Thursday, 10 November 2016

சஞ்சய் சுப்ரமணியன்- கச்சேரி- பாரத் சங்கீத உற்சவம்-  2016






வரதராஜன்- வயலின்

நெய்வேலி வெங்கடேஷ்- மிருதங்கம்
ஆலத்தூர் ராஜ கணேஷ்- கஞ்சிரா


சஞ்சய் சுப்ரமணியம் தன் ஒவ்வொரு கச்சேரியிலும் தன்னுடைய தரத்தை உயர்த்துவதோடு, ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறார். அவர்க்கென்று ஒரு “அர்த்தமுள்ள, பிரியமான” ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த ரசிகர் பட்டாளத்தில் நான் இருக்கிறேன் என்று சொல்வதில் எனக்கு கர்வம் உண்டு.


பா,ச,உத்சவத்தில், ராமகிருஷ்ண முர்த்தி, விஜய சிவா மற்றும் சஞ்சய் சுப்ரமண்யம் இவர்களது கச்சேரிகள் தான் சம்பிரதாய கச்சேரி.  ராமகிருஷ்ண முர்த்தி கச்சேரிக்கு என்னால் செய்ய முடியவில்லை. அதனால் இந்தக் கச்சேரிக்கு செல்ல முடிவு செய்தேன். விஜய் சிவா வரும் வெள்ளிக் கிழமை பாட இருக்கிறார்.


7 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய கச்சேரி சற்று முன்பாகவே ஆரம்பித்து விட்டது. நான் மெதுவாக சென்றதில் இடம் கிடைக்காமல் பால்கனியில் தஞ்சம் அடைந்தேன். நாரத கான சபா போன்று ஒரு பெரிய ஹால் நிரம்பி வழிகிறது என்றால் அது சஞ்சய் கச்சேரியாகத்தான் இருக்க முடியும். அதுவும் ஒரு வார நடுவில், செவ்வாய்க்கிழமையில். சஞ்சய் எப்படி என்றால், “இதுதான் எனக்கு கொடுக்கப்பட்ட தருணம். என் உயிரைக் கொடுத்து இரண்டு மணி, மூன்று மணி நேரம் ரசிகர்களைத் திருப்தி படுத்துவேன். நாளையிலிருந்து எனக்கு கச்சேரி கிடையாது” என்ற தீர்மானமான கொள்கை உடையவர்.


இதை அவர் “சங்கீத கலாநிதி” விருது வாங்கியதற்காக எஸ் எல் நரசிம்ஹன் ஏற்பாடு செய்த ஒரு விழாவில், அவரே சொன்னார்.


கேதாரத்தில் ஒரு வர்ணம் ஆரம்பிக்க, கச்சேரி களை கட்டிவிட்டது என்றே சொல்லவேண்டும்.  புதிது புதிதாக வர்ணம் பாடுவது என்பதே ஒரூ சிறந்த முயற்சி. இரண்டாவது பாடலாக, சிவ சிதம்பரமே என்ற “முத்து தாண்டவர்” எழுதிய பாடலை பாடி, அதில் ஒரு நீண்ட ஸ்வரப்ரசாதம் செய்து தனது குரலை சற்று “தீட்டிக்கொண்டார்”. இது நாகஸ்வராவளி என்ற ராகம். இதில் “ஸ்ரீபதே” என்ற ஒரு தியாகராஜர் கிருதி ஒன்று உண்டு. அது சங்கீத கலாநிதி K.V.NARAYANASWAMY அவர்கள் பாட கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். அரியக்குடி பாணியின் அம்சமான பாடல்.


முதல் இரண்டு பாட்டுக்களில், சஞ்சய் கொஞ்சம் குரல் கலங்கிய நீர் போல் இருந்தது. நாடகப்ரியா என்ற சற்று பரிச்சயம் இல்லாத ரகத்தை எடுத்து ஆரம்பித்த போது தான், உண்மையான சஞ்சய் வெளியே வந்தார்.


ராகத்தை, நிதானமாக நிறுத்தி, சில இடங்களில், அந்த ராகத்தை பட்டை தீட்டி, மின்னும் வைரமாக ஜொலிக்கச் செய்தார்.

பாட்டு, “இதி சமயமு” என்ற மைசூர் வசுதேவசார் எழுதிய பாடல். “இது தான் சமயம், என்னை காப்பதற்கு” என்ற அர்த்தத்துடன், மிக எளிமையான அர்த்தத்துடன் எழுதப்பட்ட பாட்டு.  சமயமு என்ற இடத்தில், நிறுத்தி, அழகு படுத்தியது, தீபாவளி மருந்து (லேகியம்) சாப்பிட்டு, காபி குடித்தால், என்ன ஒரு சுகம் வருமோ, அந்த சுகம். நிரவலும் செய்து பாட்டுக்கு மேலும் அழகு சேர்த்தார்.


“வேலையா தயவில்லையா, எனக்கருள்” என்ற, கோடிஸ்வர ஐயர், பாட்டை எடுத்து, எக்ஸ்பிரஸ் வேகத்தில் பாட, அடுத்து வரும் பாட்டுக்காக மனம் ஏங்கியது. கோடீஸ்வர ஐயர், அய்யா என்று ஒவ்வொரு வரியிலும் முடியுமாறு எழுதிய ஒரு அற்புதமான பாடல்.
நீலாம்பரி ராகம் எடுத்தார். பொதுவாக நீலாம்பரி ராகம் என்பது “துக்கடா ராகம்’ என்பது என் கருத்து. அதை எவ்வளவு விஸ்தாரமாக பாடினாலும் 10 நிமிடத்திற்கு மேல்” ஒன்றுமில்லை என்று கருதுபவன் நான். அதனால், ராகத்தில் சற்று “கடுப்படைந்த” எனக்கு அருமையான கிருதியின் மூலம், திருப்தி செய்தார். பத வர்ணம் என்பதால், சற்று விஸ்தாரமான சிட்டைஸ்வரம்,

“ஆனந்தவல்லி” என்ற ஒரு சுவாதி திருநாள் பாடலை பாடியதன் மூலம். என் ஜன்மம் சாபல்யம் அடைந்தது என்றே சொல்ல வேண்டும். முதலில் இது தீட்சிதர் கிருதி என்றே நினைத்தேன். குரூகுஹ என்று நினைத்த எனக்கு “குரு முதம விரதம்” என்று கேட்டபோது தெரிந்தது, இடு சு.தி அவர்களின் பாட்டு என்பது. இதில், சிவனின் தாமரை மலர் போன்ற பாதத்தை மொய்க்கும் வண்டாக “அம்பாளை” கற்பனை செய்து பாடியிருப்பது, மகாராஜா சுவாதி திருநாள் எவ்வளவு “லயித்து’ இந்தப் பாடலை எழுதி இருப்பார் என்று புரிந்து.  மேலும் ஆனந்தவல்லி அம்பாளுக்கும் எனக்கும் நிறைய சம்பந்தமுண்டு.  எந்த ஊர் ஆனந்தவல்லியை மனதில் நினைத்து சுவாதி திருநாள் பாடினரோ, நான் பிறந்த ஊரான செம்மங்குடியின், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் அவர்கள் ஊர்தான், அம்பாள் பெயர் ஆனந்தவல்லி.  என் பாட்டி என் கையைப்பிடித்து அழைத்து சென்று காட்டிய முதல் கடவுள்.  ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரர்.  

இந்த ராகம் பாடும்போது, வயலினில் வரதராஜன், மிருதுவாக, நீலாம்பரியை மீட்ட, ஆனந்தகமாக தூக்கம் வந்தது. வரதராஜனைப் பற்றி நிறைய சொல்லலாம்.  சஞ்சய்க்கு, நாகை முரளிதரனா, வரதராஜனா, என்றால், சாலமன் பாப்பாவுக்கே, தீர்ப்பு சொல்வது கொஞ்சம் கஷ்டம்தான்.

“ஹரிடாசுலு வெடலு” என்ற ஒரு, இதுவரை கேட்காத த்யாகராஜர் கிருதியை, துரித கதியில் பாடினார். இது, தியாகராஜர், உஞ்ச வ்ருத்தி எடுக்கும்போது பாடியிருக்கக் கூடும். இந்த யமுனா கல்யாணி ராகம், அழகாக இருந்தாலும், பாடிய விதம், மனசுக்கு ஒட்டவில்லை. ஒரு தியாகராஜர் கருதியாவது நிதானமாக, நிறுத்தி, ஓட்டாமல், அழகாக பாடவேண்டும் என்பது என் தீர்க்கமான கருத்து.

பைரவி ராகத்தை, மெயின் ஆக எடுதிக்கொண்டார், அதை கையாண்ட விதம், பிரமாதம் என்றே சொல்லவேண்டும். அவருக்கே உரிய நாதஸ்வர கோர்வை, அனயாசமான புடிகள் எல்லாம் இருந்தது, வரது, இந்த ராகத்திற்கு தான் வயலினால் அழகு சேர்த்த பிறகு, ராகம், தானம் பல்லவி ஆரம்பித்தார்.

பல்லவி- இதுதான். வேலவனே, கோலாகலனே, உனது பாதம் துணையே, ஒராறுமுகனே, அறுமுகனே.

பல்லவியில், பியாகடா, சுப பந்துவராளி, மோகனம் மூன்றையும் சரி சமமாக கொடுத்து, ஒரு அருமையான கல்யாண சாப்பாடு, சாப்பிட்ட திருப்தியைக் கொடுத்தார்.

தனி, தனியாக இல்லாமல் நெய்வேலியாரும், ஆலதுராரும் அழகான ஜோடி சேர்ந்து கையாண்டார்கள்

மணி ஆகிவிட்ட படியால், அவசரமாக கிளம்ப வேண்டியிருந்ததால், துக்கடா செக்க்ஷன் கேட்க முடியவில்லை.

மொத்தத்தில், ஒரு அருமையான கச்சேரி. அடுத்தது சென்னையில் 
எங்கே பாடினாலும் உடனே கேட்கவேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார் என்பதை மறுக்கவே முடியாது.

கை தட்டல் என்பது ஒரு சம்ப்ரத்யகமாக இல்லாமல் ஆத்மார்த்தமாக இருந்தது.  வரதராஜனின் ஒவ்வொரு “தனி” யும் அருமை.



 

No comments: