தியாக ப்ரம்ஹ கான சபாவில்
சஞ்சய் கச்சேரி. சில விஷயங்கள் அலுக்கவே அலுக்காது என்பதற்கு, பெரியவர்கள், கடல் அலை, யானை என்றெல்லாம் சொல்லுவார்கள். அதில் சஞ்சய் கச்சேரியை தாராளமாக சேர்த்துக்
கொள்ளலாம். கால் பந்து ஃபைனல் – ஒரு புறம் சென்றுகொண்டிருக்க, இங்கு அருமையான இசையை தந்து கொண்டிருந்தார்.
பல
முறை நான் இந்த கலைஞனைப் பற்றி எழுதி இருக்கிறேன். அன்று முதல் இன்று வரை நரசுஸ்
காபி மாதிரி, நிறம், மணம், குணம் மாறாமல் சூடான
இசையை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.
இவர்
strict ஆ சில வரை முறைகளை வைத்து இருக்கிறார்.
இப்போது
எல்லாம் கச்சேரி எப்படி என்றால், பக்க வாத்யக்காரர்கள், யார் வேணும் னாலும், எங்க வேணும்னாலும் உட்கார்ந்து கொள்ளலாம். வயலின் காரர், பாடுபவர் பக்கத்தில் உட்கார்ந்து கொள்வார். கடம் காரர் முன்னால், அப்படி...... இஷ்டத்துக்கு.
வயலின்
காரர், பாடுபவரின் கண்ணை குத்துவது போல ஒரு முறை வாத்தியத்தை வைத்து உட்கார்ந்து
கொண்டிருந்தார். பயந்தே போய் விட்டேன் !!
ஆனால், சஞ்சய் கசேரியில்
அப்படி கிடையாது.
இரண்டாவது, டிரஸ் கோடு, இந்த குர்தா போடுவது, கலர் காலராக டிரஸ் போடுவது, மாடு முட்டிவிடுமோ என்று பயம் எல்லாம் வேண்டாம். இதெல்லாம் இங்கு
கிடையாது. வெள்ளை டிரஸ் தான்.
விம்பிள்டன், கிரிக்கெட் டெஸ்ட் மாட்ச்
–டிரஸ் கோடு- இவையெல்லாம் நமக்கு தரும் பாடம்
இது. எத்தனை விஷயங்கள் புதிது புதிது ஆக வந்தாலும், பழமை
தான் நிலைத்து இருக்கும்.
அனாவசிய
பேச்சு கிடையாது. மைக் சிஸ்டெம் சரியில்லை, “இத ஏத்து, இத குறை”- sharp வை.என்று அனாவசிய “பொங்கல்” கிடையாது.
சிஷ்யர்கள்
புடை சூழ உட்காருவது, இரண்டு தம்பூரா, முன்னாடி எலக்ட்ரிக் தம்பூரா. 4
பாட்டு பாடுவதற்க்கு, 10 புஸ்தகம்,
மினி லேப்டாப்......அதை அடிக்கடி தடவி தடவி தள்ளுவது..... ..
ம்ஹூம்...
பழமை
மாறாமல், சங்கீத மழை பொழியும் வித்தகர்.
எனக்கு
கசேரியில், லேட் ஆக வருவது பிடிக்காது. கூடிய வரையில் முடியும் வரை இருப்பேன்.
பாதியில் எழுந்து செல்பவர்களைப் பார்த்தால் எனக்கு கோபம் வரும். அவர்களுக்கு, பசி இருக்கலாம். சுகர். இத்யாதி.
ஆனால்
ஒரு நாளைக்கு இந்த அற்புதக் கலைஞனுக்காக தியாகம் செய்தால் தான் என்ன. ? ஒரு மூன்று மணி நேரம், ஒரு சொட்டு தண்ணி கூட குடிக்காமல், கடைசி பாட்டு
வரை 100% அர்ப்பணிப்புடன் செய்யும் அற்புத பாடகர் – இவருக்காக நாம் செய்யும் மரியாதை
உட்கார்ந்து இருப்பதுதான். – என்பது என் எண்ணம்.
முதலில்
இந்தக் கச்சேரியில், மோர்சிங் வாசித்த பாக்யலக்ஷ்மி கிருஷ்ணா அவர்களைப் பற்றி சொல்லியே ஆக
வேண்டும். இவர் பக்க வாத்யம் வாசித்த கச்சேரிகளை நான் கேட்டதே இல்லை. இப்போது தான்
முதல் முறை. மோர்சிங் வாத்யமே அரிதாகி விட்ட இந்த காலத்தில்,
ஒரு பெண்மணி, கடினமான இந்த வாத்யத்தை சிறப்பாக வாசித்து, அதுவும் தனி ஆவர்தனத்தில், பின்னினார். மிக அழகாக
இருத்தது. அவருடைய கச்சேரிகளை “மிஸ்” பண்ணிவிட்டேனே என்று மிகவும்
வருத்தப்பட்டேன்.
நான்
தாளத்தில் expert கிடையாது. தனி ஆவர்த்தனதை சுமாராகத்தான் ரசிப்பேன். ஆனால் என் கண்ணையும், காதையும் எடுக்க விடாமல் செய்த அந்த பெண்மணிக்கு,
இதயம் கனிந்த வாழ்துக்கள்.
மோர்சிங் வாசிப்பவர்கள், முகத்தை குனிய
முடியாது. பாடுபவரோரோ, மிருதங்க காராரோடு போடும் தாளத்தை
பார்க்க முடியாது. வாயில்வைத்து வாசிக்கும்போது நாக்கு காயப் படக் கூட வாய்ப்பு
உண்டு. ஒரு பெண்மணி இதை வாசிப்பதற்க்கு ஒரு தைர்யம் வேண்டும்.
பக்க வாத்யம் வாசிக்கும்
பெண்மணிகளுக்கு சில சங்கடங்கள் உண்டு. கச்சேரி ரசித்தாலும், சிரிக்கவோ, பேஷ் என்று சொல்லவோ முடியாது. சிரித்தாலும் சங்கடம், சோகமாக உட்கார்ந்தாலும் சங்கடம். ஆனால் அவர் அமைதியாக உட்கார்ந்து அப்பப்போ
ஒரு புன் சிரிப்புதான். அவர் முகத்தில் ஒரு தெய்வீக அழகு இருந்தது.
மோர்சிங் வாசிக்கும்
குடும்பத்தில் வந்தவர் போலும். வாழ்க அவரின் சங்கீதம்.
கர்நாடக
சங்கீதம் என்பது ஒரு அதிசயம். அரியக்குடி காலத்தில் இருந்து, இன்று முளைத்து இரண்டு
இலை விடும் பாடகர்கள் வரை, தோடியையும்,, பைரவியையும் பாடிக் கொண்டே இருக்கிறார்கள். நாம் கேட்டுக் கொண்டே
இருக்கிறோம். நமக்கு அலுப்பதே இல்லை.
சஞ்சய்
என்ன பாட்டு என்று நாம் யூகிக்க விடுவதில்லை. அவருடைய முக நூலில் எழுதி விடுகிறார்.
இருந்தாலும்
பாடல்
லிஸ்ட்:
வாரண
முகவா- ஹம்ஸத்வனி – பாபநாசம் சிவன் –
நிரவல்- “முன்னவனே நீ முன் நின்றால், முடியாதது ஒன்றுமில்லை”- ஸ்வரம்
ச
ரி க ப நீ..... முடியாதது ஒன்றுமில்லை என்று வரதராஜனையும், நெய்வேலி வெங்கடேஷையும்
கையை காட்டி ஒரு ஸ்வரம்... “நீங்கள்” முடியாதது ஒன்றுமில்லை என்று ரசிகர்களைப்
பார்த்து. ஒரு ஸ்வரம் பாடினார்.
கச்சேரி
களை கட்டிவிட்டது:
இரண்டாவதாக
பௌளி ராகத்தை கொஞ்சம் காட்டி. “பார்வதி நாயக பாஹிமாம்” என்ற ஸ்வாதி திருநாள்
கிருதியை எடுத்து பாடினார். 3 சரணங்கள் கொண்ட அற்புதமான பாடல். “பானு ஷஷி” என்ற
இரண்டாவது சரணத்தை எடுத்து உருகி பாடினார்.
மூன்றாவதாக, கானடா ராகத்தை எடுத்து, பாடிவிட்டு, “காந்திமதி அன்னை நீ கதி” என்ற
பாபநாசம் சிவன் அவர்களை பாடினார். இந்தப் பாடல், நெல்லை
கோவிலைச் சுற்றியும், தாமிரபரணியயும்,
அழகாகச் சொல்லி இருப்பார். கானடா
ராகத்தில் ஒரு 5 பாடல்களை எடுத்தால், அதில் ஒன்று இந்தப்
பாட்டு என் லிஸ்ட் ல் நிச்சயம் வரும். கும்ப முனி என்றால் அகத்தியர் என்று
நினைக்கிறேன்.
பூர்ணசந்த்ரிகா
ராகம் கொஞ்சம் கோடி காட்டி- ஜிஎன்பி அவர்களின் “வரத நிபுண” பாடினார்
“கள
பேடா, கொள பேடா” என்று அவரே கோபிகாதிலகம்
ராகத்தில் அமைந்த பாடல் ஒன்று பாடினார். கேட்பதற்க்கு கொஞ்சம் பயமாக இருந்தது.
தோடி
நான் நினைத்தபடி அமையவில்லை. வயதாகிறது சஞ்சய்க்கு- என்று புரிந்தது. ராகத்தில்
மேலே கொஞ்சம் கஷ்டப்பட்டார். வரது அதை வயலினில் சரி கட்டினார். தியாகராஜரின் “சேசினதெல்ல மரசிதிவோ ஓ ராம ராம”.
அருமையான பாட்டு. கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் பின்னி எடுத்தார். எவ்வளவு முறை
தோடியைக் கேட்டாலும் அலுக்காது.
ராகம்
தாளம் பல்லவி - நா.கு. ஆலத்தூர் சகோதரர்கள், அந்தக் காலத்திலேயே பாடி பிரபலப் படுத்திய –
“எங்களது நாட்டை குறிஞ்சி என்பார்” பல்லவியை தூசி தட்டி பாடினார். இதை டி.என்
சேஷகோபாலன், நாட்டை, குறிஞ்சி, நாட்டை குறிஞ்சி என்று 3 ராகத்தில் பாடிஒரு காசெட் வெளியீட்டு, அது போடு போடு என்று போட்டது. சேஷூ சங்கீதம் எல்லாம், குறிஞ்சி மலர் போல.
துர்காவையும், சிந்து பைரவியையும்
பல்லவியோடு வருடி முடித்தார். முதலில் பாடிய ராகம் என்னவென்று தெரியவில்லை.
ஸ்ரீ. வேணுகோபால என்ற
மன்னார்குடி ராஜகோபால் ஸ்வாமி மேல் தீக்ஷிதர் எழுதிய பாடலை பாடினார். இதில்
தீக்ஷிதர் குறிஞ்சி ராகத்தை மிகவும் லாவகமாக பாடலின் உள்ளே நுழைத்து இருப்பார்.
“ஸ்ரீ குரஞ்சித காம ஸ்ரித சத்யபாம” – இதன் அர்த்தம் “ஸ்ரீதேவி பூமிதேவி அவர்களால்
மனம் குளிர விரும்பப்படுகிறவன், சத்யபாமையினால் ஆஸ்ரயிக்கப் பட்டவன்”- மிகவும் அழகு. எனக்கு ஏனோ சந்தானம்
பாடிய “கிஷீராப்தி கன்னிகே, ஸ்ரீ மகாலக்ஷ்மி” என்ற குறிஞ்சி (ராக
மாலிகை) பாட்டு நினைவுக்கு வந்தது
பிறகு எத்தனை கோடி இன்பம் வைத்தாய்- என்ற பாரதியாரின் தேஷ் ராகப் பாடல். இதை ராஜகுமார் பாரதி ஒரு தடவை இதே ராகத்தில் பாடி கேட்டு இருக்கிறேன்.
திருமழிசை பிரான் எழுதிய பாசுரம் “ஊனின் மேய ஆவி நீ. உறக்கமோடு உணர்ச்சி நீ -பாடி ராமனை பஜித்தால் என்ற மாண்ட் ராகப் பாடலோடு, “பவமான” சொல்லி முடித்தார்.
பண் படுதல். பண் பாடுதல்
இந்த வருடம் சங்கீத கலாநிதி விருது
பெறும், நெய்வேலி சந்தான கோபாலன் அவர்கள் தன்னுடைய நன்றியுரையில் “பண் படுதல், பண் பாடுதல்’ இரண்டும் ஒன்று என்று சொன்னார். நான் மிகவும்
ஆச்சர்யப்பட்ட வார்த்தை இது. பண் பாடினால் மனது பண் படுமா ? இல்லை எப்போதெல்லாம் மனது
பண் படும். என்ற ஒரு கேள்வி எழுப்பினால், என் பதில் படும்......
சிலரின் சங்கீதம் அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தும்.
எனக்கு, ஒரு மதுரை சோமு, மதுரை மணி அய்யர், மகாராஜபுரம் சந்தானம், இப்போது சஞ்சய். இவர்கள் இசை கேட்கும்போது.
கண்ணதாசன், சர்வர் சுந்தரம் படத்தில்
“தத்தை நெஞ்சம் பாடலில், பண் பட்டதா ? இல்லையா
? என்ற ஒரு கேள்வி எழுப்பி இருப்பார். பாட்டை கேளுங்கள்.
முடிவுரை::
“கமர்ஷியல்” ஆக சஞ்சய் போய் விட்டார்
என்று ஒரு சாரார் பேசுகிறார்கள். சித் ஸ்ரீராம் க்கு, செம்மங்குடிக்கும், மணி அய்யருக்கும் வாசிச்ச, உமையாள்புரம் சிவராமன் வாசிப்பது, எதில் சேர்த்தி. ஆத்மார்த்தமா, கமர்சியலா....... இப்படியெல்லாம் ஒரு புறம் சீரழிந்து கொண்டிருக்கும் கர்நாடக சங்கீதத்திற்க்கு நடுவே, சஞ்சய் மாதிரி “ரசிகர்கள் சம்ப்ரதாயமான நல்ல இசையைத்தான் விரும்புவார்கள்”, என்று ஆணித்தரமாக நம்பி, கச்சேரி செய்யும் இவர், எனக்கு அதிசயம் தான்.
எனக்கு
என்ன ஆசை என்றால், சஞ்சய் ஒரு ஃபுல் பெஞ்ச் கச்சேரி, மதுரை
சோமு மாதிரி பண்ண வேண்டும். அவர்தான் பண்ண முடியும். கடைசி வரை
எழுந்து போகாத ரசிகர் கூட்டம் அவரிடம் தான் இருக்கிறது