Friday, 25 October 2013

சீ.ஊ.போ

இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் அவர்களின் இந்த ‘சீ.ஊ.போ’ பகிர்வு, சிலபல சாவுகளையும், தீர்மானங்களையும் உரசிச் செல்கிறது. வட பழனியில் தங்கி plaza manner அப்பார்ட்மெண்டில் அனிமேசன் படித்துக்கொண்டிருந்த சமயம்.நாமும் ஒரு நாள் இதைப்போல ஒரு அப்பார்ட்பெண்ட் வீடு சொந்தமாக வாங்கிவிட வேண்டும் என்ற கனவோடு இருந்தேன். அந்த குடியிருப்பில் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட யாரென்றே அறிமுகப்படுத்திக்கொண்டதில்லை.
எதிர் வீட்டில் 50 வயதிற்கு மேலிருக்கும்ஒரு பெண்மனி மட்டும் எப்போதாவது பேசுவார்.”என்ன தம்பி இப்போ தான் வறீங்களா.., சாப்டீங்களா..” . “ஆமாங்மா ..சாப்ட்டோம்”என்பதைபோல இயல்பான வார்த்தைகளோடு சரி.அந்த ஓரிரு வார்த்தைகள் பேசுவதும் அவர் மட்டும் தான்.
ஒருமுறை நானும் நமது ஃபேஸ்புக் ரோமியோ Shiva Fx ம் வெளியே சென்றுவிட்டு அறைக்கு வந்தோம்.அப்போது எதிர் வீட்டில் ஐந்தாறு பேர் புதிதாக உட்கார்ந்திருந்தார்கள்.சரி ஏதோ விசேசம் போலிருக்கிறது என்று எங்கள் அறைக்கு உள்ளே போய் விட்டோம்.
உள்ளே போன பிறகு தான் சொன்னார்கள் எதிர்வீட்டில் இருந்த பென்மனி இறந்து விட்டார் என்று. எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.அவர் இறந்ததை காட்டிலும் அவர் இறப்பிற்க்காக வந்த சொந்தம் இவ்வளவு தானா என்பதே அதிர்ச்சிக்கு காரணம்.இதே நம்ம ஊரா இருந்திருந்தா ரொம்ப சாதாரன மனிதன் இறந்திருந்தா கூட இன்னேரம் ஆயிரம் ஆயிரத்தைனூரு பேர் கூடி இருப்பங்களே என்று வியப்பு.இந்த பெண்மனி இதுவரை சம்பாதித்தது இந்த ஏழெட்டு பேர் தானா என பெரிய குழப்பத்திற்க்கு ஆளாகிப்போனேன்.
எனது குரு அன்பு சார் சொன்னார் “சிட்டில எல்லாம் இப்படிதான் ஊர்ல மாதிரி எல்லாரும் வேல வெட்டிய விட்டுட்டு வந்து ஆறுதல் சொல்லிகிட்டு இருக்க மாட்டாங்க”என்று. ஆம் எங்க ஊர் பக்கமெல்லாம் ஒருவர் இறந்து விட்டால் பெரும்பாலும் ஊரில் யாரும் வேலைக்கு போக மாட்டார்கள்.சுற்றுபக்கத்து வீடுகளில் சமைக்கமாட்டார்கள்.திருவிழாவோ வேறு ஏதேனும் கொண்டாட்டங்களோ இருந்தால் தள்ளி வைத்து விடுவார்கள்.இறந்தவர்களின் குடும்பத்திலுருப்பவர்கள் ஓரளவு மனநிலை தேறும் நாள்வரை அவர்களுடன் உறவினர்கள் இருப்பார்கள்.
”சரி அழுவாதப்பா அவரு செத்துட்டா நாங்கல்லாம் இல்லயா ஒனக்கு,ஒனக்கு எதா இருந்தாலும் நாங்க பாத்துக்குவோம் நீ தைரியமா இரு”என்று சொல்கிற வார்த்தைகள் தரும் ஆறுதலை வார்த்தையால் விவரிக்க முடியாது. எதிர்வீட்டு பெண்மனியை எடுத்து செல்வதற்க்காக ஒரு ஆம்னி வண்டி வந்திருந்தது.பிணத்தை வெளியே தூக்கி வந்தார்கள்,நாங்களும் இணைந்து கொண்டோம்.
நான் பிணத்தை பார்த்ததை விட சுற்றி இருப்பவர்கள் முகத்தையே பார்த்தேன்.எல்லோரும் சிறிதும் பெரிதுமான விசும்பலோடு நிறுத்திக்கொண்டனர்.நாம் அழுவதை பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் யாராவது பாத்தால் என்ன ஆவது என்று நினைத்துகொண்டே அழுததை போல் அழுதார்கள். நமது ஊரிலெல்லாம் பிணம் வீட்டை விட்டு போகும் போது ஓவென கதறுவார்கள்.
இத்தனை காலமாக நீ இந்த வீட்டில் இருந்த போது எப்படியெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தோம்..இனி நீ இந்த வீட்டிற்க்கு எப்போது வரப்போகிறாய்..நீ இல்லாத இந்த வீட்டில் நாங்கள் எப்படி வாழப்போகிறோம்..என்ற மனக்குமுறல் தான் அந்த கதறல். இங்கே அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை.ஆம்னி வண்டியில் பிணத்தோடு சிலரும் மற்றொரு வண்டியில் சிலரும் போக நானும் sivafx ம் டூ வீலரில் பின்தொடர்ந்தோம்.
கண்ணம்மா பேட்டை மின்சார சுடுகாடு.பிணத்தை ஒரு ட்ராலியில் வைத்து உள்ளே தள்ளினார்கள்.முன்பக்க கதவு மெதுவாக கீழே இறங்கி கொண்டிருந்தது.முழுவதுமாய் இறங்குவதற்க்குள்ளே துணியெல்லாம் பொசுங்க தொடங்கியது.
தனக்காக அழுவதை கூட நாகரீக குறைச்சலாக நினைக்கும் ஐந்தாறு பேரை மட்டுமே சம்பாதிக்க முடிந்த நகர வாழ்வின் சதை வடிவம் எரிந்து முடிந்தது. கதவை திறந்த போது சாம்பலாக கொட்டிக்கிடந்தது.அந்த சாம்பல் குவியலில் எனது “அப்பார்ட்மெண்ட் கனவு” எந்த இடத்தில் கிடக்கிறது என பிரித்து பார்க்க முடியவில்லை.
எனது அறைக்கு போன பிறகு ஏற்பட்ட மனஓட்டம் விவரிக்க முடியாதது.என் அறையிலுருந்த சுவிட்ச் பாக்ஸில் எழுதி வைத்தேன் “சீ.ஊ.போ.” என்று. என் அறைக்கு வருபவர்கள் எல்லோரும் கேட்பார்கள் “அது என்ன சீ.ஊ.போ. என்று. “அது எனது குறிக்கோள் அவ்ளோ தான் எக்ஸ்ப்ளைன் எல்லாம் பண்ண முடியாது முடிஞ்சா கண்டு புடிச்சுக்கோங்க”என்று சொல்லி விடுவேன்.
ஒருமுறை அப்பா அறைக்கு வந்திருந்தார்.சுவிட்ச் பாக்ஸயே பார்த்துக் கொண்டிருந்தவர் “எதுக்குடா சுச்சி பொட்டீல ‘சீக்கிரம் ஊருக்கே போயிருனும்’னு எழுதி வச்சுருக்ற”என்றார். ஆம் ..ஆச்சரியமாக அவர் கண்டுபிடித்து விட்டார். அது தான் சரி.
அந்த அறையை காலி செய்து கொண்டு வந்த பிறகு வெங்காயம் படத்தின் post productionக்காக தான் சென்னை போனேன்.
இங்கு வந்த பிறகு பணக்காரத்தனமான,நவீனத்துவமான வாழ்வை வாழ முடியாவிட்டாலும் நிம்மதியான எனக்கு பிடித்த வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
தேங்ஸ் டூ தேனாம்பேட்டை சுடுகாடு

No comments: