Saturday, 30 August 2025

वारं वारम् - இந்த வாரம் – (25.8.25 to 31.8.25)

 

பகுதி - ஒன்று

கொஞ்சம் ஆன்மிகம் ....பிறகு வாரத் தகவல்.....

சம்ஸ்க்ருத பதம் “வாரம் வாரம்” என்று எழுதி இருக்கிறேன். இது, (அடிக்கடி/திரும்பவும்) என்று அர்த்தம். ஸ்ரீ. நாராயண் தீர்த்தரின் மகோன்னத காவியமான “கிருஷ்ண லீலா தரங்கிணியில்” அடிக்கடி எல்லோரும் பாடும் “பூரய மம காமம்” என்ற பாடலில் “வாரம் வாரம் வந்தனம் அஸ்துதே” என்று ஒரு வரி வருகிறது. இதில் ஆச்சர்யமான ஒரு விளக்கம். உபன்யாசகர் ஸ்ரீ. சுந்தர குமார் கொடுத்தார். பூரய மம காமம் கோபாலா – என்று கேட்கிறோம். என்னுடைய அபிலாஷைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கேட்டு விட்டு, உடனே வாரம் வாரம் என்று சொல்கிறார். அதான் முதல் வரியிலேயே நம் தேவைகள் எல்லாம் கேட்டாகி விட்டதே ? என்றால் “இதை (ஏன் தேவைகளை) பூர்த்தி செய்வதற்கு, திரும்ப திரும்ப நான் உன்னுடைய திருவடிகளை வணங்க வேண்டும்” என்ற அர்த்தத்தில், எழுதப்பட்டதுதான் “வாரம் வாரம் வந்தனம் அஸ்துதே”

இதே வரிகளை ஸ்ரீ. த்யாகராஜர் தன்னுடைய, சித்தரஞ்சனி ராகத்தில் அமைந்த “நாத தனுமநிஸம்” பாடலில், என்னுடைய மனமும் உடலும், அடிக்கடி நாத ரூபியான சிவபெருமானிடம் லயிக்கட்டும் என்று சொல்லியிருக்கிறார்.

 முன்னுரை:

நான் அடிக்கடி எழுதிக் கொண்டிருந்தேன். இப்போது ஏன் நிறுத்தினேன் என்று தெரியாமல் நிறுத்திவிட்டேன்.  இப்போது திடீரென்று, ஒவ்வொரு வாரமும் நான் பார்த்த, சந்தித்த நிகழ்வுகளை பதிவு செய்யலாம் என்று.

இது எத்தனை வாரம் போகிறது என்று பார்க்கலாம் !!!!

 

பகுதி இரண்டு

நிச்சயதார்த்தம்

கடந்த 25.8.25 அன்று ஏன் தம்பி பிள்ளை, சிரஞ்சீவி சந்திரமௌலி யின் நிச்சயதார்த்தம் இனிதாக நடைபெற்றது. சௌபாக்யவதி ஷிவானி என்ற வதுவுடன் நி.தா. திருச்சியில் தம்பி விஜயகுமாரின் திருவானைக்கோவில் வீட்டின் அருகே இருந்த கல்யாண மண்டபத்தில் இனிதே நடந்தது.

ஒவ்வொரு முறையும் எங்கள் வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும்போது, நான் உடனே நினைத்துக்கொள்வது, எங்கள் வரகூர் பெருமாளையும், என் பெற்றோர்களையும் தான்.

மிகவும் அழகாக எங்கள் “ஆத்து வாத்யார்” ஸ்ரீ ராம் அவர்கள் ஆசீர்வாதங்களுடன், தரங்கப் பாடல்கள் ஏன் தந்தையார் பாட, அன்புச் சொந்தங்களுடன் தட புடலான விருந்துடன் நடந்தது.

விஜயகுமாரின் மனைவி. சௌ. அபர்ணா, ஸ்ரீமான் சிவராமக்ருஷ்ண சாஸ்த்ரிகள் அவர்கள் புத்ரி. மகா பெரியவாளின், மிகவும் பக்தி ஸ்ரத்தையுள்ள ஒரு மகான் சாஸ்த்ரிகள் அவர்கள்.   அவரின் பல குணங்களை கொண்ட ஒரு சிறந்த பேரன். மௌலி. 

சிவகாமி என்ற ஷிவானி, பரமேஸ்வரன் பெயர் கொண்ட புள்ளையாண்டான் மாப்பிள்ளை. கண் பட்டுவிடும் அழகு. இனிமையான புது உறவுகள். புது வரவுகள். புது வாழ்வில் அடியெடுத்து வைக்கப் போகும் அந்த இரு குழந்தைகளும் சௌக்யமாக இருக்கட்டும். என் செம்மங்குடி உறவுகள் பெரியம்மா, லலிதா, கோமதி அக்கா, மைதிலி சித்தி மற்றும் ரேவதி அத்தை சில நேரங்களே செலவு செய்தாலும் மிகவும் திருப்தி.  என்னுடைய இரு சம்பந்தி குடும்பங்களும்,  மாப்பிள்ளையும்  வந்திருந்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது

விஜயகுமார் எனது தம்பி என்பதற்கு மேல், நான் மிகவும் மதிக்கும் ஒரு சிறந்த பெருமாள் பக்தன். நான் வரகூரானிடம் பக்தி செய்வதற்கு “ராஜ பாட்டை”   அமைத்துக் கொடுத்த பலரில் இவனும் ஒருவன் இருக்கிறான். இதை விட எனக்கு என்ன  வேண்டும் ? “தம்பியுடையான் படைக்கு அஞ்சான்”  எனக்கு தம்பியுடையான் சிறந்த பக்தி செய்வதற்கு அஞ்சான்.......

நான் திரும்பி திருச்சி வருவதற்கு, பல்லவனில் பண்ணி விட்டு, வந்தே பாரத் என்று நினைத்து, திருச்சி ரயில் நிலையம் வர, ஒரே குழப்பம். பல்லவன் பாதி தூரம் போய் விட, அன்று வந்தே பாரத் (தே) கிடையாது என்பது தான், கொடுமையான் ஜோக். கடைசியில் சோழனில், சென்னை வந்து சேர்ந்தேன்.

திருச்சி சென்று என் தம்பி மணி குடும்பத்துடன் இருந்தது மனக்கு மிகவும் சந்தோஷம். அவன் பண்ணும் சிவ பூஜை, அந்த வீட்டு சாந்நித்யம். மிகவும் ஸ்லாக்க்யம்.

கொசுறாக, சென்ற வாரம், என் மனைவியுடன், பெண் வீட்டுக்காரர்கள் முகூர்த்தப் புடவை  டி.நகர் ஸ்ரீனிவாசா புடவை கடையில் வாங்கியது, மிகவும் அழகான ஒரு நிகழ்வு

சிறந்த ஆசிரியர் அவார்டு.

நான் இங்கு பணி புரியும் பீ எஸ் உயர் நிலைப்பள்ளியில், சீனியர் செகண்டரி பள்ளியில் பிரின்சிபால் ஆக பணி புரியும், ஸ்ரீமதி ரேவதி பரமேஸ்வரன் அவர்களுக்கு, சிறந்த நல்லாசிரியர் விருது வழங்கப் பட்டு இருக்கிறது. பீ எஸ் குழுமம், மிகச் சிறந்த மாணவர்களை உருவாக்கி இருக்கிறது. இந்தக் குழுவில் இருந்து ஒரு ஆசிரியர், மத்திய அரசு வழங்கும் விருதைப் பெறுகிறார் என்பதை கேட்டபோது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  பெண்ணாத்தூர் (நிறுவுனர்) அவர்கள் இந்தப் பள்ளியை நிறுவி ஒரு நூறு ஆண்டுகளுக்கு மேல் மிகச் சிறந்த சேவை செய்து வருகிறது.

எனக்கு என் அம்மாவின் ஞாபகம் வந்தது. பாரதத்தின் மிக உயர்ந்த  “டாக் சேவா” விருது என்று சொல்லக்கூடிய, “தபால் துறையில் மிக உயர்ந்த விருது”  (சுமார் 15 வருடம் முன்) மிகச் சிறப்பாக பணி புரிந்தமைக்காக, விருது வழங்கப்பட்டது.

இதன் பின் புலத்தைப் பற்றி யோசிக்கும்போது, தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு, இறைவன் அருள் இவைகள் தான் காரணம் என்று தோன்றுகிறது. என் அம்மா, செம்மங்குடி உயர் நிலைப்பள்ளியில்  ஸ்கூலில் முதல் ரேங்க் வாங்கியது, மகா பெரியவா கையால் பிரசாதம் வாங்கியது, இந்த விருது, - எல்லாவற்றுக்கும் மிகவும் பொருத்தமானவர்.

நான் வாழ்வதற்கு, என் பெற்றோர்கள் காரணம், நான் முறையாக வாழ்வதற்கு என் ஆசிரியர்கள் தான் காரணம் என்று யாரோ கூறியதாக படித்து இருக்கிறேன். செம்மங்குடி ஆசிரியர்கள், செதுக்கிய ஒரு அழகான சிற்பம் என் அம்மா. 

Dr. ரேவதி அவர்களை மனப்பூர்வமாக வாழ்த்தி செய்தி அனுப்பினேன். நேரில் வாழ்த்து சொல்ல அவர்களிடம் நேரம் கோரியுள்ளேன்

இன்னொரு சந்தோஷமான விஷயமமும் கிடைத்தது. நான் படித்த செம்மங்குடியில் இருந்த பாபு மாமா அவர்களின் பேத்தி ஸ்ரீமதி விஜயலக்ஷ்மி அவர்களும் சிறந்த ஆசிரியர் விருது பெறுகிறார் என்பதுதான்.  இப்போது அவர் விஜயவாடா வில்  “Dean in College of Architecture” ஆக இருக்கிறார்.

இது பிறந்த வீடு, புகுந்த வீடு போல் – இரு சந்தோஷமான விஷயங்கள்.

 

விநாயக சதுர்த்தி:

வி.ச. நவராத்திரி, பங்குனி பெருவிழா, - போன்ற பல நிகழ்வுகளில், மைலாப்பூரில் இருக்கவேண்டும்  ஜே ஜே என்று, எங்கு திரும்பினாலும் களி மண் புள்ளையார். விதம் விதமாக.  குடை Rs. 50 ஏன் என்று விஜாரிக்க, பட்டன் ப்ரெஸ் பண்ணினால், குடை விரியும் என்றான். இது எந்த AI ஐ சேர்ந்தது என்று புரியவில்லை. இத்துனூண்டு குடைக்கு பட்டன்/

நான், களி மண்ணில், கண்ணுக்கு நேரே பிள்ளையார் பிடித்து வாங்கி வந்தேன். அருகம் புல் கட்டு Rs, 30  விற்க ஒரு வேலை “Trump effect” ஒ என்று நினைத்தேன்

மும்பை மாதிரி வீதிக்கு வீதிக்கு பிள்ளையார் இல்லை என்றாலும், மைலாப்பூர் தெற்கு வீதியில், ஒரு பிள்ளையார் வைத்து, தினமும் சாயந்திரம் கச்சேரி வைத்திருக்கிறார்கள். மற்றபடி, மானாவாரிக்கு, சங்கீத ஹாலில் கச்சேரி உண்டு.  

நான் நேற்று “cothas coffee” ல் ஒரு காபி சாபிட்டுக்கொண்டு இருக்கும்போது, அந்த பிள்ளயார் சிலை அருகே, ஒரு அருமையான் வீணை வாசிப்பு கேட்க, ஒரு 20 வயது பையன், கடம், மிருதங்கம் சஹிதம் அருமையாக, தீட்சிதரின், பியாகட ராக “வல்லப நாயகஸ்ய” வாசித்துக் கொண்டு இருந்தான் யாருமே உட்கார்நது கேட்காத அந்த இடத்தில், மைக் ல் அடுத்ததாக சுப்பராய சாஸ்த்ரியின், கல்யாணி ராக பாடலை பாடுவதாக சொல்லி, அந்த ராகத்தை அருமையாக இழைய விட்டான். இப்படி எத்தனை விற்பன்னர்கள் ?   இந்த குழந்தைக்கு கற்பகத்தின் ஆசி கிடைக்கட்டும்

அடுத்த வாரம் பார்ப்போம்..............