Sanjay Subramanyan, for me, is a wonder. I relate him Partly with Great MMI and Semmangudi Mama and this is because he does not have the voice of a "typical" musician.
He managed to get this "gift" through his "asura" sAdagam, may be. He has some "Principles" in his life. He does not give up for any reasons. There is an interview with him that I reproduce below:
This might be an old interview. I am happy to reproduce here because of his simplicity in his replies and does not hide anything from his heart.
நேர்காணல்: சஞ்சய் சுப்பிரமணியன்
"ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்கு
நான் முக்கியத்துவம் தருவது கிடையாது"
சமகால இசைக் கலைஞர்களில் குறிப்பிடத் தகுந்த ஆளுமைகளில் ஒருவரான சஞ்சய் சுப்பிரமணியனைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் - சென்னை இசை விழாவிற்கு முன்பு - எடுத்த நேர்காணல் இது. தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டு வரும் அரிய கலைஞர்களில் ஒருவரான சஞ்சய், தனது அனுபவங்கள், குருநாதர்கள், இசை குறித்த தனது பார்வை எனப் பல விஷயங்கள் பற்றிச் சுதந்திர உணர்வுடனும் கருத்துச் செறிவுடனும் பேசினார். அவரது இசைப் பிரவாகம் போலவே நிகழ்ந்த அந்த வெளிப்பாட்டிலிருந்து சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன.
சந்திப்பு: ப்ரசன்னா ராமஸ்வாமி, யுவன் சந்திரசேகர், வி. ரமணி, வி.கே. ஸ்ரீராம்
புகைப்படங்கள்: புதுவை இளவேனில்.
ஒலிநாடாவிலிருந்து நேர்காணலைக் கேட்டு எழுதியவர் பி.ஆர். மகாதேவன்.
தொகுப்பு: ப்ரசன்னா ராமஸ்வாமி
நீங்கள் சங்கீதத்தை வந்து அடைந்தது எப்படி?
கிரிக்கெட் விளையாடினேன். தலைல அடிபட்டதும் விட்டுட்டேன். வயலின் ஏழு வருஷம் படிச்சேன். கைல அடிபட்டதும் விட்டுட்டேன். செஸ் கிளப்ல மெம்பரா சேர்ந்தேன். பாதில விட்டுட்டேன். டிரெக்கிங் எக்ஸ்பெடிஷன்ல சேர்ந்து இமாலயாஸுக்குப் புறப்பட்டேன். இப்படி என்னோட வாழ்க்கைல பல விஷயங்கள் செஞ்சு செஞ்சு நின்னு போயிருக்கு. ஆனா இது எல்லாம் நடந்து வந்த அதே காலகட்டத்துலதான் சங்கீதமும் கத்துண்டேன். ஆனா அதை மட்டும் நான் விடவே இல்லை. அப்போ நினைச்சேன், சங்கீதம்தான் நம்மளோடது. நம்மளோட பெர்சனாலிட்டிக்கு அதுதான் ஒத்துவரும் என்று முடிவு செய்துகொண்டேன். இப்போவும் திசைதிருப்பக் கூடிய வேற பல விஷயங்கள் நடந்துகொண்டு இருக்கு. ஆனா, இப்பவும் சங்கீதத்தை நான் விடலை. தினமும் எத்தனையோ யோசனைகள் தோன்றிக்கொண்டே இருக்கு. இதைப் பண்ணணும் அதைப் பண்ணணும் என்று... ஒருவித ரெஸ்ட்லெஸ்னெஸ் இருந்துகொண்டே இருக்கு. ஒருவகையில் அதுதான் என் உந்துசக்தியாக இருக்கிறது என்று நினைக்கிறேன். என்றைக்கு அந்தப் பதட்டம் இல்லாமல் போகிறதோ அன்று நான் மூச்சுவிடுவதை நிறுத்திவிடுவேன் என்று தோன்றுகிறது.
கச்சேரியில் பாடும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?
என்னையே சர்ப்ரைஸ் பண்ணிக்கணும்னு நினைத்து முயன்றுவருகிறேன். முழுவதும் சங்கீதத்திலேயே ஊறியிருக்கும் எனக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஒன்று நிச்சயமாக ஆடியன்ஸையும் ஆச்சரியத்திற்குளாக்கத்தான் செய்யுமில்லையா. எப்போது அவர்களுக்கு போரடிக்கிறதோ அப்போது என் கச்சேரிக்கு வருவதை நிறுத்திவிடுவார்கள். நானும் பாடுவதை நிறுத்திவிடுவேன்.
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் பாடகருக்கும் ஆடியன்ஸுக்கும் இடையில் ஒருவித உணர்வுபூர்வமான பிணைப்பு ஏற்படுகிறது. அதுதான் ஒருவரது கச்சேரியை உட்கார்ந்து முழுமையாகக் கேட்கவைக்கிறது. சிலரது கச்சேரிகளில் பாதியில் எழுந்து போகச் செய்கிறது. ஒவ்வொரு பாடகருடைய திறமை, பாணி, பாடும் பாடல்கள் என வேறு விஷயங்களும் இருக்கின்றன என்றாலும் பாடகருடன் ஏற்படும் உணர்வுபூர்வமான பிணைப்பு என்பது மிகவும் முக்கியமான காரணமாக இருக்கிறது.
எனக்கு இசைல ஒருவித அன்ப்ரடிக்டபிலிட்டி இருக்கணும்னு ரொம்ப விரும்புவேன். ஒருவித சர்ப்ரைஸ் எலமென்ட் ஒவ்வொரு கச்சேரியிலயும் இருக்கணும்னு ரொம்ப முயற்சிப்பேன். ஏதாவது ஒண்ணு வந்து விழுந்தாக்கூடப் போதும்... அப்படி எதுவும் நடக்கலைன்னா எதையோ இழந்த மாதிரி எனக்குத் தோணும். இதுக்கு முன்னால எப்பவுமே பாடியிருக்காத விதத்துல ஒரு கீர்த்தனத்துலயோ ராகத்துலயோ ஏதாவது ஒண்ணு பண்ணணும்னு ரொம்ப ஃபோகஸ்டா முயற்சி செய்வேன்.
என்னோட இலக்கு ரசிகர்களைத் திருப்திப்படுத்துவது அல்ல. நல்ல இசையை உருவாக்க விரும்புகிறேன். நல்ல பாடல்களைப் பாட விரும்புகிறேன். ரசிகர்களைத் திருப்திப்படுத்துவது என்பதற்கு நான் முக்கியத்துவம் தருவது கிடையாது. சில பாடகர்களுக்கு எதுவுமே முக்கியமாக இருப்பதில்லை. முறையான இசை என்பதுகூட அவர்களுக்கு முக்கியமாக இருப்பதில்லை. அதை யார் என்ன செய்ய முடியும்? சாதாரணமாகப் பேசும் போதுகூட நீங்கள் பார்த்திருப்பீர்களே... சிலர் அசட்டுத்தனமாக ஏதாவது பேசுவார்கள். அது அவர்களது இயல்பு.
ஒரு சரணத்தை ரொம்பப் பிரமாதமா நாலு தடவை பாடிக் கைதட்டல் வாங்கி இருப்பேன். மறுபடியும் அதையே ரொம்ப அலட்சியமா இப்ப க்ளிக் ஆகிடும் பாருன்னு மறுபடியும் பாட முயற்சி செஞ்சிருக்கேன். மூஞ்சில அடிச்சா மாதிரி அந்தத் தடவை அது புஸ்ஸுன்னு போயிடும். தலைல அடிச்சுப்பேன். அதான் நாலஞ்சு தடவை கைதட்டல் வாங்கியாச்சே. மறுபடியும் ஏன் அது பின்னாலயே போகணும்னு அப்பறம் நினைச்சுப்பேன். வேற விஷயங்கள் பண்ணறபோது மறுபடியும் க்ளிக் ஆகிக் கைதட்டல் கிடைக்கும். அது வேற... ஆனா ஒரு நாள் அடி வாங்கறோம் இல்லையா... அது நம்மை செழுமைப்படுத்திக்க ரொம்ப உதவியா இருக்கும்...
இன்னிக்கு இன்ன இன்ன சங்கதிகளை இப்படி இப்படிப் பாடப் போறேன்னு ரொம்பத் தெளிவா தீர்மானமாயிடும். இன்னிக்கு சாரீரம் இப்படி இருக்கு. இந்த சங்கதியைப் பாடலாம். இந்த சபைலே மைக் இந்த கண்டிஷன்ல இருக்கும். இதுல இந்த சங்கதிகள் சரியா வராது... இன்னிக்கு இந்தப் பக்க வாத்தியங்கள் இருக்கு. இந்த சங்கதிகள் வேண்டாம் அப்படின்னு எல்லாம் தெளிவா தலைக்குள்ள தீர்மானமாகி இருக்கும். அந்தப் பாதைல அன்னிக்கு என்னோட ட்ராவல் அமையும். ஒரு ராகத்துக்குள்ள இறங்கிக்கொண்டே போகும்போது அந்தப் பயணம் இருக்கிறதே... ரொம்ப எக்ஸைட்டிங்கா இருக்கும். மைக்கோட கண்டிஷன், வயலின் சுருதி சேரலை, மணி ஆகிக்கொண்டிருக்கிறது... இது மாதிரியான விஷயங்கள் மனசுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும் போதும் ராகம் நம்மை இழுத்துக்கொண்டு போகும். சில நேரங்கள்ல இது ஒப்பேறாதுனு தெரிஞ்சுடும். சட்டுனு ராகத்தை முடிச்சுடுவேன்.
ஓவியம் வரையற மாதிரிதான். மொதல்ல சில கோடுகள் வரையறதுவரை நம்ம திட்டப்படி போகும். அப்பறம் அது தானா நகரும். பாடும்போது சில ஏரியாக்களுக்குத் தன்னால போயிடறது உண்டு.
சில நேரங்கள்ல சில ஃப்ரேஸ் நமக்குப் பிடிச்சுப் போயிடும். ரொம்ப நன்னா அமைஞ்சுடும். அதையே சுத்திச் சுத்தி வருவோம். அதுவே ஒரு சிலந்திவலை மாதிரி ஆகி நாம அதுக்குள்ள மாட்டிக்கொண்டு விடுவதும் நடக்கும்.
பொதுவா நான் ராகம் பாடும்போது, ஆரம்பத்துல ஸ்டாண்டர்டா ஒரு விஷயம் இருக்கும்லயா, அந்த மாதிரிதான் ஆரம்பிப்பேன். சிலநாள் இன்னிக்கு அது வேண்டாம் வேற மாதிரி பன்ணிப் பார்ப்போமேன்னும் நினைச்சுப்பேன். ஆனா பொதுவா ஒரு குறிப்பிட்ட பாணிலதான் ஆரம்பிப்பேன். சில நாள் குயுக்தியா ஒரு ப்ரேஸ் மனசுக்குள்ள தோணும். அதை வெளிப்படையா காட்டாம கொண்டு போவேன். பாடும்போது அதோட பாதியைத்தான் கோடி காட்டுவேன். மீதியை வெளிலதான் முடிச்சுக்கணும். என் மனசுல அது முழுசா இருக்கும். ஆனா நான் பாதியைத்தான் வெளில காட்டுவேன். இலக்கியத்துல சொல்லாம சொல்லி உணர்த்தறது என்பார்களே அது மாதிரி... இன்னதுதான், இப்படித்தான்னு கிடையாது. எதுவா வேணுமானாலும் இருக்கலாம். தீர்மானமா எதையும் சொல்ல முடியாது. வயலின்காரர் ஏதாவது ஒண்ணு வாசிச்சிருக்கலாம். அதைப் பிடிச்சுண்டு கடகடன்னு போக ஆரம்பிச்சுடுவேன்.
ஒரு கச்சேரியை எப்படித் தொடங்குகிறீர்கள்?
கச்சேரில பொதுவா ரெண்டாவது மூணாவதா ராகத்தை வெச்சுப்பேன்.
மொதல்ல நம்மள வார்ம்-அப் பண்ணிக்கணும்லயா... அதுவும் போக கேட்கிறவர்களுக்கும் எடுத்த எடுப்புலயே ராகத்துக்குள்ள நொழையறது சிரமமா இருக்கும்...
வர்ணம் பாடி ஆரம்பிச்சாத்தான் கச்சேரி நன்னா இருக்கும்னு நெறையப் பேர் விரும்பறதுண்டு... சில பேர் விருத்தம் பாடியும் ஆரம்பிக்கறதுண்டு.
என்னோட குரல் ஒவ்வொரு கச்சேரிக்கு முன்னாலயும் எப்படி இருக்கும்னு என்னால யூகிக்கவே முடிஞ்சதில்லை. அது ரொம்பவும் மாறிண்டே இருக்கு. அதனால, அன்னிக்குப் பாடறதுக்கு முன்னால சாரீரம் என்ன மாதிரி இருக்கோ அதுக்குத் தகுந்த மாதிரி எல்லாத்தையும் ப்ளான் பண்ணிப்பேன். ஒருவேளை என்னோட குரலை ஸ்டெடியா வெச்சுக்கறது எப்படிங்கறதுல நான் போதுமான அக்கறை எடுத்துக்கலையோன்னுகூடச் சில நேரங்கள்ல தோணும். ஆனா இன்னொரு விதத்துல பார்த்தா அது ரொம்ப சவாலாகவும் உற்சாகத்தைத் தர்றதாகவும் இருக்கு. ஒருவேளை சாரீரம் ஃபிக்ஸ் ஆகி இதுதான் அப்படின்னு ஆகிட்டா அப்பறம் நான் வித்தியாசமா பண்ணணும்னா வேற விஷயங்களைத்தான் யோசிச்சாக வேண்டி இருக்கும். நேத்திக்கிப் பண்ணின கச்சேரி இருக்கே, சமீப காலத்துல நான் பாடினதுலயே ரொம்ப ஸ்மூத்தா நன்னா அமைஞ்சிருந்தது. கொஞ்ச காலமாவே ஒரு விதமான மாற்றம் என் குரல்ல தென்பட ஆரம்பிச்சிருக்கு. ரெண்டு வருஷத்துக்கு முன்னால பாடினப்போ இருந்த மாதிரி இப்போ இல்லை. அது நன்னா தெரியறது. போன வருஷம் என்னோட பிளட் பிரஷர் அதிகமா இருந்தது. நான் சில மருந்துகள் தொடர்ச்சியாகச் சாப்பிட்டு வந்தேன். அது என் குரலில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது. இப்போ அந்த மருந்துகளைச் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். ஆனால், பழைய சாரீரம் வர கொஞ்சம் காலம் எடுக்கும் என்று தோன்றுகிறது.
நீங்கள் ராகம், தானம், பல்லவி பாடும் முறை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அதற்குக் காரணம்?
என்னோட குரல் அன்றைய தேதியில் ஆகச் சிறந்த நிலையில் இருக்கும்போதுதான் நான் பல்லவி பாட ஆரம்பிப்பேன். பொதுவா கச்சேரில ஒரு மணி நேரம் ஒண்ணரை மணிநேரம் பாடினதுக்கு அப்பறம்தான் பல்லவிக்கு வருவேன். அப்போ என்னோட குரல் ரொம்ப அருமையாக வார்ம்-அப் ஆகி இருக்கும். கிரிக்கெட்ல சொல்லுவார்களே மிடிலிங் த பால் பெர்ஃபெக்ட்லி ...ன்னு, அந்த மாதிரி ஒரு ஸ்டேஜ்ல இருக்கும்போதுதான் பல்லவிக்குள்ள நுழைவேன். அது மட்டுமில்லாம பாட ஆரம்பிச்சு ஒண்ணரை மணி நேரம் ஆகி இருக்கும்ங்கறதுனால மனசு அப்போ ரொம்ப ரிலாக்ஸ்டாக ஆக இருக்கும். கச்சேரி ஆரம்பிக்கும்போது இருந்த எந்தப் பதட்டமும் இல்லாமல் சில விஷயங்களைச் சாதித்துவிட்ட மன நிறைவோடு ரொம்பவும் அமைதியா இருக்கும். பல்லவியைப் பாடறதுக்கு என்ன மாதிரியா குரல் இருக்கணும்னு நினைப்போமோ அந்த மாதிரியே க்ரியேட்டிவா, சிறப்பா செய்யறதுக்கு ஏற்ற மாதிரியா, கனிஞ்சு இருக்கும். எந்த வித எல்லைகளும் தடைகளும் இல்லாமல் சுதந்திரமா கிரியேட்டிவ் எனர்ஜியோட அதைப் பாட முடியும். சில கச்சேரிகள்ல பல்லவி பாடலைன்னா எனக்கே ஏதோ பெரிசா இழந்த மாதிரித் தோணும். தானம் பாடும்போது கொஞ்சம் அதிகமாவே அதுக்கு நேரம் எடுத்துப்பேன். ஏதோ ஒப்புக்கு ஐந்து நிமிஷத்துல தானத்தை முடிச்சுட்டுப் பல்லவிக்குப் போகாம ரொம்பவும் பிரக்ஞைபூர்வமா தானத்தை விலாவாரியாப் பாடுவேன்.
மூன்றாவதாக, நான் தேர்ந்தெடுக்கும் பல்லவி வரியை நான் உபயோகிக்கும் விதம் இருக்கிறதே... அதற்கும் முக்கியத்துவம் தருவேன். நிலதா... ம...று ...லூ கொண்டி... நீ...னு மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் ஒரு நாள் பாடினேன். சாகித்தியமா அந்த வரிகளுக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. ஒரு பெண் நின்றுகொண்டிருக்கிறாள் என்று ஏதோ அர்த்தம் அவ்வளவுதான். அந்தக் கச்சேரி முடிஞ்சு வெளியேவந்தபோது தஞ்சாவூர் சங்கரய்யர் சொன்னார், 'ரொம்ப நன்னா இருந்ததுப்பா... இதெல்லாம் 50 வருஷமா எல்லாரும் கேட்ட ஒரு சாகித்யம். அது காதுல ஒலிச்சுண்டே இருந்துருக்கும். ஈசியா அதோட அவாளால ஒன்றிக்க முடியும். அப்படியான சாகித்தியங்களைத்தான்
பல்லவிக்குப் பாடணும். புதுசா யாருமே கேக்காத வார்த்தைகளை எடுத்துண்டு பாடக் கூடாது. மனசிலயே நிக்காது' என்றார். நான் அது மாதிரிதான் ரொம்பவும் பரிச்சயமான வார்த்தைகளை மட்டுமே பல்லவிக்கு எடுத்துக்கொள்ளுவேன்.
பாடும்போது உங்களுக்குள் என்ன நடக்கிறது?
ஒருவித எக்ஸைட்மெண்ட்தான் அது. நாம நினைக்கற மாதிரி வந்துண்டு இருந்ததுன்னா, ஒரு புது விஷயம் நன்றாக நடந்ததுன்னா, பாடும்போது ஒருவித பரவச நிலைல இருப்பேன். அன்னிக்கு என்ன பாடினலும் திருப்தியா அமைஞ்சுடும். சில நாள்ல மேடைல ஏறும்போதே எரிச்சல் ஏற்பட்டுடும். தொண்டை சரி இல்லை. பக்கவாத்தியம் சரி இல்லை. ஆடியன்ஸ் எங்கயோ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். எப்போதுடா முடித்துவிட்டு எழுந்திருக்கப் போகிறோம் என்று தோன்றிவிடும். அன்றைக்குச் சிறப்பாகப் பாடுவதுதான் பெரிய சவால். எல்லாத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அடிச்சுப் பாடி முடிக்கறதுங்கறது பெரிய சவாலா இருக்கும். அப்படி நடந்துட்டா பெரிய வெற்றிதான். சில நேரங்கள்ல மொதல் பாட்டுலயே அவுட் ஆகிடும். அப்பறம் என்ன பாடினாலும் எனக்கென்னன்னு ஆடியன்ஸ் உட்கார்ந்துகொண்டிருப்பார்கள். நாமும் என்னமோ ஆகட்டும் என்று பாடி முடிப்போம். சில நேரங்கள்ல நேர்மாறா நடக்கும். நாம என்ன பாடினாலும் ஹிட் ஆகிடும். ஆடியன்ஸுக்கும் நம்ம முகத்தைப் பிடிச்சுப்போயிடும். நமக்கும் ஆடியன்ஸைப் பிடிச்சுப்போயிடும். இதுக்கெல்லாம் டெக்னிக்கலா ஒரு காரணமும் சொல்ல முடியாது. ஒரு தடவை பெங்களூரில் பாடிக்கொண்டிருந்தேன். என்னமோ தெரியலை, ஒருவித ரெஸ்ட்லெஸ் நெஸ் என்னைச் சூழ்ந்துவிட்டது. என்னவெல்லாமோ பண்ணிப் பார்த்தேன். என்ன பாடினாலும் ஒண்ணும் நடக்கமாட்டேன் என்கிறது. மிருதங்க வித்வான் அடித்து வாசிக்கிறார். வயலின்காரர் பிரமாதமாக வாசிக்கிறார். ஆனாலும் ஏதோ ஒன்று மூளியாக இருப்பதுபோல் மனசுக்குள் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அதைப் பிறரிடமும் நன்றாகப் பார்க்க முடிகிறது. பாடிக் கொண்டே இருந்தபோது ஸ்வரத்தில் ஒரு கணக்கு பாடிக்கொண்டு வந்தேன். சட்டென்று ஒரு மாற்றம் நிகழ்ந்தது. த ஹோல் அட்மாஸ்பியர் காட் எலக்ட்ரிஃபைட். அரங்கின் ஒட்டுமொத்த சூழலே மாறிவிட்டது.
வாக்கேயக்காரர்களில் அதிகம் பிடித்தவர்கள் ...
நெறையப் பேரைப் பிடிச்சிருக்கு. தியாகராஜர்ல ஆரம்பிச்சு தீட்சிதர் கிருதிகள், அப்பறம் நிறையத் தமிழ்ப் பாடல்கள், சுப்பராய சாஸ்திரி, பூச்சி சீனிவாச ஐயங்கார். அப்படி நிறையப் பேரைப் பிடிக்கும். குறிப்பிட்டுச் சொல்லும்படியா தனியா எதுவும் இல்லை.
பிடித்த பாடகர்கள்...
ஜி.என்.பி., செம்மங்குடி, மதுரை மணி அய்யர்... நிறையப் பேரோட பாட்டுகள் ரொம்பப் பிடிக்கும். இளையராஜா சங்கீதமும் ரொம்பப் பிடிக்கும். நிறையக் கேட்பேன். கர்நாடக சங்கீதத்துல எல்லாரையுமே பிடிக்கும். பிடிக்காதுன்னு ரொம்பக் கொஞ்சமாத்தான் இருக்கும்.
நெய்வேலி சந்தானகோபாலன் ரொம்பப் பிடிக்கும். சமகால கர்நாடக சங்கீதப் பாடகர்களில் இருந்து ரொம்பவே மாறுபட்டவர். சில விஷயங்களைப் பாடுவதில் அபாரமான கலைநயம் வாய்த்தவர். இசையை, பாடுவதை அவர் அணுகும் முறை எனக்குப் ரொம்பப் பிடித்திருக்கிறது. ஸ்கில் என்று பார்த்தால் நிறையப் பேரைப் பிடித்திருக்கிறது. மாண்டலின் ஸ்ரீனிவாசன்... சில நேரங்களில் பிரமிக்கும்படியான மென் பிரவாகம் அவரது கைகளிலிருந்து வெளிப்படும்.
'அற்புத ரஸத்தை மட்டுமே பார்த்துண்டு போகப்டாதுடா ... சாந்த ரஸம், சிருங்கார ரஸம் எல்லாம் இருக்கணும்' அப்படிம்பார் செம்மங்குடி. வர்ச்சுவாஸிட்டி பத்தி எனக்கு பிரமிப்பு உண்டு. அது மிகவும் கடின உழைப்பு தேவைப்படுகிற விஷயம். யாரெல்லாம் சிரத்தையோடு கடின முயற்சி எடுத்து ஒரு காரியத்தைச் செய்கிறார்களோ அவர்கள் மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் நிறையவே உண்டு.
தமிழ் சினிமாப் பாட்டு ரொம்பப் பிடிக்கும். கடந்த பத்து வருடங்களாய் வரும் பாட்டுகளைவிட அதற்கு முந்திய பாடல்கள் ரொம்பப் பிடிக்கும். ஹிந்தியில் முகமது ரஃபி ரொம்பப் பிடிக்கும். ஹிந்தியில் அவர் ஒருத்தரைத்தான் பிடிக்கும். தமிழில் சுசீலா பாடல்கள் ரொம்பப் பிடிக்கும். காலத்தை வென்று நிற்கும் அருமையான பாடகி அவர். எஸ்.பி.பி. பிடிக்கும்.
பக்கவாத்தியக் கலைஞர்கள் பற்றிச் சொல்லுங்கள்.
ஒரு கச்சேரிக்குப் போகும்போது எனக்கு மனம் தெளிவாக இருக்கவேண்டும். நாலைந்து நண்பர்களாக ஒரு இரவு விருந்துக்குப் போகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். யாராவது ஒருவர் மனம் புண்படும்படியாகவோ தவறாகவோ சொல்லிவிட்டால் அந்த இரவு முழுவதுமே மொத்தமாக நசிஞ்சுடும். அதுபோலத்தான் கச்சேரியிலும். பக்கவாத்தியக்காரராக இருப்பவர் இணக்கமான மனநிலையில் இருக்க வேண்டும். நீ பெரியவனா நான் பெரியவனா என்று பார்க்க ஆரம்பித்தாரென்றால் ரெண்டாவது பாட்டிலேயே தெரிந்துவிடும். அதன் பிறகு அதையும் மீறித்தான் நான் பாடியாகணும். அடுத்த கச்சேரிக்கு அவர் பெயரைச் சொல்லும்போது வேண்டாமே என்று சொல்ல வேண்டி வந்துவிடும். நான் அதில் தீர்மானமாகத் தெளிவாக இருப்பேன்.
ட்ரடிஷனலா பார்த்தால் மெயின் பாட்டுலதான் தனி ஆவர்த்தனம் வர்ற மாதிரி வெச்சுப்பார்கள். அதுக்கு முன்னால வேற சில பாடல்களை நன்றாகப்பாடி இருக்கலாம். ஆனாலும் மெயின் பாட்டின் இடையில்தான் தனி ஆவர்த்தனம் வரும்படியாக அமைத்துக்கொள்வார்கள். முன்பெல்லாம் தனி ஆவர்த்தனத்துக்கு அப்பறம்தான் ராகம் தானம் பல்லவி பாடறது என்று வைத்துக்கொண்டிருந்தார்கள். பொதுவாகச் சில கச்சேரிகளில் ராகம் தானம் பல்லவி பாடி முடிக்கறதுக்கு ரெண்டேமுக்கால் மணி நேரம் ஆகிவிடும். அதற்குப் பின் தனி ஆவர்த்தனம் வாசிக்கச் சொன்னால் சிரமமாக இருக்கும். அவர்களும் தளர்ந்து போயிருப்பார்கள். தெம்போடு இருக்கும்போதே தனி ஆவர்த்தனம் வாசிப்பதற்கு நேரம் ஒதுக்குவது மிக அவசியம். அதில் எந்தத் தவறும் இல்லை. முன்பெல்லாம் அதற்காகத்தான் தனி ஆவர்த்தனத்தை முன்னால் வைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அப்படி விடும் நேரத்தில் ரொம்பவும் க்ரிஸ்ப்பாக வாசிப்பவர்களும் இருக்கிறர்கள். இதுதான் சந்தர்ப்பம் என்று இழுத்தடித்துக் கச்சேரியைக் காலி பண்ணுபவர்களும் இருக்கிறார்கள்.
பொதுவாகப் பக்கவாத்தியம் வாசிப்பதில் இரண்டு வகை உண்டு. நாம் ஒன்று பாட அதைப் பின்னால் அப்படியே வாசிப்பது என்று ஒரு பாணி. இன்னொருவகை நாம் பாடும்போது கூடவே அவர்களும் வாசித்துக் கொண்டுவரும் வேறொரு பாணி. நாகை முரளீதரன் பாடுவதைத் திரும்பி வாசிப்பதில் ஒரு நிபுணர். அந்த முறை நமது சங்கதிகளைப் பரிமளிக்கச் செய்கிறது. வரதராஜன் நிழல்போலக் கூட வருவார். வெளிநாட்டுக்காரர்கள் ரொம்பவும் வியந்து கேட்பார்கள் 'எப்படி ஒரு நிழலைப் போல அவரைப் பின்தொடர்ந்து செல்கிறீர்கள்' என்று...
நாம ஷட்ஜத்துல நின்னு பத்துச் சங்கதி பாடிக்கொண்டு வரும்போது அவர் பின்னணியில் ஸ... கொடுத்துக் கொண்டு வந்தால் கேட்பதற்கு ரொம்பவும் பிரமாதமாக இருக்கும்.
பக்கவாத்தியக்காரர்களுடன் இசை சம்பந்தமாக உரையாடல்கள் உண்டா?
நாகை முரளீதரன் இப்போது சில காலமாக என்னுடன் கச்சேரிகள்
செய்துவருகிறார். அவருடன் இருக்கும்போது என்னை நான் நன்றாகச் செழுமைப்படுத்திக்கொள்ள முடிகிறது. அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். ஒவ்வொருவருடைய இடத்தையும் வெகு அழகாகத் தீர்மானித்து அதற்கு ஏற்றாற்போல் வாசிப்பார். என்னை ஒரு கை பார்க்கறதுன்னு அவர் நினைத்தால் அவரால இறங்க முடியும். ஆனா அதைச் செய்யமாட்டார். இன்னிக்கு நாம ரெண்டுபேரும் சேர்ந்து ஒரு கச்சேரி பண்ண வந்திருக்கோம். இது உன்னோட ஏரியா. இது என்னோடதுன்னு ரொம்ப அழகா வரையறுத்துக்கொண்டு செயல்படுவார். அவரோட திறமைகளைப் பத்தி அவருக்குத் தெரிஞ்சும் அவர் தன்னை வரையறுத்துக்கறதுங்கறது அவரோட பெரிய மனசைத்தான் காட்டறது. என்னோட ஏஜ் குரூப்ல உள்ள ஒருத்தர் அப்படி இருக்கறதுல ஒண்ணுமே இல்லை. ஏன்னா ரெண்டுபேருமே ஒரேவிதமான அனுபவம் உள்ளவர்கள்தான். அதனாலே அங்கே ஒருவிதமான ஃபிரண்ட்லியான உறவு இருக்கும். வயலின் கலைஞர் வரதராஜன், மிருதங்கக் கலைஞர்கள் அருண் பிரகாஷ், நெய்வேலி வெங்கடேஷ் போன்றவர்களுடன் இப்படி இருக்கும். முரளீதரன் என்னைவிட ரொம்ப சீனியர். சமீபகாலமாத்தான் எங்களுக்குள்ள பரிச்சயம் ஏற்பட்டிருக்கு. இருந்தும் அவர் அப்படி இருக்கறதுங்கறது அவரோட பக்குவத்தைத்தான் காட்டறது. அதோடு அது எனக்கு ஒருவகைல சவாலா இருக்கும். இன்னிக்கு நாமளும் ரொம்ப நன்னாப் பாடணும் அப்படின்னு என்னைத் தயார்ப்படுத்திண்டு போவேன். குருவாயூர் துரை, மன்னார்குடி ஈஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் போன்றவர்கள் வாசிக்கும்பொழுது 'இவ்வளவு பெரியவர்கள் வந்திருக்கிறார்கள், நாமும் நன்றாகப்பாட வேண்டும்' என்று என்னை நானே உற்சாகப் படுத்திக்கொள்ளுவேன்.
பாட ஆரம்பித்த பின்னாலே எப்படி அமைகிறது என்பதெல்லாம் வேற விஷயம். நாம ஒரு கணக்கைப் பாடுவோம். அது சரியா வந்திருக்காது. அவர் நன்றாக வாசித்திருப்பார். மொதல்ல நன்றாக வரவில்லை. மீண்டும் பாடுகிறேன் என்று சொல்லியபடியே பாடுவேன். பாடும்போது இந்த உரையாடலும் உள்ளுற ஓடிக் கொண்டிருக்கும். நாகை முரளீதரனுடனான கச்சேரிகளில் இதுபோல உரையாடல்கள் நடந்துகொண்டே இருக்கும். நான் ஒன்று பாடி இருப்பேன். அது அவருக்குச் சரியாக வந்திருக்கவில்லை என்றால் கச்சேரி முடிந்ததும் சொல்லுவார். 'நீ இந்த இடத்துல இப்படிப் பாடினாய்... அது எனக்குச் சரியா அமையலை. நான் வீட்டுல பயிற்சி எடுத்துண்டு வரேன்...' அப்படிம்பார். அவருக்கு நல்லா வாசிக்கத் தெரியும். அன்னிக்கு ஏதோ வராமப் போயிருக்கும். ஆனாலும் நம்மகிட்ட அப்படிச் சொல்லுவார். அப்பறம் 'ஏ.கே.சி. ஒரு சங்கதி வாசிச்சார்யா'னு வாசிச்சுக் காட்டுவார். நான் அதை அடுத்த கச்சேரில பாடுவேன். சிரிச்சுண்டே அவரும் அதை வாசிப்பார்.
அப்பறம் தியரிட்டிக்கலா என். ராமனாதன், எஸ்.ஆர். ஜானகிராமன், வேதவல்லி மாமி இவர்களோடு இசை பற்றி நிறைய விவாதிப்பதுண்டு. ஏதாவது சந்தேகம் என்றால் ஃபோன் பண்ணிக் கேட்பேன். இவர்கள் பாரபட்சம் பார்க்காமல், அக்கறையோடு பதில் சொல்வார்கள்.
மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசப்படும்போது எப்படி உணர்கிறீர்கள்?
இப்ப நாம ஒரு ராகத்தைப் பாடறோம். அதையே இன்னொருத்தரும் பாடறார். 'சார் நீங்களும் இதை நன்னாப் பாடினேள். அவரும் நன்னாப் பாடினார்'ன்னு நம்மகிட்டயே வந்து சொல்வார்கள். அதைக் கேட்கும் போது 'அவர் பாடினார்ங்கறதுனால இது நன்னா இருந்துடுத்தா...' அப்படின்னு மனசுக்குள்ள ஒரு சிந்தனை சட்டுன்னு வந்துட்டுப்போகும். இதைத் தவிர்க்கணும்னு நெனைப்பேன். ஆனா முடியலை. வர்றது. என்ன பண்ண?
சில சமயங்கள்ல அதுக்கு நாம ஒண்ணும் பண்ண முடியாதுன்னு தோணும். வேற சில சமயங்கள்ல ரொம்பக் கஷ்டமா இருக்கும். ரெண்டும் இருக்கும். இது போன்ற விஷயங்களால பாதிக்கப்படாமல் இருக்க கூடுமானவரை முயல்வதுண்டு. அது மட்டுமில்லாமல் நான் இப்பப் பாடற விதத்துல பாடறதுனாலதான இப்படி ஒப்பிட்டுச் சொல்கிறாய்... வேறொன்றுடன் ஒப்பிடவே முடியாத அளவுக்குச் சிறப்பாக ஒன்றைப் பாடிக் காட்டுகிறேன் பார் என்று என்னை நானே தூண்டிவிட்டுக்கொள்வேன். 'சார் நேத்திக்கு உங்களோட கச்சேரி கேட்டேன். அதுக்கு முந்தின நாள் இன்னொருத்தரோட கச்சேரி கேட்டேன். ரெண்டும் நன்னா இருந்தது'. அப்படின்னு சொன்னார்னா அதைப் பத்தி எனக்கு ஒரு முடிவுக்கு வந்துக்க முடியும். 'ஓ... உங்களுக்கு அப்படித்தான் தோணினதா...' எந்த ஒரு விஷயத்தையும் பாஸிட்டிவாக எடுத்துக்கொள்வேன். ஒருவித சோம்பேறித் தனத்துனாலதானே இதுவரை இதைப் பண்ணாம இருந்திருக்கோம். இப்படிச் சொன்ன பிறகாவது நாம பண்ண ஆரம்பிப்போம்னு எடுத்துப்பேன்.
அதே சமயம் இன்னொருத்தர் ஒரு விஷயத்தை அருமையாகப் பண்ணினார் என்றால்... சே... இதை நாம செய்யணும்யா... செய்யாம விட்டுட்டோ மே... அந்த அளவுக்கு நம்மை தயார்ப்படுத்திக்காம இருந்துட்டோ மே... அப்படின்னு தோணும். அவர் செய்துட்டாரே நாமும் செய்தாக வேண்டுமே என்று இல்லை. இதை நாம செஞ்சிருக்கணுமே என்று தோன்றும். அப்படி என்னோட சுய கர்வத்தைத் திருப்திப்படுத்திக்க நானே முயற்சி எடுப்பேன். நாம பண்ணின ஒரு விஷயத்தை இதே கோணத்துல எடுத்துக்காம வேற மனோபாவத்துல எடுத்துக்கொண்டு யாராவது பண்ணினால் அது பிடிக்காது. ஏ.கே.சி.கூட இதை அழகாகச் சொன்னார் ஒரு தடவை. 'காருகுறிச்சியார் களத்தில் இறங்கினார். எனக்கும் அவருக்கும் போட்டி. அவர் ஒரு தோடியைப் பிரமாதமா வாசிச்சுட்டார். அதுக்கு ஈடா நாமளும் ஒண்ணு பண்ணியாகணுமேன்னு தேசிகர் கிட்ட போய் 'நாவுக்கரசர்'னு ஒண்ணைப் பாடம் பண்ணி வாசிச்சேன்' அப்படின்னார். இதைச் சமீபத்துலதான் கேள்விப்பட்டேன். அட, நாமளும் இந்த விஷயத்தை இப்படித்தான் எடுத்துக்கணும்னு முடிவுசெஞ்சேன். அது மட்டும் இல்லாம வேற யாரும் பண்ணிட முடியாத அளவுக்கு நாலஞ்சு விஷயங்களைப் பண்ணிடணும்னு முடிவெடுத்து சில விஷயங்கள் செய்ய ஆரம்பிச்சிருக்கேன். இது எல்லாம் அந்த டிஸ்ட்டர்பன்ஸுக்கான என்னோட எதிர்வினைகள். அவற்றை நான் அப்படித்தான் எதிர்கொள்ள விரும்புகிறேன். ஏற்கனவே நாம பண்ணினதையே பன்ணிக்கொண்டு இருக்க முடியவில்லை. ஒரு வகையான மூச்சுத் திணறலை அதில் உணர்கிறேன். அதை மீற வேறு சில விஷயங்களைச் செய்ய ஆரம்பிக்கிறேன்.
நாட்டுப்புறப் பாடல்களுடன் பரிச்சயம் உண்டா?
நான் மெட்ரோபாலிட்டன் வாசி... எனக்கு ஒன்றிரண்டு காவடிச் சிந்து பாடல்களைத் தவிர வேறெதுவும் தெரியாது. மிஞ்சிமிஞ்சிப் போனால் இளையராஜாவின் பாடல்களைத்தான் கேட்டிருக்கேன். அவரது பாடல்கள் அந்த வகையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என்று தெரியவில்லை. ஆனால் அந்த அளவுக்குத்தான் கேட்டிருக்கிறேன்.
என்னுடைய பிறப்பு வளர்ப்பு, சூழல் போன்றவை ஒரு காரணமாக இருக்கலாம். எனக்கு அறிமுகமான விஷயங்களிலேயே எனக்குப் பல சவால்கள் இருந்ததால், ஒருவகை ஈடுபாடு இருந்ததால், வேறு பக்கம் போகாமல் இருந்திருக்கலாம்.
பிற ஆர்வங்கள்...
விளையாட்டுகளில், குறிப்பாகக் கிரிக்கெட்டில் ரொம்ப ஈடுபாடு உண்டு. இன்ட்டர்நெட் மோகம் உண்டு. போர்ட் கேம்ஸ் பிடிக்கும். இலக்கியம் ரொம்பப் பிடிக்கும். ஆரம்பத்தில் ஆங்கில இலக்கியத்தில் ஈடுபாடு இருந்தது. இப்போது தமிழ் இலக்கியத்திலும் ஈடுபாடு வந்திருக்கு. படங்கள் நிறையப் பார்ப்பேன். பழைய தமிழ்ப் படங்கள் பிடிக்கும். வரலாறு ரொம்பப் பிடிக்கும். இப்போ சமீபகாலமா உடல் பயிற்சியில் மனம் வெகுவாக ஈடுபட ஆரம்பித்திருக்கிறது. கச்சேரிகளுக்குப் போவது தவிர பிரயாணங்களில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை.
இப்போது தனியாகச் சாதகம் என்று பண்ணுவதில்லை. கற்றுக்கொள்ள மாணவர்கள் வரும்போது அவர்கள் கூடப் பாடுவேன். அப்படி ஒன்றிரண்டு மணி நேரம் தினமும் பாடிவிடுவேன். அது தவிர நிறையப் பாட்டுக் கேட்பேன். கம்ப்யூட்டரில் ஏதாவது விளையாடிக்கொண்டிருப்பேன். குழந்தைகளுடன் காலையில் ஒன்றிரண்டு மணி நேரம் விளையாடுவேன். இரண்டு மணி நேரம் ஜிம்முக்குப் போவேன்.
கிரிக்கெட் மேட்ச் இருந்தால் எல்லாமே காலியாகிவிடும். வாரத்திற்கு ஒன்றிரண்டு சினிமாக்கள் பார்ப்பேன். முன்பெல்லாம் கேட்ஜெட் பைத்தியமாக இருந்தேன். போர்ட் கேம்ஸ் வந்த பிறகு அது கொஞ்சம் குறைந்துவிட்டது.
இன்ட்டர்நெட், லாப்டாப், செல்ஃபோன் என்று வாழ்க்கையில் கருவிகள் அதிகமாகிவிட்டன. இதனால் படிக்கிற வழக்கம் வெகுவாகக் குறைந்து போய்விட்டது. அது உண்மையிலேயே மிகவும் வருத்தமாக இருக்கிறது.
ஸ்போர்ட்ஸ், இலக்கியம் என நிறையப் படிப்பேன். ஹாரி பாட்டர் படிப்பேன்... இப்போதும் நோம் சாம்ஸ்கியின் ஒரு புத்தகத்தைப் படிக்க எடுத்துவைத்திருக்கிறேன்.
ஹிந்துஸ்தானி - கர்நாடக சங்கீதம்...
படே குலாம் அலிகான், அமீர்கான் கேட்டிருக்கேன். ஆனா, ஏனோ அந்த இசைல எனக்குப் பெரிய ஈர்ப்பு இல்லை.
என்னைப் பொறுத்தவரையில் இரண்டுமே வெவ்வேறானவை. ஒப்பிடவே கூடாது. வட இந்தியச் சாப்பாட்டையும் தென்னிந்தியச் சாப்பாட்டையும் ஒப்பிட்டு இது சிறந்தது இது தாழ்ந்தது என்று யாராவது சொல்ல முடியுமா... அதுமாதிரிதான். இரண்டுமே இரண்டு வகையானவை. அவ்வளவுதான். அணுகுமுறையிலும் உள்ளடக்கத்திலும் எல்லா விஷயங்களிலுமே வித்தியாசம் இருக்கத்தான் செய்யும்.
எனக்குப் பொதுவாக இரண்டையும் ஒப்பிட்டுப் பேசுவதே பிடிக்காது.
சிலர் என்னிடம் வந்து 'ஹிந்துஸ்தானியில் அப்படிப் பாடுகிறார்கள். நீங்க பாடுவதில்லையே' என்று கேட்கும்போது கோபமாகத்தான் வருகிறது.
ரசிகர்களின் அறிவு, கர்நாடக சாஸ்திரீய சங்கீதம் தெரியாத ஆடியன்ஸ்..
.
கர்நாடக இசை பற்றி எதுவுமே தெரியாத ஐரோப்பியர்கள் மத்தியில் நாலைந்து கச்சேரிகள் செய்திருக்கிறேன். அவர்கள் முன்னால் பாடும்போது ஒண்ணரை மணி நேரம் ஒண்ணேகால் மணி நேரம் என்ற கால நிர்ணயமே அடிபட்டுப் போய்விடும். அது மட்டுமில்லாமல் ரேடியோவில் கச்சேரி செய்வதுபோல ஆகிவிடும். பொதுவாக நான் பாடும்போது இசை குறித்து எவ்வளவு விஷயங்களை கேட்பவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமோ அவ்வளவையும் பகிர்ந்துகொள்ள முயற்சிப்பேன். ஒரு கீர்த்தனம், ஒரு ராகத்துல ஒரு சுருதி, இன்னொரு ராகத்துல இன்னொரு பல்லவி, அப்புறம் ஒரு தில்லானா, கடைசில ஒரு துக்கடா இப்படி ஒரே கச்சேரியில் பலதரப்பட்ட வடிவங்களைத் தர முயற்சி செய்வேன். நாம வேற வேற ராகத்தைப் பாடினாலும் அது பத்தித் தெரியாதவர்களுக்கு ஒரே ராகத்தையே திரும்பத் திரும்பக் கேட்கற மாதிரித்தான் தோணும். தோடி பாடிட்டு சங்கராபரணம் பாடினா சங்கீதம் தெரிஞ்ச ஆடியன்ஸுக்கு இது வேற காந்தாரம், இது வேற மத்யமம்ன்னு புரிஞ்சுக்க முடியும். வெளிநாட்டுக்காரர்களுக்கு அது புரிஞ்சுக்க முடியாது இல்லையா... அதனால நான் என்ன பண்ணுவேன், ஒரு ராகத்தை வேகமாப் பாடுவேன். இன்னொண்ணுல பிர்கா அதிகமாப் போடுவேன். குரல் நன்னா ஸெட் ஆயிடுத்துன்னா நீளமான ராகம் பாடறச்சே கார்வை கொடுத்துப் பாடுவேன். அந்த அனுபவமே வேறமாதிரி இருக்கும். என்னோட நோக்கம் என்னன்னா எவ்வளவு பலதரப்பட்ட விஷயங்களை ஒரு கச்சேரில தரமுடியுமோ அவ்வளவு குடுத்துர்றது. பாடும்போது அதே மாதிரி அமையாம வேற மாதிரியும் போகும். ஆனாலும் ஒரு தெளிவான ஐடியா மனசுக்குள்ள மொதல்லயே உருவாக்கிக்கொண்டுவிடுவேன். அதுல 60, 70 சதவிகிதம் அதே மாதிரிதான் பாடவும் செய்வேன்.
ஃபாரின் ஆடியன்ஸுக்கு முன்னால பாடறச்சே நமக்கு இன்னொரு சுதந்திரம் இருக்கும். என்ன வேணா பாடலாம். ஒரு மாதிரி ஃப்ரீக் அவுட்டா பாடலாம். அது சில சமயங்கள்ல நன்னா வொர்க் அவுட் ஆகவும் செய்யும்.
ஃபிரான்ஸுல ரெண்டு விதமான தியேட்டர்கள் இருக்கு. தியாட்டர் டெ ல வில்-லில் வர்ற ஆடியன்ஸ் ஒருவித க்யூரியாஸிட்டிக்காக வர்றவங்களா இருப்பார்கள். கீழைத்தேச இசை எப்படி இருக்கு... நம்ம தியேட்டர்ல வந்து பாடுகிறான் என்றால் நிச்சயம் பெரிய ஆளாகத்தான் இருக்கணும். அதனாலே, இவன் வாயத் திறந்தாலே நாம கைதட்ட வேண்டும் என்று வருவார்கள். ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் வரும். கைதட்ட ஆரம்பித்தால் நிறுத்தவேமாட்டார்கள். அது மாதிரிக் கைதட்டலை நாம் வேற எங்குமே கேட்க முடியாது. மொதல் பாட்டுக்கே கைதட்ட ஆரம்பித்துவிடுவார்கள். நாம் அடுத்த பாட்டுப் பாட ரெடியாகிக் காத்துக்கொண்டிருப்போம். ஆனாலும் கைதட்டி முடிஞ்சிருக்காது.
ம்யுஸி கீமேன்னு (Musee Guime) அரங்கம் இருக்கு. அங்கே வரும் பார்வையாளர்கள் வேறு வகையாக இருப்பார்கள். எண்ணிக்கையில் குறைவுதான். நமது இசைக்கு ட்யூன் ஆகி வார்ம் அப் ஆகச் சிறிது நேரம் எடுத்துக்கொள்வார்கள். அவங்களை உள்ளே அழைத்து வந்து ஈடுபாடு கொள்ளவைப்பது என்பது சவாலான விஷயம். அது எனக்கு மிகவும் பிடிக்கும். அவங்க அலைவரிசைக்கு நாம் போய் அவர்களைச் சந்திப்பது என்பதே சவாலான விஷயம்தான்.
ஒரு தடவை ஸ்பெயினில் கச்சேரி. ஒரு கிராமம். எதிரும் புதிருமாக வீடுகளும் சந்துகளும், நடுவில் கோவில் என்று ஒரு கத்தோலிக்க அக்ரஹாரம் போல இருந்தது. அங்கே ஒரு அருமையான அரங்கம் கட்டி வைத்திருந்தார்கள். 150 பேர் உட்கார்ந்து கேட்கலாம். அன்று 20 பேர் வந்திருந்தார்கள். பாடினபோது மூன்று முறை encore1 கேட்டார்கள். அந்த அரங்கத்தின் நிர்வாகி சொன்னார் - அதுவரையில் அங்கே அப்படி நடந்ததே இல்லையாம். எங்கேயோ ஒரு அலைவரிசையில் சகலத் தடைகளையும் தாண்டி இசையும் அவர்களும் அன்று சந்தித்துக்கொண்டார்கள்.
ஒலிபெருக்கிச் சாதனங்கள், நிகழ்ச்சி நேரத்து நெருக்கடிகள்...
ஒரு கச்சேரிக்கு மேற்கத்தியர்கள் எடுத்துக்கொள்ளும் அக்கறை இருக்கிறதே... நீங்கள் அதைப் பார்த்தால்தான் நான் சொல்வதை நம்புவீர்கள். 5 மணிக்குக் கச்சேரி என்றால் மூன்று மணிக்கே மைக் டெஸ்ட் ஆரம்பித்து விடுவார்கள். மைக் டெஸ்ட் என்றால் வெறுமனே ஸ ப ஸ பாடிட்டுப் போக முடியாது. முழுசாகக் கச்சேரியே செய்வதுபோலப் பாடவைத்துவிடுவார்கள். ஸ்பெயினில் மாட்ரிடில் ஒரு பெரிய அரங்கில் கச்சேரி நடந்தது. அதன் நிர்வாகி ஒரு பிரிட்டிஷ்காரன். முதல்லே என்னைப் பாடச் சொன்னான். அப்புறம் வயலினை வாசிக்க வைச்சான். அப்புறம் மிருதங்கத்தை வாசிக்கச் சொன்னான். "உங்களோட ஒரிஜினல் குரலை அப்படியே எந்தவிதக் கூடுதலோ குறைச்சலோ இல்லாமல் நேச்சுரலாகக் கேட்கவைக்க விரும்புகிறேன்" என்று சொன்னான். நான் ஆச்சரியத்தில் உறைந்துபோய்விட்டேன். "எந்தவித ஆம்ப்ளிஃபிகேஷனும் இல்லாமல் இயற்கையாக இருக்கும் குரலை மைக் மூலமாகக் கொண்டுவர விரும்புகிறேன்"ன்னான். அதற்காக ஸெட்டிங்குகளை மாத்தி மாத்தி அமைச்சு என்னை மறுபடியும் மறுபடியும் பாட வைச்சான். கடைசில மைக் இருக்கா இல்லையா என்பதே தெரியாத அளவுக்குக் கொண்டுவந்தான். 400, 500 பேர் வந்திருந்தார்கள்.
சில இடங்களில் மிகவும் மோசமாக அமைந்துவிடும். ஒலிபெருக்கி அமைப்பாளருக்கு நாம் சொல்வது புரியவே புரியாது. ரொம்பவும் சோதனையாகப் போய்விடும். அது மட்டுமில்லாமல் வயலின், மிருதங்கம் இவர்களுக்கு உள்ள மைக்குகளை ஒருவிதமாக அமைத்திருப்பார்கள். எங்களுக்குள் ஒருவிதச் சமன்பாட்டை எட்ட முடியாமல் போய்விடும். நான் வயலினின் சத்தத்தைக் குறையுங்களென்று சொல்ல முடியாது. அவர் மிருதங்கத்தின் சத்தத்தைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் எல்லாமே ஒருவித லயத்துடன் ஒன்றுசேர வேண்டியிருக்கும். பக்கவாத்தியக்காரர் மூணு நாலு பாட்டுக்கு ஒலிபெருக்கிக்காரர்கூடவே பேசிக்கொண்டு இருக்க வேண்டி இருக்கும். 'ஐயா. பாட்டைக் கவனியுங்கோ'ன்னு சொல்லணும் போலத் தோணும். ஆன சொல்ல முடியாது. ஏன்னா எல்லாருமே சுமுகமா உணர்ந்தாதான் கச்சேரியை ஆரம்பிக்க முடியும். சில சபாக்கள்ல மைக் கடைசி வரைக்கும் ஸெட் ஆகவே ஆகாமப்போயிடும். நான் இப்போ ஒருவிதத்துல இதுனால எல்லாம் பாதிக்கப்படாம இருக்கக் கத்துக்கொண்டுவிட்டேன். ஆரம்பத்துல ரொம்பச் சிரமமா இருந்தது.
சரியாகக் கேட்க முடிகிறதா என்றால் நாலு பேர் சரியா இருக்கிறது என்பார்கள். வேறு நாலு பேர் கேட்கவில்லை என்பார்கள். சபா செக்ரட்டரி சொல்வார் 'நன்றாகத்தான் இருக்கிறது' என்று. 'ஆடியன்ஸ் சரியா இல்லை என்று சொல்கிறார்களே' என்பேன் மேடையில் அமர்ந்தபடியே... கச்சேரிக்குப் பதிலாக இந்த விவாதம்தான் நடக்கும்.
ஒரு சீசன்ல எல்லாச் சபாக்காரர்களுடனும் இதனால் சண்டை. ஒரு பாட்டு முழுவதும் மைக்கை எடுத்துத் தள்ளி வெச்சுட்டுப் பாடி இருக்கேன். அப்பறம் இது பத்தி எதுவும் கவலைப்படாம இருந்துடறதுன்னு முடிவு எடுத்தேன்.
இன்னிக்கு இருக்கற நிலைல மைக் இல்லாத கச்சேரி அப்படிங்கறதும் சாத்தியம் கிடையாது. மொதல்ல அதுக்கு ஏத்த மாதிரியான அரங்கம் வேணும். ரெண்டாவது, பக்கவாத்தியம் வாசிக்கறவர்கள் ரொம்ப சென்ஸிட்டிவா வாசிக்கணும். இப்போது இருப்பவர்கள் மைக்குடன் வாசித்துப் பழகினவர்கள். நாங்களும் மைக்குடன் பாடிப் பழகினவர்கள். மைக் இல்லாமல் வாசிக்க அவர்கள் தயாராகணும். பாடறவர்களுக்கும் அந்தச் சிரமம் இருக்கு. நான் வெளிநாடுகள்லயும் சரி இங்கேயும் சரி மைக் இல்லாம சில கச்சேரிகள் பாடி இருக்கேன். ஆனா ரொம்ப கஷ்டப்பட்டுப் பாடவேண்டி இருக்கும். ஏன்னா மிருதங்கம் வயலின் சத்தத்தை மீறி நாம பாட வேண்டிவரும். சில நேரங்கள்ல மிருதங்கத்தை நன்னா அடிச்சு வாசிக்க ஆரம்பிச்சா நாம எதுவும் சொல்ல முடியாது. நம்மளோட குரலைத்தான் உசத்திக்கொண்டாகணும். தற்போதைய நிலையில் மைக் இல்லாமல் பாடறது இம்பாஸிபிள்தான்.
ஒரு வகையில் நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ளவேண்டும், அவ்வளவுதான். இன்று இந்த இடத்திற்குப் போகிறோமா... சூழல் இப்படி இருக்கும் என்று என்னை முன்னாலேயே மனரீதியாகத் தயார்ப்படுத்திக் கொண்டுவிடுவேன். மனத்தில் அப்படி ஒருவிதச் சமநிலையைக் கொண்டுவந்தாக வேண்டி இருக்கிறது.
கச்சேரி கேட்க வருபவர்கள் சிலர் இருக்கிறார்கள். முதல் வரிசையில் இருந்துகொண்டு தப்புத் தப்பாகத் தாளம் போடுவார்கள். ஒருத்தர் என் எல்லாக் கச்சேரிகளுக்கும் வருவார். வந்து தப்புத் தப்பாகத் தாளம் போட்டு ரசிப்பார். நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். ஒரு நாள் நான் மிகவும் கஷ்டப்பட்டுத் தாளம் போட்டுப் பாடிக்கொண்டிருக்கிறேன். அவரது தப்புத் தாளத்தைப் பார்த்ததும் கோபம் வந்துவிட்டது.. 'தாளம் போடறதை நிறுத்துங்கோ' என்று சொல்லிவிட்டேன். அவர் கோபத்தில் எழுந்து போய்விட்டார். அதன் பிறகு என் கச்சேரிக்கு வருவதே இல்லை. அவர் தப்பாகத் தாளம் போட்டது கூடப் பரவாயில்லை. அதை ரொம்பவும் ரசிச்சு அடித்து அடித்து வேற போட்டுக்கொண்டிருந்தார். இப்படி நாம எதிர்பார்க்காத எத்தனையோ தொந்தரவுகள் வரும். சில இடங்களில் தனி ஆவர்த்தனத்துக்கு நிறைய நேரம் ஒதுக்கிவிட்டு மறுபடி பாடத் தொடங்குவேன். ஆனா ஒரு தடவை சபா செக்ரட்டரி வந்து மைக்கைக் பிடுங்கிக்கொண்டுவிட்டார். ஏன் என்று கேட்டால் 'வோட் ஆப் தேங்க்ஸ் சொல்ல வேண்டும்' என்று பேச ஆரம்பித்துவிட்டார். 'நான் இன்னும் பாடி முடிக்கவில்லை. இன்னும் ஒரு மணி நேரம் பாடப்போகிறேன். முடித்ததும் கூப்பிடுகிறேன்' என்று சொல்லிவிட்டேன்.
ஒரு தடவை பாபநாசம் சிவன் நினைவுக் கச்சேரியில் யாரோ பெரிய தலைவர் வந்திருந்தார். முக்கியமான ராகத்துக்கு முன்னாலயே அவரைப் பேசச் சொல்லிவிட்டார்கள். டெம்போ அப்படியே இறங்கிப்போய்விட்டது. அப்படி ஆகிவிட்டால் அதன் பின் கச்சேரியைத் தூக்கி நிறுத்தவே முடியாமல் போய்விடும்.
கச்சேரிக்கான பாடல்களை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?
எனக்கு என்னன்னா, என்ன பாடறோம் அப்படிங்கறதைவிட எப்படிப் பாடறோம் அப்படிங்கறதுதான் முக்கியம். இப்போ புதுசா ஒரு டிரெண்ட் ஆரம்பிச் சிருக்கு. பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டிக் கச்சேரி நடந்தால் பிள்ளையார் பாட்டைப் பாடுவார்கள். ஆடியன்ஸும் அதை விரும்புகிறார்கள். வைகுண்ட ஏகாதசி அன்று கச்சேரி இருந்தால் காலைலயே போன் வந்துடும் 'இன்னிக்கு ஓ ரங்க சாயி பாடிடுங்கோ' அப்படினுட்டு. திருவாதிரையா இருந்தா நடராஜர் பத்திப் பாடுங்கோன்னு சீட்டு வரும்.
நான் பொதுவா அப்படிப் பாடுவது கிடையாது. ஒரு தடவை ஸ்ரீராம நவமிக்குப் பெங்களூர் சேஷாத்ரி புரத்துல கச்சேரி பண்ணினேன். அதில் பிலஹரி பாடி 'ஸ்ரீ சாமுண்டிஸ்வரி' பாடினேன். வோட் ஆஃப் தேங்க்ஸ் சொன்னவர் அருமையாகச் சொன்னார், 'எல்லாரும் ராம நவமின்னா ராமர் பாட்டைத்தான் பாடணும்னு நினைச்சுக்கறா. இன்னிக்கு சஞ்சய் ரொம்ப அழகா சாமுண்டீஸ்வரி பத்திப் பாடினார். இது என்னமோ நவராத்திரிக்குத்தான் பாடணும்னு சிலர் நினைச்சுக்கறது உண்டு. ஸ்ரீராம நவமிங்கறது ராமரோட விழா இல்லை. இசையோட விழா...' அப்படின்னு சொன்னார். அது மாதிரித் திருமலை திருப்பதில பாடினேன். அங்க எல்லாருமே பயங்கர வைஷ்ணவர்கள். எல்லாரும் பெருமாள் பற்றித்தான் பாடுவார்கள். பாபநாசம் சிவனோட சீடர் ஒருவர் 'திருவடி சரணம்2 பாடு' அப்படின்னார். 'என்ன மாமா இங்க இப்படிப் பாடச் சொல்றேளே' அப்படின்னேன். 'நான் சொல்றேன். அதையே பாடு' அப்படின்னார். அவருக்கு என்னன்னா வைஷ்ணவ சைவச் சண்டை, பிரிவுகள் எல்லாம் இருக்கக் கூடாதுன்னு ஒரு கொள்கை உண்டு. அங்கத் திருவடி சரணம் பாடினேன்.
விவாதி3 ராகங்களை எடுத்தாள்வது பற்றி...
விவாதி ராகத்தில் dissonant நோட்ஸா இருக்கும். பாரம் பரியமா என்ன சொல்லுவார்கள் என்றால் விவாதி பாடினால் ஆயுசு குறைந்துவிடும்... கெட்ட காரியங்கள் நடக்கும். அது பாவம்... தோஷம் அப்படின்னு சொல்வார்கள்.
நான் என் ஆரம்பக் கட்டத்தில் அதைப் பாடவேஇல்லை. ஆனால், எனது ரசிகர்களாகவும் நண்பர்களாகவும் இருக்கும் சிலர் 'நீ விவாதி பாடு... அது உன் குரலுக்கு ரொம்பவும் பொருத்தமாக இருக்கும்' என்று அடிக்கடி சொல்லுவார்கள். நான் அவர்களுடன் வாதம் செய்வேன். 'அதெல்லாம் ஒரு ராகமா... செம்மங்குடியும் அரியக்குடியும். ஜி.என்.பி.யும் அதை அவ்வளவா பாடினதே கிடையாதே... அவர்கள் எல்லாம் முட்டாள்களா... நான் மட்டும் பாடி இதில் பெரிதாக என்ன சாதித்துவிடப்போகிறேன்' என்று ஆரம்பக் கட்டத்தில் மறுத்திருக்கிறேன். அதன் பிறகு காலப்போக்கில் ஒன்றிரண்டு பாட ஆரம்பித்தேன். நாகை முரளீதரனுடனான தொடர்புக்குப் பின் அதிகமாகப் பாட ஆரம்பித்திருக்கிறேன். நாகை முரளீதரன் கல்யாணராமனுக்கு நிறைய வாசித்திருக்கிறார். பாலமுரளியும் கல்யாணராமனும்தான் நான் கேட்ட வரையில் விவாதியில் நிறையப் பாடி இருக்கிறார்கள். என்னுடைய குருவும் சொன்னார், 'நீ அதைப் பாடலாமேடா' என்று. அவர் அப்படித்தான். அழுத்தி 'இதை நீ பண்ணு'ன்னு ஒரு நாளும் சொல்லமாட்டார்.
...

No comments:
Post a Comment