ராமகிருஷ்ணன் மூர்த்தி
பரத்வாஜ் – மிருதங்கம்
கமலாகிரன் வ்ரிஞ்சிமுரி – பிடில்
தேதி- 21.11.2025
பாரதிய வித்யா பவன்
பா.வி.ப கார்த்திகை
மாசத்திலேயே “மார்கழி உத்சவம்” ஆரம்பித்து விடுவார்கள். மார்கழி மாதம்
ஆரம்பிப்பதற்கு முன்பே, ஏறக்குறைய எல்லா ப்ரோக்ராம் முடிந்துவிடும். இப்போது
எல்லாம் ஏன், எதற்கு என்று கேட்கப்டாது. இந்தக் கட்டுரையிலேயே நிறைய “ஏன்”
இருக்கிறது
ஏன் கச்சேரியின்
நடுவில், ராகம் பாடி பல்லவி பாடாமல் தானம்
மட்டும் பாடினார் ?
ஏன் கச்சேரியின்
நடுவில் நாராயண கௌளையில், வீணை குப்பையரின் வர்ணத்தைப் பாடினார் ?
ஏன் ராகம் பாடி
தில்லானா பாடினார் ?
ஏன் “பூங்குயில் கூவும் பூஞ்சோலை” என்ற அரத பழசான
“கல்கியில்” பாடலை நோட்டுப் புத்தகத்தைப் பார்த்துப் பாடினார் ?
இப்படி எல்லாம் நான்
கேள்வி கேட்டுதான் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி கொடுத்தார்கள். கூடிய சீக்கிரம் இவருக்கும் கிடைத்து விடும்
நேற்று கவர்னர் வந்து
நாதஸ்வரத்துடன் தொடங்கி வைக்க, இன்று இரண்டாம் நாள்/ ரா.கி.மூ
ஒவ்வொரு பாட்டும் கையாண்ட விதம்
அற்புதம். நிறைய இவருடைய வித்வத்தை புகழ்ந்தாகி விட்டது.
முதலில் ஸரசிருஹா என்ற புலியூராரின் நாட்டை கிருதியை
எடுத்தார். சரஸ்வதி தியானம். அருமையாக, கிடு கிடுவென ஸ்வரம் பாடி முடித்தார்.
இரண்டாவதாக, ஸ்ரீ சுக்ர
என்ற நவக்ரஹ கிருதியை எடுத்தார். பரஸ் ராக
தீட்சிதர் கிருதி. மதுரை மணி அய்யருக்குப் பிறகு, யாரும் இதை எடுத்துப் பாட ஆள்
இல்லை. இந்த ஒரு விஷயத்திற்க்கே இவருக்கு
நன்றி கூறலாம். இந்த
ராக ஸ்வரூபத்தை “வடவரையை மத்தாக்கி” என்ற ஒரு பாடலின் ஒரு சரணத்தில் எம்.எஸ்.
அம்மா குழைத்துக் கொடுக்க, அதை மணி அய்யர் சிறப்பிக்க, பிருந்தா முக்தா அவர்கள் (யூ
ட்யூப்) நீலாயதாக்ஷி என்ற ஒரு பாட்டு பாடி இருக்கிறார்கள். முடிந்தால் கேட்கவும்.
சாளக பைரவியில் எனக்குத் தெரிந்து
“வரலக்ஷ்மி நீயே வந்தருள்வாயே” என்று பாட்டு. ஸ்ரீ. ஒ.எஸ். தியாகராஜன் அவர்கள்
பாடியது தான். வேறு இருப்பதாகத் தெரியவில்லை.
வராளியை எடுத்து கொஞ்சம் ராகம்
பாடிவிட்டு, பஞ்ச ரத்ன கிருதியை எடுத்துப் பாடினார். எனக்கு என்னமோ பஞ்ச ரத்ன கிருதி என்பது கச்சேரிகளுக்கு
சரிபடாதோ என்று தோன்றியது. நல்ல வேளை ஸ்வரம் பாடவில்லை.
அப்புறந்தான். நாராயண கௌள ராகத்தை
எடுத்து கொஞ்சம் பாடினார். திடீரென்று தானம் பாடினார். திடீரென்று வீணை
குப்பையரின் அதே ராக “மகுவா நின்னே” வர்ணத்தைப் பாடி “அந்தக்” கட்சியில் சேர்ந்து
விட்டார்.
இதுவும் ஸா.பை போன்று ஒரு அரிதான
ராகம்.. இதில் தீக்ஷதிரின் “ஸ்ரீ ராமம்” தவிர எனக்கு வேறு தெரியாது. அதுவும் செம்மங்குடி பாடியது தான். சஞ்சய்,
செம்மங்குடி மாமாவைப் பற்றி சொல்லி இருக்கும் வீடியோ வில், தான் இந்த ராகத்தை விரும்பி
மாமாவிடம் கத்துண்டதாக சொல்லி இருக்கிறார்.
அடுத்து ஒரு 9 நிமிடம் தோடி பாடினார் பாருங்கள். அட அட...மிகப் பிரமாதம். “கீர்த்தி மேவும்” என்று ஆரம்பித்து,
கார்த்திகேய காங்கேய என்ற பாபநாசம் சிவன் கிருதியை எடுத்தார். எனக்கு மிகவும்
பிடித்த பாடல். ஆறு படையையும் ஒரே பாட்டில் கொண்டு வரும் பாடல். மூன்று
சரணத்தையும் பாடினார். “வேல் முருவும்...” நிரவல் எடுத்து ஸ்வரம் பாடி முடித்தார்
பரத்வாஜின் தனி மிக இனிமை.
டிசம்பர் சீசனில் இவர் மிக முக்கியமானர் ஆக ஆகிவிட்டார். மியூசிக் அகாடமி யிலும் இவருக்கே
வாசிக்கிறார் என்பது, கமலகிரன், அபிஷேக் ரகுராமுக்கு வாசிக்கிறார் என்பதும், இந்த இளம் கலைஞர்களின் அயராத உழைப்பு. நேர்த்தி தெரிகிறது.
ஒரு கடமோ, கஞ்சிராவோ இருந்திருக்கலாமோ என்று தோன்றியது.
பிறகு துக்கடாக்களை கையில் எடுத்தார்......
மாலாசை கோபம் ஓயாதே நாளும் – என்ற வயலூர் திருப்புகழை, பீம்ப்ளாஸ்
ராகத்தில் பாடினார்.
உல்லாச நிராகுல – என்ற அனுபூதியை காபியில் குழைத்து கொடுத்து,
கேட்பவர்களுக்கு அநுபூதி அடைந்த திருப்தி. பூங்குயில் கூவும் என்ற கல்கியின்
பாட்டு பாடி முடித்தார்
வந்தே மாதரம் அம்பிகாம் பகவதீம் - என்று தொடங்கி “கேதார கெளள,
சாவேரி ஹிந்தோளம், நாட்டைகுறிஞ்சி, சிந்து பைரவி என்று கடைசியில் மாஞ்சி ராகத்தில்
முடித்து, ஷ்யாமா சாஸ்த்ரியின் “ப்ரோவம்மா தாமசமேலே” என்ற கிருதியை பாடி, அதே
ராகத்தில் மங்களம் பாடினார்
ரா.கி.மூ. பற்றியோ அவர் சங்கீதம் பற்றியோ நான் சொல்ல
வேண்டியது இல்லை. அவரின் சங்கீதம் மிகவும் அழகு. அந்த காலத்து கலைஞர்களின்
சங்கீதத்தை நேராக கேட்க முடியவில்லையே என்று நினைப்பவர்களுக்கு, கவலை வேண்டாம்.
ராம கிருஷ்ண மூர்த்தியைக் கேளுங்கள்..
முடிவுரைக்கு முன்பு-, ஏதோ இரண்டு கச்சேரி பண்ணிய சிறுசுகள்
கூட, இன்றைக்கு Apple Tab வைத்துக் கொண்டு பாட, இவர் ஏதோ ஒரு 40 பக்க நோட்டை வைத்துக் கொண்டு புரட்டிக்கொண்டு பாடியது .ஆச்சர்யமாக
இருந்தது
No comments:
Post a Comment