Friday 22 March 2013

பிதாமஹர் புரந்தரதாசர்

தாசி லீலாதேவி வீட்டிற்கு வந்த பகவான்

பகவான் பண்டரிநாதன் புரந்தரதாசரைப் பற்றிச் சற்று சிந்திக்கத் தொடங்கினார். ‘நல்ல வித்தையும், ஞானமும் கொண்ட இவர் அகம்பாவம் கொண்டு சீடர்களைத் திட்டுவதும், குட்டுவதும், பக்தனைச் செம்பால் மொத்துவதும் போன்ற துர்க்குணங்கள் கொண்டு விளங்குகிறாரே’ என நினைத்து வருந்தினார் ‘எவராயினும் எம் முன்னிலையில் புரந்தரதாசரும், பக்தர்களும் எனக்குச் சமமானவர்களே. இவர் திடீரென கோபமாவது அவர் நற்குணத்தையும், பக்தியையும், தவத்தையும் பாழாக்கி பாதித்துவிடுமே’ எனவும் எண்ணினார்.
அவரிடமுள்ள இத்தகாத செய்கையை ஒடுக்க வேண்டி அவருக்குத் தகுந்த பாடம் கற்பிக்க ஒரு யுக்தியை மேற்கொண்டார். அதாவது, பகவான் பாண்டுரங்கன், தன் சந்நிதியிலிருந்து தன் தங்கத் திருக்காப்புகளில் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு, அன்றிரவே புரந்தரதாசரைப் போன்று வேடம் தாங்கிய கோலத்தில், அங்கிருந்து புறப்பட்டு, பண்டரிபுரத்தில் வசித்து வந்த பக்தியில் சிறந்த, புனிதவதியான லீலாதேவி என்னும் நல்லுள்ளம் கொண்ட தேவதாசியின் இல்லத்தை நாடிச் சென்றார். அவரைக் கண்டதும், அவள் மகிழ்ந்து, அவர் பாதம் தொழுது அன்புடன் மதிப்பளித்து அவரை வரவேற்றார்.
“சுவாமி! இந்த இரவு நேரத்திலா தாங்கள் இங்கு வரவேண்டும்? என்னால் தங்களுக்கு என்ன ஆகவேண்டும்?” எனக் கேட்டாள். “திவ்ய அழகு வதனத்தை உடையவளே! உன்னைக் கண்டு ரசித்துப் போகவே இங்கு வந்தேன்.” என்ற காதல் நோக்கோடு அவளிடம் இவ்வாறு பகவான் கூறினார். “என்ன ஆச்சரியம்! பாண்டுரங்கனின் மெய்த் தொண்டராகிய தாங்களா இவ்வாறு கருதி இங்கு வந்தீர்கள்? என்னால் இதை நம்ப முடியவில்லையே! சுவாமி! உயரிய நிலையிலுள்ள, பக்தியைப் பரமானந்த வாழ்வாக நினைத்து வாழும் தாங்கள், இவ்வாறு தாழ்வான எண்ணம் கொண்டு இங்கு வந்திருப்பதை நினைத்து நான் மிகவும் வேதனைப்படுகிறேன். இது உங்களுக்கு மட்டுமல்லாது, எனக்கும் வீண் அவப்பெயரை உண்டாக்கும். அதனால் உங்களின் உண்மையான பக்திக்குப் பெரும் களங்கமும் ஏற்படும். வேண்டாம் உங்களுக்கு இந்த ஈனத்தனமான எண்ணம். என் குலத்தாரின் இழிந்த செய்கை என்னிடமும் இருக்குமென எதிர்பார்த்துத் தாங்கள் இங்கு வந்தீரோ? உங்களின் தவறான கருத்தை மாற்றிக்கொண்டு இப்போதே உடனே இங்கிருந்து போய்விடுங்கள்” என மன வேதனையோடு அவரிடம் தெரிவித்தாள்.
உடன் புரந்தரதாசர் (பகவான்) “லீலாதேவியே! நீ இவ்வாறு எனக்குப் பதில் தருவாய் என நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இப்போது நீ என்னைப் பரிதாப நிலைக்கு ஆளாக்கிவட்டாய். பரவாயில்லை. இருப்பினும், நான் உன்னை இங்கு வந்து பார்த்ததன் பரிசாக இதோ இந்தத் தங்கத் திருக்காப்பை உனக்குப் பரிசாக அளிக்கிறேன். இதையாவது நீ பெற்றுக் கொள்.” என்றார் பகவான் புரந்தரதாசர். இதைக் கேட்டதும் லீலாதேவியானவள் “இதைத் தாங்களே திரும்ப எடுத்துச் செல்லுங்கள். எனக்கு இந்தக் காப்பு வேண்டவே வேண்டாம். வீண் ஆசை வார்த்தைகளைக் காட்டி, இதைப் பெறும்படியாகச் செய்து என்னை அபசாரத்திற்கு ஆளாக்காதீர்கள். இனி ஒரு க்ஷணம் கூட நீங்கள் இங்கு இருக்கக்கூடாது. உங்களைக் கை கூப்பி வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன். இவ்விடத்தை விட்டு உடனே நகருங்கள்” என்றாள்.
“வல்லிக்கொடியென விளங்கும் லீலாதேவியே! நான் உன் வதனத்தைக் (முகம்) கண்டு ரசிக்கக்கூடிய வாய்ப்பையாவது எனக்கு நீ அளித்தாயல்லவா? அதற்காகவாவது, இந்தப் பொற்திருக்காப்பை உனக்கு மகிழ்வோடு அன்பளிப்பாக அளிக்கிறேன். மறுக்காமல் இதை நீ அவசியம் பெற்றுத்தான் ஆகவேண்டும்” என்று தன் மாயா சக்தியால் அத்திருக்காப்பை அவள் பெறும்படியாகச் செய்து விட்டுச் சற்று அப்பால் சென்று மறைந்தார்.
மறுநாள். பொழுது புலர்ந்ததும் அர்ச்சகர்கள் சந்நிதியின் கதவுகளைத் திறந்ததும், பகவானின் திருக்காப்பொன்று அங்கில்லாதிருப்பதைக் கண்டு, அவர்கள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்தனர். களவு போன செய்தியை உடன் அவ்வூர் அரசனுக்குத் தெரியப்படுத்தினர். இதைக் கேட்டதும் பெரும் சினம் கொண்ட அரசன் “என் ஆட்சியில் இப்படியொரு திருட்டா? இத்திருட்டைக் கண்டுபிடித்துத் தெரியப்படுத்துவோருக்குத் தக்க சன்மானம் அளிக்கப்படும்” எனப் பறைசாற்றும் படியாக உத்தரவைப் பிறப்பிக்கச் செய்தான் மன்னன். உடன் பறைசாற்றிய செய்தியை அறிந்த தாசி லீலாதேவி பயந்து, இனி, பகவானின் திருக்காப்பைத் தான் வைத்திருப்பது தெய்வ அபசாரமாகுமெனவும், பின் அதனால் இராஜ தண்டனைக்கு ஆளாக நேரிடுமெனவும் உணர்ந்த அவள், உடன் அதை எடுத்துக்கொண்டு மன்னனைக் காண அரசவையை நோக்கி விரைந்து சென்றாள். அரசனை நேரில் சந்தித்துப் புரந்தரதாசரால் தனக்கு இந்தக் காப்பு தரப்பட்டதையும், மற்றும் அங்கு நடந்த விவரத்தையும் ஒன்றுவிடாமல் எடுத்துரைத்துத் திருக்காப்பை அரசனிடம் அவள் ஒப்படைத்தாள்.
உண்மை தாசருக்கு இராஜதண்டனை. பகவான் தடுத்தாட் கொள்ளல்
இச்செய்தியை அறிந்த அரசன் அடங்காத கோபங்கொண்டு பொங்கி எழுந்தான். உடன் இரு காவலர்களை அழைத்து, புரந்தரதாசரை உடனே தன் அவைக்கு அழைத்து வருமாறு உத்தரவைப் பிறப்பித்தான். காவலர்களும் உடன் சென்று புரந்தரதாசரைக் கையோடு அழைத்து வந்து அரசன் முன் கொண்டுவந்து நிறுத்தினர். அவரைக் கண்டதும், அரசன் கோபத்தால் பல்லை நறநறவென கடித்துக் கொண்டு திருட்டைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான். விசாரிக்கும்போது, புரந்தரதாசர் “நான் குற்றவாளி அல்ல. நான் பண்டரிபுரம் செல்லவுமில்லை, தாசிலீலாதேவியின் வீட்டிற்குச் செல்லவுமில்லை. அவளை எனக்கு யாரென நிச்சயமாக உண்மையாகத் தெரியவே தெரியாது. இதை பாண்டுரங்கன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். இது என் மீது சுமத்தப்படும் வீண் பழி” என தன் மறுப்பை மன்னனிடம் வேதனையோடு தெரிவித்தார். “நான் எதன் மீதும் ஆசை வைக்காதவன். எப்போதும் நான் பகவன் நாமாவைத் துதித்துக்கொண்டு, அவனின் நித்திய சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதும் தான் என் அன்றாட வேலை. சிற்றின்பம் துய்த்தல் என்பதை நான் அறவே நினையாதவன்” எனக் கடுமையாக வழக்காடி எதுவுமே அறியாத நான் நிரபராதி என மனம் நோக மன்னனிடம் எடுத்துக் கூறினார்.
உடன் லீலாதேவி “மன்னவா! இவர் பேச்சை நம்பாதீர்கள். இவருக்குத் தாங்கள் அளிக்கப்போகும் தண்டனையிலிருந்து இவர் தப்பித்துக் கொள்வதற்காக இவ்வாறெல்லாம் நாடகமாடுகிறார். மெய்யை மறைத்து, பொய்யை உண்மையாக்கப் படாதபாடுபடுகிறார். பார்த்தீர்களா? பக்திமானாக, நேர்மையின் அவதாரமாக இருக்க வேண்டிய இவர் இப்போது கூறும் பொய்யான பேச்சில் தாங்கள் மயங்கிவிடாதீர்கள் எனக்கூறி மன்னவா! இவர் நிச்சயமாக என் இல்லம் நாடி வந்து இன்மொழிகளையெல்லாம் அழகாக என்னிடம் தொடுத்துப்பேசி வசீகரிக்கச் செய்ததோடு இத்திருக்காப்பை வலுக்கட்டாயமாக என்னிடம் கொடுத்து விட்டுப்பின் அங்கிருந்து விரைவாகச் சென்று விட்டார். இது முற்றிலும் என் இல்லத்தில் நடந்த உண்மைச் சம்பவம்” என வலுவான முறையில் அவர் தப்பமுடியாத அளவுக்கு மன்னனிடம் எடுத்துரைத்தாள். அதனால் வலுவிழந்து மேலும் எதுவும் பேச முடியாத புரந்தரதாசர் மனம் நொந்து தலைதாழ்ந்தார். அவளின் வாதங்களைக் கேட்ட மன்னன், லீலாதேவி கூறுவது முற்றிலும் உண்மையென நம்பி அதை ஏற்று, புரந்தரதாசர் பண்டரிநாதனின் சிறந்த உண்மையான பக்தராகையால் பெரும் தண்டனையை அளிக்க முற்படாது, முப்பது கசையடியே அவருக்குப் போதுமானது எனத் தன் தீர்ப்பை வழங்கினான். அப்போது புரந்தரதாசர் நினைத்ததாவது:
‘நிரபராதியான எதுவுமே அறியாத அடியேனுக்குப் பகவான் எதை வைத்துத் தவறாக இத்தண்டனையை எனக்களித்துள்ளாரோ? பாண்டுரங்கா! இது எனக்குத் தேவைதானா? என்ன சோதனையோ? அறியேன். பாகவத அபசாரம், பகவத் அபசாரம், போன்றவற்றைச் செய்ததன் காரணத்தால்தான் இத்தண்டனையை யான் இப்போது அனுபவிக்கும்படியாயிற்று’ என நினைத்துக் கொண்டு கண்ணீர் மல்க மிகவும் வேதனையடைந்தார்.
“நான் வெகு நாள்களாக பகவத் பக்தியில் ஈடுபட்டு என்ன பயன்? என் வித்யாகர்வமும், நான் இதற்கு முன், செய்துவந்த பாபச் செயலும் எனக்குச் சரியான பாடத்தைப் புகட்டி நல்ல தண்டனையையும் அளித்துவிட்டன. உண்மை பக்தியுள்ளம் கொண்ட தொண்டனுக்கு கோபம் தீயதுதான். அது இப்போது என்னை நன்கு ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. பகவானையே செம்பால் மொத்திய பாபியல்லவா நான்? தவறு செய்வோர் எவராயினும் சரி அவர் பிடியிலிருந்து தப்பவே முடியாதென்பதற்கு எனக்கு ஏற்பட்ட இச்சம்பவம் நன்கு எடுத்துக் காட்டிவிட்டது. பகவானே! பாண்டுரங்கா! இத்தண்டனையை அனுபவித்த பின்பாவது என்னிடமுள்ள அசூயைகள் (கெட்ட குணங்கள்) யாவும் நீங்கப் பெற்று அன்றாடம் சாந்தி நிலவ அடியேனுக்கு அருள்புரிவீராக!” எனக் கூறிக்கொண்டே மன்னன் தனக்குக் கொடுத்த தண்டனையை ஏற்றுக் கொண்டு காவலர்களோடு புறப்பட்டுச் சென்றார்.
விண்ணில் ஓர் அசரீரி!
எவரும் எதிர்பாராத அது சமயம் “மன்னவா! சற்றுக் கவனி! குற்றம் எங்குள்ளது எனச்சரிவர ஆராய்ந்தறியாது, தவறேதும் சிறிதும் செய்யாத தாசரைத் தண்டிக்கும் எண்ணம் கொண்டீரே! திருக்காப்பை யார் களவாடியது? அது எப்படிக் களவு போனது என்பதைச் சிறிதும் சிந்தியாது, உம் மதியீனத்தால் சரியான முறையில் விசாரணையும் செய்யாது, அந்த அப்பாவி பக்தர் புரந்தரதாசருக்குத் தக்க ஆதாரம் எதுவுமின்றி எதைவைத்து நீர் அவருக்கு இவ்வாறு தண்டனையை அளித்தீர்? இது தான் உம் நீதியோ? வழக்கைச் சரியானபடி நீர் விசாரணை செய்திருந்தால் இதன் உண்மை யாதெனத் தானாகவே சரியாக வெளி வந்திருக்கும். சந்நிதியை நன்றாகப் பூட்டி, சாவியை அர்ச்சகர் எடுத்துக் கொண்டு போயிருக்கும்போது, சூதும், வாதும், எதுவும் அறியாத அப்பழுக்கற்ற புரந்தரதாசர் சந்நிதிக்குள் எவ்வாறு புகுந்து திருக்காப்பைக் களவாடியிருக்க முடியும்? சற்றாவது சிந்தித்துப் பார்த்தீரா?”
“பூட்டிய பூட்டானது பூட்டியவாறேயிருந்ததைப் பூஜைகள் செய்யும் பட்டாச்சாரியார்கள் உம்மிடம் எதுவும் எடுத்துக் கூறவில்லையா? உடன் அவர்களையாவது அழைத்து இது சம்பந்தமாக விசாரணையாவது செய்தீரா? எதையும் சரிவர ஆராய்ந்தறியாது எந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு அவருக்கு இவ்வாறு நீர் தீர்ப்பளித்தீர்? நடந்த உண்மைகள் யாவும் உமக்குச் சரிவர எதுவுமே தெரியாதபோது குற்றமற்ற என் உண்மை பக்தன் புரந்தரதாசர் எவ்விதத்தில் குற்றவாளியாவார்? அவர் குற்றவாளி இல்லையே! எம் தாசரின் பெருமையை உலகத்தார் அறியும் பொருட்டே, அவருக்குத் தண்டனையை அளித்து ஆட்கொள்ள வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடே இந்த உபாயத்தை நாமேதான் செய்தோம். புரிந்ததா? தாசர் உண்மையில் லீலாதேவி வீட்டிற்குச் செல்லவுமில்லை. திருக்காப்பை அவளிடம் அவர் அளிக்கவுமில்லை. அப்பழுக்கற்ற, எத்தவற்றையும் செய்யாத அவரை உடனே விடுதலை செய்வீராக” என அசரீரியின் வாயிலாக பகவான் பாண்டுரங்கன் மன்னனுக்குக் கடுமையாக ஆணையிட்டார். உடன், இதைக் கேட்ட மன்னனும் தலைவணங்கி, பகவான் சொன்னவை அனைத்தையும் பணிவுடன் ஏற்றுக்கொண்டு, தான் செய்த தவற்றுக்குக் கண்ணில் நீர் பெருக்கெடுக்க அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.
“புரந்தரதாசரே! இனி நீரும் சரி, உம் சிஷ்யர்களும் சரி. எனக்கு ஒன்றே என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே இனி இதை உணர்ந்து நீர் மேலும் சிறிது காலம் வரை, இவ்வையகத்தில் யாவருடனும் ஒன்று சேர்ந்து பக்தி புரிந்து பின் என்பதம் வந்து சேர்வீராக” என அருளிச் செய்து பகவான் மறைந்தார்.
பின் அவர் தன் உண்மையான பக்தியின் சக்தியாலும், இறைவனின் திருவருளாலும், உலகத்தாரைச் சிறந்த பக்தியுள்ளம் படைத்தவராக்கினார். பின் தானும் இடைவிடாது மனமுருகிப் பக்தி செய்து கொண்டிருக்கையில் அது சமயம், திருமாலும், திருமாது சமேதராய் அவருக்குக் காட்சியளித்து, புரந்தரதாசரையும், அவர் மனைவியையும் தன் பதத்துக்கு அழைத்துக் கொண்டார்.
முடிவுரை

No comments: