Friday, 21 December 2012

Margazh - Why is it important ?

பொதுவாக உலகெங்கும் சூரியனை அடிப்படையாகக் கொண்டோ அல்லது சந்திரனை அடிப்படையாகக் கொண்டோ தான் காலத்தைக் கணக்கிடும் நடைமுறை இருந்து வருகிறது. சூரியனை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுவது சூரியமான ஆண்டாகும். சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுவது சந்திரமான ஆண்டாகும். தமிழ் ஆண்டு சூரியமான ஆண்டாகும்.




ஆனாலும் நமது பண்பாட்டில் காணப்படும் பெரும்பாலான பண்டிகைகளும் திருவிழாக்களும் சிறப்பு நாள்களும் நட்சத்திரங்கள் மற்றும் சந்திரனின் இருப்பு நிலைகளைக் கொண்டு தீர்மானிக்கும் விதத்தில் அமைத்து இருக்கின்றனர். இதில் சூரியனுக்கும் முக்கியப் பங்கு உண்டு. அந்த விதத்தில் மார்கழி மாதம் என்பது தமிழ் மாத வரிசையில் ஒன்பதாவதாக வரும் மாதமாகும். . அதாவது சூரியன் மேசத்தில் தொடங்கி ஒவ்வொரு ராசியாக கடந்து தனுர் ராசியில் சஞ்சரிக்கும் காலமே மார்கழி மாதம். மார்கழி மாதத்திற்கு நமது பண்பாட்டில் ஓரு முக்கியத்துவம் உண்டு. பக்தி மார்க்கம் இந்த மாதத்திற்குச் சில விஷேசத் தன்மைகளைக் கொடுக்கிறது. கீதையில் கிருஷ்ண பரமாத்மா மாதங்களில் நான் மார்கழி என்று சொல்வதாகச் சொல்லப்படுகிறது.



இந்த உலக இயக்கத்திற்கு மூலமாக விளங்குவது சூரியன் என்பது நாம் அறிந்த விஷயம் தான். சூரியனின் உத்ராயனம் தட்சணாயனம் என்னும் இரு அயன நகர்வுகளே தொல்காப்பியர் கூறுகிற பெரும் பொழுதுகளுக்குக் காரணமாகிறது. நமது புராணங்கள் இதையே வேறுவிதமாகப் பேசுகின்றன. அதன்படி பார்த்தால் மனிதக் கணக்குக்கு ஒருவருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாக வருகிறது. அதாவது அவர்களின் பகல் பொழுது ஆறுமாதம் இரவுப் பொழுது ஆறுமாதம் கொண்டதாகும். இந்தக் கணக்கின் அடிப்படையில் பார்த்தோம் என்றால் தைமாதம் துவங்கி ஆனி மாதம் வரையில் உள்ள காலம் தேவர்களுக்குப் பகல் பொழுதாகும். ஆடி மாதம் துவங்கி மார்கழி மாதம் வரையில் உள்ள நாட்கள் இரவுப் பொழுதாகும். இப்படிப் பார்க்கையில் மார்கழி மாதம் என்பது தேவர்களின் இராப் பொழுதின் உதய நாழிகை அதாவது அதிகாலை நேரம் எனக் கொள்ளப்படுகிறது. அப்படிப்பட்ட அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்து கோவிலுக்குச் சென்று இறைவனை வழிப்பட்டுப் பஜனை செய்வது என்ற வழக்கம் ஆண்களுக்கு உரியதாக இருக்கிறது. பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து வாசலில் கோலமிடுவது வழக்கம். இது இலக்கியங்களில் தை நீராடல் என்றும் மார்கழி நீராடல் என்றும் குறிப்பிடப்படுகிறது.



இப்படியான மதப் பின்னணியில் உருவாக்கப்பட்ட ஏற்பாடுகளை கொஞ்சம் உற்று நோக்கினால் இதில் சில அறிவியல் தன்மைகள் இருப்பது தெரிய வருகிறது மார்கழி மாதம் அதிகாலையில் 6 மணிக்கு முன்னால் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்ற வழக்கம் அறிவியல் அடிப்படையில் நன்மை பயக்கும் பழக்கமாகும் என்று கருத இயலும். . மார்கழி மாதத்தில் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரையில் காற்று மண்டலத்தில் ஓசோன் மிக அதிகமாகக் கிடைக்கிறது. ஓசோன் என்பது உயிர்வளியின் (ஆக்ஸிஜன்) மூன்று அணுக்கள் சோர்ந்து அமைந்த காற்றாகும். சாதாரணமாக காற்று மண்டலத்தில் உயிர்வளியின் இரண்டு அணுக்களால் ஆன உயிர்வளி தான் இருக்கும். இந்த மார்கழி மாதத்தில் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரைக்கும் மட்டும் தான் உயிர்வளியின் மூன்று அணுக்கள் கொண்ட ஓசோன் கணிசமான அளவில் இருக்கும். இந்த ஓசோனுக்கு வீரியம் அதிகம். இதைச் சுவாசிப்பதால் நம் உடலில் உள்ள இரத்தம் விரைவாகச் சுத்தம் அடைகிறது. நரம்பு மண்டலத்தைத் துடிப்பாக வைத்துக் கொள்வதன் மூலம் நினைவாற்றல் பெருகுகிறது. , மார்கழி மாதக் காற்று தோலுக்கும் , வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் உண்டு என்று சொல்லப்படுகிறது. இது விஞ்ஞான பூர்வமான அறிவியல் உண்மை. இவ்வாறு நன்மை பயக்கும் ஓசோனைச் சுவாசிப்பதற்கு நாம் வெளியில் செல்ல வேண்டும். இவ்வளவு அதிகாலையில் வெறுமனே ஒரு மனிதனை வெளியே சென்று ஓசோன் நிறைந்த காற்றைச் சுவாசிக்கச் சொன்னால் எத்தனை பேர் கேட்ப்பார்கள்? அதற்குப் பதிலாக மார்கழி மாதம் அதிகாலை 6 மணிக்கு முன்னால் கோயிலுக்குப் போகும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால், மக்கள் அனைவரும் ஓசோனைச் சுவாசித்து உடல் நலம் சிறந்து, நினைவாற்றல் பெருகி நன்மை அடைவாரகள். ஆகவேதான் மார்கழி மாதம் அதிகாலையில் கோயிலுக்குப் போக வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கிறது.



அடுத்து பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்ட கோலம் போடுதல் பற்றி கொஞ்சம் விவரமாகப் பார்ப்போம். வாசலில் கோலமிடுதல் என்பது நமது பண்பாட்டில் காலம் காலமாய் தொடர்ந்து வரும் ஒன்றாகும். இந்தக் கோலங்கள் பலவகையில் போடப்படுகின்றன. இவற்றைப் புள்ளி, கோடு, கோபர்த், வர்த்தினி, அர்த்தவஸ்து, பூரணவஸ்து, சர்ப்பரேகா என ஏழாக வகைப் படுத்தியிருக்கின்றனர் நமது முன்னோர்கள். ஒரு புள்ளியை வைப்பது புள்ளி என்பதாகும். குறுக்கு வாட்டில் கோடு போடுவது கோடு என்பதாகும். பிறைநிலா போன்ற வடிவத்தின் முடிவில் இரண்டு வட்டங்களை சேர்த்துப் போட்டால் அது கோபர்த். ஒரு புள்ளியில் தொடங்கி வட்ட வடிவில் சுற்றிச்சுற்றிப் போடுவது வர்த்தினி ஆகும். பிறைநிலா வடிவத்தில் போடும் கோலத்திற்குப் பெயர் அர்த்தவஸ்து. முழு நிலா வடிவத்தில் போடுவது பூரண்வஸ்து. குறுக்கிலும் நெடுக்கிலும் வளைத்து நெளித்து போடப்படும் வடிவத்திற்கு சர்ப்பரேகா என்று பெயர்.



இப்படி விதவிதமாக வாசலில் கோலமிடுகிற இப் பழக்கம் பெரும்பாலும் ஆன்மிகம் சார்ந்த ஒன்றாகத் தான் பார்க்கப்பட்டு வருகிறது. மார்கழி மாதம் அதிகாலையில் பெண்கள் வாசல் தெளித்துக் கோலமிடுவதை இன்று மதச் சடங்காகவே நாம் பார்க்கிறோம். பல விஷய்ங்கள் சடங்காகவே நம்மால் செய்யப்பட்டு வந்தாலும் இந்தக் கோலம் போடுவதை நாம் வேறு மாதிரி பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. யோகாசனம் எனும் யோகா வாழ்க்கையை நாம் ஒரு கலையாக வாழ நமது முன்னோர்கள் நமக்குக் கொடுத்துச் சென்ற கொடைகளில் ஒன்று. அதன் அருமையைப் புரிந்து கொண்ட மேலை நாட்டினர் கூட இன்றைக்கு யோகாவை கற்றுக்கொள்ளும் நிலை உண்டாகியிருக்கிறது. இந்த யோகாவில் சின்முத்திரை என்று ஒன்று உண்டு. சின் முத்திரை என்பது ஆட்காட்டி விரலின் நுனியையும் கடடை விரலின் நுனியையும் இணைப்பதால் உருவாகும் முத்திரை. இந்த சின்முத்திரையின் அருமையை யோகா இப்படிச் சொல்கிறது. சின் முத்திரை மூலாதாரச் சக்கரத்தைத் தூண்டி ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது.



தேவையற்ற மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கிறது. ஒன்றில் முழுக் கவனத்தைச் செலுத்தி அதைச் செம்மையாகவும் முழுமையாகவும் செய்யும் திறனைப் பெருக்குகிறது.மன ஆற்றலைக் கூட்டுகிறது. சோர்வுற்ற மனநிலையைப் போக்குகிறது.



இவ்வாறு பல நல்ல விஷயங்களை உள்ளடக்கிய ஒன்று யோகா. இப்படிபட்ட யோகவை பெண்கள் எந்த வித எத்தனிப்புமின்றி இயல்பாகச் செய்து கொள்ளும் முறையில் உருவாக்கப்பட்டது தான் வாசலில் அதிகாலையில் கோலமிடும் வழக்கம். இதில் இன்னொன்றும் கவனத்தில் கொள்ளத் தக்கதாய் இருக்கிறது.அதிகாலை நேரத்தில் காற்று மண்டலத்தில் ஓசோன் படலம் அதிக அளவில் காணப்படுமாம். பெண்களின் அதிகாலையில் கோலமிடும் பழக்கத்தால் கோலப் பொடியை எடுக்கும் போது இயல்பாகவே அவர்கள் சின்முத்திரையை உருவாக்கிக் கொள்கிறார்கள். அதிகாலை நேரத்தில் காற்று மண்டலத்தில் கூடுதலாகக் காணப்படுகிற ஓசோனைச் சுவாசிப்பதற்க்கான சூழல் உருவாகுகிறது. மேலும் குனிந்த நிலையில் கோலமிடுவதால் பெண்களின் அடிவயிறு நீண்ட நேரம் அவர்களின் தொடை பகுதியினால் அழுத்தப் படுகிறது. பெண்களின் அடி வயிற்றுப் பகுதியில் தான்அவர்களின் கர்ர்ப்பப்பை அமைந்திருக்கிறது. இப்படிக் கர்ப்பப்பை நீண்ட நேரம் அழுத்தப்பட்டுக் கொண்டிருப்பதால் கருப்பைக்குக் கூடுதல் வலு உண்டாகிறது .இன்றைக்குப் பெண்கள் இது போன்ற பழக்க வழக்கங்களை கை கொள்வதில் சிரத்தை காட்டுவதை குறைத்துக் கொண்ட தன் விளைவு நடுதர வயது பெண்கள் பெரும்பாலோர் கர்ர்ப்பப் பை கோளாறினால் பாதிக்கப்பட அவர்களின் கர்ப்பப் பை அகற்றப்படும் நிலை பெருகி வருவதை நாம் கண் கூடாகக் கண்டு வருகிறோம்.பொதுவாக நமது முன்னோர்கள் சடங்காகவோ, பழக்க வழக்கமாகவோ, சம்பிரதாயமாகவோ நமக்கு மறைபொருளாகத் தந்து போனவற்றை சரியாகப் புரிந்து கொள்ளாமல் உதாசீனப்படுத்தி இழந்தவை கொஞ்சம் கூடுதல் தான்.



காரணம் இல்லாத காரியங்களே நமது சம்பிராதயத்தில் இல்லை என்று சொல்லலாம். பெண் குழந்தைகள் வயதுக்கு வந்து விட்டால் ஊராரையும் உறவினரையும் அழைத்து மஞ்சள் நீராட்டுவது எதற்காக? எனது மகள் பருவத்திற்கு வந்து விட்டாள் இந்த சமூதாயத்தில் இனி அவள் குழந்தை அல்ல தனது பங்கு பணியை சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் ஆற்றக்கூடிய தகுதி அவளுக்கு இருக்கிறது என்று அனைவரும் அறிய சொல்வதற்காகத் தான். பொதுவாக கோலங்களில் பூசணி பூ, செம்பருத்தி பூ போன்றவைகளே அதிகமாக வைக்க படும் மலர்களாகும். அனைவர் வீட்டு கோலங்களிலும் செம்பருத்தி பூ இருக்கும் ஆனால் சென்ற இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை ஒருசிலர் வீட்டு கோலங்களில் மட்டுமே பூசணி பூ இருக்கும். மற்றவர்கள் அதை வைக்க மாட்டார்கள். அதற்கு தக்க காரணம் உண்டு. நமது இந்து பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்காமல் இருக்க மாட்டார்கள். சாந்து பொட்டு ஒரு பெண் வைத்திருந்தால் அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று அர்த்தம். குங்கும பொட்டு வைத்தால் அவள் சுமங்கலி என்று அர்த்தம். அதே போலவே யார் வீட்டு வாசல் கோலத்தில் பூசணி பூ வைக்க பட்டிருக்கிறதோ அந்த வீட்டில் திருமணம் நடக்காமல் கன்னிபெண் ஒருத்தி திருமணத்திற்காக காத்திருக்கிறாள் என்பது பொருளாகும்.



இன்றைய நிலையில் மக்கள் அந்த விஷயங்களை எல்லாம் தங்களது அறியாமையாலும் அசட்டையாலும் மறந்து விட்டார்கள் அதனால் கோலங்களில் இன்ன பூ தான் வைக்க வேண்டும் என்ற விதி இல்லாமல் கையில் கிடைத்த மலர்களை எல்லாம் வைக்கிறார்கள். இப்ப்டிப்பட்ட சம்பிரதாய்ங்களில் புதைந்து கிடக்கிற உண்மைகள் நம்மால் புரிந்து கொள்ளப்ட வேண்டும். நமது முன்னோர்கள் மார்கழியின் பெருமையை போற்றவே செய்த ஏற்பாடு தான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் சொற்களால் மாதங்களில் நான் மார்கழி என்று சொல்ல வைத்த செய்தி. அதன் அறிவியல் தன்மைகளை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். மார்கழி மாதத்தின் பெருமைகளை பற்றி பேச இன்னும் நிறைய இருக்கின்றன.





No comments: