கொஞ்சம் கம்பர், கொஞ்சம் வால்மீகி,
கொஞ்சம் சொந்த சரக்கு
விபீஷணன் ராமனிடம் வந்து அடைக்கலம்
ஆகும் இடம். விபீஷ்ணன் இதற்கு முன் ராமனைப் பார்த்தது கிடையாது. இலங்கையில் இருந்து கொண்டு, அவன் மட்டும், ராமன் மேல் பக்தி கொண்டு அவரிடம் சரணம் அடைய வந்து இருக்கிறான் என்பது ஒரு
ஆச்சர்யமான விஷயம்.
எத்தனையோ மலர்கள்
இருப்பினும் தாமரை தான் சூரியனைப் பார்த்தவுடன் மலர்கிறது. அது போலத்தான். அது
நன்மையில் முடியும் ஒரு விஷயமாக இருந்தால் தெய்வ அணுக்ரஹம் என்றும் தீமையில்
முடியுமானால் “பிராரப்தம்” என்றும் கூறுகிறோம்.
காணாமலே காதல் என்பது ரொம்ப
அபூர்வமான விஷயம். அருணகிரிநாதர் சொன்னது, பக்தி செய்வதற்கு அறிவு அவசியமில்ல,
அன்பு போதும். (உன்னை அறியும் அன்பைத்
தருவாயே). “எதோ விட்ட குறை தொட்ட குறை” – ராமரின் மேல் அன்பை வைத்துவிட்டான். அவரை பார்க்க வேண்டும் என்று உருகுகிறான்.
கம்பர் சொல்கிறார் -விபீஷணன்
உருவத்தில்
“நான் இவனை இதற்க்கு முன்
பார்த்தது கிடையாது. அவனைப் பற்றிக் கேள்விப் பட்டத்தும் கிடையாது. அவன் மேல்
எனக்கு அன்பு பிறக்க என்ன காரணம் என்றும் தெரியவில்லை. எலும்பு வரை குளிர்கிறது. என்
மனம் உருகுகிறது.
'முன்புறக் கண்டிலென்; கேள்வி முன்பு இலென்;
அன்பு உறக் காரணம் அறியகிற்றிலேன்;
என்பு உறக் குளிரும்; நெஞ்சு உருகுமேல், அவன்
புன் புறப் பிறவியின் பகைஞன் போலுமால்
தலைப்பில் நான் சொல்லி இருக்கும்
வார்த்தையை சொல்கிறான்.
பிறவி என்ற பகையை அழித்து மீண்டும்
பிறக்காமல் செய்வான். “புன் புறப்பிறவியின் பகைஞன் போலுமால்”
அரக்கர்களில் பல
தினுசுகளை, ராமயணத்தில் பார்க்கலாம். மாரீசன் தாடகை வதம் போது, ராமன் விட்ட அம்பில்
ஓட்டமாக ஓடி, கடலுக்குள் புகுந்து கொண்டான்.
அதனால் தான் ராவணன், மாரீசனிடம் வந்து. சீதையை அபகரிக்க உதவி கேட்கும்போது,
அரண்டு போகிறான். வால்மீகி எழுதுகிறார். “எனக்கு “ர” சப்தம் கேட்டாலே பயமாக
இருக்கிறது” என்கிறான,
ராமர் “தர்மத்தின்
உருவம், ரொம்ப கருணை மிக்கவன், சத்தியத்தை மீறாதவன், பராக்ரமம் மிக்கவன், இதை நான்
நேரில் பார்த்தவன். ஒழுங்கு மரியாதையாய் சீதையை அபகரிக்கும் உன் நோக்கத்தைக் கை
விடுவாயாக” என்கிறான்.
இது எனக்கு மிகவும் பிடித்த வாசகம். நம் விரோதி கூட நம்மை
புகழுமாறு ஒரு வாழ்க்கை வாழ வேண்டும், அட் லீஸ்ட் முயற்சியாவது செய்ய வேண்டும்
சூர்ப்பனகை கதை நமக்குத
தெரியும். அவள் யாரிடம் எப்படிப் போட்டுக் கொடுத்தால், சரியாக இருக்கும் என்று
யோசித்து, இலக்குவன், காதையையும் மூக்கையும் வெட்டியவுடன், நேரே கர தூஷனாதிகள்
இடம் சென்று, “ராமன் என்று ஒருவன் இருக்கிறார், அவன் பெரிய வீரனாம். ஒரு வில்
வைத்து இருக்கிறான். அவன் தம்பி என்னை அவமானப் படுத்தி விட்டான், நீ அவனை வதம்
செய்யாவிட்டால், உன் வீரத்திற்கே இழுக்கு” என்கிறாள்
நேரே ராவணனிடம் போகிறாள். “ராவணா, சீதை என்று ஒரு அழகான பெண்
இருக்கிறாள். அவள் கணவன் ஒரு அற்ப மானுடன், ராமன் என்று பெயர்” என்று அவனிடம்
சொல்கிறாள்.
கர தூஷனாதிகள் வீரர்கள்,
அவர்களுக்கு வீரம் முக்கியம் ராவணன் வேற லெவல்.
இந்த்ரஜித் என்று ஒரு மாவீரன் அவனை யாரும் வெல்லவே
முடியாது. லக்ஷ்மணனே மிகவும் கஷ்டப்பட்டு அவனை கொன்றான். தன் தந்தை செய்த தவறால்,
தன் தந்தை உயிருடன் இருக்கும்போதே, அவர் கண் முன்னே மரணத்தைத் தழுவினான். இதுதான் கொடுமை. தாம் செய்த தவறு குழந்தைகளை
பாதிக்கும் என்பதை இந்த்ரஜித் மூலமாக நமக்கு ராமாயணம் உணர்த்துகிறது
கொஞ்சம் சரணாகதி தத்துவத்தைப் பார்ப்போம். சரணாகதி பண்ணியவர்களில் மிக முக்கியமானவர்கள்,
விபீஷணன் அடுத்து சுக்ரீவன். தன்னை யார் வந்து சரணம் என்று சொன்னாலும், கொஞ்சம்
கூட யோசிக்காமல் அடைக்கலம் கொடுக்கும் தன்மை உடைய ராமன், விபீஷணன் “சரணாகதி” என்று
வந்த பொது, எல்லோரிடமும் ஆலோசனை கேட்கிறான். நிறைய மாறுபட்ட கருத்துகள் வந்த போதும். கடைசியில்,
ராமனின் “அடைக்கல” குணத்தால் விபீஷணனுக்கு அடைக்கலம் தருகிறான்.
விபீஷணனுக்கு சரணாகதி பண்ணியதில் பெருமை இல்லை.
காகாசுரனுக்கு பண்ணியதில் தான் ராமன் உயர்ந்து நிற்கிறான். காகாசுரன் கதை எல்லோருக்கும் தெரியும், சீதையை துயரப்படுத்தியதை ராமன் பார்க்க, ஒரு
புல்லை எடுத்து, ஜபித்து, விட, அது அவனை, துரத்து துரத்து என்று துரத்தி,
கடைசியில், ராமன் திருவடியிலிலேயே வந்து விழ, தொடுத்த அம்பு, வீணாகி விடக்கூடாது
என்பதற்காக, ஒரு கண்ணை பறித்து அவனை உயிரோடு விடுகிறான்
இதை அருணகிரி மிக அழகாக சொல்கிறார்
காதும் ஒரு விழி காக முற அருள் மாயன்
அரி திரு – மருகோனே
இவர் காதையையும் துண்டித்தான் என்கிறார்.
இன்னும் சொல்லப் போனால், காகாசுரன்
சீதையை காயப் படுத்தி இருக்கிறான். ராவணனை விட மோசம். ராவணன் சீதையை மனதளவில் தான் துன்பப்
படுத்தினான். இருந்தாலும் ராமன்
காகாசுரனிடம் காட்டிய கருணை, நமக்கு எல்லாம் ஒரு பாடம்.
இன்னா செய்தாரை ஒருத்தல்....குறள்
நமக்கு நினைவில் வந்தாலும், எத்தனை பேர் அப்படி இருப்போம். ?