Sunday, 1 December 2019

சபரிமலையும் அத்வைதமும்


குருசுவாமி + மாலை + சபரிமலை = அத்வைதம்  என்று கூட இந்த பதிவேடுக்குப் பெயர் வைக்க நினைத்தேன்.

கார்த்திகை மாதம் வந்தால் மாலை போட்டுக்கொண்டு விரதம்  இருந்து, இருமுடி கட்டிக் கொண்டு செல்லும் கோடானு கோடி, தமிழ் அய்யப்பமார்களுக்கு  இந்த சிறு கட்டுரை சமர்ப்பணம்; 

சபரிமலைக்கு மாலை போட்டுக்கொள்வது என்பது ஒரு பெரிய அத்வைத சித்தாந்தக்கு அடிக்கல்.  ஈடு இணையில்லாத ஒரு பெரிய தன்னிலை அறிதல் (INTROSPECTION)  என்று கூட சொல்லலாம்

பதினெட்டு படி ஏறி மேலே போகும்போது "தத்வமசி" என்று எழுதி இருக்கும். அது, நாம் அத்வைதத்தை நோக்கிப் போவதை உறுதிப் படுத்தும்.

நாம் அகங்காரம் அடைவதற்க்கு, பல காரணங்கள்,  மேன்மை, குலம், கல்வி, அழகு போன்ற பல. இவை எல்லாம் தவிடு போடியகிற இடம்,  எருமேலியில் நடக்கும் "பேட்டைத் துள்ளல்".  இதில் எல்லா ஐயப்பன் மார்களும், தன் முகத்தில் அரிதாரம் பூசிக்கொண்டு,  டான்ஸ் ஆடிக் கொண்டு வருவார்கள்.  டாக்டர், எஞ்சினீயர், ஆடிட்டர்,  பெரிய தொழிலதிபர்,  செருப்ப தைப்பவன், எல்லோரும் ஒரே கலர், ஒரே சாமி.  ,,, இதைவிட ஒரு சமத்துவம் எங்கே பார்க்க முடியும் !!!!

இப்போதேல்லாம் கோவில் போவது என்பது  பீச்சுக்குப் போவது போல் ஆகிவிட்டது.  சரவண பவன் ஹோட்டல் போவதற்கு முன்பு, கபாலியையும், சாய் பாபாவையும் பார்த்து விட்டுச் செல்லலாம், என்ற அளவில் இருக்கிறது, பக்தி. இதில் ஷூ போட்டுக்கொண்டு, சர்வ சாதாரனமாக,  வண்டியில்  உட்கார்ந்து கொண்டு, போகிற வழியில், சாமியைப் பார்த்துக்கொண்டு போகிறவர்கள் ஏராளம்.    

நீங்கள் மைலாப்பூர் சாய் பாபா கோவிலுக்கு காலையில் வந்து பார்த்தால்,  jogging  போய் விட்டு, சாக்ஸ், ஷூ சகிதம்,  வியர்வை சிந்தும் சட்டையோடு, வாசலில்  கும்பிட்டுக் கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கும்  அருள் வழங்கும், துர்பாக்கியம் சாய் நாதருக்கு !  காரில் உட்கார்ந்து கொண்டே சாய் நாதரைப் பார்ப்பவர்கள் ஏராளம்.

இப்படி ஒரு கால கட்டதத்தில், சபரிமலைக்கு மாலை போட்டுக் கொள்வதும், அதனை தொடர்ந்து “விரதம்” என்ற பெயரில் நாம் செயும் தியாகங்களும் மெச்சத் தகுந்த ஒன்று.  எல்லோரும் சாமிதான்- இது ஒரு மதத்தான ஒருமைப்பாடு.  இதை எந்த ஒரு கோவிலிலோ, விரதத்திலோ-பார்க்கவே முடியாது

நான் பல முறை சொல்லி/எழுதி இருக்கிறேன். எந்த சந்தர்ப்பத்திலும், குருநாதர் இல்லாமல் எந்த ஒரு ஆன்மீக வாழ்க்கை யாருக்கும் அமையாது. அந்த குரு எந்த ரூபத்தில்  வருகிறார் என்பது நமக்கே தெரியாது.  நம்மை அறியாமல் நம்முடனே இருப்பார்.  தவறான பாதையில் போனால், சரி செய்வார். அவரை நாம் பூரணமாக நம்ப வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு சரணாகதி பண்ணி விட வேண்டும்.  இதைத்தான் பஜ கோவிந்தத்தில், "குரு சரணாம்புஜ நிர்பர பக்தஹ......" என்று சொல்லி, குரு சரணத்தில், களங்கமில்லாத பக்தியை செலுத்தினால்,  ஹ்ருதயத்தில், இறைவனைப் பார்க்கலாம்.....என்று ("ஹ்ருதய: த்வம் தேவம்" )  முடிக்கிறார்

திருப்பதி மலை மேல் ஏறிக்கொண்டிருக்கிறேன்.  எதிரில் நாமம் போட்டுக் கொண்டு வந்த ஒருவர் கைத்தடியைக் கொடுத்து, எடுத்துச் செல்லுங்கள் என்று கூறினார். வாங்கிக்கொண்டு இரண்டு நிமிடம் கழித்துத் திரும்பிப் பார்த்தால், யாருமே இல்லை. இவர் யார் ?  குருநாதரேதான்:  அதனால் தான் கிருஷ்ண பரமாத்மா சாந்தீபனி என்ற குருவிடம் குருகுலம் படிக்கச் சென்றார்.  64 கலைகளை 64 நாட்களில் கற்றுக்கொண்ட கிருஷ்ணனுக்கு, குரு இல்லாமல் கற்றுக்கொள்ள முடியாதா என்ன ?  ராமன் விஸ்வாமித்ரரின் பின்னால் ஏன் “பவ்யமாகச்” சென்றான் காட்டிற்கு ?

ஹரிதாஸ் கிரி அவர்கள் சத்குரு ஞானானந்தர் அவர்களைப் பற்றி எழுதிய பாடலில்

பிறந்து பிறந்து என்ன பேரின்பத்தைக் கண்டாய்

பிறவாதிருக்க என்ன வழிதான் செய்து கொண்டாய்

மறந்தொரு தரமாகில் குருநாதா என்று சொன்னால்

திறந்து வழி காட்டுவான் திரும்பி வராதிருக்க

மிகச் சிறந்த குரு கிடைத்தவர்கள் தன் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படவேண்டாம்.  குரு கையைப் பிடித்து அழைத்துச் சென்றுவிடுவார். அதே போல் நல்ல குருசாமி கிடைத்தால் தன் சபரி மலை யாத்திரையைப் பற்றி கவலை வேண்டாம். 

சபரிமலையாத்திரை என்பது ஒரு அனுபவம்.  ஒரு 42 நாள் கட்டுக் கோப்பான வாழ்க்கை. மாலை போட்டுக் கொண்டவுடன், நமக்கு சில கட்டுப்பாடுகள் தானே வருகிறது.  தவறு செய்தால் யாரும் பார்க்கப் போகிறதில்லை என்றாலும், மனதுக்குள் ஒரு பயம் வருகிறது. அந்த பய உணர்வு தான் குருநாதர்.

மாலை போட்டுக் கொண்டவுடன் உடனே எல்லாவற்றிலும் கட்டுப்பாடு வந்து விடும் என்று சொல்வதெல்லாம் பொய். 11 மாதங்களாக தறி கேட்டு ஓடிய மனதை, சாப்பிட்ட சாப்பாடு, பார்த்த படங்கள், எதிரில் வரும் இம்சை அரசிகள், “தெரிந்தும், தெரியாமலும்” செய்த பாவங்கள், இவை எல்லாவற்றையும்,  switch போட்டார் போல்,  மாலை போட்டுக் கொண்டவுடன் நிறுத்துவது, என்பது சாத்தியமே இல்லை !!

மாலை போட்டுக் கொண்ட நான்காவது நாளில், வீட்டில் மனைவியுடன் “வெட்டு குத்து” நடக்கும்.  மாலை போட்டுக் கொண்டு இப்படிக் கோபப் படக் கூடாது என்று மனைவி நினைவு படுத்தும் நிலையாகி விடும். ஆபீசில் யாரோடு அனாவசியமாக கோபித்துக் கொண்டு, இரவு, குளித்துவிட்டு,
நமஸ்காரம் செய்து, “லோக வீரம் மஹா பூஜ்யம்” சொல்லும்போது “அடடா மாலை போட்டுக் கொண்டு கோபித்து கொண்டு விட்டோமே” என்று வருத்தப்படுவோம்.

“குருநாதர் அருளும், இரு மாத வ்ரதமும், துணையாக உடன் வந்து காக்குதைய்யா” என்ற பாடலில் சொல்லிய படி, கொஞ்சம் கொஞ்சமாக நாட்கள் நகர நகர, நம் மனதில் ஐயப்பன் வந்து “ஜம்” என்று உட்காருவார். நாம் சற்று நம் குடும்பத்தில் இருந்து விலகுவது போல் தோன்றும். ஜாஸ்தி பேச மாட்டோம், தாடி வளர வளர, சித்தர் போல ஒரு சிந்தனை உடல் முழுவதும் பரவும். அதற்க்குத்தான், பஜனை, சரண கோஷம், உணவில் கட்டுப்பாடு, எல்லோரையும் சமமாகப் பாவித்து, எல்லோரையும் சாமியாக நினைப்பது/பார்ப்பது. பெண்களையும், மஞ்ச மாதா என்று "பெண் தெய்வமாக- பார்ப்பது... ...

இந்த குருநாதர் மூலம் போட்ட, மாலை என்ற விதை, சரண கோஷம், கட்டுப்பாடு போன்ற தண்ணீர் பாய்ச்சி, 42 நாட்களில் வ்ருக்ஷமாக வளர்ந்து, பெரிய பாதையில் நடந்து போகும்போது, விரி என்ற தங்கும் இடங்கள், அந்த மரத்தின் நிழலாக நமக்கு துணை வர,  ஐயப்பன் சந்நிதானத்தில் போய் நிற்கும்போது, எப்படி சிவபெருமான் மாங்கனியை பிள்ளையாருக்கு கொடுத்தாரோ, அப்படி, ஐயப்பன் நமக்கு அந்த மரத்தில் இருந்து, அருள் என்ற ஒரு பழத்தைத் தருவார்” – அது தான் மஹா பிரசாதம்.

கரிமலை ஏறும்போது “பெண்டு” கழண்டுவிடும், இறங்கும்போது, கால் துவளும். பம்பையில் குருசாமியைப் பார்க்க “வலி பறந்து போகும்” சந்நிதானத்தில் ஐயப்பனை தரிசித்த பின்னர், குருசாமியிடம் வந்து நமஸ்காரம் பண்ணும்போது, நம்மை அறியாமல் நம் கண்களில் ஒரு துளி கண்ணீர் வரும்.  அதுதான் சரணாகதி.  இந்த ஆனந்தத்தை அளிப்பவர் குருசாமி.



இந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.

இதைதான் அபிராமி பட்டர் செய்தார். சும்மா உட்கார்ந்துகொண்டு, பௌர்ணமியை, அமாவாசை என்று மாற்றிச் சொல்லி, அரசன் கோபம் கொண்டு, கீழே பற்றி எரியும் நெருப்பில், “சொல்லடி அபிராமி, நில்லடி முன்னாலே” என்று ஒருமையில் அம்பாளை “மிரட்டும்” அளவுக்கு ஒருவர் இருந்திருக்கிறார் என்றால் அவர் எவ்வளவு பக்தி செய்திருக்க வேண்டும்

சாதாரணமான பக்தி செய்யும் ஒரு சுப்பிரமணிய அய்யரை எப்படி  அபிராமி பட்டர் என்ற ஒரு பெரிய பக்தியின் சிகரமாக மாறினார்- என்பதை- பால குமாரன் – என் “கண்மணித் தாமரை” என்ற ஒரு புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.  என்னைக் கேட்டால், வாழ்க்கையில் ஒரு முறை சாசிக்குப் போக வேண்டும் என்று சொல்வது போல்,  இந்த ஒரு புத்தகத்தை வாங்கிப் படிக்கவேண்டும்... வாங்கிப் படியுங்கள். உன்னதமான் வரிகளில், அபிராமி பட்டரைச் செதுக்கி இருப்பார். நம் கண்களில் கண்ணீர் வரவழைக்கும் அனுபவம் அது.

இந்த நிலையை அருணகிரிநாதர் உணர்ந்து இருக்கிறார். அருணகிரிநாதர் திருப்புகழ் எழுத ஆரம்பிப்பதற்கு முன்பு, அவர் திருவண்ணாமலையில் வல்லாள கோபுரத்தில் இருந்து, உயிரை மாய்த்துக் கொள்ள குதிக்கிறார். அவரை முருகப் பெருமான் தடுத்து ஆட்கொண்டு, முத்தை என்ற வரி வைத்து பாடு என்கிறார்.  “முத்தைத்திரு” என்று பாட ஆரம்பிக்கிறார்.  பிறகு திருவண்ணாமலையில் இருந்து நேரே “குமார வயலூர்” வருகிறார். அங்கு “பக்கரை விச்த்றமணி” என்ற பிள்ளையார் மேல் ஒரு பாட்டு பாடுகிறார். 

அதற்கு அந்த பிள்ளையார், சந்தோஷத்தால், நடனம் ஆடுகிறார். இப்போதும், வயலூர் சென்றால், முருகன் சன்னதி செல்வதற்க்கு முன்னாள், அந்த நர்த்தன விநாயகரைப் பார்க்கலாம்.

அவர் சொல்கிறார், பக்தியின் ஆரம்பத்தில். தன்னுடைய திருப்புகழில் ‘சரண கமலாலயத்தில் அரை நிமிஷ நேரமட்டில், தவ முறை தியானம் வைக்க அறியாத சட கசட மூட மட்டி...” என்கிறார்.

எனக்கு மிகவும் ஆச்சர்யமூட்டும் வரிகள் இவை. முருகன், பிள்ளையார் அருள் பெற்ற பிறகு,  தம்மை எவ்வளவு தாழ்த்திக் கொள்கிறார்- என்பதைப் பார்க்க. அப்படியென்றால் நம் பக்திக்கு என்ன adjective போடலாம் ?

இப்படி அவர் பாடி பாடி, பல முருகன் கொவிலுக்குச் சென்று, அநுபூதி பெற்ற பிறகு, என்ன பாடுகிறார் என்று பாருங்கள் !!

“எல்லாமற என்னை இழந்த நலஞ் சொல்லாய் முருகா சுரபூபதியே”

என்னையே உன்னிடம் இழந்து விட்டேன் என்கிறார். இவர்தான் முதலில், தன்னை மூட, மட்டி என்கிறார்.

அத்வைதம் என்பதை உணருவது என்பது கடலில் நீந்தி கரை காணுவது போல. ஆதிசங்கரரின் எல்லா போதனைகளும் அதை நோக்கியே.  இதை ஒரு மாலை போட்டு நம்மை ஆசிர்வப்பதன் மூலம், நம் குருசாமி, சர்வ சாதாரணமாக புரிய வைக்கிறாரே ?  அதுதான் குருநாதர் !!!

இதுதான் அத்வைதம். பக்தி செய்ய செய்ய நம்மை மறந்து இறைவனிடம் சேருகிற அந்த நேரம் தான் அத்வைதத்தின் உச்சம். அதை நாம் அய்யபபனின் சன்னதியில் உணரலாம். உணருவோம்.

ஸ்வாமி சரணம்

1 comment:

RARE TAMIL SONGS said...

அருமை அருமை