை தூக்கவே முடியவில்லை. எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம். மனது மிகவும் வருந்தி அவர்களுக்கும், நம் எல்லோருக்கும் ஒரே வடிகாலான மஹா பெரியவாழிடம் வந்து கேட்டார்கள்.

பெரியவா, சில நிமிடங்கள் மெளனமாக இருந்து விட்டு, பக்கத்தில் இருந்த அணுக்கத் தொண்டரை அழைத்து ஸ்ரீ வைத்யநாத சாஸ்திரி என்பவரை திருச்சியில் ஏதோ ஒரு இடத்தில் இருந்து அழைத்து வரச் சொன்னார்.
அவர் வந்து மிகுந்த பவ்யத்துடன் மஹா பெரியாவளுக்கும் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து விட்டு நிற்க, பெரியவாள் அவர் காதில் ஏதோ சொல்லிவிட்டு, வந்த ஆந்திர பக்தர்களை கூப்பிட்டு, சாஸ்திரிகளை அழைத்துக்கொண்டு போகச் சொன்னார்.

சாஸ்த்ரிகள் அங்கு போய் தன்னுடையை அனுஷ்டானத்தை முடித்து ஜபம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். ஆந்திர பக்தர்களுக்கு ஆச்சர்யம். தமக்கு எதோ உபாயம் சொல்லப்போகிறார் என்று நினைத்தால் சாஸ்த்ரிகள் கண்ணை மூடி உட்கார்ந்திருக்கிறாரே என்று.  இருந்தாலும் மஹா பெரியாவளின் ஆசி பெற்ற சாஸ்திரிகளின் செய்கையில் ஏதோ இருக்கிறது என்று பவ்யத்துடன் பணி விடை செய்தார்கள்.   இதே போன்று 21 நாட்கள் கடுமையாக ஜபம் செய்தார் சாஸ்த்ரிகள்.

ஜபம் செய்து முடித்த சாஸ்திரிகள், அவர்களைக் கூப்பிட்டு இப்போது அந்த விக்ரஹத்தை தூக்கச் சொன்னார்.  என்ன ஆச்சர்யம. அந்த லிங்கம் இலவம் பஞ்சு போல் மிகவும் இலகுவாக தூக்க முடிந்தது.
ஆச்சர்யத்துடன் இதன் காரணத்தை சாஸ்திரிகளிடம் கேட்க, சாஸ்திரிகள்,  “எனக்கு ஒன்றும் தெரியாது. பெரியவா என்னை கூப்பிட்டு, இங்கு வந்து நியமமாக பக்தி ச்ரத்தையுடன் பஞ்சாக்ஷரி மந்திரத்தை 21 நாட்கள் ஜெபிக்கச் சொன்னார்” என்றார்.

தன்னுடைய தபோ வலிமையால், வெகு காலத்திற்கு முன் நாவுக்கரசர் செய்து காட்டிய ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமையை, இப்போது செய்து காட்டி, நடமாடும் தெய்வம் என்ற ஒரு வார்த்தைக்கு எடுத்து காட்டாக விளங்கிய பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம்.

No comments: