Tuesday 19 December 2017

அபார கருணா சிந்தும் - இன்றும்

போன அனுஷ தினத்தில், எனக்கு நடந்த, அதற்கு முன்பு பெரியவா ஜெயந்தியில் என் குடும்பத்தில் ஒருவருக்கு நடந்த அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நான், பெரியவாளின் கோடானு கோடி பக்தர்களின் ஒருவன். அனால் பெரியவாளுக்காக நடத்தப்படும் அனுஷ பூஜையில் கலந்து கொண்டு, தொண்டு செய்பவர்களில் ஒருவரோ,  அல்லது ஸ்ரீ பாதம் தாங்கிகளில் ஒருவரோ கிடையாது. அவரை அனவரதமும் நினைத்துக் கொண்டிருப்பவனும் கிடையாது. வாட்சப்பில், பெரியவாளைப் பற்றி வரும் பல குரூப்பில் நான் இருக்கிறேன். அதனால், அவரைப் பற்றி அடிக்கடி படிப்பதுண்டு. அவ்வளவுதான்.

பெரியவாளின் அத்யந்த பக்தரான, ஸ்ரீ கணேஷ் சர்மா அவர்கள் அனுஷ பூஜை மாதா மாதம் நடத்துகிறார். மயிலாப்பூர் வாசியான எனக்கு, இதில் எப்போதாவது கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைக்கும். அதாவது கடைசி 15 நிமிடம் போய், தீபாராதனை பார்த்து இருக்கிறேன் சில சமயம் பெரியவாளின் படம், மயிலாப்பூர் மாட வீதியில் (உலாவாக) வந்து காட்சி கொடுக்கும்போது, அவரை நமஸ்கரித்துச் சென்று இருக்கிறேன். அவர்களுடன் கூட போய் இருக்கிறேன். அவ்வளவது தான்.

குருவின் அணுக்ரஹம் என்பது கிடைத்தற்கரியது.  குருவைப் பற்றிச் சொல்லும்போது. இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வருகிறது.

கோபால சத்குருவைப் பற்றி சொல்லும் ஒரு ஸ்லோகத்தில், “எவருடைய பாத தூளியை அரை க்ஷணம் தரித்த மாத்திரத்தில், ஒருவரின் கலி தோஷங்கள் விலகி, பரிசுத்தமாகிரானோ, எவருடைய உள்ளம் ஸ்ரீ கிருஷ்ணனின் பாத கமலத்தில் மூழ்கி இருக்கிறதோ அந்த கோபால சத்குருவை, தினமும் வணங்குகிறேன்.  இதனுடைய ஸ்லோகம் வருமாறு:

யத் பாத பங்கஜ ரஜ சிரஸா க்ஷணார்த்தம், நருத்வா நர; கலிமலாத் ஸுபவித்ரா காத்ர:
தம் ருக்மீநீச சரனாப்த நிமக்ன சித்தம், கோபால சத்குருவரம் ப்ரணதோஸ்மி நித்யம்

க்ஷனார்தம்- அரை நொடி

இரண்டாவது, அருணகிரினாதரைப் பற்றிச் சொல்லும்போது, ஆரம்பத்தில் இருந்த நிலை, (திருப்புகழில் அவர் சொல்கிறார்)

சரண கமலாலயத்தில் அரை நிமிட நேரம் மட்டும் தவ முறை அறிய மூட, மட்டி”
ஒரு அரை நிமிட நேரம் கூட உன் பாத்தில் என் சிந்தனையை வைக்க முடியவில்லையே என்று ஏங்கிய அருணகிரிநாதர், அனுபூதி பெற்றவுடன்,

“எல்லாம் அற என்னை மறந்தேன்” என்று பாடுகிறார்.

எனக்கு இந்த சிந்தனை உண்டு. நான் செய்யும் நித்ய பூஜையில்- “அபார கருணா சிந்தும்,.....முதான்வஹம்” என்ற அவரது குரு காயத்ரி சொல்வது வழக்கம்.

சரி இப்போது விஷயத்திற்கு வருவோம்.

என் மனைவிக்கு போன வாரம் மிகவும் ஜுரமாக இருந்தது, சளித் தொல்லை வேறு. போன 13 ம் தேதி, உடல் நலம் மெதுவாக குன்ற ஆரம்பித்தவுடன், என் மனைவி, நாட்டு வைத்யம், என்று-- டப்பா செட்டி கடை பொடி, வெந்நீரில் ஆவி பிடிப்பது (வேப்பலை போட்டு), என் அம்மா சொன்ன வைத்தியம், என் மாமியார் சொன்ன வைத்தியம், என்று பல தரப்பட்ட மருந்து கலவைகளை, ஏதோ ஒரு டி. வீயில், healer Baskar  என்ற ஒருவர் சொன்னது என்று பல தரப்பட்ட விஷயங்களைப் பயன்படுத்தி வந்தாள், ஜுரம் குறைந்தாலும் சளி குறையவே இல்லை. நான் எவ்வளவு சொல்லியும், சளிக்காக, டாக்டரிடம் வர மாட்டேன் என்று உறுதியாக இருந்தாள். சனிக்கிழமை அனுஷம். வெள்ளிக்கிழமை இரவு மிகவும் ஜாஸ்தியாகப் போய் விட்டது. சனிக்கிழமை காலை 
எழுந்தவுடன் முகம் ஒரு சுற்று வீங்கி இருந்தது.

மேலும் போன திங்கள் கிழமை, அமாவாசை சோம வார பிரதட்சிணம் வேறு. அது மேற்கு மாம்பலத்தில் இருக்கும், கல்யாணம் ஆன மரத்தில் 108 தடவை பிரதட்சிணம் செய்ய வேண்டிய கட்டாயம். இந்த வ்ரதத்தை முன்பே ஆரம்பித்ததால், விடவும் முடியாது, என்னடா இது இப்படி ஒரு சோதனை என்று ஒரு கலக்கம்= இது அப்படியே இருக்கட்டும்.

என்னுடைய மகள், கர்நாடக சங்கீதம், ஸ்ரீமதி, பத்மா நாராயணசுவாமி அவர்களிடம் கற்றுக் கொண்டு இருக்கிறாள். இதை நான் முன்பே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறேன். ஓரிக்கை, வித்வத் சமாஜம், மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவில், அகமதாபாத்தில், விமானத்தில் சென்று, சங்கர ஜெயந்தி உற்சவம் கூட பாடி இருக்கிறாள். அவளுக்கு, கற்பகாம்பாள் சன்னதியில், போன சனிக்கிழமை பாட ஒரு வாய்ப்பு வந்தது. சன்னதியில் சங்கீதம் என்று Giri trading banner ல். எனக்கு இதில் மிகவும் மகிழ்ச்சி, முதலில், எனக்கு மிகவும் பிடித்த கபாலி கோவில், பெரியவா அனுஷ நக்ஷத்ரம், மேலும், மார்கழி முதல் நாள். திருப்பாவை மிகவும் பிரபலப்படுத்தி, ராகம் போட்டு, எல்லா கச்சேரியில் பாடிய சங்கீத கல்லாநிதி திரு. கே.வீ நாராயணசுவாமி அவர்களின் பாடாந்திரமானதால், திருப்பாவை almost எல்லா பாட்டும் பாடுவாள் என்ற வகையில், மார்கழி முதல் நாள், திருப்பாவை பாடும் பாக்கியம்- இது இப்படியே இருக்கட்டும்
இப்போது பெரியவாளின் லீலையைப் பாப்போம்:

எனக்கு, ஒரு ஆசை வந்தது. முதலில் கற்பகாம்பாள் கோவிலில் பாடப்போகும் என் பெண், அனுஷ நக்ஷத்திரமாக இருப்பதால், ஸ்ரீ கணேஷ் சர்மா வீட்டிற்க்குச் சென்று, குரு சந்நிதானத்தில் திருப்பாவை பாடச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. மார்கழி முதல் தேதி, என்பதும், காலையில், அவர் வீட்டில் என்ன ப்ரோக்ராம் என்று தெரியாததாலும், தனுர் மாச பூஜை போன்ற இத்யாதிகள் இருப்பதாலும், அனுமதி கிடைக்குமா என்று அறிந்து கொள்ள, ஒரு வாரம் முன்பு, ஸ்ரீ கணேஷ் சர்மா வீட்டிற்குச் சென்று, எல்லா விபரங்களையும் சொன்னேன். அவர் சனிக்கிழமை காலை 6 மணிக்கு வந்து விடுங்கள், பாடட்டும், என்று சொன்னார்.

நானும் தனுர் மாச பூஜை செய்வதால், 4 மணிக்கு எழுந்து, பூஜை முடித்துவிட்டு, பெண்ணையும் எழுப்பி, குளித்து, தாவணி இத்யாதிகளுடன், கிளப்பிக் கொண்டு ஸ்ரீ. கணேஷ் சர்மா அவர்களின் வீட்டுக்கு வரும்போது, மணி 6.10 am.

வீட்டை விட்டு கிளம்புவதற்க்கு முன்பு, மனைவியிடம், கொஞ்சம் படுத்துக் கொள், நான் பெரியவா பூஜைக்கு சென்று, திரும்பி வந்து உன்னை HOSPITAL  அழைத்துச் செல்கிறேன். – என்று சொன்னேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை, பாடுவதற்கு முன்பே சொல்லி வைத்ததால், அங்கு போக வேண்டிய சூழ்நிலை. அரை மனதோடு கிளம்பினேன். என் மனைவி- நான் “காமாக்ஷி, பெரியவா” என்று திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருக்கிறேன், சீக்கிரம் வந்து விடுங்கள்” என்று சொன்னாள்”.  அவளுக்கும் கூட வர வேண்டும் என்று ஆசை.

ஸ்ரீ கணேஷ் சர்மா வீட்டில் -பெரியவா பாதத்தை எடுத்துக்கொண்டு, ஸ்ரீ கணேஷ் சர்மா அவர்கள் வந்து, பாதுகையை வைத்து, அபிஷேகத்துக்கு உண்டான இத்யாதிகளை சரி செய்ய, ஹோம குண்டம், ஒரு பக்கம் வைத்து, அதற்கு உண்டான, கலசம் இத்யாதிகள் மற்றொரு புறம். அங்கு இருவர் தைத்ரீயம் பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்,

நடுவில், என் பெண் பாட ஆரம்பித்து, பூஜை முடிந்த பின் 3 பாடல்கள் பாடி, சத்குரு சுவாமிக்கு என்ற ரீதிகௌள ராகத்தில் அமைந்த ஒரு பாடலை பாடி முடித்தாள். எப்போது பாடுவது என்று தெரியாததால், ஹோமம் முழுவதும், முடிந்து, பெரியவா விக்ராஹதுக்கு, எல்லா அபிஷேகமும் முடிந்து, தூபம், தீபம் எல்லாம் முடிந்து, பிரசாதம் வாங்கிக்கொண்டு செல்லும் வரை அங்கு இருக்க வேண்டிய கட்டாயம் எனக்கு வந்துவிட்டது

என் பிளான் – அங்கு 30 நிமிடம் பாடிவிட்டு, உடனே கிளம்பி, மனைவியை அழைத்துக் கொண்டு HOSPITAL  செல்லவேண்டும் என்பது தான். ஹோமம், அபிஷேகம் போன்றவை, நான் எதிர் பார்க்கவே இல்லை. கணேஷ் சர்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பவும் மனம் இல்லை. அவரிடம் பேசுவதற்கே, ஒரு பயமாக இருந்ததால், அவரே “சரி போகலாம்” என்று சொல்வார் என்று பார்த்தால், அவரும் போக சொல்லவே இல்லை. எனக்கு சொல்லவும் முடியவில்லை, மெல்லவும் முடியவில்லை.

8.15 மணிக்குத் தான் முடிந்தது. பிரசாதம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து, படுத்துக் கொண்டு இருந்த மனைவியை அழைத்துக் கொண்டு மந்தவெளியில் இருக்கும் B.S.S HOSPITAL  சென்றேன்.

இப்போது தான் முக்கிய கட்டம்

B.S.S HOSPITAL  உடனே வைத்தியம் பார்த்து, மிகவும் சளியாக இருக்கிறது, என்று ஊசி போட்டு, மருந்து, மாத்திரை..மேற்படி.....எல்லாம் நடந்த்து. நான் அடிக்கடி அந்த ஆஸ்பத்திரிக்கு போவேன் 
என்பதால், DUTY DOCTOR எல்லோரும் பரிச்சயம்.

மேலும், நான் ரங்கா HOSPITAL செல்வதா என்ற குழப்பத்தில் இருந்து (ரங்கா HOSPITAL, டாக்டர் மாதவன் எனக்குத் தெரியும் என்பதாலும்), கடைசியில் B.S.S HOSPITAL சென்றேன்.

டாக்டரிடம், திங்கள் கிழமை, ஒரு கோவில் விசேஷம் இருக்கிறது என்பதாலும், ஸ்நானம் பண்ண வேண்டும் என்பதால், ஒரு நாளில் குணம் ஆகி விடும் என்றால், BETTER என்றேன். அவர் சொன்னார், “இன்று இரவே சரியாகிவிடும், மிஞ்சி போனால், அடுத்த நாள், SUNDAY, குனமாகிவிடும்.  இருந்தாலும், ஸ்நானம் செய்யாமல் MONDAY FUNCTION க்கு போனால் பெட்டர்” என்றார்

எல்லாம் முடித்துவிட்டு, RECEIPTION ல், பணம் கட்டிவிட்டு, - எனக்கு ஒரு ஆசை, அடிக்கடி வருகிறோமே, இந்த டாக்டரை பல முறை பார்த்திருக்கிறோமே, அவர் பேர் தெரிந்து கொள்ள ஆசை.. ஆகவே, RECEPTION ல் இருந்த பெண்ணிடம் அந்த டாக்டர் பெயர் கேட்டேன்;

அவள் சொன்னார் - அவர் பெயர்- டாக்டர்.சந்திரசேகரன்

நான் ஒரு நிமிடம், அப்படியே அசையாமல் நின்று விட்டேன். சற்று உணர்ச்சி வசப்படக்கூடிய என் மனைவி உடனே அழ ஆரம்பித்து விட்டாள். அபார கருணா சிந்தும் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கற்பிப்பவராக, பெரியவாளை அங்கு பார்த்தேன். எனக்கு அந்த இன்ப அதிர்ச்சி அடங்க பல நிமிடங்கள் ஆகியது

அது மட்டும் இல்லை. சண்டே உடல் 70%  பூரணமாகி, திங்கள் எழுந்து குளித்து, சோம வார பிரதக்ஷிணமும், செய்து வந்தாகி விட்டது.

இது என்ன சாத்தியமா. கனவா, அனுக்ரஹமா ? அதற்கு அருகதை எனக்கு இருக்கிறதா ? என்று தெரியவில்லை. அந்தப் பாதத்திற்கு அவ்வளவு மகிமையா ? அதுவம், அந்தப் பூஜைக்கு, ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத எனக்கு இவ்வளவு அனுக்ரஹமா ? இன்னும் அந்த பிரமிப்பு அடங்கவில்லை

இதை இன்னொரு முக்கியமான விஷயம், என் பெண், பாடிவிட்டு வீட்டிற்க்கு வந்தவுடன், “கோவிலுக்குச் சென்று பாட முடியாதபடி” ஆகிவிட்டது. (பெண்கள் பிரச்னை)

என் பெண் அழ, நான் சொன்னேன்- பெரியவா “இந்தப் பிரச்னையை” முன்பே உணர்ந்துதான், உன்னை தன் சன்னதியில் பாட அழைத்துக் கொண்டார்”  - இது குரு அனுகிரகம். எத்தனை பேருக்குக் கிடைக்கும், பெரியவாளை, நெஞ்சில் ஏற்றிக் கொண்டாடும் ஸ்ரீ. கணேஷ் சர்மா மாதிரி ஒருவர வீட்டில், அபிஷேக ஆராதனைகளைப் பார்த்து, பாத தரிசனம் செய்து கொண்டே, பாடுவதற்கு எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும்”

இந்த வார்த்தைகளைச் சொன்ன பிறகுதான் என் பெண் சாந்தமானாள். வேறு ஒரு தேதியில் கோவிலில் பாடுவதற்கு முயற்சிகள் – பெரியவா எடுப்பா – என்பதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தேஹமே இல்லை.

மகா பெரியவா சரணம். ஸ்ரீ கணேஷ் சர்மா பாதங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.

இதை எழுத வைத்ததும் பெரியவாதான்.

-என்னுடைய சஹோதரின் மனைவிக்கு நடந்ததை நாளை எழுதுகிறேன்.


No comments: