மைசூர் சுவாமிகள், திருப்புகழ் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டவர் ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள். இவர் மிகச் சிறந்த முருக பக்தர். இவருக்கு திருவண்ணாமலை சென்று ரமண பகவானை குருவாக அடைய வேண்டும்; அவரிடம் தீக்ஷை பெற வேண்டும் என்ற ஆவல் இருந்தது. அதனால் ரமணரைத் தேடிக் கொண்டு இவர் அண்ணாமலைக்கு வந்தார். ஆலயத்துக்குச் சென்று அருணாசலேஸ்வரரை வழிபட்ட பின் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியை தரிசனம் செய்யச் சென்றார். அப்போது பகவான் விரூபாஷி குகையிலும், ஸ்கந்தாசிரமத்திலும் வாசம் செய்த காலம்.
விருபாக்ஷி குகையை அடைந்தார் திருப்புகழ் சுவாமிகள். அப்போதுதான் பகவான் ரமணரும் குகையை விட்டு வெளியே வந்தார். ஸ்ரீ ரமணரின் கோவணம் மட்டுமே அணிந்த தோற்றமும், நீண்ட கைத்தடியும் அவருக்கு பழனியாண்டவரை நினைவுபடுத்தியது. பகவான் ரமணர் திருப்புகழ் சுவாமிகளுக்கு பழனியாண்டவராகவே காட்சி அளித்தார். “தென் பழனி ஆண்டவனுக்கு அரோகரா!” என்றவாறே ரமணரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார் திருப்புகழ் சுவாமிகள். பின் அங்கேயே பிற தொண்டர்களுடன் சேர்ந்து வசிக்க ஆரம்பித்தார். ரமணரின் அன்பிற்குப் பாத்திரமானார். பகவான் சன்னிதானத்தில் முருகன் புகழ் பாடுவதே அவருக்கு நித்ய கடமையாயிற்று. பகவான் ரமணர் ஓய்வாக இருக்கும் பொழுது, கம்பீரமான தனது குரலால் திருப்புகழைப் பாடுவார். பகவான் ரமணர், சுவாமிகளை “திருப்புகழ் முருகன்” என்றே அன்புடன் அழைப்பார். ரமணரை வணங்குவதை தனது நித்ய கடமையாகக் கொண்டிருந்தார் சுவாமிகள்.
ஒரு நாள்…
பணிவிடை செய்து கொண்டிருந்த திருப்புகழ் சுவாமிகளைப் பார்த்து, ரமணர், ”கீழே போ, கீழே போ, இங்கே நிற்காதே! உடனே கீழே போ” எனக் கட்டளையிட்டார். திருப்புகழ் சுவாமிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘தான் ஏதும் தவறு செய்து விட்டோமோ, அதுதான் மகரிஷி கோபித்துக் கொண்டு தன்னை கீழே போகுமாறு சொல்லிவிட்டாரோ’ என நினைத்து வருந்தினார். பின்னர் ‘குருவின் வார்த்தையை மீறக்கூடாது’ என்று, நினைத்து, அவர் கட்டளையிட்டபடியே மலையிலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தார்.
கீழே.. ஒரு குட்டையில் சேஷாத்ரி சுவாமிகள் நின்று கொண்டிருந்தார். அங்குள்ள ஒரு எருமையைக் கட்டிக் கொண்டு, அதனோடு ஏதோ பேசி கொஞ்சி கொண்டிருந்தார். உடல் முழுவதும் சேறு, சகதி.
திருப்புகழ் சுவாமிகள் வருவதைப் பார்த்தார் மகான் சேஷாத்ரி சுவாமிகள். உடனே குட்டையை விட்டு எழுந்து ஓடோடி வந்து திருப்புகழ் சுவாமிகளைக் கட்டிக் கொண்டு விட்டார். சேஷாத்ரி சுவாமிகளின் உடை மீதுள்ள சேறு, சகதி எல்லாம் திருப்புகழ் சுவாமிகள் மீதும் ஒட்டிக் கொண்டது. திருப்புகழ் சுவாமிகளோ ஒன்றுமே புரியாமல் திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தார். சகதி வாசத்துக்கு பதிலாக எங்கும் ஒரே சந்தன வாசம். திருப்புகழ் சுவாமிகளின் மீதும் சந்தன வாசம் வீசியது. திகைத்துப் போய் நின்று கொண்டிருந்த திருப்புகழ் சுவாமிகளைத் தன்னருகே இழுத்து அருகில் அமர வைத்துக் கொண்ட சேஷாத்ரி சுவாமிகள், அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தார்.
“ஆத்மாத்வம் கிரிஜாமதி; ஸஹசரா; ப்ராணா; சரீரம் ஹம்
பூஜாதே விஷயோப போக ரசனா, நித்ரா ஸமாதி ஸ்திதி…”
- எனத் தொடங்கும் சிவ மானச ஸ்தோத்திரத்திலிருந்து நான்காம் ஸ்லோகத்தைச் சொல்லி அதன் பொருளை விளக்கினார். “ஈசனே நீயே எனது ஜீவாத்மா; தேவியே நீயே எனது புக்தி! என்னுடைய உடலே உன்னுடைய இருப்பிடம். நான் ஈடுபடும் அனைத்து விஷயங்களும், அனுபவிக்கும், அனைத்து போகங்களும் உன்னுடைய பூஜையே!” என்ற பொருள்படியுமான அந்த ஸ்லோகத்தின் பொருளை திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகளுக்கு விளக்கி அருளிய சேஷாத்ரி சுவாமிகள், “இதே கருத்துக்குச் சமமான திருப்புகழ் பாடல் ஏதேனும் உள்ளதா?” எனக் கேட்டார்.
அதற்கு திருப்புகழ் சுவாமிகள், “அமல வாயு வோடாத..” எனத் தொடங்கும் 1048-வது திருப்புகழின்
“எனதியானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்
இதய பாவா னாதீத மருள்வாயே! “
-என்ற வரிகளைப் பாடி, பொருளையும் விளக்கினார்.
அதைக் கேட்டு மிகவும் மனம் மகிழ்ந்த சேஷாத்ரி சுவாமிகள், “திருப்புகழ்தான் உனக்கு இனி தாரக மந்திரம். நீ இனிமேல் உன்னுடைய சுயநலத்திற்காக என்று எந்தக் காரியத்தையும் செய்யாமல், சிந்தனை, சொல், செயல் என அனைத்தையும் பரம்பொருளுக்கே அர்ப்பணம் செய்து வாழ். அனைத்தும் இறைவனுக்கே என்ற அர்ப்பணிப்பு உணர்வோடு வாழ்க்கை நடத்து. நீ இனி வேறு எந்த மந்திர நூல்களும் படிக்க வேண்டாம். ஜெப, தபங்கள் என்று எதுவும் செய்ய வேண்டாம். உனக்கு திருப்புகழே போதும். இனி நீ எங்கு சென்றாலும் திருப்புகழ் ஒலிக்க வேண்டும்” என்று கட்டளையிட்டார்.
திருப்புகழ் சுவாமிகளுக்கு ஒரே ஆனந்தம். சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்து வணங்கினார். பின்னர் சேஷாத்ரி சுவாமிகள் அவரிடம், “நீ இனிமேல் வள்ளி மலைக்குப் போய் தவம் செய்து கொண்டிரு. பின்னர் நானும் அங்கு வந்து சேருகிறேன்” என்று கூறி ஆசிர்வதித்தார். மகானை வணங்கி விடை பெற்ற திருப்புகழ் சுவாமிகள், குருவின் ஆணைப்படி வள்ளிமலைக்குப் போய் தவம் செய்து வரலானார். அது முதல் அன்பர்கள் அனைவராலும் அன்புடன் “வள்ளிமலை சுவாமிகள்” என அழைக்கப்பட்டார்.
ரமணரை குருவாக அடைய நினைத்தார் திருப்புகழ் சுவாமிகள். ஆனால் அவருக்கு சேஷாத்ரி சுவாமிகள் குருவாக அமைந்தார். ஒருவர் எப்படிப்பட்ட பக்தராக இருந்தாலும், சீடர் குருவைத் தேர்ந்தெடுக்க முடியாது; குருவே தமக்கான சீடரைத் தேர்ந்தெடுக்கிறார் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சான்றாகிறதல்லவா?
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!!
No comments:
Post a Comment