Saturday 9 January 2016

அனுமன் ஜெயந்தி

கம்பர் தமது ராமாயணத்தின் தொடக்கத்தில் திருவடிக்கு (ஆஞ்சநேயருக்கு) காப்புச் செய்யுள் ஒன்று இயற்றியுள்ளார்.

அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
 அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான் - என்பது அந்தச் செய்யுள்.
இதில், அஞ்சிலே ஒன்று என்ற சொல்தொடர் ஐந்து முறை வருகின்றது. நிலம், நீர், தீ, வாயு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களை உத்தேசித்தே அஞ்சிலே என்ற சொல்லை ஐந்து முறை பிரயோகித்திருக்கிறார் கம்பர்.

வாயு புத்திரனான அனுமான் கடலைத் தாவி, ஆகாய மார்க்கமாகச் சென்று, பூமிதேவியின் மகளான சீதாபிராட்டியைக் கண்டு, இலங்கையில் தீயை வைத்து வந்தனன். அன்னவன் நமக்குத் தஞ்சம் என்பதே இந்தச் செய்யுளில் காணும் பொருள்.
 பஞ்சபூதங்களில் ஒன்றாகிய வாயு பெற்ற பிள்ளை ஆதலால், அஞ்சிலே ஒன்று பெற்றான் என்றது அனுமானைக் குறிக்கிறது.
அவன் கடந்து சென்ற கடல், பஞ்ச பூதங்களுள் ஒன்று ஆதலால், அஞ்சிலே ஒன்றைத் தாவி எனப்பட்டது.
அவன் பறந்து சென்ற மார்க்கமாகிய ஆகாயம் பஞ்ச பூதங்களுள் ஒன்று. ஆதலால் அஞ்சிலே ஒன்று ஆறாக எனப்பட்டது.
அவனால் காணப்பட்ட சீதையின் தாயாகிய பூமி, பஞ்ச பூதங்களுள் ஒன்றாதலால், அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு எனப்பட்டது.
அவன் இலங்கையில் வைத்த தீயானது பஞ்ச பூதங்களில் ஒன்று ஆதலால், அயலாரூரில் அஞ்சிலே ஒன்று வைத்தான் எனப்பட்டது.

அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன். அந்த தினம் அனுமன் ஜெயந்தியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும். குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும். வெற்றிலை மாலை வழிபாடு அசோகவனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருந்த போது சீதையை தேடிப்போன அனுமன் சிம்சுகா மரத்தடியில் வீற்றிருந்த சீதையை கண்டதும்

ஸ்ரீ ராமனை பற்றி சொல்லி சீதையின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். பொதுவாக யாரேனும் பெரியவர்களை நமஸ்கரித்தால் அவர்களை அட்சதை தூவி ஆசீர்வதிப்பது வழக்கம். அனுமன் சேவித்த போது சீதைக்கு அட்சதையோ புஷ்பமோ கிடைக்கவில்லை. ஆனால் அருகில் தடவிய போது வெற்றிலை இலைகள் கிடைக்க அதனையே அனுமன் தலை மீது தூவ அனுமனும் அந்த வெற்றிலைகளை ஒரு நூலில் கோர்த்து சீதையிடம் கொடுத்து தனக்கு மாலையாக அணிவிக்குமாறு கேட்டு அதை கழுத்தில் அணிந்ததாகவும் அதன் காரணமே அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

வெண்ணெய் சாத்துதல் ராம ராவண யுத்தம் நடந்தபோது ராமரையும் லட்சுமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார் அனுமான். அப்போது ராவணன் சரமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப்பட்டார். அந்த காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக்கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது. அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை. அதனால் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது.

வடை மாலை நமது உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சிக்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் இட்லி, தோசை, உளுந்து வடை சாப்பிட்டால் தசைப்பிடிப்பு ஏற்படும். ஆனால், சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமாப எனவே, பயனற்ற இந்த உடலை உனக்கே அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்துவடை மாலை அணிவிக்கிறோம். அனுமானுடைய தாய் அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடை செய்து கொடுத்ததாக ஐதீகம். செந்தூரம் ஏன்?

 ராம ராவண யுத்தம் முடிந்த பிறகு சீதையை பார்த்து செய்தியை கூற அனுமன் சென்ற போது சீதை நெற்றி வகிட்டில் செந்தூரம் அணிந்து இருந்ததை பார்த்து இது குறித்து சீதையை வினவ ராமன் ராவணனுடன் யுத்தம் செய்ய செல்லும் போது அவருக்கு வெற்றி கிடைக்க வேண்டி செந்தூரம் அணிந்ததாக கூறினார். நெற்றியில் சிறியதளவு இட்டதற்கே இத்தனை பெரிய வெற்றி ராமனுக்கு என்ற போது உடல் முழுவதும், பூசினால் ராமன் எவ்வளவு வெற்றி வாகை கூட முடியும் என எண்ணி உடல் முழுதும் ஆஞ்சநேயர் செந்தூர் அணிந்து கொண்டதாகவும், இதுவே அனுமனுக்கு செந்தூரம் சாத்தும் வழக்கம் வர காரணம் என்பதாகவும் வரலாறு.

ஆறு பலங்களை அள்ளித்தரும் ஆஞ்சநேயர் நேயருக்கு மிகவும் பிடித்தது ராம நாமம். அனுமன் ஜெயந்தியன்று `ராம ராம ராம' நாமம் சொல்வது விசேஷம். `ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்' என்பது அனுமனுக்கான காயத்ரி மந்திரமாகும்.

 இதையும் சொல்லி வழிபடலாம். அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து, துளசி அர்ச்சனை செய்யலாம். வெற்றிலை அல்லது வடை மாலை சாத்தலாம். வெண்ணெய் சாத்தி வழிபட்டு பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். ஆன்ம பலம், மனபலம், உடல் பலம், பிராண பலம், சம்பத் பலம் எனப்படும் செல்வச் செழிப்பு என்ற 6 பலங்களையும் அருள்பவர் அனுமன். அவரை பக்தியுடன் வழிபட்டால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியும். சிறந்த அறிவுத்திறன், புத்திக்கூர்மை, வீரம், விவேகம் உண்டாகும்.

சனி பகவான் பாதிப்பு நீங்க இலங்கைக்கு பாலம் அமைக்கும் திருப்பணியில் அனுமன் தீவிரமாக இருந்தபோது வந்தார் சனி பகவான் `ஆஞ்சநேயா! உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல். அங்கு இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்'' என்றார்.

``கடமையை செய்து கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு. அதனால், தலையில் உட்கார்ந்து கொள்'' என்றார். சனி பகவானும் ஏறி அமர்ந்தார். கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றினார் அனுமன். பாரம் தாங்கமல் சனிபகவான் அலறினார். ``சொன்ன சொல் தவறக்கூடாது. இரண்டரை மணி நேரம் கழித்து தான் இறங்க வேண்டும்'' என்றார் அனுமன். அதன் பிறகே இறக்கிவிட்டார். `ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை' என்று கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன். அனுமனுக்கு துளசி சாத்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

No comments: