Saturday, 30 August 2025

वारं वारम् - இந்த வாரம் – (25.8.25 to 31.8.25)

 

பகுதி - ஒன்று

கொஞ்சம் ஆன்மிகம் ....பிறகு வாரத் தகவல்.....

சம்ஸ்க்ருத பதம் “வாரம் வாரம்” என்று எழுதி இருக்கிறேன். இது, (அடிக்கடி/திரும்பவும்) என்று அர்த்தம். ஸ்ரீ. நாராயண் தீர்த்தரின் மகோன்னத காவியமான “கிருஷ்ண லீலா தரங்கிணியில்” அடிக்கடி எல்லோரும் பாடும் “பூரய மம காமம்” என்ற பாடலில் “வாரம் வாரம் வந்தனம் அஸ்துதே” என்று ஒரு வரி வருகிறது. இதில் ஆச்சர்யமான ஒரு விளக்கம். உபன்யாசகர் ஸ்ரீ. சுந்தர குமார் கொடுத்தார். பூரய மம காமம் கோபாலா – என்று கேட்கிறோம். என்னுடைய அபிலாஷைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கேட்டு விட்டு, உடனே வாரம் வாரம் என்று சொல்கிறார். அதான் முதல் வரியிலேயே நம் தேவைகள் எல்லாம் கேட்டாகி விட்டதே ? என்றால் “இதை (ஏன் தேவைகளை) பூர்த்தி செய்வதற்கு, திரும்ப திரும்ப நான் உன்னுடைய திருவடிகளை வணங்க வேண்டும்” என்ற அர்த்தத்தில், எழுதப்பட்டதுதான் “வாரம் வாரம் வந்தனம் அஸ்துதே”

இதே வரிகளை ஸ்ரீ. த்யாகராஜர் தன்னுடைய, சித்தரஞ்சனி ராகத்தில் அமைந்த “நாத தனுமநிஸம்” பாடலில், என்னுடைய மனமும் உடலும், அடிக்கடி நாத ரூபியான சிவபெருமானிடம் லயிக்கட்டும் என்று சொல்லியிருக்கிறார்.

 முன்னுரை:

நான் அடிக்கடி எழுதிக் கொண்டிருந்தேன். இப்போது ஏன் நிறுத்தினேன் என்று தெரியாமல் நிறுத்திவிட்டேன்.  இப்போது திடீரென்று, ஒவ்வொரு வாரமும் நான் பார்த்த, சந்தித்த நிகழ்வுகளை பதிவு செய்யலாம் என்று.

இது எத்தனை வாரம் போகிறது என்று பார்க்கலாம் !!!!

 

பகுதி இரண்டு

நிச்சயதார்த்தம்

கடந்த 25.8.25 அன்று ஏன் தம்பி பிள்ளை, சிரஞ்சீவி சந்திரமௌலி யின் நிச்சயதார்த்தம் இனிதாக நடைபெற்றது. சௌபாக்யவதி ஷிவானி என்ற வதுவுடன் நி.தா. திருச்சியில் தம்பி விஜயகுமாரின் திருவானைக்கோவில் வீட்டின் அருகே இருந்த கல்யாண மண்டபத்தில் இனிதே நடந்தது.

ஒவ்வொரு முறையும் எங்கள் வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும்போது, நான் உடனே நினைத்துக்கொள்வது, எங்கள் வரகூர் பெருமாளையும், என் பெற்றோர்களையும் தான்.

மிகவும் அழகாக எங்கள் “ஆத்து வாத்யார்” ஸ்ரீ ராம் அவர்கள் ஆசீர்வாதங்களுடன், தரங்கப் பாடல்கள் ஏன் தந்தையார் பாட, அன்புச் சொந்தங்களுடன் தட புடலான விருந்துடன் நடந்தது.

விஜயகுமாரின் மனைவி. சௌ. அபர்ணா, ஸ்ரீமான் சிவராமக்ருஷ்ண சாஸ்த்ரிகள் அவர்கள் புத்ரி. மகா பெரியவாளின், மிகவும் பக்தி ஸ்ரத்தையுள்ள ஒரு மகான் சாஸ்த்ரிகள் அவர்கள்.   அவரின் பல குணங்களை கொண்ட ஒரு சிறந்த பேரன். மௌலி. 

சிவகாமி என்ற ஷிவானி, பரமேஸ்வரன் பெயர் கொண்ட புள்ளையாண்டான் மாப்பிள்ளை. கண் பட்டுவிடும் அழகு. இனிமையான புது உறவுகள். புது வரவுகள். புது வாழ்வில் அடியெடுத்து வைக்கப் போகும் அந்த இரு குழந்தைகளும் சௌக்யமாக இருக்கட்டும். என் செம்மங்குடி உறவுகள் பெரியம்மா, லலிதா, கோமதி அக்கா, மைதிலி சித்தி மற்றும் ரேவதி அத்தை சில நேரங்களே செலவு செய்தாலும் மிகவும் திருப்தி.  என்னுடைய இரு சம்பந்தி குடும்பங்களும்,  மாப்பிள்ளையும்  வந்திருந்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது

விஜயகுமார் எனது தம்பி என்பதற்கு மேல், நான் மிகவும் மதிக்கும் ஒரு சிறந்த பெருமாள் பக்தன். நான் வரகூரானிடம் பக்தி செய்வதற்கு “ராஜ பாட்டை”   அமைத்துக் கொடுத்த பலரில் இவனும் ஒருவன் இருக்கிறான். இதை விட எனக்கு என்ன  வேண்டும் ? “தம்பியுடையான் படைக்கு அஞ்சான்”  எனக்கு தம்பியுடையான் சிறந்த பக்தி செய்வதற்கு அஞ்சான்.......

நான் திரும்பி திருச்சி வருவதற்கு, பல்லவனில் பண்ணி விட்டு, வந்தே பாரத் என்று நினைத்து, திருச்சி ரயில் நிலையம் வர, ஒரே குழப்பம். பல்லவன் பாதி தூரம் போய் விட, அன்று வந்தே பாரத் (தே) கிடையாது என்பது தான், கொடுமையான் ஜோக். கடைசியில் சோழனில், சென்னை வந்து சேர்ந்தேன்.

திருச்சி சென்று என் தம்பி மணி குடும்பத்துடன் இருந்தது மனக்கு மிகவும் சந்தோஷம். அவன் பண்ணும் சிவ பூஜை, அந்த வீட்டு சாந்நித்யம். மிகவும் ஸ்லாக்க்யம்.

கொசுறாக, சென்ற வாரம், என் மனைவியுடன், பெண் வீட்டுக்காரர்கள் முகூர்த்தப் புடவை  டி.நகர் ஸ்ரீனிவாசா புடவை கடையில் வாங்கியது, மிகவும் அழகான ஒரு நிகழ்வு

சிறந்த ஆசிரியர் அவார்டு.

நான் இங்கு பணி புரியும் பீ எஸ் உயர் நிலைப்பள்ளியில், சீனியர் செகண்டரி பள்ளியில் பிரின்சிபால் ஆக பணி புரியும், ஸ்ரீமதி ரேவதி பரமேஸ்வரன் அவர்களுக்கு, சிறந்த நல்லாசிரியர் விருது வழங்கப் பட்டு இருக்கிறது. பீ எஸ் குழுமம், மிகச் சிறந்த மாணவர்களை உருவாக்கி இருக்கிறது. இந்தக் குழுவில் இருந்து ஒரு ஆசிரியர், மத்திய அரசு வழங்கும் விருதைப் பெறுகிறார் என்பதை கேட்டபோது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  பெண்ணாத்தூர் (நிறுவுனர்) அவர்கள் இந்தப் பள்ளியை நிறுவி ஒரு நூறு ஆண்டுகளுக்கு மேல் மிகச் சிறந்த சேவை செய்து வருகிறது.

எனக்கு என் அம்மாவின் ஞாபகம் வந்தது. பாரதத்தின் மிக உயர்ந்த  “டாக் சேவா” விருது என்று சொல்லக்கூடிய, “தபால் துறையில் மிக உயர்ந்த விருது”  (சுமார் 15 வருடம் முன்) மிகச் சிறப்பாக பணி புரிந்தமைக்காக, விருது வழங்கப்பட்டது.

இதன் பின் புலத்தைப் பற்றி யோசிக்கும்போது, தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு, இறைவன் அருள் இவைகள் தான் காரணம் என்று தோன்றுகிறது. என் அம்மா, செம்மங்குடி உயர் நிலைப்பள்ளியில்  ஸ்கூலில் முதல் ரேங்க் வாங்கியது, மகா பெரியவா கையால் பிரசாதம் வாங்கியது, இந்த விருது, - எல்லாவற்றுக்கும் மிகவும் பொருத்தமானவர்.

நான் வாழ்வதற்கு, என் பெற்றோர்கள் காரணம், நான் முறையாக வாழ்வதற்கு என் ஆசிரியர்கள் தான் காரணம் என்று யாரோ கூறியதாக படித்து இருக்கிறேன். செம்மங்குடி ஆசிரியர்கள், செதுக்கிய ஒரு அழகான சிற்பம் என் அம்மா. 

Dr. ரேவதி அவர்களை மனப்பூர்வமாக வாழ்த்தி செய்தி அனுப்பினேன். நேரில் வாழ்த்து சொல்ல அவர்களிடம் நேரம் கோரியுள்ளேன்

இன்னொரு சந்தோஷமான விஷயமமும் கிடைத்தது. நான் படித்த செம்மங்குடியில் இருந்த பாபு மாமா அவர்களின் பேத்தி ஸ்ரீமதி விஜயலக்ஷ்மி அவர்களும் சிறந்த ஆசிரியர் விருது பெறுகிறார் என்பதுதான்.  இப்போது அவர் விஜயவாடா வில்  “Dean in College of Architecture” ஆக இருக்கிறார்.

இது பிறந்த வீடு, புகுந்த வீடு போல் – இரு சந்தோஷமான விஷயங்கள்.

 

விநாயக சதுர்த்தி:

வி.ச. நவராத்திரி, பங்குனி பெருவிழா, - போன்ற பல நிகழ்வுகளில், மைலாப்பூரில் இருக்கவேண்டும்  ஜே ஜே என்று, எங்கு திரும்பினாலும் களி மண் புள்ளையார். விதம் விதமாக.  குடை Rs. 50 ஏன் என்று விஜாரிக்க, பட்டன் ப்ரெஸ் பண்ணினால், குடை விரியும் என்றான். இது எந்த AI ஐ சேர்ந்தது என்று புரியவில்லை. இத்துனூண்டு குடைக்கு பட்டன்/

நான், களி மண்ணில், கண்ணுக்கு நேரே பிள்ளையார் பிடித்து வாங்கி வந்தேன். அருகம் புல் கட்டு Rs, 30  விற்க ஒரு வேலை “Trump effect” ஒ என்று நினைத்தேன்

மும்பை மாதிரி வீதிக்கு வீதிக்கு பிள்ளையார் இல்லை என்றாலும், மைலாப்பூர் தெற்கு வீதியில், ஒரு பிள்ளையார் வைத்து, தினமும் சாயந்திரம் கச்சேரி வைத்திருக்கிறார்கள். மற்றபடி, மானாவாரிக்கு, சங்கீத ஹாலில் கச்சேரி உண்டு.  

நான் நேற்று “cothas coffee” ல் ஒரு காபி சாபிட்டுக்கொண்டு இருக்கும்போது, அந்த பிள்ளயார் சிலை அருகே, ஒரு அருமையான் வீணை வாசிப்பு கேட்க, ஒரு 20 வயது பையன், கடம், மிருதங்கம் சஹிதம் அருமையாக, தீட்சிதரின், பியாகட ராக “வல்லப நாயகஸ்ய” வாசித்துக் கொண்டு இருந்தான் யாருமே உட்கார்நது கேட்காத அந்த இடத்தில், மைக் ல் அடுத்ததாக சுப்பராய சாஸ்த்ரியின், கல்யாணி ராக பாடலை பாடுவதாக சொல்லி, அந்த ராகத்தை அருமையாக இழைய விட்டான். இப்படி எத்தனை விற்பன்னர்கள் ?   இந்த குழந்தைக்கு கற்பகத்தின் ஆசி கிடைக்கட்டும்

அடுத்த வாரம் பார்ப்போம்..............

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Sunday, 11 May 2025

உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே

 

இளமையாக இருக்கும் தமிழை வாழ்த்திப் பாடும் பாடல்.  என் பள்ளிக் காலத்தில் தேசிய கொடியின் அருகில் நின்று பாடிய பசுமையான நினைவுகள்.

இது “நீராரும் கடலுத்த” என்ற பள்ளி “இறை வணக்கப் பாடலின் கடைசி வரி”

இன்று சித்ரா பௌர்ணமி. நம் ராணுவ வீரர்கள் நலமுடன் இருக்க அந்த அருணாசலேஸ்வரர் காக்கட்டும்

இன்று இந்தியா பாகிஸ்தான் சண்டை நடந்து கொண்டு வரும்போது, இந்த தலைப்பை வைத்து ஒரு சிறு கட்டுரை.

இந்த சண்டை முன்பு வந்த போது, ஏதோ காலேஜோ, ஸ்கூலோ- படித்துக் கொண்டு இருந்தேன். அப்போது, ஏதோ ரேடியோ, பேப்பர் அவைகளில் வந்த செய்தியை வைத்து, பாகிஸ்தான் அடி வாங்கி விட்டது என்று தெரிந்து கொண்டேன்

இப்போது, வரும் ஊடகங்களும், மாங்கு மாங்கு என்று கூட்டு டிஸ்கக்ஷன் என்று அலையும் சேனல் களும் இந்தியா-பாகிஸ்தான் சண்டையின் முழு வடிவத்தை நமக்கு உணர்த்துகிறது. பிரமிப்பாக இருக்கிறது

எனக்கு திருப்பியும் ராமாயணம் தான் நினைவுக்கு இருகிறது. ராமாயணம் சொல்லாத ராஜ தந்திரம் இல்லை. ராமன், ராவணனை இன்று போய் நாளை வா என்று சொன்னதாக இருக்கட்டும்,  அனுமன், இந்த்ரஜித்தின் பிரம்மாஸ்திறத்திர்க்கு, கட்டுப்பட்டது போல் நடித்து, ராவணனைப் பார்த்து புத்திமதி சொல்லும் காட்சியாகட்டும்.  விபீஷனர் சரணாகதி என்று வந்த போது, பல வித சர்ச்சைகள் இருந்தாலும், “சரணம் என்று என்னிடம் வந்த யாரையும் நான் காப்பாற்றியே தீருவேன்” என்ற ராமனின் முடிவு.

எல்லாவற்றிர்க்கும் மேலாக காகாசுரன் வதம். ராமாயணத்தில் இது சீதை, அசோக வனத்தில், அனுமாரிடம் சொல்வது போல் வருகிறது.  இது ரொம்ப முக்கியமான ஒரு நிகழ்வும். ராவணனை விட போசமானவன் காகாசுரன்.  ராவணன், சீதையை தூக்கி வந்தானே தவிர, அவளை நெருங்க கூட இல்லை, கெஞ்சுகிறான். மன்றாடுகிறான். ஒரு நிமிடம் கூட தவறாக சீதையை நெருங்க வில்லை.

ஆனால் காகாசுரன், சீதையை உடலால் துன்புறுத்துகிறான். அவள் உடம்பில் இருந்து ரத்தம் வருகிறது. தூங்கிக்கொண்டிருக்கும் ராமன் எழுந்துவிடப்போகிறானே என்று வலியைப் பொறுத்துக் கொண்டு இருக்கிறாள். ராமன் எழுந்து பார்த்து திடுக்கிடுகிறான். உடனே, கோபம் கொண்டு, ஒரு தர்ப்பையை எடுத்து மந்திர உச்சாடனம் செய்து அம்பாக விடுகிறான். அது காகாசுரனை துரத்து துரத்து என்று துரத்தி, கடைசியில், அசுரன், ராமன் காலடியில் வந்து விழுகிறான்.  உயிர் பிச்சை கேட்க, சீதை என்கிற அந்த தாய், பரிந்து பேச ஒரு கண்ணை மட்டும் எடுத்து அனுப்புகிறான்.

இதை அருணகிரிநாதர், ஒரு காதையும் கண்ணையும் எடுத்து அனுப்பினார் – என்று சொல்கிறார்.

விவேகானந்தர் சொன்னது போல், நம் நாடு சீதை பிறந்த நாடு, கீதை பிறந்த நாடு.  நாரி சக்தி என்று அரசு சொல்வது என்பது சாதாரண வார்த்தை இல்லை. ஆபரேஷன் சிந்தூர் என்ற வார்த்தையெல்லாம் யாருக்கோ தோன்றி இருக்கிறது. “ஆபரேஷன் வீரம்” என்று சொன்னால் வீரம் வராது.  “ஆபரேஷன் சிந்தூர்” என்று சொன்ன உடனே ஒரு ஜெர்க் வருகிறது.....

ஒரு வார்த்தையில் வீரம் வரவழைக்க முடியுமா என்ன ? அதுதான் ராம ராஜ்யத்தின் மகிமை

இரண்டு வீர பெண்மணிகளை முன் நிறுத்தி “Press Briefing” கொடுக்க வைத்தார் பாருங்கள். அரசியல் சாதுர்யத்தின் உச்சம்

 

இதில் அஜீத் டோவோல், பாதி விபீஷணர், பாதி ராஜ தந்திரி. பாகிஸ்தானின் இண்டு இடுக்கு எல்லாம் தெரியும். அப்போ அப்போ சொல்லி கலக்குகிறார்.  பாதி வெற்றி இவரால்

ஜெய்ஷங்கர், ஆஞ்சநேயர் போல. ராமன், அனுமனை முதலில் சந்திக்கும்போது, அவருடய நா வன்மையை பார்த்து ராமர் ஆச்சர்யப்படுகிறார். நான்கு வேதமும் நன்கு கற்ற ஒருவனால் தான் அப்படிப் பேச முடியும் என்கிறார். “நவ வியாகரண நிபுண” என்று முத்துஸ்வாமி தீட்சிதர் அவர் பாடலில் சொல்கிறார்.

இங்கு ஜெய்ஷங்கர. இவர் குட் மார்னிங் என்று சொன்னால், 1 லட்சம் பேர் உடனே குட் மார்னிங் சொல்கிறார்கள். லேசாக சிரித்துக்கொண்டே எதிரிகளை த்வம்சம் செய்கிறார்

பீஷ்மர், அம்பு படுக்கையில் படுத்து இருக்கும்போது. ஸ்திரீ தர்மம் சொன்னார். புருஷ தர்மம் சொல்லவில்லை. ஏனெனில், புருஷனுக்கு ஒரு தர்மமும் இல்லை. ஸ்திரீ சரியில்லை என்றால் ஒரு டம்ளர் காபி கூட கிடைக்காது. ஸ்த்ரீக்குள் புருஷன் அடக்கம்

மேற்கூறிய கதை எல்லாம், ஏதோ ஒரு வகையில் இப்போது நடக்கும் யுத்தத்துடன் சம்பந்தப் பட்டு இருப்பதை, நன்கு கவனித்தால் புரியும்.

எங்கோ வடக்கே நடக்கும், ஒரு சண்டையில, தெற்கே இருக்கும், நாம் நிறைய சுலோகம், ராம நாமம், காயத்ரி ஜபம் என்று வலிமை சேர்த்து அனுப்பிக் கொண்டு இருக்கறோம்.  மஹா பெரியவர் சொன்னது போல், பின் கோடு என்று ஒன்று போட்டால் சரியான இடத்திற்குப் போவது போல்

“ஆத்மானம் மானுஷம் மன்யே” என்று ராமனை சொல்லும்போது சொல்வோம். திருமால் ராமனாக அவதாரம் செய்து சாதாரண மனிதனாக, எல்லா கஷ்டத்தையும் அனுபவித்து தர்மம் தவறாமல் வாழ்ந்தார். பிறகு பகவத்பாதாள் அதே மாதிரி பிறந்து, வாழ்ந்து அத்வைத சித்தாந்தங்களை போதித்து, இன்றும் அவர் இல்லை என்றால், வேதம் இல்லை, நன்னூல்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்க்கு ஒரு வாழ்க்கை வாழ்ந்து விட்டுப் போனார். நாம் இருக்கும் காலத்தில் மஹா பெரியவா.....அதே போல்

அரசியல் தாண்டி இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரும் மனிதனும் நன்றி சொல்லவேண்டியது மோடி என்ற மகத்தான மனிதர்க்கு. போர் ஒத்திகை நடந்து கொண்டிருக்கும் பொது ஐ பி எல் நடத்துகிறார், நாள் முழுவதும் தூங்காமல், ஏதோ மீட்டிங் போடுகிறார்.  அஜீத் டோவால், ஜெய்ஷங்கர் என்ற தளபதிகள் அவருக்கு பக்க பலமாக.

இது ராம ராஜ்யமா ?  அப்படி என்றால் பிரதம மந்திரி என்ன ராமனா ? என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம்

ராம-ராவண யுத்தம் நடந்து கொண்டு இருக்கிறது. ராமன், ராவணின் போர் திறமையைப் பார்த்து வியக்கிறான்.  சரி போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று யோசிக்கும்போது,  ராமனின் தேரோட்டி, மாதலி,  "ராமா, பிரம்மாஸ்த்ரம் இருக்கிறது, மறந்து விடாதீர்கள்" என்று நினவு படுத்த, உடனே பிரம்மாஸ்திர பிரயோகம் பண்ண, ராவண வதம் முடிந்து.

இப்போது, மாதலி ரூபத்தில் இருக்கும்  அஜீத் டோவலோ,  ஜெய்ஷங்கரோ,  அல்லது முப்படை தளபதிகளோ,  "மோடி அய்யா,  நேரம் கடத்த வேண்டாம், நம்மிடம் "ப்ரஹ்மோஸ்"  இருக்கிறது, என்று நினைவு படுத்த....

விளைவு/.... REST WAS HISTORY...

எந்த வித பயமும் இல்லாமல் ஏதோ, குழாயடி சண்டை மாதிரி நாம் நம் வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

கொரோனா காலத்தில் மருந்து இல்லாதவற்க்கு, இலவசமாக மருந்து கொடுத்தோம். நம்மை போட்டு பார்ப்பவர்களுக்குப், வேறு மாதிரி மருந்து கொடுத்துக் கொண்டு அவர்களையும் “போட்டு” பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

இந்த யுத்தத்தைப் பற்றி, ஒரு சில வரியில் சொல்வதானால்....

நான் CA படிக்கும்போது “Raiders of the Lost Arc” என்று ஒரு படம் வந்தது. சென்னையில் Pilot தியேட்டரில் மட்டும் அது 200 நாட்களுக்கு மேல் ஓடியது. Stephen Spielberg ,  படம்  Harrison Ford  என்ற ஒரு நடிகர் நடித்து இருப்பார்

நானும் என் அத்தை பையன், சாய்நாத் (சாய்), இப்போது ஹைதராபாதில் இருக்கிறான். அந்த படத்தை 10 தடவைக்கு மேல் பார்த்திருப்போம். போஸ்டரில் ஒரு நல்ல பாம்பு படம் எடுத்துக் கொண்டு இருக்கும், அந்தற்கு முன்பு ஹீரோ கண்ணை விரித்து பயத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பார். அதில் ஒரு சண்டைக் காட்சி வரும்.

“ஒரு பாலைவன கிராமத்தில் சண்டை நடந்து கொண்டிருக்கும். இவர் ஒரு சாட்டை வைத்து இருப்பார். திடீரென்று, ஜாம்பவான் போல ஒருவன் எதிரில்  நின்று, ஒரு பெரிய வாளை சுழற்றுவான். பார்க்க பயங்கரமாக இருப்பான். அவனை கண்டது கூட்டம் தெறித்து ஓடும்..  எதிரும் புதிருமாக நின்று கொண்டிருப்பார்கள். வேறு யாரும் கிடையாது. வில்லன் ஓடிவந்து ஹீரோ வைக் கொல்ல வருவான்.

அப்போதுதான் அது நடக்கும். ஹீரோ துப்பாக்கியை எடுத்து “டப்” என்று சுட்டுவிட்டு, திரும்பி நம்மைப் பார்ப்பார்.  Serious சீனை  full comedy ஆ பண்ணுவார். அந்த படம் முழுதும் adventure தான். ஆனால் இது தான் பெஸ்ட் சீன்

இதுதான் பாகிஸ்தான். உதார் மன்னர்கள்.

ஒரு இந்திய பிரஜையாக நாம் “திறம் வியந்து, நாம் செய்யும் செயல் மறந்து ராணுவ வீரர்களை வாழ்த்துவோம்”

Monday, 21 April 2025

......பகைஞன் போலுமால்....

 

கொஞ்சம் கம்பர், கொஞ்சம் வால்மீகி, கொஞ்சம் சொந்த சரக்கு

விபீஷணன் ராமனிடம் வந்து அடைக்கலம் ஆகும் இடம். விபீஷ்ணன் இதற்கு முன் ராமனைப் பார்த்தது கிடையாது.  இலங்கையில் இருந்து கொண்டு, அவன் மட்டும், ராமன் மேல் பக்தி கொண்டு அவரிடம் சரணம் அடைய வந்து இருக்கிறான் என்பது ஒரு ஆச்சர்யமான விஷயம்.

எத்தனையோ மலர்கள் இருப்பினும் தாமரை தான் சூரியனைப் பார்த்தவுடன் மலர்கிறது. அது போலத்தான். அது நன்மையில் முடியும் ஒரு விஷயமாக இருந்தால் தெய்வ அணுக்ரஹம் என்றும் தீமையில் முடியுமானால் “பிராரப்தம்” என்றும் கூறுகிறோம்.

காணாமலே காதல் என்பது ரொம்ப அபூர்வமான விஷயம். அருணகிரிநாதர் சொன்னது, பக்தி செய்வதற்கு அறிவு அவசியமில்ல, அன்பு போதும்.  (உன்னை அறியும் அன்பைத் தருவாயே). “எதோ விட்ட குறை தொட்ட குறை” – ராமரின் மேல் அன்பை வைத்துவிட்டான்.  அவரை பார்க்க வேண்டும் என்று உருகுகிறான்.

கம்பர் சொல்கிறார் -விபீஷணன் உருவத்தில்

“நான் இவனை இதற்க்கு முன் பார்த்தது கிடையாது. அவனைப் பற்றிக் கேள்விப் பட்டத்தும் கிடையாது. அவன் மேல் எனக்கு அன்பு பிறக்க என்ன காரணம் என்றும் தெரியவில்லை. எலும்பு வரை குளிர்கிறது. என் மனம் உருகுகிறது.

'முன்புறக் கண்டிலென்; கேள்வி முன்பு இலென்;
அன்பு உறக் காரணம் அறியகிற்றிலேன்;
என்பு உறக் குளிரும்; நெஞ்சு உருகுமேல், அவன்
புன் புறப் பிறவியின் பகைஞன் போலுமால்

தலைப்பில் நான் சொல்லி இருக்கும் வார்த்தையை சொல்கிறான்.

பிறவி என்ற பகையை அழித்து மீண்டும் பிறக்காமல் செய்வான். “புன் புறப்பிறவியின் பகைஞன் போலுமால்”

 

 

 

 

அரக்கர்களில் பல தினுசுகளை, ராமயணத்தில் பார்க்கலாம். மாரீசன் தாடகை வதம் போது, ராமன் விட்ட அம்பில் ஓட்டமாக ஓடி, கடலுக்குள் புகுந்து கொண்டான்.  அதனால் தான் ராவணன், மாரீசனிடம் வந்து. சீதையை அபகரிக்க உதவி கேட்கும்போது, அரண்டு போகிறான். வால்மீகி எழுதுகிறார். “எனக்கு “ர” சப்தம் கேட்டாலே பயமாக இருக்கிறது” என்கிறான,

ராமர் “தர்மத்தின் உருவம், ரொம்ப கருணை மிக்கவன், சத்தியத்தை மீறாதவன், பராக்ரமம் மிக்கவன், இதை நான் நேரில் பார்த்தவன். ஒழுங்கு மரியாதையாய் சீதையை அபகரிக்கும் உன் நோக்கத்தைக் கை விடுவாயாக”  என்கிறான்.

இது எனக்கு மிகவும் பிடித்த வாசகம். நம் விரோதி கூட நம்மை புகழுமாறு ஒரு வாழ்க்கை வாழ வேண்டும், அட் லீஸ்ட் முயற்சியாவது செய்ய வேண்டும்

சூர்ப்பனகை கதை நமக்குத தெரியும். அவள் யாரிடம் எப்படிப் போட்டுக் கொடுத்தால், சரியாக இருக்கும் என்று யோசித்து, இலக்குவன், காதையையும் மூக்கையும் வெட்டியவுடன், நேரே கர தூஷனாதிகள் இடம் சென்று, “ராமன் என்று ஒருவன் இருக்கிறார், அவன் பெரிய வீரனாம். ஒரு வில் வைத்து இருக்கிறான். அவன் தம்பி என்னை அவமானப் படுத்தி விட்டான், நீ அவனை வதம் செய்யாவிட்டால், உன் வீரத்திற்கே இழுக்கு” என்கிறாள்

நேரே ராவணனிடம் போகிறாள்.  “ராவணா, சீதை என்று ஒரு அழகான பெண் இருக்கிறாள். அவள் கணவன் ஒரு அற்ப மானுடன், ராமன் என்று பெயர்” என்று அவனிடம் சொல்கிறாள்.

கர தூஷனாதிகள் வீரர்கள், அவர்களுக்கு வீரம் முக்கியம் ராவணன் வேற லெவல்.

இந்த்ரஜித் என்று ஒரு மாவீரன் அவனை யாரும் வெல்லவே முடியாது. லக்ஷ்மணனே மிகவும் கஷ்டப்பட்டு அவனை கொன்றான். தன் தந்தை செய்த தவறால், தன் தந்தை உயிருடன் இருக்கும்போதே, அவர் கண் முன்னே மரணத்தைத் தழுவினான்.  இதுதான் கொடுமை. தாம் செய்த தவறு குழந்தைகளை பாதிக்கும் என்பதை இந்த்ரஜித் மூலமாக நமக்கு ராமாயணம் உணர்த்துகிறது

கொஞ்சம் சரணாகதி தத்துவத்தைப் பார்ப்போம்.  சரணாகதி பண்ணியவர்களில் மிக முக்கியமானவர்கள், விபீஷணன் அடுத்து சுக்ரீவன். தன்னை யார் வந்து சரணம் என்று சொன்னாலும், கொஞ்சம் கூட யோசிக்காமல் அடைக்கலம் கொடுக்கும் தன்மை உடைய ராமன், விபீஷணன் “சரணாகதி” என்று வந்த பொது, எல்லோரிடமும் ஆலோசனை கேட்கிறான்.  நிறைய மாறுபட்ட கருத்துகள் வந்த போதும். கடைசியில், ராமனின் “அடைக்கல” குணத்தால் விபீஷணனுக்கு அடைக்கலம் தருகிறான்.

விபீஷணனுக்கு சரணாகதி பண்ணியதில் பெருமை இல்லை. காகாசுரனுக்கு பண்ணியதில் தான் ராமன் உயர்ந்து நிற்கிறான்.  காகாசுரன் கதை எல்லோருக்கும் தெரியும்,  சீதையை துயரப்படுத்தியதை ராமன் பார்க்க, ஒரு புல்லை எடுத்து, ஜபித்து, விட, அது அவனை, துரத்து துரத்து என்று துரத்தி, கடைசியில், ராமன் திருவடியிலிலேயே வந்து விழ, தொடுத்த அம்பு, வீணாகி விடக்கூடாது என்பதற்காக, ஒரு கண்ணை பறித்து அவனை உயிரோடு விடுகிறான்

இதை அருணகிரி மிக அழகாக சொல்கிறார்

காதும் ஒரு விழி காக முற அருள் மாயன்

அரி திரு – மருகோனே

இவர் காதையையும் துண்டித்தான் என்கிறார்.

இன்னும் சொல்லப் போனால், காகாசுரன் சீதையை காயப் படுத்தி இருக்கிறான். ராவணனை விட மோசம்.  ராவணன் சீதையை மனதளவில் தான் துன்பப் படுத்தினான்.  இருந்தாலும் ராமன் காகாசுரனிடம் காட்டிய கருணை, நமக்கு எல்லாம் ஒரு பாடம். 

இன்னா செய்தாரை ஒருத்தல்....குறள் நமக்கு நினைவில் வந்தாலும், எத்தனை பேர் அப்படி இருப்போம். ?

 


Tuesday, 25 February 2025

தனி மூவர்

 

இன்று சிவராத்திரி. கொஞ்சம் ஈஸ்வர த்யானமும்,  நிறைய சுப்ரமண்ய சுவாமியும்.

             இருவர் என்றால் நமக்கு சட் என்று மணிரத்னம்     படம் நினைவு வரும். இது ரத்னங்களை மணிகளாக  செய்து “திருப்புகழ்” என்ற பெயரில் கொடுத்த/சொல்லப்பட்ட - மூவர் கதை

      நம் புராணங்கள், கடவுள், முனிவர்கள்   இவர்களைக்       குறிப்பிடும்போது மூன்று மூன்றாகவே குறிப்பிடும் பழக்கம் துர்கா, லக்ஷ்மிசரஸ்வதி,- பிரம்மா, விஷ்ணு சிவன்., சங்கீத மும்மூர்த்திகள்,- சைவக் குரவர்கள்- மாணிக்கவாசகர்அப்பர், சுந்தரர். சிவபெருமானை குறிக்கும்போது கூட, உமையாள்கங்கையாள், இந்தப் பக்கம், ஸ்ரீதேவிபூமிதேவி உடனுறை பெருமாள். ராமரைக் கூட, வைதேஹி கூட, லக்ஷ்மனனும் சேர்த்து....

          திருப்புகழ் ஒரு அமிர்தம். அந்தத் தமிழின் அழகு சொல்லி மாளாது. அர்த்தத்துடன் படிக்க, எப்படியெல்லாம், அருணகிரி முருகனைக் கொண்டாடுகிறார் என்று மெய் சிலிர்க்கும். சத்குரு நாராயண தீர்த்தரின் தரங்கமும் அப்படித்தான்.  சுவாமியை நேரில் பார்த்தோ, மனதில் வைத்து, எழுதும்போது, இப்படித்தான் வருமோ ?

     அருணகிரிநாதரின் தமிழ் சற்று சிரமம்.     சம்ஸ்க்ருத்தில் நாரயணீயம் போன்று. ஆனால் அதில் மூழ்கினால், பரமானந்தம் தான்......

            ஒரு உதாரணம் பார்ப்போம்

.......  .  பொருது கையிலுள அயில் நிணம் உண்க

         குருதி புனலேழு கடலினும் மிஞ்ச     புரவி கனமயில் நடவிடும் விந்தை குமரேசா..........

          என்று ஒரு பாட்டின் வரிகள். இதில் இரண்டாவது வரி புரியும், மூன்றாவது வரி, சற்று, புரிந்தமாதிரி  இருக்கும், முதல் உஹூம்.... இதன் அர்த்தத்தை கடைசியில் பார்ப்போம்

            சரி. மூவர் பற்றி பார்ப்போம். முருகப் பெருமான் மூன்று பேருக்கு பிரணவ உபதேசம் செய்தார் என்ற ஒரு பெரிய உண்மையை நமக்குச் சொல்கிறார். பக்தி இலக்கியங்கள் படித்தவருக்கு, திருவிளையாடல் படம் பார்த்தவருக்கு, ஒருவர் நிச்சயம் தெரியும், முருகன் சிவ பெருமானுக்கு   உபதேசித்தார் என்று. 

             இதிலும் இரண்டு விஷயங்கள், வேறு வேறு இடத்தில்  சொல்கிறார்.

            ஒன்று, சிவபெருமானின் இரு காதில் ஓதுகிறார் என்று ஒரு திருப்புகழிலும், தன்னுடைய வாகனமாகிய எருதின் மேல் உட்கார்ந்து, முருகனை சுற்றி வந்து பிரணவ மந்திரத்தை கேட்கிறார் (சேவேறும் ஈசர் சுற்ற மாஞான போத முத்தி) என்றும்

            இண்டாவது, பிரணவ மந்திரத்தை வாங்கிக் கொள்பவர், பிரம்மா தான். அவர் பிரணவத்தின் பொருள் நான்தான் என்று இறுமாப்பாக சொல்ல, வீரபாகுவைக் கூப்பிட்டு, ஜெயிலில் போட்டுவிட, சிவபெருமான் வந்து, சொல்லி வெளியில் விட்டு, அவருக்கும் உபதேசம் செய்கிறார்.

        மூன்றாவது யார் ?

          குறு முனி அகத்தியர் தான். எந்த முனிவருக்கும் கிடைக்காத பாக்கியம் அவருக்குக் கிடைத்து இருக்கிறது. ஆச்சர்யமான முனிவர், மீனாக்ஷி கல்யாணத்திலும் இருப்பார், ராமாயணத்தில், ஆதித்ய ஹ்ருதயமும் சொல்லிக் கொடுப்பார். “அந்த பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்” என்று சீர்காழி கோவிந்தராஜன் உருவத்தில், ராவணனோடு மல்லு கட்டுவார்.  ஔவையாருடன் கலந்து உரையாடுவார்

         அருணகிரி, அகத்தியரை, எப்படி அறிமுகப்படுத்துகிறார் என்பது அழகின் உச்சம்.

          புடவி அணி துகில்....” என்ற சாருகேசி ராகத்தில் அமைந் திருப்புகழ்

            அவர் சொல்கிறார். “இந்த உலகத்தை (நிலப் பரப்பை) ஒரு மங்கையாக நினைத்துக் கொண்டு, அதற்க்கு நீலக் கலரில் ஒரு சேலையைக் கட்டு. அதுதான் கடல். அந்தக் “எட்டு   கடலையும்” ஸ்வாஹா... என்று ஓரே மூச்சில் குடித்த அகத்தியர்” என்கிறார்

       

           "புடவிக் கணி துகில் ஏன வளர் அந்த

           கடல் எட்டையும் அற குடி முனி”

             அடுத்தது, பிரம்மா

         எட்டு கண்களுடன்,ஆயிரம் தாமரை இதழ்களில் உட்கார்ந்து, சுயம்புவாக  பிரம்மா

         “என்கண் புனித சததள நிலைகொள் சுயம்பு சதுர்வேதன்”

          மூன்றாவதாக சிவனைக் கொண்டாடுகிறார்.

         “கண்களில் கனல் கொப்பளிக்க, புரம் எட்டையும் எரித்து, ரொம்ப   கஷ்டப்பட்டு, ஒரு அழகான சிரிப்பை உதிர்த்தாராம்”

          புரமெட்டறி எழ விழி கனல் சிந்தி, கடினத்தொடு சில சிறு நகை கொண்டு அற்புத கர்த்தரஹர பர சிவன் இந்த தனி மூவர்”........

          என்று சொல்கிறார். சொல்லிவிட்டு, இந்த மூவருக்கும் ப்ரணவ     உபதேசம்  செய்தார் என்று பாடல் போகிறது

             ஏன்  சிரித்தார் என்று காஞ்சி மகாஸ்வாமி ஒரு கட்டுரையில் எழுதி இருக்கிறார். அதை வேறு ஒரு தருணத்தில் பார்ப்போம்

         முடிந்தால் kaumaaram.com சென்று இந்தப் பாட்டைசாருகேசி ராகத்தில் குருஜி ராகவன் சார் பாடிய ஆடியோ கேளுங்கள் அழகு சொட்டும்

         முதலில் ஒரு பாடல் எழுதினேனே- அதற்கு       பதில்

....   .     பொருது கையிலுள ஆயில் நிணம் உண்க    “தன்னுடைய வேலினால், (ஆயுதத்தால்)  பகைவர்களில் கொழுப்பை சாப்பிட்டு” – (நிணம் = கொழுப்பு)     

             இரண்டு- தெரியும்     

            மூன்றாவது- தன்னுடைய மயிலை, குதிரையைப்     போல் வேகமாக ஓட்டுகிறார்.     இரண்டு கால் மயிலை, எப்படி குதிரை போல் வேகமாக ஓட்ட முடியும் ? அதனால் தான் “விந்தை குமரேசா” என்கிறார்.     பிரணவ உபதேசம் பண்ணிய சுவாமிக்கு, இதெல்லாம் எம்த்திரம்

            இந்த சிவராத்திரி எல்லோருக்கும் மங்களத்தைக் கொடுக்கட்டும்....