Saturday 22 June 2024

மஹா பெரியவாளும், சென்ற மைலாப்பூர் அனுஷமும் (20.6.24)

 

மு.கு. இதை படித்துவிட்டு நான் ஏதோ அனவரதமும் பெரியவாள நினைச்சுண்டு உருகி உருகி பூஜை பண்ணுகிறேனோ என்று கற்பனை பண்ண வேண்டாம்.  அடுத்த ஜன்மத்தில் சின்ன வயசில் இருந்தே பக்தி பண்ண வேண்டும்  என்று ஆசைப்பட்டு, இந்த ஜன்மத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் சாதாரண பிரஜை நான். அப்போதும், முப்போதும் பண்ணும் காயத்ரி ஜெபத்தில் அப்போ அப்போ அவரை நினைத்து வாழ்பவன்.

நான் எல்லாம் சௌந்தர்ய லஹரியில் பகவத்பாதர் சொன்னால் போல் “தவீயாம்சம் தீனம் ஸ்னபய க்ருபயா மாம்பி ஷிவே” வகை தான்

இப்போது விஷயத்திற்கு வருவோம்:

வரஹூர் பெருமாள் அனுக்ரஹத்தாலும், பெற்றோர்களின் ஆசிகளினாலும், ஏன் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து, நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடை பெற்று வருகிறது.

நி.தா க்கு பத்திரிகை அடிக்கலாமா வேண்டாமா என்று குழம்பி, ஒரு சபையைக் கூட்டி,  இந்த வாட்ஸ் ஆப் மக்களுக்கு, தெரிவிப்பதற்காக, ஒரு கார்டு பாதிரி அடிக்கலாம் என்று “முக்கா” மனதாக முடிவு செய்து, மைலாப்பூர் ஒரு DTP கடையில் உட்கார்ந்து ஒரு மாதிரி கார்டு தயார் பண்ணினேன். இரண்டு நாட்கள் உட்கார்ந்து, நேற்று (19) இரவு  ஒரு 7.30 மணிக்கு முடித்தேன்.

10 கார்டுகள் பிரிண்ட் போட்டு வீட்டுக்கு, மெட்ரோ போடுவதனால், லஸ் பூரா அடைக்கப்பட்டதாலும், மத்தள நாராயண தெரு வழியாக வரும்போது, “மயிலாப்பூர் மஹா பெரியவா” என்று நான் மிகவும் மரியாதை வைத்திருக்கும் ஸ்ரீ. கணேஷ் ஷர்மா அவர்கள், மாதா மாதா செய்யும் அனுஷ தினம், மஹா பெரியவா புறப்பாடு, திரும்பி, தேரடி தெரு பக்கம் சென்று கொண்டிருந்தது. அதாவது எனக்கு பெரியவா முதுகு (பின் பக்கம்) காட்டிக்கொண்டு.

அப்போதுதான் எனக்கு அனுஷ நினைவு வந்து, உடனே, போவதா வேண்டாமா என்று யோசித்து, கொஞ்சம் பூ வாங்கி கொடுத்து சுவாமியை பார்த்துவிட்டு உடனே போகலாம் என்று நினைத்தேன். அதற்க்கு இரண்டு காரணம்

-    முழுவதுமாக இருந்தால் 9.30 ஆகி விடும். பசி

-    இந்தியா T 20 மேட்ச் வேறு

அப்படியே வலது பக்கமாக திரும்பி, அம்பிகா அப்பளம் எதிரில் உள்ள பூக்கடையில், கொஞ்சம் கட்டின பூவும், ஒரு தாமரையும் எடுத்துக்கொண்டு வேறு வழியில் சென்று பா.வி.ப. வாசலில் வண்டியை நிறுத்தி பார்த்தால், சரியாக பெரியவா ஊர்வலம் நின்று கொண்டு இருந்தது.

அப்போது தான் எனக்குத் தோன்றியது, நிச்சயதார்த்தப் பத்திரிகை பிரிண்ட் பண்ணி இருக்கிறோமே என்று, அதில் ஒன்றை எடுத்து, பூ, தாமரை இவைகளுடன், ஸ்ரீ. கணேஷ் ஷர்மா அவர்களிடம் கொடுக்கலாம் என.  கொடுத்தேன். அங்கு ஏன் இனிய நண்பரும், மஹாதானபுரம் மாமாவின், ஆப்தாளும் ஆன ஸ்ரீ. ராமநாதன், பெரியவா பாதுகையை தன சிரசில் மேல் வைத்துக்கொண்டு முன்னாள் நிற்க, அதன் மேல் ஏன் பத்திரிக்கையை வைத்து, பிறகு, சுவாமியின் சித்ர படத்தின் அருகில் பூக்களின் நடுவே வைத்தார்.  நான் ஒரு நிமிடம் சிலிர்த்துப் போனேன்.  பிறகு கொஞ்சம் புஷ்பத்தை பெரியவா காலடியில் இருந்து எடுத்து எனக்குக் கொடுத்தார்.  பத்திரிகை தரவில்லை

நான் பணி புரியும் பள்ளியில் வில்வ மரம் ஒன்று உண்டு. நான் சில தளங்களைப் பறித்து, உள்ளே உள்ள கோவிலில் வைத்து உள்ளே செல்வேன். 19 இரவு, நான் கிளம்பும்போது, திடீரென்று, ஒரு கிளையை ஒடித்து, அருகில் இருக்கும் மாமா வீட்டிருக்குச் சென்று கொடுத்து விட்டுப் போனேன்.  சத்தியமாக அடுத்த நாள் அனுஷம் என்பது, ஸ்ரத்தையாக் அனுஷ பூஜை செய்யும் என் மாமா அந்த வில்வத்தில் அர்ச்சனை செய்வார் என்பதும் எனக்குத் தெரியாது.  எனக்குத் தெரிந்து நான் வில்வ தளம் பறித்து அவருக்கு முன்பு கொடுத்ததாக நினைவு இல்லை – இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக மேலே நான் கூறிய விஷயம்.

நான் கிளம்பி விட்டேன். வேறு சில வேலைகளை முடித்துவிட்டு, திரும்பி வீடு செல்லுபோது, திடீரென்று எனக்கு ஒரு சந்தேஹம், “ஒரு வேளை, ஸ்ரீ.க.ஷ பூஜை முடிந்தவுடன் அந்தப் பத்திரிக்கையை எடுத்துக் கொடுப்பதற்காக என்னைத் தேடினால் என்ன செய்வது. ? அது ஒரு அபசகுனமாக படுமோ” என்று யோசித்து, கடைசியில் சரி, அனுஷ பூஜை முடிந்தே சென்று விடுவோம். என்று திரும்பி, பெரியவாளிடமே வந்தேன்.

அப்போது ஊர்வலம் முடிந்து, ஒரு சிறிய வீட்டில், (மண்டபம் தனியாக கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்), உள்ளே போவதற்கு முன்பு, அலங்கார வண்டியில் இருந்து எடுத்து, வாரையில் கட்டி  ‘English Note” க்கு, ஸ்ரீ பாதம் தாங்கிகள் டான்ஸ் ஆடிக்கொண்டு இருந்தனர். பிறகு, நாதஸ்வரம், கற்பகமே கண் பாராய்” பாட. சுவாமி உள்ளே போய் விட்டார்.

நல்ல கும்பல். உள்ளே செல்ல இடம் இல்லாததால், வெளியிலேயே, கடைசியாக, சுவாமியை பார்க்கும் ஒரு கோணத்தில் நின்று கொண்டு இருந்தேன்.

அப்போதுதான் அது நடந்தது. உள்ளே சென்ற மறு நொடி, ஒரு மழை ஒன்று வந்தது. சட சட என்று பெரிதாகி, ஒரு 15 நிமிடத்தில், எங்கள் செம்மங்குடியில் வீட்டில் பின்னே ஒரு சிறு வாய்க்கால் உண்டு.  அது போல் தண்ணீர். எனக்கும் மழைக்கும் ஒரு மூன்று அடி.  கொட்டித் தீர்த்துவிட்டது. நான் சன்னமாக, பிலகரி ராகத்தில், ஸ்ரீ. பாலசுப்ரமணிய என்ற தீக்ஷதர் கிருதியை பாடிக்கொண்டு நின்றுகொண்டு இருந்தேன்.. உள்ளே ஷோடசோபசாரங்கள் முடிந்து,  ‘விதிதாகில சாஸ்த்ர” முடிந்து, தீபாராதனை காட்டி,  நவநீத சோராய....நாராயணாநந்த தீர்த்த குருவே” பாடி முடிந்து, பிரசாதம் கொடுத்து, எல்லோரும் வெளியே வந்த போது, சுத்தமாக மழை நின்றிருந்தது. ......

நான் பிரசாதம் வாங்கிகொண்டு, பத்திரிக்கை வாங்கிக்கொள்ளலாமா வேண்டாமா, யார் கொண்டுப்பார், என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருதேன். பிறகு, பெரியவா படம் அருகில் நின்று கொண்டு இருந்த ஒருவரிடம், அந்த பத்திரிக்கையை எடுத்து தருமாறு கேட்க, அவர் தேடி, தேடிக் கிடைக்கவே இல்லை.

நாளை வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று சொல்ல, வெளியே வந்து லேசாக தூறல் போட, வண்டியை எடுத்து வீடு வந்து சேர்ந்தேன்.

 

இது என்ன கருணை ? ஏன் எப்படி நடந்தது. என்ன நடக்கிறது என்று தெரியாத ஒரு நிலை.

 

பாலக்ருஷ்ண ஜோசியர் மஹா பெரியவாளைப் பற்றி சொன்னதாக  திருவீழி அவர்கள் சொன்னதை நான் நினைவு கூறுகிறேன்

“It requires tremendous misfortune to escape the impartial gaze of His Holiness”

இதான் எனக்கு நினைவு வந்தது

 

திரும்பி வீட்டுக்கு வரும்போது, சங்கீதாவை தாண்டி லெப்ட் எடுக்கும்போது, திரும்பிப் பார்த்தேன். கபாலி கோவில், சீரியல் லைட், மின்ன, கீழே குளத்தில் அதன் பிம்பம் தெரிய, அந்த லைட் கண் சிமிட்டி, - வடிவேல் சொன்னது போல் = இதெல்லாம் ஒண்ணுமே இல்லை, இன்னொரு ஸ்பெஷல் ஐடெம் இருக்கு” என்பது போல்...

 

பி.கு.  வரஹூரில், கோணங்கி வேஷம் போட்டு, வருபவரிடம், சம்ஸ்க்ருத பாஷை யை திராவிட பாஷையில் சொல்லச் சொல்லுவார். அதே போல் ஆரம்பத்தில். நான் சொன்ன சௌந்தர்ய லஹரி வார்த்தைக்கு அர்த்தம்.  (என்னுடைய தம்பி மனைவி அபர்ணா கேட்டதனால்)

“நான் தீனன், உன்னுடைய கடாக்ஷம் என்ற ஒரு எல்லைக்குள்ளேயே நான் இல்லை. இருந்தாலும், உன்னுடைய கடாக்ஷம் என்கிற அமுதத்தை ஏன் மேல், தெளி, ப்ரோக்ஷனம் பண்ணு” என்கிறார்... யார் சொல்கிறார். ஆதி சங்கரர்.  (இதுவும் மஹா பெரியவா, கடாக்ஷ வீக்ஷண்யம் என்று 1962-63 களில், சொன்ன உபன்யாசத்தின் ஒரு பகுதி)

பஞ்ச கச்சம் கட்டிக்கொண்டு, ஸ்ரத்தையாக கண்ணீர் மல்க தரிசனம் செய்பவர்களும், ஆனந்தமாக நடனம் ஆடும் ஸ்ரீ பாதம் தாங்கிகளும், எந்த ஒரு லஜ்ஜையும் இல்லாமல் அங்க பிரதட்சிணம் செய்யும் பக்தர்களும் வேத பிராம்மணர்களும், அஷ்டபதி அபங் பாடும் பாகவதர்களுக்கும் இருக்க, சாதாரண ஒரு தீனன் எனக்கு அருள் புரிகிறார் பாருங்கள்

அதான் பெரியவா..........

பி.கு 2

நான் ஏன் ஸ்ரீ. பாலசுப்ரமணிய பாட்டு பாடினேன் என்று இரவு நினைத்துப் பார்க்க அந்த பாடலில், “ஆபால கோப, விதித தீன சரண்ய” என்று முத்து தீக்ஷிதர் சுவாமி மலை சுப்பிரமணிய சுவாமியை நினைத்து அந்தப் பாட்டு பாடியிருக்கிறார்

இப்போது உங்களுக்கும் தெரிந்து இருக்கும்......

 

No comments: