Friday, 10 November 2017

என் சங்கீதத்தின் பரிணாம வளர்ச்சி !!

நானும் கடந்த 25 வருடங்களாக கர்நாடக சங்கீதக் கச்சேரிகள் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.  எப்படி இதில் ஒரு INTEREST வந்தது என்று என்னை நானே சுய பரிசோதனை செய்யும் கட்டுரை இது

முதலில் நான் பிறந்த மண்ணிலிருந்து ஆரம்பிக்கலாம்::

கர்னாடக சங்கீதம் கேட்பதற்கும் அதை அனுபவிப்பதற்கும் நான் செம்மகுடி கிராமத்திற்கும், என் பெற்றோர்க்கும் மிகவும் கடமைப் பட்டு இருக்கிறேன்.

நான் பிறந்தது செம்மங்குடி என்ற கிராமம் என்பதை, என்னுடைய சில “பதிவேடுகளைப்” பார்த்தால் தெரியும்.  உடனே “த்வைதமு சுகமா, அத்வைதமு சுகமா” பாட்டு, பாடு என்று என்னைக் கேட்கக் கூடாது.
செம்மங்குடி என்ற ஒரு “பாட்டு பாடும்” மிக உயர்ந்த பாடகர்,  பிறந்த மண்ணில் பிறந்ததால், மற்றும் என் தந்தையின் சங்கீத DNA என் உடம்பில் இருப்பதால்......)

நான் செம்மங்குடியில் பிறந்தது என்னமோ உண்மைதான்.  ஆனால், பாட்டு பாடவோ, கற்றுக்கொள்ளவோ விரும்பவில்லை. எனக்கு அது சின்ன வயதில் வரவும் இல்லை.  இந்த லக்ஷணத்தில், செம்மங்குடி மாமாவாத்துக்கு எதிர்த்த வீடு எங்கள் வீடு. 

நாங்கள் சாஸ்த்ரிகள் குடும்பம். குடும்பதிற்க்கே உண்டான பொறுப்பு, கவலைகள், அதனால் படிப்பு மற்றும் ஒழுங்கான அனுஷ்டானம் என்றே ஓடி விட்டது.  அடிக்கடி செம்மங்குடி மாமா வின் ராக ஆலாபனை கூட, “அதிசய ராகம், ஆனந்த ராகம்” என்று புரியவில்லை.  (தலையில் எண்ணை வைத்துக்கொண்டு செம்மங்குடி மாமா “சங்கராபாரணம் ராகம், சுமார் 1 மணி நேரம் பாடுவாராம்). 

எனக்கு சங்கீத ஞானம் எப்போது வந்தது என்று ஞாபாகம் இல்லை, எப்படி வந்தது என்றால், அப்பா வுக்கு கர்நாடக் சங்கீதம் மிகவும் பிடிக்கும். மதுரை சோமுவின் பரம விசிறி.  சிதம்பரத்தில் பிறந்து வளர்ந்த என் அப்பா, மாயவரத்திற்கும், சிர்காழிக்கும், BOARD MAIL ஏறி, சோமுவின் கச்சேரியை கேட்கப் போவாராம்.  சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளையும்,சோமுவும் சண்டை சச்சரவுகளால், பேசாமல் இருந்தபோது, என் தந்தை, திருவையாறில், (வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது) இரண்டு போரையும், சமாதானப் படுத்துவதற்கு மிகவும் பிரயத்தனப் பட்டார். (வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம்). இரவு முழுவதும், சோமுவின் கச்சேரி கேட்டு விட்டும், காலையில், அவர் அப்பவிடம் உதை வாங்கி இருக்கிறார்.  சோமு ஒரு பெரிய ரசிகன். நல்ல ரசிகனால்தான், ஒரு நல்ல பாடகனாக இருக்க முடியும் என்று சொல்வார். சோமுவின் பக்க வாத்தியங்கள்:

மிருதங்கம்
வயலின்
கொன்னக்கோல்
கடம்
மோர்சிங்
கஞ்சிரா

அப்பா சொல்வார்- “இவர்கள் அத்தனை பேருக்கும் சோமு “தீனி” போடுவான். தாளத்தை மாத்தி, மாத்தி, போட்டு, பக்க வாத்தியக்காரர்களை எல்லாம் திணற அடிப்பான்  7 மணி நேரம் கச்சேரியில் ஒரு பயலும் (ரசிகனும்) எழுந்திருக்காதவாறு- பாடுவான்” என்பார்

என்னுடைய பெரியப்பா, சு. சுவாமிநாதன் (சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில், உயிரியிலில் டாக்டர் பட்டம் வாங்கியவர்) அவர்கள், மதுரை மணி அய்யரின் பரம ரசிகர். திடீரென்று “கந்தன் கருணை புரியும் வடிவே” என்று மதுரை மணி அய்யர் போல் பாடுவார். “எப்போ வருவாரோ எந்தன்” என்று கொஞ்ச தூரத்தில் இருக்கும் நடராஜரை கொஞ்சி அழைப்பார்

என் அப்பா ஒரு தடவை, தன்னுடைய அக்காவை, நிறை மாத கர்ப்பிணியாக, BOARD MAIL ல் அழைத்துக் கொண்டு வரும்போது, முதல் வகுப்புப் பெட்டியில் இருந்து GNB அவர்கள், வெளியில் வந்து நின்றதை, இப்பொழுதும் சொல்லி ஆச்சர்யப் படுவார்.

எனக்கு +2 வரையும், கர்நாடக சங்கீதம் என்றால் என்ன வென்று தெரியாது. ஆனால் சினிமா பாட்டு எல்லாம் அத்துப்படி. ஸ்கூலில், Music competition ல் ஏதாவது ஒரு பரிசு கிடைக்கும். அந்த அளவுக்கு ஒரு சுமாரான குரல் வளம்.

எனக்கு, முதலில் கர்நாடக சங்கீதத்தில் ஒரு நாட்டத்தை ஏற்படுத்தியது, யேசுதாஸ். அவருடைய “வாதாபி கனபதிம்பஜே” வும், பாவன குரு என்ற ஹம்சானந்தி ராக கீர்த்தனையும் எனக்கு கர்நாடக சங்கீதத்தின் அடித்தளமாக அமைந்தது: “பக்தியால் யான் உனை பல காலும்” என்ற ரேவதி ராக திருப்புகழ், இன்றும் வரி பிசகாமல் பாடுவேன் என்றால், அதற்குக் காரணம் யேசுதாஸ். ஹரிவராசனம் ஸ்லோகத்தில், என்ன இருக்கிறது என்று தெரியாமல், சீட்டு எழுதி பாடச் சொன்னவன். அவரின் பகல நிலபட்டியும்,  நீது சரணமுலேயும்- என்ன ராகம் என்னவென்று தெரியாமல்  கேட்டு கேட்டு உருகியவன்நான் சுமாராக அவரைப் போல், பேஸ் வாய்ஸில் பாடக் கூடியவன் என்பதாக இருக்கலாம். என்னை சினிமா பாட்டிலிருந்து, கர்நாடக் சங்கீதத்திற்கு மாறுவதற்கு ஒரு ஏணியாக் இருந்தார் என்று கூறலாம்.  அவருடைய பல மலையாள, கர்நாடக இசை தோய்ந்த பாடல்கள், என்னை இன்றும் மயக்குவது உண்மை

சென்னையிலிருந்து, பெங்களூர் போய், வேலை வேலை பார்த்த அந்த மூன்று, நான்கு வருடங்கள், என்னுடைய, கர்நாடக சங்கீதத்தின் வசந்த காலம் என்று கூறலாம்.

பிறகு, மும்பையில் இருக்கும்போது கூட, அணுசக்தி நகரில் இருந்துகொண்டு, அனுசக்திநகர் சபாவிலோ, செம்பூர் Fine ஆர்ட்ஸ் என்ற ஒரு சபாவிலோ, ஷண்முகானந்தா பைன் ஆர்ட்ஸ் என்ற ஒரு சபாவிலோ (எரிந்து போவதற்கு முன்பு இருந்த இடம்) எப்போதாவது நடக்கும், T.V.Shankara Narayanan,  Bombay Jaishree,  போன்றவர்களின்  கச்சேரியையும் கேட்டு ரசித்த காலம்
(தொடரும்)


Monday, 16 October 2017

“சௌம்யாவின் கல்யாணியும், கேசவ பெருமாள் கோவிலில் நீலமணியும்”

இது, ரொம்ப வருடத்திற்கு முன், படித்த ஒரு கட்டுரை. இதை என்னுடைய, HARD DISK ல் பதிவு செய்து வைத்திருந்தேன்.

இது யாருடைய கட்டுரை என்று தெரியவில்லை. ஆனால், இப்போது இதைப் படித்தாலும், இதில் உள்ள SATIRE எனக்கு மிகவும் பிடித்ததால், இங்கே மறு பதிவேடு செய்கிறேன்.

இதை எழுதிய நபர் படிக்க நேர்ந்தால், அவர்களுக்கு ஒரு பெரிய THANKS.

இப்போது இந்தக் கட்டுரை

பஸ் பிடித்து பாரதீய வித்தியா பவனத்தை அடைகையில் உட்கார இடம் கிடைக்காதோ என்று மனதினுள் பதற்றம். அரங்கினுள் மெயின் கதவு வழியாக நுழையாமல் வலதுபுறம் திரும்பி ஸ்டேஜின் பக்கவாயில் வழியாக ஃபீட்பேக் ஸ்பீக்கர் இருக்கும் பகுதியில் கீழே உட்காரலாம் என்று நுழைந்தால் ஆச்சரியம். வழக்கமாக சௌம்யா கச்சேரிக்கு பவனத்தில் இருக்கும் கூட்டம் இன்று இல்லை.

திரும்பி மெயின் கதவு வழியாக அரங்கினுள் நுழைந்து இடம் பார்த்து முன்வரிசையில் அமர்கையில் வீணை குப்பையரின் ராகமாலிகை வர்ணமான வலஜி வச்சியை ஆரம்பித்து இருந்தார். பக்கத்தில் பக்கல ராமதாஸ் பாடகி விட்ட இடங்களை கவனமாக பூர்த்திசெய்து பொறுப்பாக தொடர்ந்தார். தெரிந்த வர்ணம் போலும்.

அடுத்ததாக நளினகாந்தியில் தியாகராஜர் கீர்த்தனை. இதை சௌம்யா உட்பட எல்லோரும் மனவ்யாலகிம் சரா தடே என்று ஆரம்பித்து பாடுகிறார்கள். பாலமுரளிகிருஷ்ணா மனவி ஆலகிம்பரா தகே என்று பிரிப்பார். எது சரி என்று பாலமுரளியின் குருவான பருபள்ளி ராமகிருஷ்ணய்ய பந்துலுவின் பேத்தியிடம் (நன்றாக வீணை வாசிப்பார்) ஒரு முறை கேட்டு இருக்கிறேன். தெலுங்கு தெரிந்த அவர் மனவி ஆலகிம்பரா என்பது ஒரிஜினல் என்றார்.

பிறகு ம க ரி ஸ ரிஎன்று ராக லக்ஷணத்துடன் சற்று ஒட்டாத வரிசையில் எடுத்து ஸ்வரம் பாடுகையில் ஏனோ அடிக்கடி ப நி ஸ கா, ப நி ஸ க ரி க, போன்ற மா சேராத கல்பனைகளை நிறய செய்தார். ஹம்ஸத்வனியோடு நிறைய முட்டிக்கொண்டது. மொத்தமாக நளினகாந்தியாக இருந்தது என்று சொல்லமாட்டேன். ஆனால் தடையில்லாமல் பாடினார்.

பிடில் சுமார்தான். வேண்டாத இடங்களில், கற்பனை ஒடவில்லை என்பதால், ராகத்தோடு ஒட்டாத பிருஹாக்களை எல்லாம் போட்டு வாசித்தார். மிருதங்கம் நெய்வேலி நாராயணன். இவரை பற்றி வேறு ஒரு கச்சேரியில் பார்ப்போம்.

அடுத்ததாக ஆலாபனை அரம்பித்ததும் ஹிந்தோளம் என்று நினைத்தேன். சற்று நேரம் கழித்து சுத்த தன்யாஸியோ என்று சற்றே குழப்பம். வயலின் வேறு ஆலாபனயில் ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் பெரிதாக கன்டின்யுடி எல்லாம் கொடுக்க முயற்சிக்காமல் பாடகி முடித்த கடைசி ஸ்வரத்தை மட்டும் வாசித்து வெறுப்பேற்றினார். அவர் ஆலாபனை சமயம் வந்ததும் முக்கால்வாசி சுத்ததன்யாசி வாசித்தார். நடுவில் மைல் நீளத்திற்கு ஸ்வரங்களில ஏதேதோ செய்தார். முடித்ததும் அநேகம் பேர் கை தட்டினார்கள்.

முடித்துவிட்டதற்காகவும் இருக்கலாம்.

நீரஜாக்ஷி காமாக்ஷி என்று ரூபக தாளத்தில் ஆரம்பித்து ஹிந்தோளத்தில் அருமையாக பாடினார் சௌம்யா. வாரிசபதே வரதே தாரகமாம் தத்வபதே என்ற இடத்தில் குறை சொல்ல முடியாத அழகிய நிரவல் செய்தார். பிறகு ஸ்வரங்களும் நன்றாகவே இருந்தது. கால்வாசி கூட்டம் பாட்டு முடிந்ததும் எழுந்து சென்றது.

ஆனால் ஒன்று, மிடுக்குடன் பார்வையாலேயே பக்கவாத்தியகாரர்களை தன் பாட்டுடன் முடிந்தவரையில் சௌக்கியமாக ஒருங்கிணைப்பதும் பின் கண்ணை மூடிக்கொண்டு பாட்டில் ஐக்கியம் ஆக முயற்சிப்பதுமாக, சௌம்யாவிற்கு ஒரு ஸ்டேஜ் ப்ரெஸன்ஸ் இருப்பது என்னவோ நிஜம்.
அப்பாடா சப்மெயின் பாடி கேட்டுப் பழகிய ராகத்தை பாடிவிட்டார். மெயின் நிச்சயம் எதோ ஒரு தூசிதட்டவேண்டிய ராகத்தை எடுத்து பிளக்கப்போகிறார் என்று நம்பிக்கை. சிவனின் “குமரன்தாள் பணிந்தே துதியும்”, தீக்ஷதரின் சந்திரம் பஜவும் (சதுஷ்ர மட்டிய தாளம்) முடிந்தகையோடு மெயின் ஆலாபனை.

கல்யாணி!

எழுந்துவந்துவிட்டேன்.

அடக்கமுடியாமல் வந்த கோபத்தை குறைக்க மைலை கற்பகாம்பாளினுள் சென்று இரண்டு கீரை வடை சாப்பிட்டுப்பார்த்தேன். காப்பி குடிக்கையில் அங்கு ஒலிபெருக்கியில் மனவ்யாளகிம் சரா தடே என்று ஒரு ஆம்பிளை குரல்.

அட போங்கப்பா என்று கால்போன போக்கில் ஆதிகாசவப்பெருமாள் கோயிலினுள் சென்றேன். பெருமாளுக்கு வாரணமாயிரம் சூழ வலம் செய்து கொண்டிருதார்கள். மெயின் உருப்படியாக மூவாயிரம் தடவை கல்யாணி கேட்ட காதுகளுக்கு சற்று இதமாக இருந்தது. வெளியே செல்ல எத்தனிக்கையில் ஒரு அதிசயம்.

கோயிலினுள் எங்கேயோ இரட்டை நாகஸ்வரத்தில் காப்பி ஆலாபனை பிரவாளமாக வந்துகொண்டிருந்தது.

பிரதக்ஷணமாக வந்து ஆண்டாள் சந்நிதியில் திரும்பினால், கன்ஸ்ட்ரெக்ஷன் கம்பிகளும் மூங்கில் கம்பிகளும் தாறுமாறாக கிடக்கும் பிரதேசத்தில் கோடியில் திட்டின் மேல் சுருதிபெட்டியை இருத்தி தூணில் சாய்ந்தபடி இருவது வயதே மதிக்க தக்க ஐயப்பன் கருப்பு வேட்டி கட்டிய ஒருவர் சத்தம் நிறைய வெளியே கேட்டு கோயில் வருபவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்பதால் துணி அடைக்கப்பட்ட தன் நாகஸ்வரத்தில் காப்பியை பொழிந்து கொண்டிருந்தார். கூட இருந்த இளைஞர் அவரது மாணாக்கர் போலும். அவரும் இவர் விட்ட இடங்களில் தன் துணியடைக்கப்பட்ட வாத்தியத்திலிருந்து காப்பியை நிரப்பிக்கொண்டிருந்தார். சற்று தூரத்தில் இன்னொரு பெயர் தெரியாத நபர் மண்மூட்டையின் முன் உட்கார்ந்துகொண்டு அதில் இருபுறமும் ஒரு கையில் குச்சியவைத்துக்கொண்டு சப்டியூடாக தவில் வாசித்துக்கொண்டிருந்தார்.

காப்பி ஆலாபனை கேட்ட சந்தோஷத்தில் ஆண்டாள் சந்நிதி தூணில் சாய்ந்துகொண்டேன்.

ஆலாபனைக்குப்பிறகு பாரதியார் பாட்டை அபாரமான சங்கதிகளுடன் உருக்கி உருக்கி பழக்கினார் கற்றுக்கொடுத்தவர். கற்றுக்கொண்டவரும் கூடியவரையில் முயற்சித்தார். பிறகு நான் நிற்பதை பார்த்தாரோ என்னவோ கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்த இளைஞர் கிளாசை முடித்துவிட்டு தனியாக கண்ணை மூடிக்கொண்டு தூணில் சாய்ந்தபடி அநாயாசமாக ஆரம்பித்தார் ஆலாபனையை.நீலமணியில்!
நீலமணி, neelamaNi - S R2 M1 P D1 N3 S - S N3 D1 P M1 R2 S, 27ஆவது மேலகர்தாவான சரஸாங்கியின் (S R2 G3 M1 P D1 N3 S - S N3 D1 P M1 G3 R2 S) ஜன்ய ராகம். என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லைஎன்று ஒரு துக்கடா இருக்கிறது. முருகா முருகாஎன்று ஒரு முறை ஸ்ரீரங்கத்தில் எம்பார் ராகவஸிம்மன் ஒரு பாடலை இந்த ராகத்தில் பாடியதாக நினைவு.

வித்தியாபவனத்தின் பழகிய கல்யாணி ரீங்கரிக்கும் தூணிலிருந்து ஒரு இருநூறு அடி தொலைவில் இருக்கும் இந்த கேசவப்பெருமாள் கோயில் தூணில் இருந்து உருக்கமாகவும் அநாயாசமாகவும் வரும் நீலமணியின் நாதத்தில், அதுவரை நடந்தவைகளிலிருந்து இன்னும் மீளாத, இந்த முரண்பாடு சத்தியமாக புரியாத என் கண்ணில் எட்டிப்பார்த்தது ஜலம்.

அரைமணி நேரம் கழித்து முடித்துக்கொண்டார் அவருடைய எக்ஸ்டெம்போர் ஆலாபனைகள் மட்டுமே அடங்கிய கச்சேரியை.யார் அவர் என்று தெரிந்து கொள்ள மெதுவாக கச்சேரியெல்லாம் வாசிப்பீர்களா, செட் இருக்கிறதா என்று விசாரித்தேன். வாசிப்போம் சார். கல்யாணத்திற்கெல்லாம் வாசிப்போம். ஆனால் ரேட்டெல்லாம் என் குருவிடம்தான் கேட்க வேண்டும் என்றார் நீலமணியும், காப்பியும் ஜோராக ஆலாபனை செய்த இளைஞர். என்ன என்ன, உனக்கு ஒரு குருவா? ஐயகோ. திருவிளையாடல் ஹேமநாத பாகவதரைப்போல் உணர்ந்தேன். மனதினுள் பாலையா ஸ்டைலில் என்னடா இது, இந்த அருணுக்கு வந்த சோதனைஎன்று ஒருமுறை சொல்லிப்பார்த்துக்கொண்டேன்.

தமிழ்நாட்டில் நிஜமான கர்நாடக இசை எங்கு இருக்கிறது என்பது ஆண்டாள் முன்னிலையில் புரிந்துவிட, இருபது முப்பது பழகிய அழகிய சொற்ப ராகங்களுக்குள் முடக்கப்பட்டுவிட்ட மியூசிக் ஸீசன் என்பதெல்லாம் ஒரு பெரிய வியாபார மாயையோ (commercial hoax) என்று மனதில் உளைச்சல் ஏற்பட்டது.

கூர்ஜரியும், பூர்ணசந்திரிகாவும் இன்ன பிற விவாதிகளயும் புரட்டிப்போட்டு ஆலாபனை செய்த கலாநிதி எஸ். ராமநாதனிடம் பயின்றவர் எல்லாம், ஊரே மெச்சி பாப்புலர் ஆன பிறகும் கூட ஹிந்தோளத்தையும், கல்யாணியையும் கச்சேரிக்கு அடுத்து கச்சேரியாக உருக்கி உருக்கி பாடி புகழ் வெளிச்சத்தில் எதையோ தேடிக்கொண்டிருக்கையில், எந்தவித தலைப்பாகையும் இன்றி, முறையாக ஆச்சாரியர்களிடமெல்லாம் அப்பியாசம் செய்யாத (செய்யமுடிந்திராத), வெறும் வழிவழியாக வந்து கொண்டிருக்கும் கேள்வி ஞானத்திலும், கை சமிஞ்ஞை குறியில் கூறப்படும் ஸ்வரங்களிலும் (நாகஸ்வரத்தில் கை விரல் ஓட்டையை மூடினால் ஒரு ஸ்வரம் திறந்தால் ஒரு ஸ்வரம் என்று அப்பியாசத்தில் நினைவில் கொள்வர்) மட்டும் இசையை கற்றுக்கொண்டு வயிற்றுப்பிழைப்பிற்காக தொழிலாக, ஆனால் ஆனந்தமாக அதை வடித்துக்கொண்டிருக்கிறார்கள் சிலர்.

ரெக்கார்ட் செய்ததை அவருக்கு போட்டுக்காட்டினேன். கூட இருந்தவர்களுடன் ஆஹா என்று ரசித்தார். ஒரு சில இடங்களில் நாதம் சரியாக இல்லை என்று தன் வாசிப்பை குறை கூறிக்கொண்டார். கையெடுத்து, மானசீகமாக அவர் காலில் விழ இருந்த என்னை எதற்காகவோ கும்பிட்டார்.

கலா நிதி மிளிரும் இந்த இளைஞர் பிரபலம் அடையாமல் இப்படியே புகழ் கட்டுப்பாடு இல்லாமல், இசை தட்டுப்பாடு இல்லாமல் இருக்கவேண்டும் என்று மனதினுள் நினைத்துக்கொண்டு, இரவாகிவிட்டமையால் பூட்டப்பட்டுவிட்ட கோவில் கதவை திறக்கச்சொல்லி, மனதில் பலவிதமான குழப்பங்களுடன் குறுக்குத்தெருவெல்லாம் எம். ஆர். ஸி. நகர் வரை நடந்தே கடந்து, பிறகு பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்தேன்.
படுத்து தூங்கும் முன் மனதில் அசை போடுகையில் ஒன்று புரிந்தது. இன்று பவனத்தில் வேறு யாரும் கேட்கக்கொடுத்துவைக்காத நீலமணியை நான் கேட்டது

சௌம்யா மெயின் உருப்படியாக பாடிய கல்யாணியால்.


Thursday, 28 September 2017

சஞ்சய் சுப்ரமண்யன் என்கிற சங்கீத ராக்ஷஸன் (ர்)

மெயின் உருப்படிக்கு வருவதற்கு முன், நேற்றைய அவரது கச்சேரியைப் பார்ப்போம்

நேற்று, (27-9-2017) நாரத கான சபாவில்,  பாபநாசம் சிவன் அவர்களின் நினைவாக நடந்த விழாவில் பாடினார்.

கச்சேரி நடந்து கொண்டிருக்கும்போது,  DMK ன், முக்கிய அரசியல் வாதியான, துரை முருகன் வந்து உட்கார்ந்தார்.   சஞ்சய், மெயின் உருப்படியாக, காம்போதி ராகம் பாடிகொண்டிருக்கும்போது,  பக்கத்தில் இருந்த மாமா, காணக் கண் கோடி வேண்டும், பாடுவார் என்று கூற, பின்னாலிருந்து, “சிக்கல் மேவிய தேவா” என்று ஒருவர் சொல்ல, நான் ஆடும் தெய்வம் நீஅருள்வாய் என்ற பாடலத் தான் பாடுவார் என்று சொன்னேன்.  – நான் சொன்ன பாடலை தான் பாடினார்.

அதில் தான் “துரை” வருகிறது.  பாடலில் “தரும் துரையே சபை நடுவில்” என்று ஒரு வரி வரும். அதைப் பாடும்போது, துரை முருகன் இருந்த இடத்தை நோக்கி கை காமித்து வேறு பாடினார்.  எத்தனை பேருக்குப் புரிந்தது என்று தெரியவில்லை. அனால் எனக்குத் தெரியும்.
மேலும், துரை முருகனுக்கு பிடித்த பாடகர் சோமு. அதனால் சஞ்சய் பாடிய காம்போதி ராகம் முழுவது, சோமு பிடிதான்.  நாதஸ்வர மயம். பயில்வான் சோமு “பிடி” யை, சஞ்சய் ஒரு “புடி” புடித்தார் என்று சொல்லலாம்.

அதனால் துரை முருகன் தான் என்று தமிழைப் போட்டுத் தாக்கவில்லை. காம்போதிக்கு முன்னால், ஒரு சம்ஸ்க்ருத பாடலும் பாடினார். அதை அசோக் ரமணி கேட்டதே இல்லை என்று சொன்னார்.  (இப்படி சொல்லாமல், உடனே கற்றுக் கொண்டால், அசோக் ரமணி அவருடைய தாத்தா, பாபநாசம் சிவனுக்கு செய்த பெரிய புண்ணியமாகப் போகும்)

அது தான் சஞ்சய்Instant rapport with the audience.  அவருடைய கச்சேரி விமரசனத்திற்கு அப்பாற்பட்டது.

சங்கீத கலாநிதி விருது வழங்கிய பிறகு, அவருக்கு ஒரு சிறிய விழா எடுத்தோம். திருவல்லிக்கேணியில் ஒரு சிறிய இடத்தில நடந்தது. இனிய நண்பர், எஸ்ஸல் அவர்கள் மூலமாக ஏற்பாடு செய்திருந்தார். அதில் சஞ்சய் பேசும்போது, “இன்னிக்கு ஒரு கச்சேரிக்கு நான் பாடினால், இந்த கச்சேரி தான் கடைசி கச்சேரி. நாளையிலிருந்து, யாரும் கூப்பிடமாட்டார்கள், என்று நினைத்து கச்சேரி செய்வேன்” என்றார்.

“யாருக்கு அடங்காத நீலி”, என்று ஒரு பாட்டு பாடுவார்  அதில் “காளி” என்று ஒரு வார்த்தை  வரும். அதை, மேலே பாடுவார்.  காளி, சூலாயுதத்துடன், கோரைப் பற்களோடு, வருவது போலவே இருக்கும்

எழுத்தாளர் ஜெயமோகன், சஞ்சய் பற்றி எழுதும்போது,
“பைத்தியத்தின் விளிம்புகளில் உலவ விடுகின்ற பல குறுந்தகடுகள் உங்களுடையவை” – என்று சொல்வார்.

சஞ்சய் என்ற அசகாய சூரர்- இன்றைய கர்நாடக சங்கீதத்தின் ஒரு பெரிய வரப்ரசாதம். 

நேற்று, எதேச்சையாக YOU TUB நோண்டும் பொது, கமாஸ் ராகத்தில், திருமயிலை கபாலி பற்றி ஒரு பாட்டு கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. “திருவளர் மயிலையில்” என்று ஆரம்பிக்கும் பாட்டு அது. எப்போதோ upload  செய்யப்பட்ட வீடியோ

அந்தப் பாடலில் உள்ள ஒரு சரணத்தையே, விருத்தமாக பாடுவார். “அகில சராசர பசுபதியாகிய” என்று ஆரம்பிக்கும். முதல் 2 நிமிடத்தில்
கமாஸை, பிழிந்து கொடுப்பார் பாருங்கள்.  அட அட அடா. அறுசுவை. அதில் “பகவ” என்று ஒரு இடம் வரும். அதை வரதராஜனுடன் ரசித்து, லயித்து பாடுவார்.  “பகவ” மட்டும் கேளுங்கள்”- இந்த சங்கீத ராக்ஷஸனைப் புரிந்து கொள்வீர்கள்.  இப்படியெல்லாம் “நகாசு” வேலை செய்யும்போது, தன் உடலை “பாம்பு” மாதிரி நெளிவார், பாருங்கள். அது கொள்ளை அழகு.
 

இந்தப் பாடலில், 2 இடங்களில், அவருடைய “ஸ்டைல்” ஐ காட்டுவார் பாருங்கள்.
-அடி முடி தொடர் வரும்
-எனை உனதற்புத சரண மலர்பத

அதுதான் சஞ்சய்.  Timing sense (TS) நிறைய உண்டு. உனதற்புத என்ற இடத்தில, ஒரு சொழட்டு சொழட்டுவார் பாருங்கள். அட அடா.....

அவர் தமிழ் விருத்தம் பாடுவதுபோல, வேறு யாரும், அவ்வளவு, ராகத்தையும், உச்சரிப்பையும் சரி சமமாக குழைத்து கொடுப்பதில்லை.

“இன்னமும் ஒரு தலம்” என்ற ஒரு “பெஹாக்” ராக பாடல் பாடும்போது, அதற்கு முன் , “உப்பும் கற்பூரமும்” என்ற ஒரு விருத்தம் பாடுவார்.

கற்பகாம்பிகை நீ அல்லவோ என்ற பாபநாசம் சிவன் பாடல் பாடுவதற்கு முன் “ஆடும் மயிலாய் உருவெடுத்து” என்று ஒரு விருத்தம் பாடுவார்.

“என் தாய் வாழ் எனும் மந்திர” என்ற பாரதிதாசன் பாடலைப் பாடிய பிறகு, இப்படி கூட அட்டகாசமாக ஒரு பாடல், தமிழில் இருக்கிறதா என்று தோன்றும்.

“ஆடுகளும் மாடுகளும்” என்று பாடினார், வாயப் பிளந்து கேட்டுக் கொண்டு இருக்கும் அவரது ரசிகர்கள் ஏராளம்

எல்லாவற்றையும் விடுங்கள். போன டிசம்பர் சீசனில், “பணமே உன்னால் என்ன குணமே” என்ற பாடலைக் கேட்டு, புளகாங்கிதம் ஆகாத ரசிகர் கிடையாது.

சங்கீதத்தின் மேல் இருக்கும் தீராக் காதல்.- உழைப்பு – இவையெல்லாம் சேர்ந்த கலவை- சஞ்சய்

மகாராஜபுரம் சந்தானத்திற்குப் பிறகு, தமிழ் பாடல்களை, ஒருவர் பாடி, நான் வேலை மெனக்கெட்டு, கற்றுக் கொண்டேன் என்றால், அது சஞ்சயின் தமிழ் பாட்டுக்கள்தான்.

கற்பகாம்பிகை நீ அல்லவோ என்ற ஒரு பாட்டை, இதுவரை சுமார் 20-25 தடவை, கற்பகாம்பாள் சன்னதியில் பாடி இருப்பேன். அரி, மகிழ் சகோதரி, கபாலி... என்று ஒரு இடம் வரும். அற்புதமாகப் பாடி இருப்பார். அதை அவர்மாதிரியே சன்னதியில் பாடுவேன்.  (அதில் ஒரு அற்ப சந்தோஷம்)

சஞ்சய், அவருடைய வீட்டில் CHARTERED ACCOUNTANCY படித்துதான் ஆக வேண்டும். மியூசிக் பிறகுதான் என்று சொல்ல, வெறி வந்தவர் மாதிரி CA படித்து முடித்து, இப்போது பாடப் போகிறேன் என்று கிளம்பி விட்டார். அந்த வெறிக்குணம் தான் அவர் “தொட்டதெல்லாம் துலங்க” காரணமாக இருக்கிறது- என்று எனக்குத் தோன்றுகிறது

சஞ்சய் எனக்குத்தெரிந்து, தன புகழை, தலைக்கு ஏற்றிக் கொள்ளாதவர், அந்தக் காலத்து மிகப் பெரிய பிரபலமான பாடகர்களை “வஞ்சகமில்லாமல்” புகழ்ந்து, அவர்கள் பாணியை அடிக்கடி தன பாட்டில் “லாவகமாக நுழைப்பார்”. நாதஸ்வரப் பிடிகள் ரசிகர்களுக்கு புதுசு, அதனால், INSTANT ஆக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

ராம்நாடு கிருஷ்ணன், GNB, SOMU, மதுரை மணி அய்யர் – அடிக்கடி அவரின் கச்சேரியில், உயிர்த்து எழுவார்கள்.  ஆலத்தூர் சகோதர்களைப் பற்றி அவர் சொன்னதை YOU TUBE ல் பார்க்கும்போது, நமக்குப் புரியும், அவர் ஏதோ ஆ.சகோ பாடல்களைக் கேட்டுப் பேசவில்லை. அதை அனுபவித்து இருக்கிறார். ஊறி இருக்கிறார். அப்போதுதான், சகோதரர்களைப் பற்றி, அவர்களுடைய சங்கீதத்தைப் பற்றி, அவ்வளவு நன்றாகப் பேச முடியும்.

TS கல்யாணராமன் அவர்களின் சார்பாக விழா எடுத்தபோது, அவரைப் பற்றி அருமையாகச் சொல்லி இருந்தார்..

BRAHMA GANA சபாவில்- கான பத்மம் அவார்ட் வாங்கும்போது, “சங்கீத வித்வான் கச்சேரி பண்ணும்போது, சுதந்தரமாக இருக்க வேண்டும். QUARANTINE பண்ணக் கூடாது” என்று சொன்னார்.  நாதஸ்வர கலைஞரிடம் அவர் கற்றுக்கொண்டது, பறந்து விரிந்த அவர் சங்கீதத்திற்கு, ஒரு முக்கிய காரணம்- என்றும் கூறலாம்

T.M.KRISHNA, while giving a speech on Ramnad Krishnan’s centenary, recently, made this point about Ramnad Krishnan

What is it about this man’s music?

Something spectacular going on in his music- What is this ?

We have to analyse what he invested in his music to turn it to Gold !!

No vagueness the way it which he conceptualised music.

Youtube ல் இந்த வீடியோ இருக்கிறது. அவசியம், ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய ஒரு பதிவு
  
My view after seeing the video:

May be, down the line, someone will talk  on Sanjay’s music in line with Ramnad Krishnan.

(அப்பாடா. T.M.Krishna வை சஞ்சய் கட்டுரையில் கொண்டு வந்துவிட்டேன்)

அவருடைய நண்பர்களை மறக்காமல், அடிக்கடி உதவி செய்து, ஒரு மிகச் சிறந்த நண்பர்கள் குழு, அவர் உருவாக்கி வைத்து இருக்கிறார்.  அவரது நண்பருக்கு முதல் ROW வில் உட்கார இடம் இல்லை என்று, அந்த சபாவுக்கு பிறகு பாட மறுத்திருக்கிறார்.

தமிழ் இசை சங்கத்தில், 3 மணி நேரம் கச்சேரி, செய்து விட்டு, அடுத்த நாள், பார்த்தசாரதி சபாவில், 3 மணி நேரம் கச்சேரி செய்வார். எந்த விதத்திலும், பாடல்களில். COMPROMISE  கிடையாது.  கடைசி பாட்டு வரையும், ஒரே TEMPO. EXUBERANCE, POURING OF PRISTINE MUSIC.

பாட ஆரம்பிக்கும் முன்பே, தண்ணீர் குடிக்கும் பாடகர்களின் நடுவில், எப்படித்தான், ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் பாடுகிறாரோ என்று ஆச்சரியமாக இருக்கும் !!!  .

ஸ்கூல் புத்தகங்களை தூக்கிக் கொண்டு வரும் குழந்தைகளைப் போல, பாட்டுப் புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு வரும் சங்கீத வித்வான்களிடையே, ஒரு பேப்பர் கூட இல்லாமல் பாடுவது இவருடைய பெரிய பலம்.

கை நிறைய மோதிரம் போட்டுக்கொண்டு, சட்டைக்கு வெளியே  செயினை விட்டுக் கொண்டு, வாட்ச் கட்டிக் கொண்டு, பாடும் பாடகர்களிடையே, இது ஒன்று கூட இல்லாமல், ரசிகர்கள், அவர்களுக்காக நான், எனக்காக அவர்கள் என்றே ஒரே குறிக்கோளுடன் சக்கை போடு போடும் ஒரு மிகப் பெரிய கலைஞர்.

இவருக்கு சங்கீத கலாநிதி “அவசியமா” “தகுதியானவர்தானா, 2-3  வருடம் கழித்து கொடுத்திருக்கலாமே ? SENIOR ARTISTS  பலர் இருக்கும்போது இவருக்குக் கொடுக்க என்ன அவசரம் ? இப்படி பல கேள்விகள் இன்றும் உண்டு. எனக்கே அந்தக் கேள்வி மனதிற்குள் எழுந்தது உண்மை தான். ஆனால் சில நாட்கள் கழித்து சஞ்சய் கச்சேரி வந்தபோது, முதல் ஆளாக, சபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.  அதுதான் நான் சஞ்சய் மேல் நான் வைத்திருக்கும் அபிமானம்

அதற்கு என் பதில்- ரசிகர்கள், அவரை, தன் மனமென்ற சிம்ஹாசனத்தில் எப்போதோ அமர்த்தி விட்டனர். ஒரு சங்கீத கலாநிதி AWARD அவருக்கு வராவிட்டாலும் கூட, நாரத கான சபா- 4 PM மணி கச்சேரி, (ON A WORKING DAY) உட்கார இடம் இல்லாமல் இருக்கும் ஒரே கச்சேரி, சஞ்சய் சுப்ரமணியம் அவர்களது தான்.- என்று நான் அடித்துச் சொல்வேன். அதை பார்த்து வியந்தவன் நான்.

சஞ்சய்க்கு நான் எப்போதும் நன்றி சொல்வேன். என்னுடைய சந்கீதத்தின் பரிணாம வளர்சிக்கு சஞ்சயும் காரணம் அவர்தான், அதனால்.  

மகாராஜபுரம் சந்தானம் மறைவுக்குப் பிறகு, கர்நாடக சங்கீதக உலகமே, அஸ்தமித்துப் போயிருந்த எனக்கு புனர் ஜன்மம் கொடுத்தது, சஞ்சய்.

நேற்று கூட, கச்சேரி முடிந்தவுடன் என்னைப் பார்த்து அவர் செய்த புன்னகை ஒன்று போதும். சஞ்சய் என்ற கலைஞனை, அருகில் சென்று பார்த்து, பேச முடியும். ஆனால் நான் தள்ளி நிற்கிறேன். அதில் கிடைக்கும் சுகம் அலாதியானது.

பாரதியார் பாடியது போல் “ஈடு உனக்கோர் தெய்வம் உண்டோ, எனக்கு உனையன்றி சரணமுண்டோ” (இந்த பாட்டையும் சஞ்சய் பாடித்தான் எனக்குத் தெரியும்).

அந்த வார்த்தைகளை மாற்றி- “ஈடு உனக்கோர் வித்வான் உண்டோ, எனக்கு உன் பாடல்கள் அன்றி வேறு சங்கீதம் உண்டோ” என்று பாடுவேன்

இவ்வளவையும் படித்த பிறகு, சங்கீத ராக்ஷஸன் (ர்) என்பதை ஒத்துக் கொள்வீர்கள்.....