Monday 27 February 2017

மயிலையேஅழகு, அழகே மயிலை

கடந்த  10 வருடங்களாக மயிலாப்பூரில் வசித்து வருகிறேன்.   தருமமிகு சென்னை மாநகரத்தில்,  இந்த இடம் கடற்கரை ஓரத்தில் இருந்தாலும்,   கற்பகாம்பாள் கோவில் இருக்கும் இடம் என்பதால், என்னவோ மயிலாப்பூர், சென்னையின்  மத்தியில் இருப்பதாக ஒரு திண்ணமான எண்ணம். உலக அளவில் பிரசித்தி பெற்ற இடம்.   “என்னது !! சென்னைக்குச் சென்றபோது கபாலி கோவிலைப் பார்க்கவில்லையா ?  என்ன சார் நீங்க ?”  என்று யாராவது வெறுப்பேற்றுவதற்க்கு முன்பு மயிலாப்பூரை பார்ப்பது நலம். அது என்னவோ இந்தக் கோவிலைச் சுற்றி  விஷ்ணு கோவிலும், சிவன் கோவிலும் பல இருந்தும் கூட கற்பகாம்பாள் கோவில் என்பது ஒரு படி ஒசத்தித்தான் போலும். 
திருச்செந்தூர் போன்று கடற்கரைக் கோவிலாக இருந்தது, பிறகு, சாந்தோமில் உள்ள church க்காக, வழி விட்டு சற்று உள்ளே வந்தது.  பழைய சரித்திரத்தைப் பார்க்கும் போது, முதலில், போர்த்துகீசியர்களால் கடற்கரையில் இருந்த இந்த கோவிலை இடித்து  church கட்டப்பட்டது. பிறகு இந்த கோவிலைக் கட்டும்போது, இந்து ராஜாக்கள், church ஐ இடிக்க வில்லை.  அதற்கு மாறாக, சற்று உள்ளே தள்ளி கோவிலைக் காட்டினார்கள். இந்து மதத்தில், மத நல்லிணக்கம் எவ்வளவு உயர்வாக இருந்தது அந்தக் காலத்தில் என்பதற்கு இது ஒரு உதாரணம். 
நான்  முதலில் Chartered accountancy படிப்பு படிப்பதற்காக சென்னை வந்தபோது, இந்த இடத்தைப் பார்த்ததாக ஞாபகம் இல்லை. எங்கேயோ அண்ணா நகரில் மாமா வீட்டில் தங்கி பாண்டி பஜார் அருகே ஆடிட்டர் ஆபிசில் வேலை செய்து கொண்டு இருந்த எனக்கு மயிலாப்பூரின் மகத்துவம் தெரியாமற் போனது ஆச்சர்யம் இல்லை.
மறு பிரவேசமாக  சென்னையில் குடித்தனம் வைத்த பிறகு,  மந்தவெளிப்பாக்கம், மந்தவெளி, மயிலாப்பூர், என்று மானாவாரிக்கு வீட்டை மாற்றி, தற்போது, சாய் பாபா கோவிலில் பின்புறம் இருக்கும் அலமேலுமங்காபுரத்தில் வாசம்.
என்னமோ தெரியவில்லை, கபாலியுடன் சேர்ந்த கற்பகாம்பாள் அருளோ, அல்லது  முன்னோர்கள் செய்த புண்ணியமோ , மயிலாப்பூர் என்பது என் வாழ்கையின் ஒரு அங்கமாகிவிட்டது.
என் மனைவி, லட்ச ரூபாய் கொடுத்தாலும் மயிலாப்பூர் விட்டு வரமாட்டேன் என்று சொல்ல  “என்ன இருக்கு இந்த மயிலாப்பூரில்” என்று கேட்கத் தோணவில்லை.  ஏனெனில், எனக்கே, இங்கு நிறைய இருப்பதால் !!!
உத்தர கோச மங்கை என்ற பெயரை  மயிலாப்பூரில் இருப்பவர்களோ, அல்லது, இங்கு வந்த செல்பவர்களோ,  எத்தனை பேருக்கு தெரியும்  ?   (பதில் கீழே)
கற்பகாம்பாள், கபாலியுடன், அழகாக உட்கார்ந்து கொண்டு, இருக்க, அவர்கள் எதிரில்  ஆஞ்சநேயசுவாமி  கை கூப்பி நின்று கொண்டு இருப்பதை,  கபாலி கோவிலில் எத்தனை பேர் பார்த்து இருக்கிறீர்கள் ? (பதில் கீழே)
கற்பகாம்பாள் சன்னதிக்குப் போகும் முன், நந்தியின் இடது புறத்தில் உள்ள சுவற்றில், திருவெம்பாவை எழுதி இருப்பதைப் பார்க்கலாம்,  அதே சுவற்றில், கீழ்கண்ட வாசகம் எழுதி இருக்கும்.


மாணிக்க வாசகர் அருளிய பொன் மொழிகள்:
“உடையாள் உந்தன் நடுவிருக்கும்
உடையாள் நடுவில் நீ இருத்தி
இரு நீரும் அடியார் நடுவில் இருப்பீர். அதனால்
அடியேன், அடியார் நடுவில் இருக்கும் அருளைத்
தருவீர், முடியே முதல....”

இதற்கு என்ன அர்த்தம் என்று யோசித்திருக்க்கிறோமோ ?
இதன் அர்த்தம்:
மாணிக்கவாசகரைப் பார்த்து, சிவபெருமான், கேட்கிறார்.
சி. பெ-  மாணிக்கவாசகரே, கைலாசத்துக்கு வருகிறீர்களா ?
மா. வா- வரமாட்டேன் !!
சி. பெ-  (அதிர்ச்சியுடன்)), என்னது வரமாட்டீரா !!!. அவன் அவன்  கைலாசம் கைலாசம் என்று அலைகிறான். நீர் என்னவென்றால் வரமாட்டேன் என்கிறீரே ?
மா. வா- கைலாசத்தில் என்ன இருக்கிறது ?
சி. பெ-  கைலாசத்தில், நான் இருக்கிறேன்.
மா. வா-  பிறகு
சி.பெ- உமையம்மை இருக்கிறாள்
மா. வா- பிறகு
சி. பெ- கந்த வேள் இருக்கிறார்
மா வா.- பிறகு
சி. பெ- பிறகு என்ன வேண்டும் மாணிக்கவாசகரே ?
மா. வா- அடியவர் உண்டா ?
சி. பெ- அடியவர் கைலாசத்தில் இல்லை
மா.வா- அப்போது நான் அங்கே வரவில்லை !
சி. பெ- (ஆச்சர்யத்துடன் ) –அடியவரிடம் என்னிடம் இல்லாதது என்ன இருக்கிறது ?
 மா. வா-  சுவாமி.   நீங்கள் இருக்கிறீர்கள், உன் உடம்பில் உமையவள் இருக்கிறாள், நீங்கள் இருவரும், அடியவர் மனதில் இருக்கிறீர்கள்.  அதனால், நான், அடியவரிடம் இருந்து விட்டால், உன்னோடும், உமையோடும் இருந்த பலன் எனக்குக் கிடைக்கும் அல்லவா !!.  அதனால் பூலோகத்தில் என்னை விட்டு விடவேண்டும்.
இப்போது மீண்டோம் அந்த கவிதையைப் படிக்கவும்
என்ன அழகான வரிகள்.  அம்சமான அர்த்தம்”
பல வித ஆச்சர்யங்கள் நிறைந்த இடமாக மயிலையைப் பார்கிறேன்.  இன்னும் காலில் செருப்பு போட்டுக்கொள்ளாமல்  மாட வீதியில் நடக்கும், மக்கள்,    (“மயிலை மாநகர் மேவிய கந்தப் பெருமாளே” என்று பாடிய அருணகிரிநாதர், “கல்லாடை புனைந்தருளும் கபாலியை, கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே” என்று பாடிய சம்பந்தர் போன்ற  துறவிகள் நடந்த இடம் என்பதால்.)
அருமையான தேவாரப் பாடல்களை பாடும், ஓதுவார் சத்குருநாதர்,  நவராத்திரியில், கொலு பொம்மைகள் கடைகள், கார்த்திகை தீபத்தின் பொது, அகல் விளக்குகள் கடைகள், எப்போதும் தூள் பரத்தும், பூ கடைகள், ஒரே விலையை எல்லா இடத்திலும் விற்கும் கறிகாய் கடைகள்.
மார்கழி மாதம் வந்தால் விடியற்காலை ஐந்து மணிக்கு, தெருவில் ஒரு கோஷ்டி விஷ்ணு சஹஸ்ர நாமம்  ஜபித்துக் கொண்டு வா, ஒரு பக்கம், புருஷ சூக்தம், ஸ்ரீ சூக்தம் போன்ற வேத கோஷங்கள், மறு பக்கம், பாபநாசம் சிவன் வம்சாவளியினர்  அவருடைய பாடல்களை பாடிக்கொண்டு வர, இன்னொரு பாகம், “தோடுடைய செவியன்” என்று  தேவாரப் பாடல்களைப் பாடிக் கொண்டு வர,  எனக்குக்
“கேட்க, பார்க்க, ரசிக்க,.....கோடி ஜன்மம் வேண்டும்” என்று சொல்லத் தோன்றும்.  சென்னையில் எத்தனை கோவில்களில்  மார்கழி மாதம் இத்தனை சிறப்பாக கொண்டாடப்படுகிறது என்பது எனக்குத் தெரியவில்லை.
63 வர் என்ற ஒரு வைபவம், -“காணக் கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி” என்று பாபநாசம் சிவன் பாடிய பாடலில் எத்தனை உண்மை இருக்கிறது என்பது 63 வர் உத்சவத்தின் போது பார்க்கலாம்.  ஏன் பாபநாசம் சிவன் கற்பகத்தையும், கபாலியையும் தவிர, அருகிலுள்ள வேறு சிவ ஆலயங்களைப் பாடவில்லை என்பது புதிராகவே இருக்கிறது.
இன்னும் கபாலியை முதலில் பார்த்த பின், கற்பகாம்பளைப் பார்க்கும் பேர்வழிகள் இருக்கிறார்கள். 
(சிவனுக்கு அப்புறம்தான் சக்தி என்பது ஆவர்கள் வாதம்)
சோலைகளும், மயில்களும் நிறைந்த இந்த இடம், இப்போது,  மாடங்களும், அடுக்கு மாடிக் கட்டிடங்களும், கோவில் நிலத்தை அபஹரித்துக்கொண்டு,  வரி கட்டாமல் இருக்கும், பிரகஸ்பதிகளும் (அவர்கள் பெயர், பொன்னெழுத்துக்களில் பொறிக்கப் படாமல், பெரிய எழுத்துக்களில் கோவில் உள்ளே வைத்திருப்பார்கள்.) கொண்ட ஒரு நவீன இடமாக காட்சி அளிக்கிறது.
 என்னதான் நவீனமாக இருந்தாலும், மாறாதது, கற்பகம்பாளும், கபாலியும் தான்.  

இப்போது உத்தர கோச மங்கை- மாணிக்கவாசகர், கற்பகம்பாளை, அர்த்தஜாமத்தில், சயன அறைக்கு அனுப்பும் போது, உத்தர கோச மங்கை என்று சொல்லி, போன்னூஸலில்  (பொன்னூஞ்சல்)  கபாலியுடன் உட்கார வைத்து ஆட்டுகிறார்.  இது பார்க்க வேண்டிய காட்சி.  
சயன அறைக்கு மேலே பார்த்தால்,  கபாலியும், கற்பகம்பாளும் உட்கார்ந்து கொண்டு இருக்க,  அவருக்கு எதிரே, ஆஞ்சநேயர் நின்று கொண்டிருக்கும் காட்சி,
மிக மிக அரிய காட்சி.  இதன் பின் புலத்தில் அமைந்த கதை எனக்குப் புரிய வில்லை என்றால் கூட,  அனுபவிக்க வேண்டிய ஒரு காட்சி.
 “இன்ன தன்மையன் என்று அறிய வொண்ணா, எம்மானை எளி வந்த பிரானை” என்று தேவாரத்தில் பாடியுள்ள படி,  மைலாப்பூர், இன்னவென்று அறிய வொண்ணா- சுகம் தரும் இடம்.

                                                                                      (தொடரும்)

No comments: