Friday, 12 August 2022

பெருமாள் கோவிலில் “ஸ்ரீ ருத்ரம் சொல்லி அபிஷேகம்”

கோகுலாஷ்டமி இன்னும் 10 நாட்கள் வரும் நிலையில் இந்தக் கோவிலை பற்றி எழுதலாம் என்று.......

பொன்னியின் செல்வன் டீசர்வெளி வந்த பிறகு, ஹரியும் ஹரனும் ஒண்ணு, அதை அறியாதவன் வாயிலே மண்ணு, என்ற வார்த்தை மிகவும் பிரபலமாகி விட்டது. தஞ்சாவூர் பற்றிய ஒரு கணிப்பு மிகவும் உச்சத்தில் சென்று விட்டது. அதே தஞ்சை மாவட்டத்தில் வாயளவில் பேசாமல், நிஜமாகவே ஒரு கோவில் ஹரி ஹர பேதமில்லாமல் இருக்கிறது என்பது தான் ஆச்சர்யம்.

இந்த சிறிய கோவிலில் பல ஆச்சர்யங்கள் அதிசயங்கள்

1)
எந்தப் பெருமாள் கோவிலிலும் , ஸ்ரீ ருத்ரம், சமகம் சொல்லி, பெருமாளுக்கு அபிஷேகம் செய்வதை யாரும் பார்த்திருக்க முடியாது. வீபூதி இட்டுக்கொண்டு பெருமாள் கோவிலுக்குப் போனாலே, நம்மை ஒரு மாதிரிபார்க்கும் பட்டாச்சார்யார்களை மைலாபூரிலேயே நான் பார்த்து இருக்கிறேன்.

அது மட்டுமில்லை நான் சொல்லப்போகும் இந்தக் கோவிலில் பட்டாச்சார்யார்களே, ஸ்ரீ. ருத்ரம் சொல்ல ஆரம்பித்த பிறகுதான், மற்றவர்கள் சொல்ல வேண்டும்.

அது மட்டுமல்ல.

2)
பஞ்ச கச்சம் கட்டிக் கொண்டு இருந்தால் தான் சடாறிவைப்பார்கள்.

3)
கிராமமே காலியாகி மடிப்பாக்கத்திலும், நங்கநல்லூரிலும், வெளி நாடுகளிலும் குடியேறிய பிறகும் கூட, பல பிராமண குடும்பங்கள் இன்றும் இந்த் கிராமத்தில் இருந்து அந்தக் காலத்தில் சொன்ன ஸம்ப்ரதாயங்கள், பூஜை, ஸ்வாமி புறப்பாடு எல்லாம் இன்றும், ஒன்று விடாமல் நடந்து கொண்டு இருப்பது ஆச்சர்யத்திலும், ஆச்சர்யம்.

4)
வரும் காலத்தில் கோவிலில் ஸ்வாமிக்கு விளக்குஏற்றுவதற்க்குக் கூட பணம் இருக்காது என்று அன்றே கணித்த முன்னோர்கள் கட்டளைஎன்று ஒன்றை ஏற்படுத்தி, ஒவ்வொரு உற்சவத்திற்க்கும், ஒரு குடும்பம் பொறுப்பு எடுத்துச் செய்வது என்று முடிவு செய்து, இன்றும் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள், “அவர்கள் அமெரிக்காவில் இருந்தாலும்”, அந்த நாளில் வந்து அபிஷேக ஆராதனைகள் செய்வது, இன்னும் ஆச்சர்யம்.

இந்தக் கோவிலில் உறியடி உத்சவம் மிகவும பிரசித்தம். அந்த உறியை, சிறுவர்களும், இளைஞர்களும் ஒரு நீளமான குச்சியால் முதலில் வேகமாக தட்டுவார்கள். பிறகு பிரமிடுபோன்று நின்று உயரே தூக்கப்படும் உறியை பிடிக்க முயல்வார்கள். இதை முதலில் ஒரு நீளமான குச்சியால் ஒரு அடி அடி அடித்து ஒரு வயதானவர் துவக்கி வைப்பார், அவரும் ஒரு கட்டளைக்காரர். அவர் குடும்பம் தான் முதலில் அடிக்க வேண்டும்.

இப்படி உறியை அடித்து விளையாடும் நபர்களின் மீது தண்ணியை மூஞ்சியில் அடிப்பார்கள். அப்போது அவர்கள் நிலை தவறி கீழே விழுவார்கள். அந்த தண்ணீர் முதலில் அடிக்கும் நபர் ஒரு கட்டளைக்காரர்கள் தான்.

5)
இன்றும் இந்த ஊரில் பிறந்தவர்கள், இந்த ஊர் பெருமாளைக் குல தெய்வமாகக் கொண்டவர்கள், தன் முதல் சம்பளத்தை அப்படியே பெருமாளுக்குக் கொடுத்து விடுவார்கள்.

6)
திருப்பதிப் பெருமாளுக்கு வேண்டிக்கொண்டு இங்கே பிரார்த்தனையை முடிக்கலாம். ஆனால் இங்கே
வேண்டிக்கொண்டு, திருப்பதியில் செய்ய முடியாது.

இப்படிப் பல பெருமைகளைக் கொண்ட ஊர் பூபதிராஜபுரம் என்று அன்று அழைக்கப்பட்டு, வராஹபுரி என்று பிறகு அழைக்கப்பட்டு, வரகூர் என்று அழைக்கப்படும் கிராமம் தான் இது.

சங்கீத மும்மூர்திகள் என்று அழைக்கப்படும் ஸ்ரீ. தியாகராஜர், ஸ்ரீ. முத்துசாமி தீக்ஷிதர், ஸ்ரீ. ஸ்யாமா சாஸ்த்ரிகள் போன்ற மகான்கள் அவதரித்த சோழநாட்டில், ஆந்திராவில் பிறந்த ஸத்குரு நாராயண தீர்த்தர் என்ற மகான், இங்கு வந்து, கிருஷ்ணனின் பிறப்பு, பால லீலைகள் மற்றும் ருக்மிணி கல்யாணம் வரை கூறும் கிருஷ்ண லீலா தரங்கிணிஎன்ற அற்புதமான பாடல்களை, எழுதி, அவரே பாடி, அதற்க்கு, பரமாத்மா நடனம் ஆடி, அவருடனேயே ஐக்கியமான புண்ய க்ஷேத்ரம் இது. இதற்க்கு ஆஞ்சநேயர் தாளம் போட, இப்போதும் அந்த "ஆஞ்சநேயர் தாளம் கொட்டி" ஆஞ்சநேயர் என்று அருள் பாலிக்கிறார்.

வரகூர், திருவையாறு திருக்காட்டுப்பளி மார்க்கத்தில் செந்தலை அருகே உள்ள ஒரு சிறிய கிராமம். வரகூர் பாதை என்று ஒரு பஸ் ஸ்டாப் உண்டு. அங்கிருந்து 2 கிலோமீட்டர் நடந்தால் கிராமத்தை அடையலாம். நடந்து சென்றால் பசுமையான புல் வெளிகளும், வயல் நெல் குருத்துகளும் அதன் பச்சை வாசனையும், வாழை தோப்பும் நம்மை சொக்க வைக்கும்.

மிகச் சிறந்த பாகவதோத்தமர்கள் பிறந்து, வளர்ந்து, மிகப் பெரிய பதவியை அடைந்து, காஞ்சி மஹா பெரியவர்களின் கையால் சன்மானம், ஏன், ஜனாதிபதி கையால் பரிசு பெற்று கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். சில பெயர்களைக் கீழே கொடுத்து இருக்கிறேன்

ஸ்ரீ கோபால பாகவதர், இன்று நாம் பாடும் ஸம்ப்ரதாய பஜனைக்கு வித்திட்டவர். ஸ்ரீ. எஸ். வீ குருஸ்வாமி சாஸ்த்ரிகள் ஸத்குரு ஸ்ரீ நாராயண தீர்த்தரின் கிருஷ்ண லீலா தரங்கிணியை எளிமைப் படுத்தி, எல்லோரும் இன்றும் பாடும்படியாக செய்த பெரிய மகான். வரகூர் aஸ்வாமிகள் என்று சொல்லப்படும், ஸ்ரீ. அச்யுத கிருஷ்ண சரஸ்வதி இங்கு பிறந்து, திருவாரூர் அருகே அரசவனங்காடு கிராமத்தில் சமாதி ஆனவர். இன்றும், அங்கு, அவரது அதிஷ்டானம், அரசவங்கட்டில் தினமும் அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பாக இருக்கிறது. ஸாம வேதத்தில் கரை கண்டவர்கள் இந்த ஊரில் இருந்தார்கள் என்பது இன்னொரு சிறப்பு.

கிராமத்திற்க்கு உள்ளே நுழையும்போது இரட்டைப் பிள்ளையார் நம்மை அன்புடன் வரவேற்பார்கள். இவர்கள் மாமனார்-மாப்பிள்ளை பிள்ளையார் என்று தொன்று தொட்டு அழைப்பார்கள். அதன் எதிரில் அருமையான குளம். அதைக் கடந்து வந்தால், ஸ்ரீ ஆனந்தவல்லி உடனுறை, மகா கைலாச நாதர் கோவில் இருக்கிறது. ஸத்குரு ஸ்ரீ. நாராயண தீர்த்தர் அவர்களின் அதிஷ்டானம் இங்கு உள்ளது என்பது இன்னொரு பெருமை. இதை ஏணிப்படிகளில் மாந்தர்கள்என்ற நூலில் சிவன் ஸ்வாமிகள்மிக அழகாக எழுதி இருக்கிறார்

அதை தாண்டி அழகான கிராமம், கிராமத்தின் நடுவே மிக அழகான சிறிய கோவில். இங்குதான் ஸ்ரீதேவி உடனுறை ஸ்ரீ. வெங்கடேச பெருமாள். சத்குரு நாராயண தீர்த்தருக்கு, கிருஷ்ணனாக காட்சி கொடுத்து, ஸ்ரீ. கிருஷ்ண லீலா தரங்கிணி பாடிய இடம். முடிவில் காவல் தெய்வமாக பெரமனார்இருந்து கிராமத்தை இன்றும் காத்துக் கொண்டு இருக்கிறார்.

ஸ்ரீ விட்டல் தாஸ் மகாராஜ் அடிக்கடி சொல்லுவார் - ஜெயதேவர் பாடிய அஷ்டபதியை அவர் எங்கு பாடினார். பூரி ஜேகன்னாதர் கோவிலிலா இல்லை கொஞ்சம் தூரத்தில் அவர் பிறந்த கிராமம் இருக்கிறது அங்கேயா ? என்று. ஸ்ரீ நாராயணீயம் பாடிய பட்டத்ரீ கோவிலில் ஸ்வாமி எதிரில் பாடினாரா ? என்றும் தெரியாது. இன்றும் குருவாயூர் கோவிலுக்குச் சென்றார், ஸ்வாமி சன்னதியில் எதிரில் பாராயணம் செய்ய அனுமதி இல்லை.

ஆனால் வரகூரில் ஸ்வாமி சன்னதி எதிரில் மிக அருகில் தரங்கம் பாடலாம். இன்றும், பாகவதர்கள், ஸத்குரு பாடிய இடத்தில், தரங்கம் பாடுவது கண் கொள்ளாக் காட்சி.

ஸ்ரீமத் பாகவதத்தில் ராதையைப் பற்றிக் கூறவில்லையே என்ற ஆதங்கத்தில், பூரி ஜெகந் நாதரே ஜெயதேவராக அவதரித்து கீத கோவிந்தம் என்னும் பக்தி ரசம் சொட்டும் கிரந்தம் செய்தாராம். அந்த ஜெயதேவர் கண்ணனின் லீலைகளைப் பாடவில்லையே என்று வருந்தி, அவரே நாராயண தீர்த்தராக அவதரித்து கண்ணனின் லீலைகளைப் பாடினார் என்றும் இங்கு கூறப்படுவதுண்டு

தரங்கம் பாடல்கள் மட்டும் இல்லை. அது உபநிஷத் அடங்கிய ஒரு வேதம். "க்ஷேமம் குரு கோபால, மற்றும் வீக்ஷேகம் கதா" போன்ற பல அருமையான பாடல்கள் அடங்கிய தரங்கம், கலியைப் போக்க வந்த பொக்கிஷம்.

கிருஷ்ண லீலா தரங்கிணி பற்றி ஒரு அற்புதமான விளக்கம் சொல்வதுண்டு:

"
ஸ்ரீகோபாலன் என்னும் கார்மேகத்திலிருந்து பெருகிய- அவரது பெருங்கருணை என்னும் மழைத் தாரைகள், ஸ்ரீநாராயண தீர்த்தர் என்ற மலைமீது விழுந்து பரவி, அவை முழுதும் ஒன்று சேர்ந்து, இந்த கிருஷ்ணலீலா தரங்கிணி என்னும் ஆறாகத் தோன்றி, கிருஷ்ண பக்தர்கள் என்னும் வயலில் பாய்ந்தோடி, உலகை இன்பமுறவும் ஆனந்தமுறவும் செய்யும்!'

இந்தக் கிராமத்தில், உறியடி உத்சவம் மிகவும் பிரபலம். ஆவணி அவிட்டம் முடிந்து எட்டாம் நாள், கிருஷ்ண ஜனனம் என்ற ஜன்மாஷ்டமி யை ஒட்டி நடக்கும் அற்புதமான வைபவம். இந்த எட்டு நாளும், வரகூர் கிராமம் கோகுலம்போல கோலாகலாமாக இருக்கும் பூலோக வைகுண்டம் என்று கூட சொல்லலாம். நிதம் வேறு வேறு அலங்காரம், பாகவதர்கள் பஜனை, சதுர் வேத பாராயணம், ஸ்ரீ மத் பாகவத பாராயணம், தரங்கிணி பாடல்கள் என்று ஊரே அமர்க்களம் தான்.

ஸ்வாமி வெண்ணைத் தாழியில் வீதி உலா வந்து, வெளி மண்டபத்தில் வைத்து, இரவு, அபிஷேக அலங்காரங்களுடன் புறப்பாடுமிகவும் விமரிசையாக இருக்கும், ஸ்வாமி பாதையில் அங்கப் பிரதக்ஷிணம் செய்யும் பக்தர்கள் எல்லாம் பக்தியின் உச்சம். உறியடியோ கோவிந்தோஎன்று பக்தர்கள் கூக்குரல் எங்கு காண முடியாத அதிசயம். வழுக்கு மரம் ஏறுவது என்பது, மனிதர்களுக்கு ஏற்றத் தாழ்வு என்று இருந்தாலும், இறைவனின் அருள் இருந்தால், எந்த்த் தடைகளையும் சர்வ சாதாரனமாகத் தாண்டலாம் என்பதற்க்கு ஒரு உதாரணம்..

எத்தனை எழுதினாலும் போறாது. உறியடி உத்சவத்தை ஒரு முறை நேரில் பார்க்க வேண்டும்.

வாருங்கள், வந்து ஒரு முறை வரகூர் பெருமாளைப் பாருங்கள். அவர் பயத்தை மட்டுமல்ல, பயத்தின் காரணத்தையும், வேரோடு அழிக்கக் கூடிய அற்புத தெய்வம்.

இதில் இன்னும் சில சிறப்புகளை பார்ட் – 2 ஆக எழுத ஆசை.

 


No comments: