Wednesday 20 September 2017

பாலா (திரிபுரசுந்தரியும்), செம்மங்குடியில் நவராத்திரியும்

இதோ, வரும் வியாழக்கிழமையில் இருந்து நவராத்திரி ஆரம்பிக்க இருக்கிறது(21-9-2017)

வரும் ஒன்பது நாட்களும், கொலு, பாட்டு, சுண்டல் என்று திமிலோகப்படும். மயிலாப்பூர் வாசியான எனக்கு, காபாலீஸ்வரர் கோவில் கண் கவர், கொலு பொம்மை அலங்காரமும், இந்த சந்தோஷத்தில், ஒரு சுற்று பெருத்திருக்கும், கற்பகாம்பாளை காண்பதும் இனிய சுகம். மேலும் சாய் பாபா கோவில் உற்சவமும் சேர்ந்து கொள்ள, (உடையாளூர், சுகி சிவம், சுதா ரகுநாதன் அவர்களின் பாட்டு/சொற்பொழிவு), ஏக அமர்க்களம் தான்.

கொலு பொம்மை விற்பவர்கள், மயிலாப்பூர் நான்கு வீதியிலும் ஆக்ரமித்திருக்க, சின்ன பொம்மை, Rs.400-500 வரை விற்கப்படுவதும், அதை, பேரம் பேசாமல், வாங்கிச் செல்லும் மக்களைப் பார்க்கும்போது, இன்னொரு, demonetisation  வந்து விடுமோ, என்று பயமாக இருக்கிறது.

செம்மங்குடி:

செம்மங்குடி, பல விஷயங்களில், என் மனதை விட்டு அகலாத ஒரு கிராமம். எந்த வித கவலையுமில்லாமல், 10 பேரோடு, கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த அந்த வாழ்க்கை, காலம் கடந்து, என் மனதில் நிறைந்து இருக்கிறது.  நானும், பல ஊர், தேசங்களுக்கு சென்று வந்து, ஓய்ந்து பொய் செட்டில் ஆகி விட்டேன். ஆனாலும், என் மனது, செம்மங்குடியை நோக்கி அடிக்கடி ஒடி விடும்.

பல சம்பவங்கள், பல நிகழ்வுகள். அதில் ஒன்று, எதிர் வீட்டு பாலா என்கிற பெண்.

பாலா:

முன்னமேயே, நான் “செம்மங்குடி” கிராமத்தைப் பற்றி எழுதியதை போல், பெருமாள் கோவில் அருகில் இருக்கும், முதல் வீடு, எங்கள் வீட்டில் எதிர் வீட்டில் இருந்தவர்கள் வீட்டில் பிறந்த குழந்தை தான் பாலா. 

கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்ட குழந்தை. தெய்வக் குழந்தை என்பதால் பெற்றோர்களின் பெயர் இங்கு அவசியமில்லை.
இந்தக் குழந்தைக்கு இப்போது 57 வயது.  நேற்று, கடவுள், இந்தக் குழந்தயை தன்னுடன் அழைத்துக் கொண்டு விட்டார், என்பதுதான் இந்தப் பதிவின், முக்கிய அம்சம்.

57 வயது, குழந்தையை நான், இழந்துவிட்டேன் என்று தாயார் கதறிய பொது, தாய்மையின் உன்னதத்தைப் புரிந்து கொண்டேன். அந்தக் குழந்தை இருந்தபோது, பெற்றோர்களை படுத்திய பாடு ஒரு பக்கம் இருக்கட்டும்.  ஒரு நிமிடம் கூட, முகம் சுளிக்காமல், பெற்றோர்கள் அந்தக் குழந்தையை வளர்த்த விதம், அப்பாவிடம், அந்தக் குழந்தையிடம் இருந்த ஸ்வாதீனம், நான் பார்த்திருக்கிறன். அதனால் எனக்கு அந்த இழப்பு ஒரு “சொல்லொண்ணா தாக்கத்தை” உண்டு பண்ணியது நிஜம் தான்.

என் குடும்பதை சேர்ந்த அனைவருக்கும், பாலா,  PET என்றே சொல்ல வேண்டும். எங்கள் எல்லா பெயரும் அத்து படி. என் மனைவியின் பெரும் நினைவில் வைத்துக் கொண்டு கேட்பாள். பல ஆச்சர்யங்கள் நிறைந்த பாலா அவள்.

அந்த வீடு மிகவும் பிரபலமான ஒருவரின் வீடு என்பதால் அந்த வீட்டுக்கு எல்லோரும் போக முடியாது.  அம்மா என்று நான் அழைக்கும் என் பாட்டி, போவாள். குடும்பத்தில் உள்ள எல்லோரும் எப்பவாவது போவார்கள். இவர்களுடன் நானும் போவேன். பாலாவைப் பார்த்து, நான் “இப்படியும் ஒரு உலகம் இருக்கிறது” என்று புரிந்தபின், நான், பாலாவின் மிக அருகில் சென்று பேசி, அவள் பதிலில், பொறுமை காத்து, ஒரு சந்தோஷத்தை அனுபவித்தேன்.

பல வருடங்கள் கழித்து, சென்னைக்கு வந்த பிறகு, அடிக்கடி பாலாவை, சென்னையில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. என்னை சரியாக நினைவு வைத்துக் கூப்பிட்டாள். பாலா தன்னுடைய சகோதரிகளிடம் வைத்திருந்த அன்புக்கு ஈடாக, எங்கள் குடும்பத்தில் அன்பு வைத்திருந்தாள்.

இந்த அன்புக்கு என்ன பெயர் ? எதற்கு இப்படி ஒரு ஜனனம் ? எதற்கு இப்படி ஒரு இறப்பு ? பாலா என்ற என் உடன் பிறவா சகோதரி, தன பெற்றோர்களுடன் மரணிக்கும் தருவாயில் என்ன சொல்ல நினைத்தாள் ?  பெற்றோர்கள் இந்த பாரத்தை எப்படி தாங்கப் போகிறார்கள் ? –  பல கேள்விகள்......?!!!  அபூர்வ ராகங்கள் படத்தில் கண்ணதாசன் எழுதியது போல், “மனிதன் இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்”

மனிதனாகப் பிறந்தவன், கடவுளை அடைகிறான். கடவுளாகவே பிறந்த குழந்தை, கடவுளிடம் திருப்பிப் போவது, -- பாலாவில் வாழ்க்கையை இப்படித்தான் முடிக்க முடியும். அதனால் தான் தலைப்பில் “பாலா திரிபுரசுந்தரி” என்று எழுதினேன்.

மிகவும் முக்கியமான ஒரு விஷயம். கமலாம்பா நவா வர்ண கிருதியில், பாலாவுக்கு மிகவும் ஆர்வம் உண்டு. அதை அவர்கள் வீட்டில் பாடும்போது, சமத்தாக, பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்வாள்.  அதை அடிக்கடி பாடு என்று, எங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்வாள். என் அம்மா (பாட்டி), பாலாவின் தந்தையுடன் பாட்டு கற்றுக் கொள்வதற்கு ஒரு காரணம் பாலா என்று கூட சொல்வேன்.  இதை என் மனைவி சொல்லி வருத்தப்பட்டாள்.

மறைந்த என் அம்மா (பாட்டி), பாலாவை சொர்க்கத்தில் பார்த்திருப்பாள். சந்தோஷமாக இருவரும் பேசிக்கொண்டிருப்பார்கள்

நவராத்ரி சமயத்தில், திருவாரூர், கமலாம்பாவிடம் ஐக்கியமான பாலா, நம்மை ஆசிர்வதிக்கட்டும்.

செம்மங்குடியில் நவராத்திரி:

எத்தனை நவராத்திரி வந்தாலும், செம்மகுடி நவராத்திரி போல வராது என்பது வழக்கமான வார்த்தை அன்று, சத்தியமான வார்த்தைகள்.
செம்மங்குடியில் நவராத்திரி என்பது ஒரு உற்சவம். இது ஒரு பெரிய ப்ராஜெக்ட். என் வீட்டில் 5 பெண்கள்,  சேங்காலிபுரத்தில் இருந்து, பெரியம்மா பெண்கள் வந்தால் எண்ணிக்கை கூடும்.  மொத்தமாக செம்மங்குடியில் இருக்கும் எங்கள் ஆக்ரஹாரத்தில் சுமார் 40 வீடுகள் உண்டு.  அதில் 25  வீடுகளில் கொலு இருக்கும்.

என் அம்மா, ஒரு வாரம் முன்பேயே, மச்சிலில் இருந்து, கொலு பொம்மைகளை எடுத்து வைத்து விடுவாள். நான்தான் உதவி. எடுத்து, உடைந்தது, உடையாதது என்று பிரித்து கொலு வைப்பதற்கு உண்டான ஆயத்தங்களை செய்வேன். 5 படி, 7 படி கூட போகும். அத்தனை பொம்மைகள் இருக்கும். மரப்பாச்சி தான் பெரிய பொம்மை. பொம்மைகள் காசு கொடுத்து வாங்கி கட்டுப்படியாகாது என்பதால், பத்திரமாக உடையாமல், பழைய பொம்மைகளை வைத்திருப்போம். இன்றும், சில பொம்மைகள் என் மாமா வீட்டில் இருக்கிறது. 

நவராத்திரியில், என்னப்போல ஆண்களுக்கு, ஒரே வேலைதான். ஒரு பாத்திரம் எடுத்துக் கொண்டு, எங்கள் வீட்டில் உள்ள பெண்கள், கொலு பாடுவதற்காக போகும்போது அவர்கள் பின்னால் போகவேண்டும்.

பெண்கள் அழகான தாவணிகள், பாவாடை, சட்டை அணிந்து கொண்டு இருப்பார்கள்.

என் DRESS CODE சொல்லி விடுகிறேன்

சட்டை கிடையாது. வெறும் டிராயர் தான். இடுப்பில் துண்டு இருக்கும். 
அது மூக்கு சளி, மற்றும் வேர்வை துடைப்பதற்கு,  டிராயர் நடுவில் “முக்கியமான இடத்தில், பட்டன் இருக்கும் இல்லாவிட்டால், ஊக்கு போட்டு இருப்பார்கள். சில சமயம் “காத்து வாங்கிக் கொண்டிருக்கும்”.  என் ஒரே குறிக்கோள்- சுண்டல் தான்” அதனால் “DRESS CODE” பற்றிய அதிக கவலை எனக்கில்லை,

கொலு இருக்கும் வீட்டில் இவர்கள் பாடிய பிறகு, சுண்டல் கொடுப்பார்கள். அந்த சுண்டலை இந்தப் பாத்திரத்தில் வாங்கிக் கொண்டு, வீட்டிற்கு வந்து, பிரித்துச் சாப்பிட வேண்டும்.  முதலில் யார் யார் வீடுகள் என்று ஒரு லிஸ்ட் போடலாம்

மேற்கில் இருந்து ஒரு ரவுண்டு வருவோம்....
அப்புவாம்
கிருஷ்ணமூர்த்தி மாமாவாம்  (தட்டாதிமூலை)
எங்கள் வீடு
நாகராஜன்-வெங்குட்டு சாஸ்த்ரிகள்
மில்காரர் வீடு. ஜெயராமன் வீடு
PS Sir வீடு
ஹெட் மாஸ்டர் வீடுபெரிய பண்ணை வீடு
PT Sir வீடு
குருக்கள் வீடு
சுப்பையன்/சீனி மாமா வீடு
முருகன் பாட்டி (மாலா)
பட்டாமனியாக்காரர் வீடு
சீனி சார்
கோபாலகிருஷ்ணன் (மகாதேவா) வீடு
Correspondent sir வீடு
ஐயங்கார் சார் வீடு
கணக்குப் பிள்ளை வீடு
பாடுக்கார அய்யா வீடு

என்னிடம் இருக்கும் “அக்ஷய பாத்திரம்” நவராத்திரி முழுவதும் சுண்டலால் நிரம்பி வழியும்.  இதில் என்ன பிரச்சினை என்றால், ஒவ்வொரு வீட்டிலும் வேறு வேறு சுண்டல் இருக்கும்.  கொண்ட கடலை, பயத்தம் பருப்பு, (சில வீட்டில், தேங்காய் போட்டு) பருப்பு சுண்டல், நிலக் கடலை சுண்டல், என்று பல வித சுண்டல் (கள்) 
என்னுடைய அக்ஷய பாத்திரத்தில் இருக்கும், 

வெள்ளிக்கிழமை ஆனால் “புட்டு” பண்ணுவார்கள். எல்லா வீட்டிலும் புட்டு தான்.  இருந்தாலும், ஒவ்வொரு புட்டிலும, ஒரு சுவை இருக்கும், ஒரு வீட்டு புட்டில் வெல்லம் ஜாஸ்தி இருக்கும். ஒரு வீட்டில் வெல்லம் குறைந்து இருக்கும், ஒரு வீட்டில் வெல்லமே இருக்காது. ஒரு வீட்டில் மாவு மாதிர் இருக்கும். புட்டு என்பது “மணல் மணலாக” இருக்க வேண்டும்.  எல்லா புட்டும் என் அக்ஷய பாத்திரத்தில் இருப்பதால், சாப்பிடும்போது ஒரு different taste.

என் வீட்டுப் பெண்கள் எல்லோரும், சுமாராக பாடுவார்கள் என்பதால், ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பாடல் பாடுவார்கள்.  4-5 பாடல்கள் முக்கியமாக

1)      ஸ்ரீ சக்ரராஜ சிம்ஹானேஸ்வரி
2)      எப்போதான் இரங்குவாயோ
3)      வெங்கடாசல நிலையம்
4)      முருகனைப் பற்றி சில பாடல்கள்
5)      பூராய மம காமம்
6)      பிரபோ கணபதே
7)      ஆடாது அசங்காது வா
8)      தாயே யசோதா

இந்தப் பாடல்களைப் பாடும்போது, நான் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, எப்படா பாட்டு முடியும் ? சுண்டல் கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டு உட்கார்ந்திருப்பேன்.

பல ஆச்சர்யங்கள் கொலுவோடு கூட இருக்கும். ஜெயாராமன் ஆத்தில் train வைத்து, ஓட விட்டார்கள்.  உஞ்சல் வைத்து, சிறு பொம்மையை ஆட வைத்தார்கள்.  சில வீட்டில், “பார்க்” கட்டி இருப்பார்கள். ஒரு சிறிய குழாயில், தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும். 

முத்தாலத்தி என்று ஒன்று உண்டு. ஒரு தட்டில், மைதா மாவு வைத்து கோந்து செய்து, கோலம் போடுவார்கள். கோலம் என்பது யானை உருவமோ, மயில் போன்ற அழகான படங்கள் OUTLINE மட்டும் போடுவார்கள். பிறகு, முழு முழு அரிசி கொண்டு. அந்த லைன் ல் ஓட்டிக்கொண்டே வரவேண்டும்.  அது முடிந்தபிறகு, கலர் பவுடர் போட்டு அந்த கோலத்தை மேலும் அழகு படுத்தவேண்டும்.  முழு அரிசிக்கு பதிலாக, அரிசி மாவை ஊர வைத்து, சிறு உருண்டைகளாக உருட்டி, போடலாம்.

இதில், என் ரோல் என்னவென்றால், முழு அரிசி, பொறுக்க வேண்டும். முத்தாலத்தியை – அந்த தட்டுடன், சிவன் கோவிலுக்கு எடுத்துச் சென்று கொடுக்க வேண்டும். கற்பூர ஆரத்தி காட்டி, பிறகு கலைத்துவிடுவார்கள். 

கற்பனை வளம், பொறுமை – இரண்டும் கற்றுக் கொடுக்கும் ஒரு கலை. முத்தாலதியைப் பற்றி, மஹா பெரியவாள், “தெய்வத்தின் குரலில், எழுதி இருப்பது இன்னும் விசேஷம்

என் வீட்டில், இந்த முத்தாலதி, பல் வகைகளில், பல வண்ணங்களில் மின்னும்.  என் குடும்பத்து, சித்திகள், சகோதரிகள் எல்லோரும் கலை அரசிகள்..  அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு முத்தாலதி போட, ஆனந்தவல்லி அதை புன்னகையுடன் ஆசிர்வதித்த அற்புதமான நாட்கள்.

இத்தனை சுண்டல், புட்டு எல்லாத்தையும் பங்கு போட்டுக்கொண்டு தின்றாலும் கூட, என் அம்மா, எங்கள் வீட்டில் சுண்டல் பண்ணி, நிறைய வைத்திருப்பாள். நாங்கள் அதையும் சாப்பிடுவோம். என் அம்மா பண்ணிய சுண்டல் சுவையே தனி. அதற்கு ஈடாக, எழேழு உலகமும் கொடுத்தாலும் ஈடாகாது. 

கோடி கொடுத்தாலும் செம்மங்குடி நாட்கள் வருமா ?!

இன்று, நான் அன்போடு வாய் நிறைய கூப்பிடும், அம்மா என்ற என் பாட்டியின் நினைவு தினம் (20-9).  5 மணிக்கு (5 pm) மறைந்தாள். நான் இந்தக் கட்டுரையை முடிக்கும் டைமும் அதே தான்


No comments: