Thursday, 11 October 2012

Karrathum suttadhum Part VI- Navrathiri

A beautiful article in Tamil
நவ ராத்திரி பூஜை சிறப்புக்கள்




சர்வ லோகத்தையும் சிருஷ்டித்து, மனித குலத்தின் ஜென்ம, கர்ம, பாப வினைகளைத் தன்னுள் அடக்கி மகிழ்ந்துரையும் நீலகண்டனாம் எம்பெருமான் சிவனையும் மனித குலத்தைக் காத்து, எப்பிறவியிலும் செல்வத்தை அள்ளி வழங்கும், மால் எனப் போற்றும் விஷ்ணுவையும், பூமண்டல உயிர்களைப் படைத்து, திக்கெட்டிலும் திகம்பரனாய் விளங்கும் பிரம்மாவையும் இயக்கும் சக்திகள் மூன்று. தயாள குணவதியாய் எண்ணிலடங்கா உயிரினங்களை இயக்கி வரும் தாயாகவும், அனாதைகளுக்கு ஆதரவாகவும், பூமகளாய் நிற்கும் பராசக்தியான துர்காவும், ஸ்வர்ண தேவியாய் அஷ்ட செல்வங்களை உலகிற்கு ஈந்து, மனித குலத்தையும் பிற உயிர்களையும் மகிழ்ச்சியாய் வாழ வைக்கும் மஹா லக்ஷ்மியும், விரும்பியவர்க்கு அறிவாற்றலையும், ஞானத்தையும் அள்ளித் தரும் நாமகளாம் சரஸ்வதியும் அதி மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்கு சக்திகளாக இருந்து இப்பூமண்டலத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் இயங்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த முப்பெரும் சக்திகளை முதன்மையாக்கிக் கொண்டாடப் படுவது தான் இந்த நவ ராத்திரி பூஜைகளாகும்.



தட்சிணாயண ஆஸ்வின சுக்கில பட்ச பிரதமைத் திதியன்று தொடங்கி நவமி திதி வரை ஒன்பது நாட்கள் மகா சக்தியை துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஸ்வரூபமாய் பூஜை செய்து இந்த சக்திகளின் அருளைப் பெறுவதே நவ ராத்திரி பூஜைகளின் நோக்கமாகும். இந்த ஒன்பது நாட்களிலும் ஒவ்வொரு நாளாய் சக்தியின் அருளை வேண்டி அதற்கென அமைந்த பூஜை முறைப்படி வழிபாடு செய்து வந்தால் ஸ்தீரிகள் தீர்க்க சுமங்கலிகளாகவும், புத்திரப் பேறு இல்லாதவர்கள் புத்திரப் பேறு பெறுவதும், தோஷங்கள் பல இருந்தாலும் அவை அனைத்தும் இந்த ஒன்பது நாட்களில் அம்பாளை வேண்டுவதன் மூலம் நீங்கி விடும் என்பதும் கண்கூடு.



நவ ராத்திரி பூஜைகளின் முதல் நாளன்று அம்பாள் மகேஸ்வரியாகத் தோன்றுகிறாள். மது, கைடபர் என்ற இரண்டு அசுரர்களை அழித்து மனித குலத்தைக் காத்த பெருமை இந்த முதல் நாளன்று அம்பாளுக்கே சேருகிறது. இந்த முதல் நாளில் அம்பாளை மல்லிகைப் பூவால் அலங்கரித்து, தோடி ராகம் பாடி வழிபாடு செய்து வர எல்லா நற்பலனையும் பெற முடியும்.



இரண்டாம் நாளன்று கெளமாரியாய் அம்பாள் தோன்றி, அசுரர்களை அழித்து, தன் பிள்ளைகளைக் காத்ததைக் கொண்டாடும் நோக்கோடு, அன்று மல்லிகைப் பூவால் அம்பாளை அலங்கரித்து, கல்யாணி ராகம் பாடி, புளியோதரை படைத்து வழிபாடு செய்து வர நோய் நொடிகள் நீங்கும்.



மூன்றாம் நாளன்று அம்பாள் மகிஷாசுரனை வதம் செய்து, மனித குலத்தைக் காக்க வராகி வடிவம் கொண்டாள். சம்பங்கி மலரால் அம்பாளை அலங்கரித்து, காம்போதி ராகம் பாடி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்ய செல்வங்கள் பெருகும்.



நான்காவது நாளன்று மஹாலக்ஷ்மியாய் அம்பாள் தோன்றி மனித குலத்திற்கு சகல சம்பத்துக்களையும் வழங்குகிறாள். அன்று மஹாலக்ஷ்மியை மல்லிகைப் பூவால் அலங்கரித்து, பைரவி ராகம் பாடி, அன்னம் நைவேத்யம் செய்து வழிபட்டால் மஹாலக்ஷ்மி அருள் கூடும்.



ஐந்தாம் நாளன்று மஹாலக்ஷ்மி வைஷ்ணவி தேவியாய் அவதாரம் கொள்வதால் அன்று தேவியை முல்லைப் பூக்களால் அலங்கரித்து, பந்து வராளி ராகம் பாடி, தயிர் சாதம் நைவேத்யம் செய்து வழிபட்டால் வைஷ்ணவி தேவியின் அருள் கிடைத்து சகல பாக்கியங்களும் சேரும்.



ஆறாம் நாளன்று மஹாலக்ஷ்மி இந்திராணியாகத் தோன்றுவதால் அன்று செம்பருத்திப் பூக்களால் அம்பாளை அலங்காரம் செய்து, நீலாம்பரி ராகம் பாடி, தேங்காய் சாதம் படைத்து வழிபட மனக் கவலைகள் எல்லாம் நீங்கும், விரோதங்கள் அகலும், வெற்றிகள் பல கிட்டும்.



ஏழாம் நாளன்று சரஸ்வதி ஞான சக்தியாய்த் தோன்றுவதால் சரஸ்வதி தேவியை வெண் தாமரையால் அலங்கரித்து, பிலஹரி ராகம் பாடி, எலுமிச்சை சாதம் படைத்து வழிபட சரஸ்வதி கடாட்சம் கிட்டும், கல்வி சிறக்கும்.



எட்டாம் நாளன்று சரஸ்வதி தேவி நரசிம்ஹியாகத் தோன்றுவதால் அன்று ரோஜா மலர்களால் அம்பாளை அலங்கரித்து, புன்னாக வராளி ராகம் பாடி, சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட, கேட்ட வரம் உடனே கிடைக்கும், ஞான சக்தி மிகுதியாகும். ஒன்பதாம் நாளன்று கலைமகள் சாமுண்டியாக அவதரிப்பதால் அம்பாளை செந்தாமரை மற்றும் வெள்ளைத் தாமரையால் அலங்கரித்து, வசந்தா ராகம் பாடி, பால் பாயசம் படைத்து வழிபாடு செய்தால் தடைபட்டு வந்த பல சுப காரியங்கள் தடங்கல் இல்லாமல் நிறைவேறும்.



இந்த ஒன்பதாம் நாளன்று துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என்ற முப்பெரும் தேவியரையும் பூஜை புனஸ்காரங்களால் வழிபட்டு, அவரவர் செய்யும் தொழிற் கருவிகளையும் புத்தகங்களையும் அலங்காரம் செய்து, தேவியர் முன்னர் வைத்து, லலிதா சகஸ்ரநாமம், துர்கா நாமாவளி, லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்திரம் ஆகியவற்றால் மகா சக்திகளைப் போற்றி அம்பாளுக்குப் பிடித்த பொரி, கடலை, சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபாடு செய்தால் இனி வரும் காலம் சுபமானதாகவும், காரியங்களில் வெற்றி கொடுப்பதாகவும், தொழில் முன்னேற்றத்தை வழங்குவதாகவும் இருக்கும். இந்த நாளை சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை என்று நாம் சிறப்பாக அழைத்து வழிபட்டு வருகிறோம்.



நவ ராத்திரி விழாவின் இறுதி நாளான பத்தாவது நாள் துர்கா தேவி மகிஷாசுரனை வதம் செய்து மகிஷாசுர மர்த்தினியாகத் தோன்றுகிறாள். தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டும் இந்தப் பத்தாம் நாள் விஜய தசமி என நம் எல்லோராலும் கொண்டாடப் படுகிறது. இன்று காலை ஒன்பதாம் நாள் படைத்த தொழிற் கருவிகளுக்கு மறு பூஜையிட்டு அதைப் பயன்படுத்தினால் செய் தொழிலில் வெற்றி கிடைக்கும். ஒன்பதாம் நாளன்று படைத்த புத்தகங்களுக்கும் மறு பூஜையிட்டு, அம்பாளை வேண்டிப் புத்தகங்களைப் படிக்க, சரஸ்வதியின் அருள் உடனே கிடைக்கும். இன்று குழந்தைகளைப் பள்ளிக் கூடங்களில் சேர்த்து வித்யாரம்பம் செய்தால் குழந்தைகளுக்குக் கல்வி ஞானம் பெருகும். விஜய தசமி நாளான இந்தப் பத்தாவது நாள் இரவில் அம்பாள் குதிரை வாகனத்தில் அம்பெய்து, திருவீதி உலா வந்து மக்களைக் காப்பதாக ஐதீகம் உள்ளது.



வீரம், செல்வம், ஞானம், இந்த மூன்றும் ஒருவருக்கு இருந்து விட்டால் மனித வாழ்வு மிகச் சிறப்புடையதாகவே இருக்கும். இந்த மூன்று சக்திகளையும் முப்பெரும் தேவியரிடம் இருந்து பெறுவதே நவராத்திரி பூஜையின் சிறப்பு அம்சமாகும்.

குருஜி ‘கார்த்திகா’ சித்தார்த்

No comments: