Monday, 17 February 2025

கோவில் மாமாவும், மஹா பெரியவாளும்

 

21.01.2025 அன்று சாயந்திரம் 4 மணிக்கு கோவில் மாமா சிவலோக ப்ராப்தி அடைந்தார்.

மைலாப்பூரில் ஒரு இருபது இல்லை பத்து வருஷம் இருந்தவர்களுக்கு, கோவில் மாமாவை நன்கு தெரிந்து இருக்கலாம்..  மந்தவெளி, திருவேங்கடம் தெரு, நார்டன் ரோடு, மற்றும் பல அடுக்கு மாடி கட்டிடங்களில் உள்ள பிள்ளையார் கோவில்களில் உள்ள பிள்ளையாருக்கு பூஜை செய்யும் ஒரு பிராமணர்.  நார்டன் ரோடில் இருக்கும் டாக்டர் பீ.எஸ் ராமக்ருஷ்ணன் அவர்களின் ‘சர்ஜிகல் கிளினிக்” இல் உள்ள பிள்ளையார் கோவிலும் இவர் ‘உபாத்யாயம்” தான்.

ஒரு பை கையில் வைத்துக்கொண்டு, பஞ்சகஜம், வஸ்திரம், வளர்ந்த தாடி சஹிதம், நடந்து போய்க் கொண்டே இருப்பார். தேவநாதன் தெரு, மந்தவெளி மார்கெட், ராமகிருஷ்ண மடம், கபாலி கோயில், வெள்ளீஸ்வரர் கோவில் போன்ற பல இடங்களில் சர்வ சாதாரணமாக பார்த்து இருக்கலாம். சட் என பார்த்து விலகும் முகம்.

2 வருடம் முன்பு, ஒரு சின்ன டேப் ,மாதிரி ஒன்று வாங்கி வைத்துக்கொண்டு, ரோடில், சன்னமாக அவருக்கே கேட்கும்படி, ருத்ரம், சமகம், கனக தாரா....இத்யாதி ச்லோகங்களைக் கேட்டுக்கொண்டே செல்வார். அதுதான் அவர் சொத்து. மற்றவர்க்கு கனவிலும் கூட கேடு நினைக்காத பேர்வழி. அவர் உண்டு அவர் வேலை உண்டு

 

 

 

என்று இருப்பவர். அவர் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்து கொண்டு யாரோ கொடுக்கும் மொபைல் சார்ஜ், மற்றும்

சாப்பாடு, தெரிந்த ஆட்டோ என்று வாழ்க்கையை ஒட்டிக் கொண்டு இருந்தார்

நான் திருவேங்கடம் (விரிவு), தெருவில், கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வீட்டின் மேல் போர்ஷனில் இருக்கும்போது (என்று நினைக்கிறேன்), எதிரில் உள்ள, பிள்ளையார் கோவிலுக்கு தினமும் பூஜை செய்ய வருவார். செய்துவிட்டு, பிரசாதம் கொடுக்க, கி.மூ ஆத்துக்கு வர, எனக்கு பரிச்சயமானார். பல விஷயங்களில், எனக்கும் அவருக்கும் ஒத்துப் போக, சட் என்று எனது மனதில் ஒட்டிக் கொண்டார். என் மனைவியிடம் (அவள் கலியுக நாயன்மார்களில் ஒருத்தி, யாராவது அடியவர்க்கு “அமுது படைத்து விட்டு பிறகு தான் அவள் சாப்பிடுவாள்). கோவில் மாமா. வசமாக மாட்டினார். அவரைப் பற்றி அறிந்துகொண்டு, காபி, பிறகு, டப்பாவில் சாப்பாடு என்று கொண்டுக்க ஆரம்பித்து பல வருடங்கள் அது தொடர்ந்தது. அவர் மனைவி பல வருடங்கள் உடல் நிலை சரியாக இல்லாமல் போன வருடம் இறந்து போனாள். மிகவும் ஸ்ரமமான மரணம்.

நான் திருவேங்கடம், சாய் பாபா கோவில் பின்புறம், சப்த்கிரி அபார்ட்மென்ட், திரும்ப திருவேங்கடம், இப்போது, ஸ்ரீனிவாச AVENUE, இராஜா அண்ணாமலை புரம் என்று மாறினாலும், அவர் மாறாமல் எங்களை பின் தொடர்ந்து வந்தார்.

 

 

என் மனைவி அவர் இரண்டு நாள் வரவில்லை என்றால், போன் பண்ணி விடுவாள். திடீரெண்டு இரவு 7 மணிக்கு

போன் செய்து காபி வேண்டும் வரவா என்பார். ஏன் மனைவி காபி யும் கொடுத்து, இரண்டு இட்லியும் கொடுப்பாள். “அமாவாசை” என்றால் நிச்சயம் ராத்திரி பலகாரம் எங்கள் வீட்டில் தான்.

வீட்டிற்கு வந்தால், கண்ணை மூடிக் கொண்டு த்யானம் பண்ண ஆரம்பித்து விடுவார். சுவாமி ரூமுக்கு சுவாதீனமாக வந்து உட்கார்ந்து இருப்பார். அவருடைய டேப் பை, போட்டு பாட்டு ஸ்லோகம் கேட்பார்,  பூஜை பண்ணச் சொன்னால் பண்ணுவார். நைவேத்யம் பண்ணுவார். ஆக, எங்கள் வீட்டில் ஒரு அங்கமாகவே போய் விட்டார். என் குழந்தைகள் கல்யாணத்தில் வந்து ஆசீர்வாதம் பண்ணினார். என்னுடைய 60 விழாவில் திடீரென்று வந்து ஒரு சால்வையைப் போத்தி, ஆசீர்வாதம் செய்து விட்டுப் போய் விட்டார்.

அவர் அம்மாவைப் பற்றி சொல்லாத நாளே இல்லை. வாழ்ந்து கெட்ட குடும்பம். ஆகவே வலிகள் அதிகம்.

போன வைகுண்ட ஏகாதசி அன்று விடியற் காலை 3  மணிக்கு மாதவ பெருமாள் கோவில் சென்று 8 மணிக்கு வீட்டிற்கு வந்து காபி குடித்துவிட்டு, அடுத்த நாள் கூடாரவல்லி க்கு சக்கரை பொங்கல் செய்யச்சொல்லி (திருவேங்கடம் தெரு பிள்ளையார் கோவில் நைவேத்யம்)

 

சென்றவர், அடுத்த நாள் வரவே இல்லை. என் மனைவி போன் செய்ய, ஒரு ஆட்டோ காரன் எடுத்து அவர் மந்தவெளி BSS ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆயிருக்கார் என்றார். ஷாக்.

நான் வைகுண்ட ஏகாதசிக்கு, எங்களை வரகூர்  அகண்ட விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணத்திற்கு போய் விட்டேன். கூடாரவல்லிக்கும்  அங்கேயே இருந்ததால், எனக்கு இந்த விஷயம் தெரியாது. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அவர் மருத்துவமனை யில் டிஸ்சார்ஜ் – ஆனவர் அதற்க்கு பிறகு உடல் நிலை தேறாமல், இசபெல் மருத்துவனையில் சேர்த்து, 4 -5 நாட்களில் இறந்து போனார். வைகுண்ட ஏகாதசியில் இருந்தவர் அடுத்த ஏகாதசிக்கு இல்லை

சட் என்ற அந்த ஒரு இறப்பும், அதன் பிறகு ....

1 அவரின் உறவு பையன் “காரியம் பண்ண வர மாடேன்” என்று சொன்னது

2. அவரின் ஷெட்டகர், தன் மனைவுடன் (87 வயது) வந்து, நின்று அவரது காரியங்கள் செய்ய உதவி செய்தது

3. இசபெல் ஆஸ்பத்திரியில், அவர் மாலை 4 மணிக்கு  மரணிக்க, நான் என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்க, ஏன் ஆடிட்டர் நண்பன் ராஜு, உடனே ஒரு வாத்யாரை அனுப்பி, 7 மணிக்குள் காரியம் செய்ய உதவியது

 

 

3. “வாங்க சார், இதை மாதிரி அனாதைப் பிர....ளை நான் தூக்கி இருக்கிறேன்” என்று ஏன் கூடவே இருந்த ஏன் நண்பர் பி. எஸ். பள்ளி. ஸ்ரீ. ஸ்ரீனிவாசன்.

4’ இவ்வளவு காலம் பிள்ளையாருக்கு ஆசை ஆசை யாக பூஜை செய்து, அவருக்கு கொள்ளி போடக் கூட ஆள்

இல்லாமல் அனுப்பிவைத்த “சதா விமுக்தி தாயகம்” என்று போற்றக்கூடிய பிள்ளையார்  !!! (ஏன் அப்படிச் செய்தார் ?)

5. அவர் நக்ஷத்ரம், கோத்ரம், ஷர்மா கூட யாருக்கும் தெரியாமல் இருந்தது, அதை நானாவது தெரிந்து வைத்துக் கொண்டு இருக்கலாமோ என்று - எனக்கு ஏன் மேல் வந்த கோபம்

6. அவர் நாமிணீ போடாததாலும், செக் புக், நெட் பாங்கிங் என்ற எந்த ஒரு வசதியையும் வைத்துக் கொள்ளாமல், வங்கியில் இருந்து எடுக்க முடியாமல் போன சில லக்ஷங்கள்

7. அவரை இசபெல் ஆஸ்பத்திரியில் சேர்த்து. இறந்த பிறகு பல உதவிகள் செய்த மந்தவெளியில் இருக்கும் டாக்டர் ரேவதி.

சில பேரின் இறப்பு, ஒரு பாடம், சில பேர், ஆச்சர்யம், சில பேர் ஒரு கழிவிரக்கம். மாமா மூன்றும் கலந்த கலவை. இறந்தபிறகு, அவரை இன்னும் சற்று கவனித்துக் கொண்டு

 

 

 

இருக்கலாமோ என்று தோன்றியது.  ஏன் என்று தெரியவில்லை. அவர் வீட்டில் வந்து செய்த த்யானத்தில் ஒரு உண்மை இருந்தது. எனக்கும் த்யானம் அவ்வப்போது கூடியது. அவர் ஆசியும் கூட இருக்கலாம். என் வீட்டிருக்கு வந்தால் தான் அவருக்கு “தன் வீட்டில் இருந்து” போல் இருக்கிறது என்று அடிக்கடி சொல்லுவார். ஒவ்வொரு தடவை ஏன் மனைவி ஏதாவது சாப்பிட குடுத்து விட்டு அவருக்கு நமஸ்காரம் பண்ணுவாள். “சௌபாக்யவதி பவ” என்ற ஆசி  என்ற அவரது ஒலிகள் இப்போது காற்றில் கரைந்து விட்டது.   

முற்றும், OOPS

என்னது, இது ?.....  மஹா பெரியவா என்று தலைப்பில் ஒரு வார்த்தை இருக்கிறது, அதை பற்றி ஒன்றுமே எழுதவில்லை என்றுதானே......? 

மாமா காரியங்கள் முடிக்க, அங்கு இங்கு பணம் வாங்கி, அவர் வீட்டில் இருந்த சில பொருள்களை விற்று....நானும் கொஞ்சம் பணம் போட்டு, ராம்ஜி வாத்யார் மூலமாக அவரது காரியங்களை முடித்த பிறகு, கொஞ்சம் பணம் இருந்தது அதை என்ன செய்வது என்று தெரியவில்லை. மயிலாப்பூர் சங்கர மடத்தில் கொடுத்து விடலாமா, வேத பாடசாலை, அனாதை ஆஸ்ரமம் என்று பல குழப்பங்கள்,

எனது ஆத்து வாத்யார், மயிலாப்பூர் ஸ்ரீ சுவாமிநாத சாஸ்த்ரிகள் இடம் என்று கேட்கலாம் என்று திடீரென்று தோன்ற, அவர் வீட்டிற்குப் போனேன்.

 

அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல். “மைலாப்பூரில், மஹா பெரியவா கோவில் ஸ்ரீ கணேஷ் ஷர்மா அவர்களால், புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடை பெற இருக்கிறது, அதற்கு ஏதாவது ஒரு கைங்கர்யத்திற்கு கொடுத்து விடுங்கள்” என்று சொல்ல – மிகவும் அழகான முடிவாக இருந்தது.

எனக்கு கோவில் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியும்.  ஆனால  கும்பாபிஷேகம் எப்போது ? என்று தெரியாது. நான் வீட்டிற்கு சாப்பிட்டுவிட்டு சாயந்திரமாக போலாம் என்று நினைத்தவன், போய் பணத்தை கொடுத்து விட்டு வந்துவிடுவோம். ஜி பெ தானே, என்று அந்த இடத்திற்குப் போனேன்.

 

இப்போதுதான் ட்விஸ்ட்.

அங்கு பெரிய கும்பல். என்னடா இது !!! என்று போய் பார்த்தால், பெரியவா பிரதிஷ்டா தினம். இன்னும் அரை மணியில் பெரியவா பிரதிஷ்டை பண்ணுவதற்காக மூல விக்ரஹம் தயாராக இருக்க, ருத்ரம், பாட்டு, என்று அந்த இடமே திமிலோகப் பாட்டுக் கொண்டிருந்தது. எனது நண்பர், ஸ்ரீ. ராமநாதன், மற்றும் சில நண்பர்கள் அங்கு இருந்ததால், சந்தோஷமான தருணங்கள்

கும்பகோணத்தில் இருந்து ஸ்ரீ. தினகர ஷர்மா, கணேஷ் ஷர்மா  போன்ற பல பெரியவர்கள் நிறைந்த அந்த இடம் தேவ லோகம் போல காட்சி அளித்து. நான் ருத்ரம் சொல்லி, சில பாடல்கள் பாடி, மருந்து (பீடத்தின் கீழே வைப்பதற்கு)

 

செய்வதற்கு உதவிகள் செய்தேன். பிரதிஷ்டை முழுவதும் தரிசனம் செய்வதற்கு பெரிய பாக்கியம் கிடைத்தது.

வீட்டிற்கு 3 மணிக்கு வந்து சாப்பிட்டேன்....

முடிவுரை-

நான், கோவில் மாமாவுக்காக செய்தது சரியா,? ஒழுங்காக அவரை கரையேத்தினேனா ? என்று மனக்குடைச்சல் இருந்து கொண்டே இருந்தது.

நான் பணம் என்னவோ அடுத்த நாள் தான் கொடுத்தேன் (வேத ப்ராம்ணாளுக்கு சாப்ப்ட்டுக்காக) அனால் அதற்க்கு முதல் நாளே என்னை வரவழைத்து, நான் இருக்கிறேன் என்று கையை தூக்கி ஆசீர்வாதம் பண்ணுவது போல், நான் செய்த காரியங்களை ஆமோதிப்பது போல், “கருணை புரியம் கண்கள், அருள் தரும் கரங்களாக”

எனக்கு பணம் வேண்டாம், நீ வந்து என்னைப் பார் என்று சொல்வது போல....................

நிச்சயாக முடிவுரை.

இவ்வளவு படித்த உங்களுக்கு அவர் பெயர் என்ன என்று தெரிந்து கொள்ள தோன்றவில்லை !!. எனக்கும் தான். அவர் இறந்த பிறகு, அவர் ஆதார் கார்டில் கண்டுபிடுத்தேன், ஆர். கிருஷ்ணமூர்த்தி என்று......

No comments: