Friday, 4 March 2016

பிரதோஷம்- அருமையான விளக்கம்



இது அம்மன் தரிசனம் மாத இதழிலிருந்து எடுத்தது

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்
என்கிறது திருக்குறள்.

உலக உருண்டையே உன் உள்ளங்கைக்குள் வரும், காலமும், இடனும் கருதிக் காரியம் ஆற்றினால் என்பதே இதன் பொருள்.

எப்பொழுதும் முப்பொழுதும், இறைவனைச் சிந்திக்கவும் வந்திக்கவும் வேண்டும். ஆயினும் உரிய விரத, விழா நாள்களில் ஆலயம் சென்று வழிபட்டால் அதற்கான பலனே தனி.

சிவராத்திரி, கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம், சூரிய சந்திர கிரகண காலங்கள் ஆகிய புண்ணிய தினங்களில் ஆண்டவனை வழிபடுதலும், தரும காரியங்கள் புரிதலும், தோத்திரப் பாக்களை ஓதுதலும், மூலமந்திரத்தை ஜபித்தலும் நமக்கு நற்பேற்றை அதிகமாக்கி வழங்கும் என்கிறார் வாரியார் சுவாமிகள்.

பலர் வறுமையில் வாடுவதற்கு காரணமே விரதம் புரியாததுதான் என்கிறார் திருவள்ளுவர்.

இலர் பலர் ஆகியகாரணம் நோற்பார்
சிலர் பலர் நோலாதவர்

நோன்புகள் நமக்குள் இறையாற்றலைப் பெருக்குகிறது.
நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ண பெருமானே!
எனப் பாடுகிறார் மகாகவி பாரதியார்.

அத்தகைய நோன்பிலே சிறப்பான ஒன்றாகத் திகழ்வதுவே ப்ரதோஷம்! ப்ரதோஷம் பிறந்த கதையை ஓரளவு அறிவோம்! தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைந்து அமுதம் பெற ஆசைப்பட்டனர்.

மந்திர மலையை மத்தாகவும் வாசுகி என்ற நாகராஜனைத் தாம்புக் கயிறாகவும் அமைத்தார்கள். திருமால் கூர்மமாகி மந்திர கிரியைத் தன் முதுகில் தாங்கினார். அசுரர்கள் தலைப்புறமும் தேவர்கள் கால்புறமும் நின்று கடையலானார்கள்.

அந்தநாள் தசமி திதி. அன்று ஒரு வேளை உணவுண்டு திருப்பாற் கடலைக் கடைந்தார்கள். மறுநாள் ஏகாதசி பதினோராவது திதி. பதைபதைத்து நஞ்சை உமிழ்ந்தது பாம்பு. கடலில் இருந்தும் நஞ்சு தோன்றியது. வாசுகி கக்கிய ஆலமும் கடலில் தோன்றிய ஆலமும் ஒன்று சேர்ந்து (ஆலம்+ஆலம்=)ஆலாலம் எனப்பெயர் பெற்றது.
இந்த ஆலாலம் மிக்க பயங்கரமான வெப்பத்துடன் உலகத்துக்கே முடிவு செய்வது போல் விண்ணவரை விரட்டியது வலமாகவும், இடமாகவும் மறித்துத் துரத்தியது.

முப்பத்து முக்கோடி தேவர்களும் முழுமுதற் பொருளான சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்தனர்.

கண்ணுதற் கடவுள் கருணையே உருவானவர். அக்கொடிய விஷத்தை அமரர்கள் உய்ய அமுதம் போல் உண்டருளினார். அந்த விஷம் உள்ளே சென்றால் உள்முகத்தில் உள்ள ஆருயிர்கள் அழிந்து விடும். உமிழ்ந்தால் வெளிமுகத்தில் உள்ள ஆருயிர்கள் அழிந்து விடும். ஆதலால் உண்ணாமலும், உமிழாமலும் கண்டத்தில் தடுத்தருளினார். ஆதலினால் எம்மானுடைய செம்மேனி கண்டங்கரியதாக ஆயிற்று. அதனால் நீலகண்டர் என்று பெயர் பெற்றார்.

கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!
ஆலம் தான் உகந்து அமுது செய்தானை
என தேவாரம் சிவபெருமானின் இப்பெரும் தியாகச் செயலைப் போற்றிப் புகழ்கிறது.

சிவபெருமான் தேவர்களை நோக்கி மீண்டும் சென்று திருப்பாற்கடலைக் கடையுமாறு பணித்தருளினார்.

சிவபெருமானின் அருள் பெற்றுத் திரும்பிய தேவர்கள் மீண்டும் பாற்கடலை விரைவாகக் கடைந்த போது அதில் அமுதத்தோடு பற்பல அதி அற்புத அதிசயப் பொருள்களும் கிடைத்தன. அவை பற்றி அறிவது பிரதோஷ மகிமையை மேலும் விளக்குவதாகும்.

பாற்கடலிலிருந்து பெண் முகமும், அழகிய தோகையும், பொன்மயமான இறக்கைகளையும் கொண்ட காமதேனு தோன்றியது.
உச்சைசிரவஸ்என்ற ஒளிமயமான குதிரை வண்ணமயமான சிறகுகளுடன் தோன்றியது. இந்தக் குதிரை வானில் பறக்கும் ஆற்றல் பெற்றது.

நான்கு தந்தங்களைக் கொண்ட ஐராவதம்என்ற அதிசய யானை தோன்றியது. இதன் நிறம் தூய வெண்மையாகும்.
கற்பகம், பாரிஜாதம், சந்தனம், மந்தாரம், ஹரிசந்தனம் ஆகிய பஞ்சதருக்கள் தோன்றின. இவை விரும்பிய அனைத்தையும் தரும் ஆற்றலுடைய மரங்களாகும்.கௌஸ்துபம்என்ற ஒளிவீசும் மணிமாலை தோன்றியது.
ஜேஷ்டாதேவி தோன்றினாள். அறுபது கோடி அப்சரஸ் மாதர் தோன்றினார்கள். சுராதேவியும் அவளுடைய ஆயிரக்கணக்கான தோழியரும் தோன்றினார்கள்.

தாமரை மலரில் மணமாலையோடு மகாலட்சுமி தோன்றினாள். சந்திரன் அமுத கலைகளுடன் தோன்றினான். ஸ்யமந்தகமணி தோன்றியது. இது கோடி சூரியப்பிரகாசம் உடையது. இது பலருடைய கை மாறி இறுதியில் கண்ணபெருமானை அடைந்தது என்று கூறுவர். இறுதியில் தன்வந்திரி என்ற தேவ மருத்துவர் கையில் அமுத கலசத்துடன் தோன்றினார்.
இப்படி பாற்கடலில் எத்தனையோ பொருள்கள் தோன்றிய போதிலும், அவற்றில் எதையும் வேண்டாது சிவபெருமான் விஷத்தை விரும்பி ஏற்றுத் தேவர்களுக்கு அமுதத்தை அளித்துக் கருணை புரிந்தார்.
இதனைப் புறநானூறு நீலமணி மிடற்று ஒருவன்என்று போற்றிப் புகழ்கிறது.

ஏகாதசியாகிய அன்று இரவு முழுவதும் உறக்கம் இன்றி பாற்கடலைக் கடைந்தார்கள். மறுநாள் துவாதசி அன்று அதிகாலையில் அமிர்தம் தோன்றியது. அதனை அவர்கள் பகிர்ந்து உண்டார்கள். அமிர்தம் உண்ட அவர்கள் அந்த மகிழ்ச்சியினால் துவாதசியன்று ஆடியும், பாடியும் பொழுதைப் போக்கினார்கள்.

மறுநாள் திரயோதசி. தேவர்கள் சிவபெருமானை முன்னாளே வணங்காது பொழுது போக்கிய தங்கள் குற்றத்தை உணர்ந்து சிவபெருமானிடம் சென்று பணிந்து தங்கள் குற்றத்தை மன்னித்து அருளுமாறு வேண்டினார்கள். பரம கருணாநிதியாகிய சிவபெருமான் மகிழ்ந்து தேவர்களுக்கு அருள் புரியத் திருவுள்ளம் கொண்டு கயிலையில் அன்று மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை பிரதோஷ வேளையில் தம் திருமுன் இருந்த (நந்தி) ரிஷப தேவரின் இருகொம்புகளுக்கிடையில் நின்று அம்பிகை காணத் திருநடனம் செய்தருளினார். தேவர்கள் அதனை தரிசித்து சிவபெருமானைத் துதிசெய்து வணங்கினார்கள். அது முதல் திரயோதசி திதியன்று மாலை நேரம் பிரதோஷ காலம் என்று வழங்கலாயிற்று.

இது சிவமூர்த்திக்கு உரிய பலவித விரதங்களில் தலையாயது. இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் துன்பங்கள் நீங்கி இன்பத்தை எய்துவார்.
பிரதோஷ நடனத்தை அதிஅற்புதமான சொற்பதங்களில் அருணகிரியார் போற்றுகிறார். சிவபெருமானின் நடனத்தைச் சந்தம் பொங்கும் 
திருப்புகழில் நேரடியாகவே நாம் கண்டு மகிழலாம்.

தொந்தத் தொகுகுட என்பக் கழல்ஒலி
பொங்கப் பரிபுர செம்பொற் பதமணி
சுழற்றி நடமிடு நிருத்தர்! அயன்முடி
கரத்தர்! அரிகரி உரித்த கடவுள்! மெய்த்
தொடர்க்கு அருள்பவர்! வெந்தத் துகள்அணி
கங்கைப் பணிமதி கொன்றைச் சடையினர்
மிகுந்த புரமதை எரித்த நகையினர்
கொடுத்த மதனுரு பொடித்த விழியினர்!
தும்பைத் தொடையினர்! கண்டக் கறையினர்!

பழங்காலம் தொட்டு, பல்லாண்டு காலமாக பிரதோஷ வழிபாடு நடைபெற்று வருகிறது என்பதை காளிதாசன் மூலமாக நாம் அறிய முடிகிறது.

காளிதாசன் மேகதூதம்என்றொரு காவியத்தை இயற்றியுள்ளார். அதில் மேகத்தைப் பார்த்துப் பேசுவது போல ஓர் உரையாடல் வருகிறது.
மேகமே! உன்னுடைய பயணத்தின் போது நீ பல ஊர்களின் வழியாகச் செல்வாய். அந்தப் பயணத்தின் போது உஜ்ஜயினிஎன்று சொல்லக்கூடிய ஊர் வரும். அங்குமகாகாளர்என்ற திருநாமம் தாங்கிச் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். நீ அங்கே செல்லுகின்ற காலம் பிரதோஷ காலமாகவே இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் நீ மின்னல், இடி, மழை, முழக்கம் செய்து மகாகாளரை வழிபட்டுச் செல்வாயாக!என்று சொல்லப்பட்டுள்ளது.

சீர்த்தியும், கீர்த்தியும், நேர்த்தியும் பூர்த்தியாகப் பெற்ற இப்புனித நன்னாளில் பிரதோஷ வேளையில் நந்தியின் கொம்புகளுக்கிடையில் சிவமூர்த்தியைத் தரிசனம் செய்வோம்.

பன்னிரு திருமுறைப் பாடல்களைப் பாடி அகிலாண்டகோடி நாயகனாம் சிவபெருமானைப் போற்றுவோம்

No comments: