Thursday, 11 October 2012

Karradhum sutta- Part VII Always a Solution for a Problem

தவிர்க்கமுடியாதவற்றைத் தாங்குவதே தீர்வு!




தவறிழைத்த அரசனொருவனைச் சினங்கொண்ட முனிவர் ஒருவர்,''நீ நாளையே பன்றியாகிச் சாக்கடையருகே திரியக்கடவாய்'' என்று சபித்துவிட்டார். பன்றியாக மாறிவிடும் கேவலத்தை விரும்பாத அரசன் தன் மகனை அழைத்து, ''நான், நாளை பன்றியாக மாறிய மறுகணமே என்னை வாளால் வெட்டிக்கொன்றுவிடு!'' என்று கேட்டுக்கொண்டான். எதிர்பார்த்தபடி மறுநாள் காலை அரசன் பன்றியானான். மகன் சோகத்துடன் பன்றியான தன் தந்தையை வெட்ட வாளை வீசும்போது,'' மகனே! பொறு! இன்னும் ஒருமாதம் பன்றிவாழ்க்கை எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சாகிறேன். அடுத்த மாதம் இதே நாளில் என்னைக்கொன்று விடு'' என்றான். பன்றி வாழ்க்கையில் அவன் ஒரு பெண் துணையைத்தேடிக்கொண்டான். பெண் பன்றி கர்ப்பமானது. ஒருமாதம் கழித்து மகன் மீண்டும் தந்தையைக் கொல்ல வாளுடன் வந்தபோது,'' மகனே இப்போது நான் இறந்தால் கர்ப்பமாகியுள்ள என் மனைவி ஆதரவற்றுவிடுவாள். குட்டிகள் பிறந்த பின் அடுத்த மாதம் இதே நாளில் என்னைக் கொன்றுபோடு'' என்றான். மீண்டும் ஒருமாதம் கழித்து, மகன் தந்தை தனக்கிட்ட கட்டளைப்படி தந்தையையின் அருவருப்பான வாழ்வை முடிவு கட்ட வந்தபோது,'' மகனே இந்தக் கேவலமான வாழ்க்கை எனக்கு இப்போது பழகிவிட்டது. சாக்கடை ஓரத்தில் சமாளித்து வாழவும் பழகிவிட்டேன். மனைவி, குட்டிகள் என்று பந்தமும் பொறுப்பும் எனக்கு இந்த வாழ்வையும் அர்த்தமுள்ளதாக்கிவிட்டது. இனி இப்படியே இருந்துவிடுகிறேன். என்னை இனி இப்படியே வாழவிடு. எந்தத் துன்பம் வந்தாலும் பழகிக்கொண்டு நீயும் வாழக்கற்றுக்கொண்டால், உன் வாழ்வும் மகிழ்வாக இருக்கும் '' என்று மகனுக்கு அறிவுறுத்தினான்.







நமக்கு வரும் பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள் இருக்கின்றன. முதல் வழி பிரச்சினைகளைத் தீர்க்க வழி தேடுவது. அடுத்தது, பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டுச் செல்வது. இறுதிவழி பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது. பல நேரங்களில் இந்த இறுதிவழிக்கே நாம் தள்ளப்படுகிறோம். பன்றியான அரசன் மாதிரி பிரச்சினையோடு வாழ்வதே தீர்வாகிறது.







பிரச்சினைகளோடு மோதிப்பார்த்துத் தீர்வு காணும் முதல் வழிதான் சிறந்தது என்பதில் ஐயமில்லை. எனினும் எல்லாப் பிரச்சினைகளிலும் அது நடைமுறையில் சாத்தியமாக இருப்பதில்லையே! மூப்பு, பிணி,சாவு, சூழல் முதலியவற்றைத் தடுப்பது இன்றுவரை முற்றிலும் சாத்தியமாகவில்லையே!







பிறவியிலோ, விபத்திலோ உறுப்புகளை இழந்தவர், அன்பான உறவுகளைப் பறிகொடுத்தவர், கடைசிமுறையீடும் தோற்று, தூக்குமேடை ஏறவேண்டியவர், புற்றுநோயின் இறுதிக் கட்டத்தில் வாழ்பவர்- இவர்கள் மட்டுமன்றி, ஏற்றே ஆகவேண்டிய கசப்பான பணியை ஆற்றவேண்டிய சூழலில் உள்ளவர், மனமாறுபாடுடைய மனித உறவுகளுடன் வாழ்தே தீரவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர் - இவர்களெல்லாம் பிரச்சினைகளோடு வாழ்ந்தே தீரவேண்டியவர்கள்..







''உனக்கு ஏழரை நாட்டுச்சனி. ஆனால் ஓராண்டுக்கு மேல் பிரச்சினையில்லை'' என்றான் சோதிடன். பாதிக்கப்பட்டவன் எப்படியெனக்கேட்டதற்கு,'' ஓராண்டில் கஷ்டங்கள் பழகிவிடும். மீதி ஆண்டுகளில் துன்பம் தெரியாது'' என்றானாம். துன்பங்கள் பழகிப்போனால் அதன் வேதனை கரைந்துவிடும் என்பதே உண்மை.







தணிப்பறியாத் துன்பங்களைக் கண்டு அஞ்சிஓடாமல் அதனையே ஏற்று, தம்வசப்படுத்தி வாழ்ந்தவர்கள், அதன் பலனாக மாபெரும் சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள்.



43 வயதில் நிரந்தரமாகக் கண்பார்வையிழந்த ஆங்கிலக்கவி மில்டன் அதன் பிறகே ஆங்கிலத்தின் மிகச்சிறந்த காவியமான இழந்த சொர்க்கத்தை எழுதினார்.



விபத்தில் ஒரு காலையே இழந்த இளம்பெண் சுதாசந்திரன் அதன்பிறகே செயற்கைக்காலைப் பொருத்திக்கொண்டு சிறந்த நாட்டியக்கலைஞராகவும், நடிகையாகவும் ஓளிவீசிக்கொண்டிருக்கிறார்.



தூக்குமேடை ஏறும் முன்நாளில் கூடப் பதற்றப்படாமல், கடைசியாகத் தனக்குப்பிடித்த குலோப் ஜாமனைச் சுவைத்துவிட்டு, லெனினின் 'அரசும் புரட்சியும்' என்ற நூலைப் படித்துகொண்டு ஒவ்வொரு கணத்தையும் அர்த்தமுள்ளதாக்கியவர் விடுதலை வீரர் பகத் சிங்.



கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வசந்தி பரவத்தொடங்கியதை அறிந்து, தம் மனைவியிடம், ''மதுரம்! நான் சாகலேன்னா இவங்க விடமாட்டாங்க போல இருக்கே. இவங்க திருப்திக்காவது ஒருதரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கிறதே''என்று அந்த இறுதிநாள்களிலும் நகைச்சுவையைத் தவழவிட்டார்.



பிரிட்டனில் 21 வயது இளைஞர் ஒருவர் , முற்றிலும் அத்தனை உறுப்புகளையும் முடக்கிப்போடும் மோசமான நரம்புநோயால் பாதிக்கப்பட்டு பேச்சும், உடல்அசைவும் இழந்தும், கவலைப்படாது, சக்கரநாற்காலியில் இருந்துகொண்டு, மின்னணு கருவியைக்கொண்டே தம் சிந்தனைகளை வெளிப்படுத்தி வருகிறார். அவரே இன்றைய தலைசிறந்த இயற்பியல் விஞ்ஞானிகளுள் ஒருவரும், ஐன்ஸ்டைனுக்குப்பிறகு மாபெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவரும், அண்மையில் அமெரிக்காவில் மிக உயரிய அறிவியலாளர் விருதைப்பெற்றவருமான ஸ்டிபன் ஹாக்கின்ஸ்.







பிரச்சினை எவ்வளவு பெரிதாயினும் அதனோடு ஐக்கியமாகி கூடவே வாழ்ந்து வசப்படுத்துவதற்கு உரிய துணிவையும், பொறுமையும் வளர்த்துக்கொண்டால் இந்தச் சாதனையாளர்கள் வரிசையில் நாமும் சேரலாம்.



தவிர்க்கமுடியாதவற்றைத் தாங்கும் வழிகள்:



1.சந்தித்தே ஆகவேண்டிய பிரச்சினைகளைக்கண்டு ஓடினால் தெருநாய்போல் அது நம்மைத் துரத்தும். துணிவு என்ற கல்லைக் கையில் எடுத்தால் அது தலைதெறிக்க ஓடும். அஞ்சாமையை அணிகளனாகப் பூண்டவர்களுக்கு மலையளவு துன்பங்களும் கடுகாகும்.



2.'வாழ்க்கை துன்பமயமானதுதான். அது துன்பமயமானது என்று உணர்ந்தபின் துன்பப்படத் தேவையில்லை' என்று புத்தர் கூறியதைச் சற்று ஆழமாகச் சிந்தித்துப்பார்த்தால் எந்தத் துன்பத்திலிருந்தும் விடுதலை கிடைக்கும். துன்பங்களை நேசிக்கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் துன்பங்களே நம்மைச் செதுக்கும் சிற்பிகள்.



3.உங்களைவிடத் துன்பப்படுபவர்கள் உங்களைச் சுற்றி நிறைய இருப்பதைக் கண்திறந்து பாருங்கள். உங்கள் துன்பம் தூசியாகும். 'உலகம் என்பது நாடகமேடை. நாமெல்லாம் நடிகர்கள்!' என ஷேக்ஸ்பியர் சொன்னதை ஏற்றால், வாழ்வில் சந்திக்கும் துன்பங்களும் மேடையில் நடிகர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் போல நம்மைத் தாக்கா.



4.சாக்ரடீசையும், அபிரகாம் லிங்கனையும்விடக் குடும்பவாழ்வில் துன்பப்பட்டவர்கள் யாரிருக்க முடியும்? இதனையும் மீறி சிந்திக்கவும்,செயல்படவும், உயரவும் அவர்களுக்கு உதவியது அளவற்ற பொறுமை. பொறுமையாக இருந்து, பதட்டமடையாமல் பிரச்சினைகளோடு வாழ்வது எப்படி? என உங்கள் சூழலுக்கேற்ப சிந்தியுங்கள். புதிய ஆற்றல் பிறக்கும்.

No comments: