Friday, 22 March 2013

பக்தனின் பாடலுக்கு ஆடிய வரகூர் வேங்கடேசர்!


Thanks to Sri.Ramakrishnan, Mumbai for this Article. 

                     றைவனின் விளையாட்டுகள் மிக வினோதமானவை. அடியார்கள் மீது கருணை புரிந்து தன்வசமாக்கி, அவனைப் பாடகனாக- கவிஞனாக- துறவியாக- முக்தனாக ஆக்குவது அவனது திருவிளையாடல்!

இசைக்கும் இறைக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதை பல மகான்களின் வரலாறுகள் நமக்கு உணர்த்தும். ஊத்துக்காடு வேங்கட சுப்ரமணியனுக்கு சிறுவயதிலேயே காளிங்க நர்த்தன கிருஷ்ணன் குருவாக அமைந்து கானம் போதித்தார். அவரது கிருஷ்ண நடன கானம் அலாதியான சுவையுடையது.

ராணி மீராபாய் கண்ணன்மீது பாடிய பாடல்கள் வடநாட்டில் மிகப் பிரசித்தமானவை. முகலாய அரசரான அக்பர் இசைக் கலைஞர் தான்சேனுடன் தன் உயிரையும் பொருட் படுத்தாமல் மாறுவேடத்தில் வந்து, மீராபாயின் பாடலைக் கேட்டு முத்துமாலையைப் பரிசளித் தார் என்றால், மீராபாயின் பாடல்கள் எவ்வளவு உருக்கமானவை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வகையில் இறையருள் பெற்ற பல மகான்களில், ஸ்ரீநாராயண தீர்த்தர் என்ற மகானைப் பற்றி இங்கு காண்போம்.

ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகில் உள்ளது காஜா என்ற கிராமம். இதை வெல்லத் தூர் கிராமம் என்றும் சொல்வர். இங்கே தாள பஜ்ஜலா என்ற வீட்டில் 1675-ஆம் ஆண்டு பரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தார் கோவிந்த சாஸ்திரி. வேத, உபநிடத, புராண, இதிகாசங் களிலெல்லாம் தேர்ச்சி பெற்றார். பொதுவாக வேதம் ஓதுபவர்கள் சங்கீதம் பயில மாட்டார் கள். (சாம வேதமே சங்கீதம்தானே.) ஆனால் கோவிந்த சாஸ்திரி சங்கீதத்திலும் நாட்டியத்தி லும் பாண்டித்யம் பெற்றிருந்தார். திடகாத் திரமான உடலையும் கொண்டவர்.

உரிய பருவத்தில் அச்சம்மா என்ற பெண்ணை கோவிந்த சாஸ்திரிக்கு மணம் முடித்து வைத்த னர். அச்சம்மா கிருஷ்ணா நதியின் தென்கரை யிலுள்ள கிஞ்சுபள்ளி என்ற ஊரைச் சேர்ந்தவள். கோவிந்த சாஸ்திரி கிருஷ்ணா நதியை நீந்திக் கடந்தே அப்பக்கம் செல்வாராம். ஒருசமயம் அச்சம்மா தாய்வீடு சென்றிருந்தாள். அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் கோவிந்தருக்கு ஏற்பட்டது. வழக்கம்போல ஆற்றிலிறங்கி நீந்தத் தொடங்கினார். அவரைத் துறவியாக்க எண்ணிய கிருஷ்ணனின் லீலைபோலும்- திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. எவ்வளவோ முயன்றும் நீந்த முடியாத நிலை. வேறு வழியில்லை... தர்ம நுட்பங்களை அறிந்த கோவிந்த சாஸ்திரி ஆபத்சகாயம் எடுத்துக் கொண்டார். தன் பூணூலைக் கழற்றி வீசி விட்டார். பெருக்கெடுத்த வெள்ளம் தணிந்தது. நீந்திக் கரை சேர்ந்தார் கோவிந்தர்.

வழக்கம்போல மனைவியின் இல்லத்திற்குச் சென்றார். ஆனால் அவர் மனைவியோ அவரை கணவனாகக் கருதாமல், ஒரு துறவிக்குரிய பாவனையில் வரவேற்று உபசரித்தார். கோவிந்த ருக்கு ஏதோ புரிந்தது போலிருந்தது. அங்கிருந்து புறப்பட்டு நேராக காசிக்குச் சென்றார். ஸ்ரீசிவ ராமானந்த தீர்த்தரிடம் முறையாக சந்நியாச தீட்சை பெற்றார். ஸ்ரீநாராயண தீர்த்தர் என்னும் சந்நியாசப் பெயரும் பெற்றார்.

பின்னர் பிரயாகை, மதுரா, பிருந்தாவனம், பூரி ஜெகந்நாதம் போன்ற தலங்களைத் தரிசித்துப் புனித நீராடி, வராக க்ஷேத்திரமான திருப்பதி வந்து சேர்ந்தார். அங்கே அவருக்கு வயிற்றுவலி உண்டாயிற்று. "வயிற்று வலியா, வேங்கடேசரைத் துதி' என்று சொல்வர். ஆனால் திருப்பதி வாசனோ நாராயண தீர்த்தரின் கனவில் தோன்றி, "காவேரிக் கரைக்குப் போ' என்றாராம்!

அங்கிருந்து திருச்சி வந்த நாராயணர் குணசீலம் வந்து சேர்ந்தார். (இங்குள்ள பெரு மாள், குணசீல மகரிஷியின் தவத்திற்கு மகிழ்ந்து கோவில் கொண்ட பரவாசுதேவர். பில்லி, சூன்யத்தால் பாதிக்கப் பட்டவர்கள், பேய், பிசாசு பிடித்தவர்கள் இங்கு வந்து ஒரு மண்டல காலம் தங்கி, நண்பகல் பூஜையின்போது அளிக்கும் தீர்த்தப் பிரசாதத்தை அருந்தியே குணமடைந்திருக்கிறார்கள். இன்றும் இது நடந்து வருகிறது. இத்தலப் பெருமாளை திருமலையானின் அண்ணன் என்பர். பெரிய திருப்பதி எனப்படுகிறது குணசீலம். திருமலை யானுக்குச் செய்யும் பிரார்த்தனையை இங்கு செய்கிறார்கள்.) "இந்தப் பெருமாள்தான் தன் நோயைத் தீர்ப்பாரோ' என்று அவரை வணங் கியபடி அங்கேயே இருந்தார். ஆனால் அவர் கனவில் தோன்றிய குணசீலப் பெருமாள், "பொழுது விடிந்ததும் ஒரு மிருகம் தென்படும். அதைப் பின்தொடர்ந்து செல்' என்றார். (விநாயகர் வழிகாட்டியதாகவும் சொல்வர்.)

காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் இரண்டு வெள்ளை வராகத்தைக் கண்டார். இறைவன் ஆணைப்படி அந்தப் பன்றி களைப் பின்தொடர்ந்து சென்றார். அவை பூபதிராஜ புரம் என்ற கிராமத்தை அடைந்து ஒரு பாழடைந்த கோவிலுக்குள் சென்று மறைந் தன. அக்கோவிலுக்குள் சென்று பார்த்த போது, லட்சுமி தேவியை மடியில் அமர்த்திய வண்ணம்- சங்கு, சக்கர தாரியாக- லட்சுமி நாராயணராக பெருமாள் காட்சி தந்தார். நாராயண தீர்த்தர் அந்தக் கோவிலைச் செப்பனிட்டு பெருமாளை வணங்கி வந்தார். அவர் வயிற்றுவலி முற்றிலும் குண மாயிற்று! (வராகம் காட்டியதால் இத்தலம் வரகூர் என்றும்; பெருமாள் வரகூர் வேங்கடேசர் என்றும் அழைக்கப்படுகிறார்.)

வரகூர் பெருமாள் நாராயண தீர்த்தரிடம் ஸ்ரீமத் பாகவத தசம ஸ்கந்தத்தை- கிருஷ்ண லீலைகளை கத்ய, பத்ய கானமாக நடனத்திற்கு ஏற்ப செய்திடப் பணித்தார். அவ்வண்ணமே அவர் வடமொழியில் "ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி' என்னும் கிரந்தத்தை இயற்றினார்.

இதில் முதல் பாடலாக கணபதி துதியைப் பாடியுள் ளார்.

"ஹிமகிரி தனயா பத்யம்

ஹேமாசல சாப சமுதிதம் தேஜ:

கிமபிமஹத்தம் மாத்யம்

ஸ்மர்த்தவ்யம் விக்னதிமி ஹரனாய.'

கதாகாலட்சேபம் செய் பவர்கள் மேற்கண்ட சுலோகத்தைப் பாடியே தொடங்குவார்கள்.

அடுத்து கருடபகவானைப் பாடி, பின்னர் பூரி ஜெகந்நாதரைப் பாடி பிறகு வரகூர் பெருமாளை,

"ஸர்வஞான க்ரியா சக்திம்

ஸர்வ யோகீஸ்வர ப்ரபும்

ஸர்வ வேதமயம் விஷ்ணும்

ப்ரப விஷ்ணும் உபாஸ்மஹே'

என்று போற்றுகிறார்.

அடுத்து தசாவதார கீர்த்தனைகள், கண்ணன் பிறப்பு, கண்ணனின் லீலைகள் என்று பாடி, இறுதியாக ருக்மிணி திருமணத்தை மிக விரி வாகப் பாடியுள்ளார். இப்பாடல்களைப் பாடி நர்த்தனமும் புரிந்தார் நாராயண தீர்த்தர். அந்தப் பாடலின் இசையில் மயங்கிய பெரு மாளும் நடனம் புரிவாராம். அங்கே நட்டுவனாராக இருந்தவர் ஆஞ்சனேயர் என்கிறார்கள். அதற்கேற்ப இங்குள்ள ஆஞ்சனேயரின் பெயர் தாளங்கொட்டி ஆஞ்சனேயர் என்பதாகும்.

கோவிலில் ஒரு துறவி நடனமாடுவதை கிராமத்திலிருந்த ஆன்மிகவாதிகள் கண் டித்தனர். "இது வேங்கடவன் ஆணை. அவருமல்லவா என்னுடன் நடனமாடுகிறார்!' என்றார் நாராயண தீர்த்தர். "அப்படியெனில் அதை நாங்களும் காண வேண்டும்' என்று அவர்கள் சொல்ல, இறைவனை வேண்டினார் தீர்த்தர். பெருமாளி டமிருந்து உத்தரவு கிடைத்தது.

அதன்படி பெருமாள் சந்நிதியின் முன் திரை இடப்பட்டது. மக்களெல்லாம் கோவிலின்முன் திரண்டனர். இறைவனை வணங்கி நாராயண தீர்த்தர் பாட, சந்நிதிக்குள் பெருமாள் நடனம் ஆடினார். அவரது சலங்கை ஒலி ஜல்ஜல் என்று அனைவரது செவிக்குள்ளும் புகுந்து மெய்சிலிர்க்க வைத்தது. மக்கள் நாராயண தீர்த்தரின் பாதங் களில் வீழ்ந்து பணிந்தனர். அவரது பாடல்களை மக்கள் அனைவரும் பாடி மகிழ்ந்தனர்.

ஆந்திரத்தில் பிரபலமானவர் சித்தேந்திர யோகி. இவர் நாராயண தீர்த்தரின் சீடர். இவரால் அமைக்கப்பட்ட குச்சுப்பிடி நடனமும், பஜனை பாகவதர் கள் மேளாவின் மெலட்டூர் சம்பிரதாயத்தில் பாடி ஆடும் கீதங்களும், குண்டூரி லுள்ள அத்தங்கியிலும் நாராயண தீர்த்தரின் கிருஷ்ணலீலா தரங்கிணிப் பாடல்களே பயன்படுத்தப் படுகின்றன. இவை மிகுந்த ஆனந்தத்தைத் தருபவை. சரணாகதி தத்துவத்தை வெளிப்படுத்தும் வண்ணம் இப்பாடல்கள் இருக்கும்.

கோபியரின் ஆடை களைக் கவரும் லீலைகளில் வேத- உபநிடதத் தத்துவங் கள் உள்ளன. ராஸலீலையில் ஜீவாத்மா- பரமாத்மா பாவம் வெளிப்படும். ஸ்ரீமத் பாகவதத்தில் ராதையைக் குறிப்பிட வில்லையே என்னும் குறையை நிவர்த்தி செய்வது போல் உள்ளன இவரது ராதையைப் பற்றிய பாடல்கள்.

வியாசர் பாகவதத்தில் ராதையைப் பற்றிக் கூறவில்லையே என்ற ஆதங்கத்தில், பூரி ஜெகந் நாதரே ஜெயதேவராக அவதரித்து கீத கோவிந்தம் என்னும் பக்தி ரசம் சொட்டும் கிரந்தம் செய்தாராம். அந்த ஜெயதேவர் கண்ணனின் லீலைகளைப் பாடவில்லையே என்று வருந்தி, அவரே நாராயண தீர்த்தராக அவதரித்து கண்ணனின் லீலைகளைப் பாடினார் என்பர்.

நடனத்திற்கு ஏற்ப பாடப்படும் 153 பாடல் களைக் கொண்ட ஸ்ரீகிருஷ்ணலீலா தரங்கிணி 39 ராகங்களில் அமைந்துள்ளது. இவற்றில் 43 பாடல்கள் நாதநாமக்கிரியா, மத்யமாவதி, சௌராஷ்ட்ரா ஆகிய மூன்று ராகங்களைக் கொண்டே அமைந்துள்ளன.

இன்றும் வரகூர் ஆலயத்தில் கிருஷ்ணலீலா தரங்கிணி பாடப்படுகிறது. ஜென்மாஷ்டமியிலும் நவமியிலும் சிறப்பாக உற்சவங்கள் நடக் கின்றன.

நாராயண தீர்த்தர் கிருஷ்ணலீலா தரங்கிணியை பலச்ருதியுடன் இவ்வாறு முடிக்கிறார்:

"ஸ்ரீகோபாலன் என்னும் கார்மேகத்திலிருந்து பெருகிய- அவரது பெருங்கருணை என்னும் மழைத் தாரைகள், ஸ்ரீநாராயண தீர்த்தர் என்ற மலைமீது விழுந்து பரவி, அவை முழுதும் ஒன்று சேர்ந்து, இந்த கிருஷ்ணலீலா தரங்கிணி என்னும் ஆறாகத் தோன்றி, கிருஷ்ண பக்தர்கள் என்னும் வயலில் பாய்ந்தோடி, உலகை இன்பமுறவும் ஆனந்தமுறவும் செய்யும்!'

No comments: