Monday 14 January 2013

உங்க வீட்டிலே பொங்கல் வந்தாச்சா?

சங்க காலத்தில் "தை நீராடல்", "பாவை நோன்பு" என்றெல்லாம் அழைக்கப் பட்டது பொங்கல் பண்டிகையாக இருக்கலாம் என்பது சிலர் கூற்று. ஏனெனில் நல்ல மழையையும், விளைச்சலையும் காண்பதற்காகவே இயற்கை அன்னையை, பூமித்தாயைப் போற்றிக் கன்னிப் பெண்கள் இந்த விரதம் இருந்திருக்கலாம் எனக் கூறுகின்றனர். சாண உருண்டையைப் பிள்ளையாராகக் கருதுவார்கள் என்பதை ஏற்கெனவே நாம் பார்த்திருக்கிறோம். இந்தச் சாண உருண்டையை ஒரு சிலர் வரட்டியாகத் தட்டிப் பொங்கல் அன்று அடுப்பு எரிக்கப் பயன்படுத்துவதாகவும், மற்றும் சிலர் வழக்கப்படி சாண உருண்டைகள் சேகரிக்கப் பட்டு, பொங்கலுக்கு மறுநாள் ஒரு கூடையில் அவற்றைப் போட்டுக் கொண்டு சிறு குழந்தைகள் ஒன்று கூடிக் கிளம்புவார்கள். வீடு வீடாகச் சென்று கும்மியடித்துப் பாடிக் காசுகளை வாங்கிக் கொண்டு அதில் பொரிகடலை, நாட்டுச் சர்க்கரை வாங்கிக் கூடைப் பிள்ளையாருக்குப் படைத்துவிட்டுப் பின்னர் ஊர்ப்பொது வாய்க்காலில் அந்தச் சாண உருண்டைகளைக் கரைப்பார்கள். இந்த வாய்க்காலில் கரைக்கப்படும் சாணம் எருவாகி, ஊரின் நிலங்களுக்கு நீர் பாய்கையில் பயிர்களைச் செழிப்பாக வளர வைக்கும் என்பது நம்பிக்கை.


ஒரு மாதம் கோலத்தில் வைத்த சாணப்பிள்ளையார் அந்த மாதம் முழுதும் சுவரில் காய்ந்து கொண்டு இருப்பார். ஆனாலும் வாய்க்காலில் கரைக்கையில் சிறு குழந்தைகளுக்குத் துக்கம் தாங்க முடியாமல் அழுகை வந்துவிடும். அப்போது அவர்கள் பாடும் கும்மிப் பாடல் கீழ்க்கண்டவாறு:

வட்ட வட்டப் பிள்ளாரே, வாழக்காயும் பிள்ளாரே

உண்ணுண்ணு பிள்ளாரே ஊமத்தங்கா பிள்ளாரே

வார வருசத்துக்கு வரவேணும் பிள்ளாரே

போன வருசத்துக்குப் போயி வந்தீர் பிள்ளாரே

வாடாம வதங்காம வளத்தினோமே பிள்ளாரே

வாய்க்காலு தண்ணியிலே வளர விட்டோம் பிள்ளாரே

சிந்தாம சிதறாம வளத்தினோமே பிள்ளாரே

சித்தாத்துத் தண்ணியிலே சிந்துறோமே பிள்ளாரே

போய் வாரும் போய் வாரும் பொன்னான பிள்ளாரே

வர வேணும் வர வேணும் வருசா வருசம் பிள்ளாரே

என்று பாடி ஆடிக் கொண்டு பிள்ளையாரை வழியனுப்பி வைப்பார்கள்.

பொங்கல் பண்டிகையை மூன்று நாட்கள் கொண்டாடுவது நம் மரபு. முதல்நாளை போகி என்னும் "பழையன கழிதல்" நடைபெறும். ஊர்ப் பொதுவில் ஓர் இடத்தில் அவரவர் வீட்டுப் பழைய பாய், கூடைகள், முறங்கள் போன்ற இயற்கையான நாரினால் செய்யப் பட்ட பொருட்களைப் போட்டு எரிப்பார்கள். இப்போது போல் அப்போது ப்ளாஸ்டிக் குடங்களோ, ப்ளாஸ்டிக் பாய்களோ கிடையாது. மக்கள் இயற்கையாய்க் கிடைக்கும் நார்களில் இருந்தும், பூமியில் கிடைக்கும் மண்ணிலிருந்துமே பாத்திரங்கள், பாய்கள், படுக்கைகள் செய்து பயன்படுத்தினார்கள். இவற்றை எரித்துப் புதியதாய்ப் பொங்கலுக்கு வாங்குவார்கள். இந்த வழக்கம் இன்று ரப்பர், ப்ளாஸ்டிக், தெர்மாகோல், பாலிதீன் பைகள் போன்றவற்றைப் போட்டு வலுக்கட்டாயமாய் எரித்து மூச்சு விடத் திணறும் அளவுக்குப் புகைமண்டலத்தை எழுப்பும் வழக்கமாக ஆகி விட்டது. அதோடு முன்பெல்லாம் கிராமங்களில் இந்தப் பழைய பொருட்களைப் போட்டு எரிக்கும் தீயிலிருந்தே நெருப்பு எடுத்துப் போய்ப் பொங்கல் பானைக்கு அடுப்பு மூட்டும் வழக்கமும் இருந்து வந்தது.

பொங்கலுக்கு முதல் நாளே வீடு சுத்தம் செய்யப் பட்டுப் பொங்கல் பானை வைக்கும் இடம் நல்ல பசுஞ்சாணத்தினால் சுத்தம் செய்யப்படும். சாணத்தினால் மெழுகுவார்கள். அவரவர் வழக்கப்படி அரிசி மாவினால் கோலம் போடுவார்கள். ஒரு சிலர், அடுப்பு வைக்கும் இடத்திலேயே சூரியன், சந்திரன் போலக் கோலம் போடுவார்கள். சில வீடுகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் இடத்தில் சூரியன், சந்திரன் போல் கோலம் போடுவார்கள். இது அவரவர் வீட்டு வழக்கத்தை ஒட்டியே வரும். மனித மனத்தின் முக்கிய மூன்று கரணங்கள் ஆன மனம், வாக்கு, காயம் ஆகியவற்றை நினைவு கூரும் விதமாக மூன்று கற்கள் முக்கோணமாய் வைக்கப்பட்டதாய்த் தெரிய வருகிறது..முக்கரணங்களின் உதவியால் தெய்வீகமான பாலைப் பொங்க விட்டு, ஆத்ம ஞானமென்னும் பொங்கலைப் பெறலாம் என்பதைச் சுட்டிக்காட்டுவதே இதன் முக்கிய தத்துவமாகவும் அறிகிறோம்.

பொங்கல் வைக்கப் போகும் பானை ஒரு சிலர் புத்தம்புதியதாக வாங்குவார்கள். மண் பானை இல்லாமல் வெண்கலமாய் இருந்தாலும் சில வீடுகளில் புதிய பானை வாங்குவது வழக்கம். மற்றபடி சென்ற வருடங்களில் உபயோகித்த வெண்கலப் பானையையே நன்கு சுத்தம் செய்து, மஞ்சள், சந்தனம், குங்குமம் தடவி, மஞ்சள் கொத்துக் கட்டிப் பாலும் நெய்யும் சேர்த்து வீட்டில் இறைவனை வழிபடும் பூஜை இடத்தினருகே வைத்து வழிபட்டுப் பின்னர் அடுப்பில் நல்ல நேரம் பார்த்து ஏற்றுவார்கள். சூரியன் மகர ராசியில் நகர ஆரம்பிப்பதால் மகர சங்கிராந்தி எனவும் அழைக்கப்படும் இந்தப் பொங்கல் பண்டிகையில் பொங்கல் வைப்பதை சங்கராந்தி காலம் ஆரம்பிக்கும் தை மாசம் பிறக்கும் நேரத்தில் செய்வதைச் சில வீடுகளில் வழக்கமாய்க் கொண்டிருக்கிறார்கள். அதன்படி பார்த்தால் இந்த வருடம் காலை ஒன்பது மணிக்கு மேல் பத்தரைக்குள் பொங்கல் வைக்க நல்ல நேரம் எனச் சொல்கின்றனர்.

சூரியன் தெற்குத் திசையிலிருந்து வடக்கு நோக்கி நகர்வதையே மகர சங்க்ரமணம் அல்லது உத்தராயண புண்யகாலம் என்கிறோம். பொங்கல் பொங்கி விட்டு அன்றைய தினம் விளையும் எல்லாக் காய்களையும் போட்டுக் குழம்பு வைப்பது பல வீடுகளில் வழக்கம். பொதுவாக இதற்கு நாட்டுக்காய்களான, கத்திரி, வாழை, சேனை, பூஷணி, பறங்கி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, அவரை, மொச்சை, கொத்தவரை, சிறு கிழங்கு, பெருகிழங்கு போன்றவையே பயன்படுத்துவார்கள். காலப் போக்கில் இன்றைய பழக்கத்திற்கு ஏற்ப ஒரு சிலர் உருளைக்கிழங்கு, காரட், பீன்ஸ், செளசெள போன்றவையும் தக்காளியும் சேர்க்கின்றனர். இனிப்பான பொங்கலை உண்பதற்குக் காரமான குழம்பு தான் தொட்டுக்கொள்ள உதவும் என்று மட்டுமில்லாமல், இறைவனுக்கு நிவேதனமாகவும் படைப்பதால் பூமியில் விளையும் அனைத்தும் அவன் அருளால் கிடைத்தது என்று நன்றி கூறும் விதமாகவும் இதைச் செய்கின்றனர். மண்ணின் அடியில் விளையும் கிழங்குகள், மண்ணின் மடியில் படரும் கொடிகளின் காய்கள், செடிகளின் காய்கள், மரங்களின் காய்கள் என அனைத்து வகைக்காய்களும் இந்தக் குழம்பில் இடம் பெறும். பின்னர் அந்தக் குழம்பை தினம் தினம் சுண்ட வைத்துக் கொஞ்ச நாட்களுக்குச் சாப்பிடுவதுண்டு.

பொங்கல் நிவேதனத்தில் பயன்படும் மஞ்சள் கொத்து மங்கலத்தையும், தோகையுடைய கரும்பு இனிப்பையும், இஞ்சிக் கொத்து காரத்தையும், வெற்றிலை, பாக்கு துவர்ப்பையும் கொடுக்கின்றன என்பதால் இந்தச் சுவைகள் அனைத்தும் வாழ்வில் இடம் பெறும் என்பதையும் கூறாமல் கூறுகிறது. தமிழ் நாட்டில் உழவர் திருநாள், தமிழர் திருநாள் என்றெல்லாம் அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை, மற்றச் சில மாநிலங்களில் மகர சங்கிராந்தி எனவும், லோகிரி எனவும், மஹாபிகு எனவும் அழைக்கப்படுகிறது. விவசாயிகள் அவர்கள் விவசாயத்துக்குப் பயன்படும் அனைத்துப் பொருட்களையும் சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் பூசி வழிபடுவார்கள். ஏர்க்கலப்பை, கருக்கரிவாள், மரக்கால், உழக்கு, கூடை முறங்கள், களைக்கொட்டு,மண்வெட்டி, கடப்பாரை போன்ற பொருட்கள் இதில் அடங்கும். ஆந்திராவில் பொங்கல் சமயத்தில் பொம்மைக்கொலு வைப்பார்கள் என்றும் தெரிய வருகிறது. குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் அன்று பட்டம் விடும் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். மேலும் எள், வேர்க்கடலை ஆகியவற்றில் வெல்லம் சேர்த்து உருண்டைகளாகவோ, வில்லைகளாகவோ செய்து ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வார்கள். இதன் மூலம் ஒருவருக்கொருவர் அன்பு வலுப்படும் என்பது அவர்கள் நம்பிக்கை.



நிலைப்படிகளை நன்கு கழுவிக் கோலம் போட்டு மாவிலைக்கொத்துகளாலும் வேப்பிலைகள், பூளைப்பூ போன்றவற்றால் தோரணங்கள் கட்டித் தொங்க விடுவார்கள். வாசலில் சூரியனுக்கு வழிபாடு நடப்பதால் பெரிய தேர்க்கோலம் ஒற்றைச் சக்கரத்தோடு போடுவார்கள். ஒரு சிலர் வாசலிலேயே வடக்கே சூரியனின் உருவத்தையும், தெற்கே சந்திரனின் உருவத்தையும் வரைவார்கள். தீஞ்ச தீபாவளி,(வெடிகள் வெடிப்பதால் தீய்கிறது அல்லவா) காஞ்ச கார்த்திகை(கார்த்திகைக்கு அப்புறம் மழை நின்றுவிடும். மண் காய்ந்து கொண்டு வரும்) இவை எல்லாம் போய் நல்ல விளைச்சல் கண்டு அறுவடை செய்யும் நாளை மஹாராசன் பொங்கல் என உழவர்கள் சொல்வார்களாம்.

ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளின் மார்கழி உற்சவம் பொங்கல் அன்றே நிறைவு பெறும். அன்று தண்டியல் எனப்படும் வாகனத்தில் ஆய்ச்சியரைப் போல் கொண்டை போட்ட வண்ணம் எழுந்தருளும் ஆண்டாளுக்கு பக்தர்கள், கரும்பு, மஞ்சள் எனப் பல பொருட்களைக் காணிக்கையாகக் கொடுப்பார்கள். அவற்றைப் பெற்றுக் கொண்டு ஆண்டாள் திருவீதிகளில் உலாவரும் காட்சி சிறப்பாக இருக்கும் என்று தெரிய வருகிறது.


படத்துக்கு நன்றி கூகிளாண்டவர். தகவல்கள், பல பத்திரிகைகளில் இருந்தும் ஆங்காங்கே கேட்டும் திரட்டியவை

No comments: