Wednesday 13 December 2017

ராமகிருஷ்ணன் மூர்த்தி என்கிற சங்கீத பிரவாஹம்

பிரம்ம கான சபா
10th December 2017

ராமக்ருஷ்ணன் மூர்த்தி- வாய் பாட்டு
நெய்வேலி நாராயணன்- மிருதங்கம்
சாருமதி ரகுராம்- வயலின்
சுந்தர் குமார்- கஞ்சிரா

பிரம்ம கான சபா இந்த வருட டிசம்பர் சீசனை வழக்கம் போல ஆரம்பித்து, மிக அருமையான பாடர்களின் கச்சேரியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  அதில் நேற்று, ராமகிருஷ்ண மூர்த்தியின் ஒரு “நெஞ்சை அள்ளும்” (இன்று, பாரதியின் பிறந்த/நினவு தினம்) கச்சேரியை கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

பி.கா,சபாவில் ஒரு வசதி உண்டு. இஷ்டத்திற்கு கச்சேரி என்று வைத்து, யார், யாரையோ பாடச் சொல்லி, கூட்டம் வராமல், வரும் ரசிகர்களையும் நோக அடிக்காமல், ஒரே ஒரு கச்சேரி, அதுவும் 6 மணிக்கு ஆரம்பித்து 9 மணிவரை 3 மணி நேர கச்சேரியாக வைத்துள்ளனர். 3 மணி நேர கச்சேரியில் ஒரு வசதி, ராகம் தானம் பல்லவி கேட்கும் பாக்கியம் உண்டு. மேலும் தனி ஆவர்த்தனம் சுமார் 7.45 மணிக்கு வருவதால் யாரும் எழுந்து போகாமல், தனி கேட்கும் வாய்ப்பும் உண்டு.

Online ல் டிக்கெட் book பண்ணும் வசதி இருப்பதால், அனாவசியமாக டிக்கெட் கிடைக்குமோ என்று கவலையும் படவேண்டாம்.

கொஞ்சம் off track  போய், பிறகு விஷயத்திற்கு வரலாம்:

இளையராஜா சொல்லுவார்

சிலரின் பாட்டு நம்மை அறியாமல் நம்மை உணர்ச்சி வசப்பட வைக்கும். அது இசையால் கூட இருக்கலாம். பாடுபவரின் குரலால் கூட இருக்கலாம். அல்லது அந்தப் பாடலின் பொருளாகக் கூட இருக்கலாம். அதற்கு அவர் “மாலைப் பொழுதின் மயக்கத்திலே” என்ற ஒரு பாடல் (பாக்ய லக்ஷ்மி என்ற படம்) உதாரணமாகச் சொல்வார்.  என் எலும்பை உருக்கிய பாட்டு என்பார். 

என்னைக் கேட்டால். “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” என்ற தில்லானா மோகனாம்பாள், படப் பாடலை இதே போல் சொல்வேன். ஷண்முகப்ரியா ராகத்தில் அமைந்த பாடலைச் சொவதா. இந்தப் படத்தில், நாயகன் பெயர் ஷண்முக சுந்தரம். அதனால் ஷண்முகப்ரியா ராகமா, இசை அமைப்பாளர் K.V.MAHADEVAN  சாதுர்யத்தைச் சொல்வதா. பாடலின் பொருள் மிகவும் சிறப்பாக, கதையின் வலிமையச் சொன்ன அதிசயத்தைச் சொல்வதா ? பல சிறப்புகள். சிவாஜி, பத்மினி –இவர்களின் கண்கள் பேசும் அழகைச் சொல்வதா ?

அதே போல் ஒரு நல்ல இசை நான் கேட்டது

இப்போது விஷயத்திற்கு வருவோம்

ராமகிருஷ்ணன் மூர்த்தியைப் பற்றி, கர்நாடக ரசிகர்கள் உலகில் தெரியாவதர்கள் இருக்க முடியாது. இங்கிருந்து அமெரிக்கா போய், மேல் படிப்பு படித்து, முடிந்தால் கொஞ்சம் சங்கீதமும் கற்றுக் கொள்ளும் மக்களின் இடையே, அமெரிக்காவில் படித்து, சந்கீததுக்காக, சென்னை வந்து, வந்த பிறகும், IT கம்பனியில் கிடைத்த வேலையை உதறி, சங்கீதத்தை மிகவும் பண் படுத்தி, அதை தன் வசமாக ஆக்கிக் கொண்டு, சங்கீதத்தின் உயிர் நாடி என்கிற ஜீவனைப் பிடித்துக் கொண்டு, ராஜ பாட்டையில் உலா வரும் ஒரு அற்புதமான கலைஞர்,

சென்னை வந்த பிறகு,. சங்கீதத்தை தன் உயிர் மூச்சாக கொள்ள நினைத்த அவருக்கு, கடவுள் ஒரு படி கீழே இறங்கி. R.K.Shriramkumar  என்ற ஒரு மகத்தான குருவைக் கொடுத்து, ராமகிருஷ்ணன் மூர்த்தியின், இசையை, மேலும் பலப்படுத்தியது, அதன் மூலம் ரசிகர்களை வசப்படுத்தியது என்பது சத்தியம்.

சுருதி மாத இதழில், அவருடைய பேட்டி வந்திருந்தது.  சாத்தூர் AG சுப்ரமண்யம் அவர்களின் நினைவாக, அவருடைய, படத்தை கவரில் போட்டு வந்த இதழ். அதில் ராமகிருஷ்ணன் மூர்த்தியின் ஒரு பேட்டி இடம் பெற்றிருந்தது. அதில் அவருடைய குரு வுடனான ஒரு பக்தியை மிக அழகாக சொல்லி இருந்தார். எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு பேட்டி.
இந்த சின்ன வயதில், கச்சேரி செய்து வரும் ராமகிருஷ்ணன் மூர்த்தியைப் பற்றி, என் ஒரு வரி விமர்சனம்- “சங்கீத தேவதை, இறங்கி வந்து ஒருவரின் உடலில் புக நினைத்து, அதன் மூலம் ரசிகர்களின் சங்கீத உணர்வுகளை மேம்படுத்த நினைத்து, புகுந்த உடல், ராமகிருஷ்ணன் மூர்த்தி”

நான் மகாராஜபுரம் சந்தானத்தின், குரலில் நுழைந்து, சஞ்சயின் இதயம் புகுந்து, இப்போது ராமகிருஷ்ணன் மூர்த்தியின், இசை என்ற உணர்வில் கலந்து நிற்கிறேன்.

கர்நாடக சங்கீதத்தைப் பற்றி, அவரே ஒரு INTERVIEW வில் சொன்னது:

Carnatic music is not just about entertainment… it elevates a person beyond that; it’s soul-lifting

இது தான் உண்மை. இதைதான் அவர் செய்து கொண்டிருக்கிறார்

மேலும், அவர் விமர்சனங்களைப் பற்றிச் சொல்லும்போது:

Personally, I don’t think a review alone can make or unmake an artist. It is the merit of the music that decides.

My opinion: His music has lot of merits

இனி விமர்சனத்திற்கு வருவோம்:

நேற்று, மயிலாப்பூர் சங்கீத ரசிகர்களுக்கு, ஒரு மிகப் பெரிய சவாலான நாள். நாரத கான சபாவில், கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்- க்காக சஞ்சய் பாட, ARKAY CONVENTION CENTRE  மல்லாடி சகோதரர்கள் பாட, ராஜரத்தினம் அரங்கில், அபிஷேக் ரகுராம், பாட BGS ல், நான்சென்ற ரா.மூ. கச்சேரி.
பாவம் ரசிகர்கள். !!!

நான் அரங்கத்துக்குள் நுழையும்போது, “நீ கேல”, என்ற ஒரு மோகன ராக வர்ணனை ஆரம்பித்து, துரித கதியில் பாடிக் கொண்டிருந்தார். சாருமதியும், ஈடு கொடுத்து வாசித்துக் கொண்டிருதார். கச்சேரி களை கட்டிவிட்டது.

முந்து வேணுக என்ற தர்பார் ராக, சத்குரு தியாகரஜர் கிருதியை எடுத்தார். “பாகவதப்ரிய பாக ப்ரோவவய்யா, த்யாகராஜ நுத” என்ற இடத்தில நிரவல் செய்தார். ஸ்வரம் பாடி, “பெத்தாச்சி” தர்பாரில், தர்பார் ராகத்தில் லயிக்கச் செய்தார்.

“நாரத குருஸ்வாமி”, “யோசனா” போன்ற பல பாடல்கள் இருக்க, இந்தப் பாடல், பல சிறப்புகள் நிறைந்த, தியாகரஜரின் பக்தியை மேம்படுத்தச் செய்யும் பாடல்:

“நீ என் முன்னே, பின்னே, இரு புறமும் என்னைக் காக்க வரவேண்டும் “ராரா” என்று பாடல் முழுவதும் சொல்கிறார். பாடல் ஆரம்பத்தில், கெஞ்சுகிறார், பல்லவியில், அவர் வீரத்தை புகழ்கிறார். அனுபல்லவியில். அவர் அழகை மெச்சுகிறார். சரணத்தில், அவர் இரக்க குணத்தை (கஜேந்திர மோட்சம்) பாராட்டும் தியாகராஜர் கடைசியில், பாகவதப் ப்ரியராகவும், தத்துவப் பொருளாகவும் ராமனை நினைக்கிறார்” – அழகான வரிகள். எனக்குத் தெலுங்கு தெரியாமற் போனாலும். தியாகராஜரின் பாடலுக்காகவது, தெலுங்கு கற்றுக் கொள்ள ஆசை. (நிறைவேறவில்லை என்பது வேறு விஷயம்)

மூன்றாவதாக, “ஜெயந்த சேனாவை” எடுத்தார். இந்த ராகத்தில், எனக்குத்தெரிந்த “வினதா சுதவா” எந்த வித குழப்பமும் இல்லாமல் ராகத்தை ஒரு 3 நிமிடம் பாடி, வயலின், அதை வழி மொழிய பாடினார். ஸ்வரம், “மத பேதமனே” என்ற இடத்தில பாடி நிறைவு செய்தார்.
ஜயந்த சேனாவைக் கூட அழகாக முத்துக் கோத்தது போல், பாடினார்.

தமிழ் பாடலான பருவம் பார்க்க ஞாயமா, பராத்பரி, என்ற ஆனை அய்யா அவர்களின் பாடல். இதை சாத்தூர் AGS அவர்கள் சொல்லித் கொடுத்தார் என்று அவர்களது புதல்விகனான, சாத்தூர் சகோதரிகள், ஒரு கச்சேரியில், பாடி முன்பு அசத்தி இருக்கிறார்கள்..  Recent ஆக சஞ்சய் கூட எங்கேயோ பாடியதாக ஞாபகம்.

ஆனை அய்யாவைப் பற்றிச் சொல்லும்போது, “அம்பா நன்னு ப்ரோ” என்று ஒரு தோடியில் ஒரு மிக அழகான சாஹித்யம் உண்டு. அது வரிகள் ஜாஸ்தி இல்லாமல், ராகத்தை வைத்தே, வரிகளை நிரப்புவது போன்ற ஒரு பாடல். செம்மங்குடி பாடிக் கேட்ட ஞாபகம். இந்தப் பாடலை மிகவும் கை தேர்ந்தார்கள் தான் பாடவேண்டும். இல்லாவிடில், வழுக்கிக் கொண்டு ஓடிவிடும்.

பிறகு, வேலைக்காரனாக இருக்கிறேன், என்னை ஏற்றுக்கொள் என்ற, தியாகராஜர் இயற்றிய, பண்டு ரீதி என்ற ஹம்சநாத ராக கீர்த்தனை, ராகத்தை, 3-4 நிமிடம் ராகம் பாடி பிறகு அழகாக முடித்து, 

மெயின் உருப்படியாக வாசஸ்பதி ராகத்தை எடுத்தார்...

இந்த ராகத்தை ராமகிருஷ்ணன் மூர்த்தி பாடிய விதம் மெய் சிலிர்க்க வைத்தது உண்மை. சாதரணமாக வாசஸ்பதி ராகம், எனக்கெல்லாம் 2-3 நிமிடம் தான். பிறகு ராமப்ரியாவா, சரஸ்வதியா என்று குழம்பி, “பராத்பரா பரமேஸ்வரா” என்று யாராவது பாடினால், உடனே அரங்கத்தை காலி செய்து விடுவேன். அலுப்பு தட்டும் ராகம் இது. அனால் அதை ரா.மூ கையாண்ட விதம் அபாரம்.

பாஹி ஜகஜ்ஜனனி என்ற மகாராஜா கிருதியை எடுத்து, விஸ்தாரமாக பாடினார். சம்ஸ்க்ருத 
சுத்தம், R.K.SRIRAMKUMAR என்ற குருவின் நேர்த்தியை பறை சாற்றியது.

சமலஜாதம் வாரய என்ற சரண வரிகளில், நிரவல் செய்து, தனி விட்டார்.

நெய்வேலியும், சுந்தரகுமாரம், தனியாக, மிகவும் சிறப்பாக வாசித்த பிறகு,

ஷ்யாமா சாஸ்திரி மாஞ்சி ராக கிருதியான, ப்ரோவம்மா வை பாடினார். அதை “நீவே அனாதரான ஜெசிதே” என்ற அனுபல்லவியில் எடுத்து குழைத்து கொடுத்தார்

பிறகு தான் ராகம் தானம் பல்லவி:

யதுகுலகாம்போஜி ராகத்தை ரா.தா.பல்லவி யாக பாடுவதற்கு ஒரு தைர்யம் வேண்டும். இந்த ராகம் 3 நிமிடத்திற்கு மேல் தேறாது. “காலை தூக்கி நின்று ஆடும் தெய்வமே” என்று மாரிமுத்து பிள்ளை அவர்களின் ஒரு பாடலை, சஞ்சய் பாடி, பாடி, கேட்டு கேட்டு, சிதம்பரம் நடராஜர் மேலே ஒரு “அலுப்பு”: வரும் அளவுக்கு ஆக்கிய ராகம் இது.

இதை மிக லாவகமாக கையாண்டு தானம் நாயகியிலும், மோகன கல்யாணியிலும், கொடுத்து, பாலவியை ஆரம்பித்தார்

“ஹரே, மாம் பாஹி யதுகுல காம்போஜ பத யுகள” என்ற பல்லவியை (குருநாதர் R.K.SRIRAMKUMAR சொன்ன பல்லவி என்று ரா.மூ சொல்லி ஆரம்பித்தார்)

ஆனந்த பைரவி, ஹிந்தோளம், பெஹாக், தர்பாரி கானடா, என்று ராஜ பாட்டையில் சென்று, பிறகு “U Turn” போட்டு, முடித்தார்.

“ச்ருத்வா குணா புவனசுந்தர” என்று ஸ்ரீமத் பாகவத வரிகளை வருத்தமாக பாடி, அரவிந்த பத மலர்” என்ற “காபி ராக” அம்புஜம் கிருஷ்ணாவின் பாட்டை பாடினார்.

இந்தப் பாடலில் எனக்கு ஒரு சந்தேஹம்.  “குறள் வடிவாக வந்து ஈரேழு உலகளந்தாய்” என்ற வரியில், ரா.மூ. “குரல்” என்று பாடினார். இதை திருப்பி, திருப்பி பாடி “குரல்” என்ற வார்த்தையை உறுதி செய்தார். அது தவறோ என்பது என் எண்ணம்.

இதை எழுதும்போது, எனக்கு, மல்லடி சஹோதர்கள், ஞாபாகம் வந்தது. அவர்கள் தமிழ் பாட்டு பாடுவதில் உள்ள அந்த முயற்சியை நான் மனதார பாராட்டினாலும், சில வரிகள், “சட்” என்று, ஒரு தமிழ் தவறு இருக்கும்போது, அது கவனிக்கப் படாவிட்டாலும் கூட, சிரிப்பை வரவழைக்கும்.

நாரத கான சபாவில், போன வாரம் ம.சகோ. பாடும்போது “சீதா மதி” (நவசித்தி பெற்றாலும் என்ற நீலகண்ட சிவன் பாடலை-கரஹரப்ரியா- மெயின் ஆக எடுத்து பாடினார்கள்).
குரல் கேட்கும்போது அது நினைவுக்கு வந்தது.

கடைசியில், தேவகி நந்தன நந்த முகுந்த- என்ற மாண்ட் ராக புரண்தர தாசர் தேவர் நாமாவை பாடி, “பவமான”, பாடி நிறைவு செய்தார்.

சாருமதி பற்றி சொல்லாமல் விட்டால், சம்பிரதாய பஜனையில், ஆஞ்சநேய உற்சவம் இல்லாமல் முடிப்பது போல..

சாருமதி போன்று ஒரு வயலின் வித்வான் இருக்கும்போதுதான், ரா.மூ கச்சேரி எப்படி, பரிமளிக்கிறது என்பது புரியும். சில சமத்தில், சுந்தரகுமார், ரா.மூ தாளத்தை சரியாக கவனிக்காமல் “பிசற” சாருமதியும் தவித்தது உண்மை. ஆனால், அதெல்லாம் தவிர்த்துப் பார்த்தால், எனக்கு மிகவும் மன நிறைவு தந்து, இப்படி ஒரு உன்னதமான கலைஞனை நமக்கு கொடுத்து, கொஞ்சம் சங்கீத ஞானமும் கொடுத்த அந்த இறைவனுக்கு நன்றி சொல்லி, அப்படியே ஒரு கொசுறாக, ரா.மூ க்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவும் பிரார்த்திக்கிறேன்.







No comments: