Friday, 19 April 2013

"குலதெய்வம்"-பெரியவாளின் கருத்து.
[நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்திரா சௌந்தர்ராஜன் கட்டுரை]

ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் ‘குலதெய்வம்’ என்பது குறித்து பெரியவா சொன்னது மிகவும் கவனமாய் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால், நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே நட்சத்திரம் வேறாக, உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும் இருக்கும். அதுதான் இயற்கையும்கூட! ஆனால், கோத்திர வழி மாறாதபடி இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வ சான்னித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள். காது குத்துவது போன்ற வழிவழிச் செயல்பாடுகளும் நடந்துமிருக்கும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்; போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?"

- பெரியவர் சொல்லச் சொல்ல, பர்மாக்காரரிடம் பரவசம்!

அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?

ஒரு குடும்பத்தைப் பொருத்தவரையில் அந்த இறைசக்தி குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வதுகூட தவறு. வெளிப்பட, வழிவகை செய்யப்பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்... நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி! மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.

இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமேகூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?"

- பெரியவர் விளக்கி முடிக்க, வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப் போனது. இந்தக் குலதெய்வ வழிபாட்டில் மிகப்பெரிய நல்ல சமாச்சாரம் ஒன்றும் அடங்கியுள்ளது. சந்தர்ப்ப சூழல்களால் அல்லது பூர்வ கர்மத்தால், அதுவுமல்லாது பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகிறது என்று வையுங்கள். அதாவது, கண்ணுக்குப் புலப்படாத இந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை.

நான் ஒன்றும் முட்டாளில்லை என்று அவர் வீராப்பா பேசி, நாத்திகத்தில் நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும் நிலை வந்தாலும் பெரிதாய் தோஷமில்லை. ஏனென்றால், அவர் இவ்வாறு ஒரு நாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே, இந்தப் பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால், அவர் ஒருநாள் நிச்சயம் மனம் மாறி அருள் தொடர்புக்கு ஆட்படுவார் என்பது தான் இதிலுள்ள மிகச்சிறந்த ஒரு விஷயமாகும்.

இப்படி நம்பிக்கையற்றுப் போனவர், தன் பிள்ளைகளை அழைத்துவர மாட்டாரே! அவர்கள், இதனால் இந்தப் பரம்பரை தொடர்புக்கு ஆட்படாமல் போய் விடுவார்களே என்று ஒரு கேள்வி எழலாம். பெரும்பாலும் ஒரு வழியில், ஒரே கோத்திரத்தில் திருமணங்கள் புரிந்து கொள்ளாமல், முன்னோர் காட்டிய வழியில் போகும் பட்சத்தில், வாழ்வில் நமக்கு பெரிய கஷ்டங்கள் வருவது இல்லை என்பதுதான் இம்மட்டில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். உடம்புக்கு உணவுப் பொருளால் சக்தி ஏற்படுவது போல், மனதுக்கு இறை அருளால் சக்தி ஏற்படுகிறது.

ஒரு குலதெய்வத்தின் பின்னால், இப்படியான பிரத்யேக சிறப்புகள் நிறையவே உள்ளது. குல தெய்வத்தைப் பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல் போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது. பர்மாக்காரர் வரையிலும் அதுதான் நிகழ்ந்தது.

எனக்கும் இந்தக் குலதெய்வ விஷயம் மனசுக்குள் பெரும் உற்சாகத்தைத் தந்தது. நான் எங்கள் குலதெய்வக் கோயிலுக்குப் போனபோது என் பார்வையே மாறிப்போனது. அந்தக் கோயிலில் உள்ள ஒவ்வொரு தூண்களையும் தொடும்போது, என் தாத்தன் தொட்ட தூண்.. என் தாத்தன் நின்று மூச்சுவிட்ட இடம்.. என் முப்பாட்டன், அதற்கும் முற்பட்ட பாட்டன் நடந்து திரிந்த தரைப் பரப்பு.. அவர்களைப் பார்த்த பெருமாள் என்னையும் பார்க்கிறார் என்பதா? இல்லை, அவர்கள் பார்த்த பெருமாளை நான் பார்க்கிறேன் என்பதா?

ஒன்று உறுதி. அந்தப் பெருமாளை வணங்கிய வம்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவே எத்தனை பெரிய அனுக்ரகம்! இந்தக் குலதெய்வ விளக்கமும், இதன் பின்புலமும் எனக்குள் நம் முன்னோர்கள் மேல் பெரும் மரியாதையை ஏற்படுத்திற்று.

அடுத்த விஷயம் மறுஜென்மம் பற்றியது.

நான் ஒரு எழுத்தாளனாகத் திகழும் நிலையில், பரபரப்பான போட்டி உலகில் எல்லா களங்களிலும் எழுதும் ஆவல் எனக்கு உண்டு. அம்மட்டில் 1980-90களில் தமிழக பத்திரிகை உலகில் மற்ற நாவல்களின் தோற்றம் அதிகரித்து, கிட்டத்தட்ட பத்து பதினைந்துக்கும் மேல் மாத நாவல்கள் வெளியாகத் தொடங்கின. இதில் சுஜாதா, லக்ஷ்மி, அனுராதா ரமணன் போன்றோர் நிறையவே எழுதினார்கள். இந்த நாவல்களில் குடும்ப நாவல், மர்ம நாவல், துப்பறியும் நாவல், அமானுஷ்ய நாவல் என்று போட்டி காரணமாக பிரிவுகளும் உருவானது.

குடும்ப நாவல் எனும்போது, ஏராளமான குடும்ப நாவல்களை இந்தத் தமிழ்ச் சமூகம் பார்த்துவிட்டது. அடுத்து, வரலாற்று நாவல்கள். இதில் அமரர் கல்கியும், சாண்டில்யனும் போன உயரம் மற்றவர்களால் போக முடியவில்லை.

ராஜராஜ சோழன் காலத்தையொட்டி கதை எழுதும் போது, ‘சாம்பார் கொதித்தது. அதில் மிளகாய் அதிகம் இருந்தது’ என்றெல்லாம் எழுத முடியாது. ஏனென்றால், அந்த நாளில் காரத்துக்கு மிளகுதான் பயன்பட்டது. மிளகாய், தக்காளி எல்லாம் மேல்நாட்டிலிருந்து ஒரு முன்னூறு ஆண்டுகளில் வந்தவை. எனவே, நுட்பமாய் நிறைய விஷயங்களை உள் வாங்கிக்கொண்டு கவனமாய் எழுத வேண்டும். அதனாலேயே, சரித்திரக் கதைகளை எழுதுவோர் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.

அதேபோலத்தான் துப்பறியும் கதைகளும், மர்மக் கதைகளும்! விறுவிறுவென்று சஸ்பென்ஸ் கெட்டுவிடாமல், கதை சிட்டாகப் பறக்க வேண்டும்.

வாசக உலகமும், பெரிதான நிலையில் பத்திரிகைகளும் இப்படி துப்பறியும் மர்ம நாவல்களை வெளியிடுவதில் போட்டி போட்டன. இதில், சில குறிப்பிட்ட எழுத்தாளர்கள் பேரும் புகழும் பெற்றனர். அந்த நாளில், பரிசுக்குரிய பல கதைகளை எழுதி வளர்ந்து கொண்டிருந்த நான், அடுத்தகட்ட வளர்ச்சிக்காக இந்தமாத நாவல்களை எழுத விரும்பி, சில மர்மக் கதைகளையும் எழுதினேன். நல்ல பெயரும் கிடைத்தது.

ஆனால் தனித்த பெயர் ஒன்று கிடைக்க இன்னமும் உழைக்க வேண்டும், வித்தியாசப்பட வேண்டும் என்று தோன்றவே, என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான், மனித மனமே ஒரு பெரும் மர்மமான விஷயம் என்பதில் இருந்து, நம் வாழ்வில் இன்றும் புலப்படாத புதிராக மர்மமா பல விஷயங்கள் இருப்பது என் கவனத்தில் பதிவானது. உதாரணமாக - ஆவி தொடர்பான விஷயங்கள், மறு ஜென்மம் தொடர்பான விஷயங்கள், இறப்புக்குப் பின் என்னாகிறோம் என்னும் கேள்விகள், நம் வாழ்வை கிரகங்கள் வழி நடத்துகின்றன என்னும் நம்பிக்கை சார்ந்த கருத்துக்கள் என்று என்முன் அநேக கேள்விகள் எழும்பி நின்றன.

கூடவே, இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் மூடத்தனமானவை என்கிற ஒரு கருத்தும், அதையொட்டிய சிந்தனைகளும் சேர்ந்தே எழும்பியது. இம்மட்டில் யாரிடம் கேட்டாலும், அவர்களால் பளிச்சென்று ஒரு தீர்க்கமான பதிலைக் கூற முடியவில்லை. சிலர் சொன்ன பதிலுக்குள்ளும் பெரும் முரண்பாடு. இதை எதற்கு ஆராய்ந்து கொண்டு? ஆவிகள் இருப்பதாகக் கருதிக் கொண்டு பல திரைப்படங்கள் வந்துள்ளன. பல நாவல்களும் வந்துள்ளன. நாமும் ஓர் ஆவி இருப்பதாக வைத்துக்கொண்டு மிரட்டலாக ஒரு நாவல் எழுதுவோம் என்று விரும்பினாலும், மனம் அதற்கு ஒப்பவில்லை. அப்போதுதான் இந்த மறு பிறவி குறித்தும், உயிர், ஆத்மா குறித்தும் பெரியவர் கருத்து என் கண்களில் பட்டது. அது, பெரும் தெளிவைத் தந்தது. அது...?

No comments: