Friday, 2 February 2018

தரங்கிணி மகோற்சவம் – 2018- (TM 2018)

இந்தக் கட்டுரையை எழுவதற்கு, என்னை வழி நடத்தும், எங்கள் வரகூர் இரட்டைப் பிள்ளையார், அருள் புரிய வேண்டுகிறேன்.

தரங்கிணி கீதங்கள், வரஹூர் பெருமாள் முன்பு பாடும் 2 நாள் உத்சவம், சென்ற மாதம் 26, 27 (ஜனவரி) தேதிகளில் இனிதே நடந்தது.

நான் இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கும் முன்பு,  சாந்து மாமா என்ற சந்திரசேகரன் மாமா அவர்களுக்கும், ஸ்ரீ. ஜகன்னாதன் (ஜக்கு) மாமா அவர்களுக்கும், அனந்த கோடி நமஸ்காரங்களுடன் ஆரம்பிக்கிறேன். “மாற்றம் ஒன்றுதான் மாறாதது” என்ற வசனத்திற்கு ஏற்ப, அவர்கள் இந்த வருட தரங்கினி மகோத்சவத்தில் கொண்டு வந்த மாற்றங்கள் அசாத்தியமானது. 

இதில் என்ன ஆச்சர்யம் என்றால், சாந்து மாமா வின் பெயரும், மகா பெரியவாளின் பெயரும் ஒன்றாக இருப்பது, பெரியவாளே ஆசி கூறி அணுக்ரகஹம் செய்வது போல்...

தரங்கிணி என்ற ஒரு விதை, 8 வருடங்கள் முன்பு, என்னுடைய, தகப்பனார், ஸ்ரீ. குஞ்சிதபாதம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, பிரம்மாண்டமாக ஒரு பெரிய ஆல மரமாக வளர்ந்து, நாராயண தீர்த்தர், அவர்களை தட்சிணா மூர்த்தியாக அமர வைத்து, தரங்கப் பாடல்களை அவர் “வர்ஷித்த”  வெங்கடேச பெருமாளின் முன்பு பாடுவதற்கு/கேட்பதற்கு, வரகூர் வாசிகளான நாங்கள் என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும் ?

தரங்கிணி என்ற ஒரு பெரிய தேரை,  வரகூர் ஆஸ்திகர்கள் ஆன, ஷங்கர், ரவி, சூரி, விஜயகுமார், ஆனந்த், ராது, சாமு இவர்கள் கூடி தேரை இழுக்க, (சில பெயர்கள் விட்டுப் போயிருந்தால் மன்னிக்கவும்)  சாந்து மாமா,  தந்தையார் குஞ்சிதபாதம் மற்றும் நலம் விரும்பிகள், ராஜ பாட்டை அமைத்துக் கொடுக்க, ஸ்தல பாகவதர்கள் தரங்கிணி பாடி ஆரம்பித்து வைக்க, ராமஜி மாமா, மோகன் மாமா, சேதுராமன் மாமா, இவர்கள் பெரிய உந்து சக்தியாக இருக்க, ஜாம் ஜாம் என்று, தன் அதிஷ்டானம் இருக்கும், சிவன் கோவிலில் இருந்து புறப்பட்ட நாராயண தீர்த்தர் ஊர்வலம் பார்க்க, கண் கோடி வேண்டும்.

மிகவும் உணர்ச்சி பூர்வமான தருணம் அது.  ஒவ்வொரு வரகூர் வாசியும், பெருமாளின் கருணையை நினைத்து, நினைத்து, பெருமாளின் காலடியில் கண்ணீரைக் காணிக்கையாக்கும் தருணம் அது. 

தரங்கினியப் பற்றி தெரியாதவர்களுக்கு, ஒரு சின்ன “Intro”
ஒவ்வொரு வருடமும் கிருஷ்ணா லீலா தரங்கிணி என்று சொல்லக்கூடிய, தரங்கிணி பாடல்கள் பாடும் உற்சவம் இந்த வருடமும் 26,27 – ஜனவரி மாதத்தில், வரஹாபுரியில் நடந்தது.

ஒவ்வொரு வருடமும், தரங்கிணி உற்சவத்தின் மெருகு கூடிக் கொண்டே போவது என்பது சத்தியம்.  இந்த வருடம் 2 முக்கியமான “ஆச்சர்யங்கள்”  அரங்கேற்றப் பட்டன.  ஒன்று சத்குரு நாராயண தீர்த்தர்  அவர்களின் புறப்பாடு  மற்றொன்று,  இரண்டாவது நாள் சாயந்திரம் சுவாமி புறப்பாடு.  இதில் என்ன விசேஷம் என்று கேட்டால்:

-       சென்ற வருடம் வரை, சாதாரணமாக நாராயண தீர்த்தர் படததை ஒருவர் கையில் எடுத்துக் கொண்டு,  பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு சிவன் கோவில் வந்து, பிறகு வீதி உலா வந்து, பெருமாள் கோவிலுக்கு வருவார்கள்.

-       இந்த வருடம்  நாராயண தீர்த்தர் படம் மிகவும் அழகாக அலங்காரம் செய்யப் பட்டு, சிவன் கோவிலில் இருந்து புறப்பட்டு,  வாரை கட்டி,  ஸ்ரீ பாதம் தாங்கிகள் தூக்கி வர தரங்கிணி பாடல்கள் பாட  பெருமாள் கோவிலில் வந்து அடைந்தது. அதாவது நாராயண தீர்த்தர்,  தேரில் பவனி....

-       இரண்டாவது,  சுவாமி புறப்பாடு.  சாதாரமாக  சு.புறப்பாடு என்பது இந்த மகோட்சவத்தில் கிடையாது.  2 வது நாள் முடிவில் சுவாமி அலங்காரம் கலைத்து, அர்த்த ஜாமம் செய்வது வழக்கம்.   உரியடி போதும், மற்றும், தன் சகோதரியான, ஆனந்த வல்லிக்கு சீர் கொடுக்கும்போது, மற்ற 1-2  தடவை தான் சுவாமி வெளியில் வருவது வழக்கம்.  

-       சுக வாசியான/அலங்கார பிரியரான எங்கள் பெருமாள், அலங்காரம் பண்ணிக்கொண்டோமா, தரங்கப் பாடலையும், அஷ்டபதியும் கேட்டோமா,  கோவிலுக்குள்ளேயே 7 பிரதட்சிணம் வந்தோமா,  கோணங்கியைப் பார்த்தோமா,  ஆஹிரி ராகப் பாட்டான, சாக்ஷாத் மதன  கோடியைக் கேட்டோமா என்று இருப்பார். 

-     இந்த முறை,  சுவாமி புறப்பாடு இருந்தது, அதுவும் சுவாமி வெளியில் வந்து, வீதி ஊர்வலம் உண்டு, என்று அறிந்தவுடன், முதலில் சில, பல  வரகூருக்கே  உண்டான, குழப்பங்கள் இருந்தால் கூட,  அறங்காவலர்களின்  உறுதியும்,  பெருமாளும் தரங்கினியின் பாடல்களைக் கேட்டு,  மிகவும் மகிழ்ச்சி  அடைந்து வெளியில் வர ஒப்புக் கொண்டார் என்பது தான் உண்மை. 

-   இதற்க்கு மேலும் மெருகு ஏற்றும் வகையில், நாதஸ்வரம்/மேளம் ஏற்பாடு செய்திருந்தார் பாருங்கள்.  அதுதான்  Top class.  Beyond any words.   சாதாரணமாக, நாதஸ்வர வித்வான்கள், சுவாமிக்கு முன்னே வாசித்துக்கொண்டு செல்வது வழக்கம். அனால் இந்த முறை, 3 இடங்களில், - முதலில், சிவன் கோவிலில் வாசலில் சுவாமியை நிறுத்தி,  தெற்கு மூலையில் கடைசியில், ஆனந்த் அவர்களின் வாசலில் இரண்டாவதாக மற்றும், சுவாமி கோபுரத்தின் அருகில் – ஜமக்காளம் போட்டு, நாதஸ்வர வித்வான்களை  அமர வைத்து, -ஆர அமர- ஒரு முழுப் பாட்டு வாசிக்க, ஆஹா, கேட்க காது கோடி வேண்டும். 
-        
-     சாமஜ வர கமணா- என்ற ஹிந்தோளம் ராக,  தியாகராஜ கிருதியை,  எந்தரோ மகானுபாவலு என்ற ஸ்ரீ ராக, பஞ்ச ரத்ன பாடலையும், கடைசியில், கோவிலருகில் வாசித்த காபி ராகமும்,  இதற்குப் பிறகும், இந்த ஜன்மம் எதற்கு எனறு என்னை நினைக்க வைத்தது உண்மை !!

நாங்கள் 26, 27 ஜனவரி, வருடா வருடம், கொண்டாடிக் கொண்டு வருகிறோம்.  தேதி மாறாது. நாள், நக்ஷத்ரம் எல்லாம் பார்ப்பது கிடையாது.  8 வது வருடமான, இந்த வருடம் நடந்த இந்த நிகழ்ச்சியில் நடந்த முக்கியமான விஷயங்களை/அதிசயங்களைப் பார்ப்போம்.
முதல் நாள்

26 january 2018 அன்று தை கிருத்திகை,

இன்று முக்கியமான இரண்டு நிகழ்வுகள் நடந்த நாள். 

தபோவனத்தில் இருந்து கொண்டு, இன்றும் பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்து கொண்டிருக்கும் சத்குரு ஜ்னானநந்தர் அவர்கள் பிறந்த தினம், மற்றொன்று,
 
முருகனுக்கு தை கிருத்திகை மிகவும் உயர்ந்த தினம்.

இதற்கு மேல், தை வெள்ளிக்கிழமை, அம்பாளை உபாசிக்க மிகச் சிறந்த நாள்
முருகனுக்கு, அபிஷேக ஆராதனைகளை சொல்வதா, அம்பாளின் சந்தன காப்பு அலங்காரத்தை சொல்வதா,  நாராயண தீர்த்தர் அதிஷ்டானத்தில், தட்சிணாமூர்த்தியாக அமர்திருக்கும்,  மகா கைலாசநாத சுவாமிக்கு, நடந்த சிறப்பு அபிஷேகத்தை சொல்வதா.....எதைச் சொல்ல, எதை விட.

இன்று வந்து பாடிய பாகவதர்களைப் பார்க்கலாம்:

நினைத்தாலே முக்தி என்று அழைக்காபடும், ரமண மகரிஷி,  சேஷாத்ரி ஸ்வாமிகள், வள்ளி மலை ஸ்வாமிகள், குமார குருபரர்,  எல்லாவற்றிற்கும் மேலாக,  தமிழ் வேதம் என்று “மகா பெரியவா” அவர்களால் சொல்லப்பட்ட,  திருப்புகழ் எழுதிய அருணகிரி நாதர் வாழ்ந்த.  திருவண்ணாமலையில் இருந்து வந்த, ஆர்மோனியம் வாசித்த பெரியவர்.

இன்றைக்கெல்லாம், பஜனை சம்ப்ரதாயம் என்றால்.  மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் தான். அவர்கள் போட்ட வழியில்தான் இன்றும் பாடிக்கொண்டிருக்கிறோம்.  மருதாநல்லூரில் இருந்து வந்த,  இப்போது பீடத்தை அலங்கரிக்கும், ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமிகள் வந்திருந்தார்.

இன்றும் தக்ஷிண பண்டரிபுரம் என்று அழைக்கப்படும், கோவிந்தபுரம், ஸ்ரீ விட்டல் தாஸ் மகாராஜ் அவர்கள் வந்திருந்தார்.

சிவ -வைஷ்ணவ பேதமில்லாமல் இருக்கும் எங்கள் வரகூரில், திருமண் இட்டுக்கொண்டு, பெருமாளாக, வந்த வயலின் வித்வான்

எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான்.  முதல் நாள் முழுவதும்,  குரு  மூலமாக, தரங்கங்களை பாடிக் கேட்ட ஆசைப்பட்ட எங்கள் பெருமாள், 2 ம் நாள் நடத்திய லீலையைப் பார்ப்போம்


இரண்டாம் நாள்
27-1-2018- இன்று

·         ஏகாதசி
·         ரோகிணி நக்ஷத்ரம்
·         செதலபதி சௌந்தரராஜ பாகவதர் அவர்களின் அற்புதமான தரங்கிணி பாடல்கள்

தரங்கிணி  கீதங்கள் பாடி முடித்தவுடன் சுவாமி புறப்பாடு
ஸ்தல பாகவதர் சொன்னாற்போல், இது “மினி உரியடி”.  8 மணிக்கு ஆரம்பித்த சுவாமி புறப்பாடு,  முடியும் போது மணி  11.45 PM.

கோணங்கியின் போது, ராது அவர்கள் சொன்ன விஷயம் தான் “நெத்தி அடி”.  அவர் சொன்னார், இது 8 வது ஆண்டு.  கிருஷ்ணன், தேவகிக்கும், வசுதேவருக்கும்-  8 வது குழந்தையாக ஜனனம் எடுத்தார்.  அதே போல், 8 வது ஆண்டில்,  பெருமாள்,  வீதியுலா வந்து,  பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சாப்பாட்டுக்கு வருவோம்

புறப்பாட்டின் முடிவில் பிரசாதமாக வழங்கிய “அசோகா”

பிச்சுமணி அவர்களின்,  பூரி, உருளைக் கிழங்கு,  பால் பாயசம், கசப்பு நார்த்தங்காய் ஊறுகாய், கிராம்பு ரசம்.  மேலும் மேலும்......

செவிக்கு  தரங்கத்தின் மூலமாகக, அறு சுவை உணவு, வாய்க்கு-  Hats off to Sri  பிச்சுமணி & Team.

கிராமத்தில், ஒரு சிறிய விழா ஏற்பாடு செய்வது எவ்வளவு கஷ்டம் என்று எல்லோருக்கும் தெரியும்.  அந்த கிராமத்தில், 2 நாள், மிகவும் அற்புதமாக, ஒரு  விக்னம் இல்லாமல் நடந்த தரங்கிணி உத்சவம், வரகூர் வாசிகளின் ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பின் மூலமாக கிடைத்த பிரசாதம்.

எங்களையும், எங்கள் கிராமத்தையும், ஒரு பிரம்பு வைத்துக்கொண்டு காத்தருளும், எங்கள் பெரம்பனார்  அய்யனாருக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.

முடிவுரை:
திரும்பி சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது,  எங்குமே பார்க்க முடியாத, அளப்பரிய கருணை, வரகூர்  பெருமாளிடம் எப்படி இருக்கிறது ?  என்ன காரணம்.  கோவிலுக்கு வந்த ஒவ்வொருவருக்கும், கருணை மழையை வாரி வழங்கும்,  எங்கள் பெருமாள்.. எப்படி என்று introspect செய்தேன். 

வரகூர் மண், மிகச் சிறந்த பாகவதோத்தமர்கள் பிறந்து, வளர்ந்து, மிகப் பெரிய பதவியை அடைந்து,  காஞ்சி மஹா பெரியவர்களின் கையால் சன்மானம், ஏன்,  ஜனாதிபதி கையால் பரிசு பெற்று கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.  சில பெயர்களைக் கீழே கொடுத்து இருக்கிறேன்

கோபால பாகவதர்
அய்யாசாமி பாகவதர்
நாராயண பாகவதர்
முத்துசாமி பாகவதர்
அச்யுத கிருஷ்ணா சரஸ்வதி
ஸ்ரீ ராமகிருஷ்ண சாஸ்த்ரிகள்
பாஷ்ய பாவஞ்ச வெங்கட்ராம சாஸ்த்ரிகள்
எஸ். வீ குருசுவாமி சாஸ்த்ரிகள்

இவர்கள், எத்தனை உரியடி நடத்தி இருப்பார்கள், எத்தனை தடவை, வெண்னைத் தாழி கிருஷ்ணனை தரிசித்து மெய் சிலிர்த்து இருப்பார்கள்.  எத்தனை தடவை, ஆனந்தவல்லிக்கும், மஹா கைலாசனாதருக்கும், அபிஷேகம் செய்திருப்பார்கள்.  எத்தனை கும்பாபிஷேகம் நடத்தி இருப்பார்கள் !?

இவ்வளவு செய்து சாந்நித்யம் பெற்ற, பெருமாள்,  ஒரு  4  தரங்கம் கூட புத்தகத்தைப் பார்த்து, பாடத் தெரியாத எனக்கும் அருள் செய்கிறார் என்பது தான், அளப்பரிய கருணை.
உரியடியோ, கோவிந்தோ !!!!!

என்னை பெருமாள் சந்நிதிக்கு வழி காட்டிய என் பெற்றோர்களுக்கு நமச்காரங்களுடன்........

தரங்கிணி நடந்து முடிந்து, 2 நாட்கள் கழித்து,

சிவன் கோவிலில் அருகே உள்ள குளம் நிரம்பி இருக்கிறது என்ற செய்தி கேள்விப்பட்டவுடன்,  நான் நினைத்தேன்- “பெருமாளே மிகவும் மகிழ்ந்து, நேற்று, குளத்தில்  தண்ணீரை நிரப்பி, பூமா தேவியின் மூலமாக, தனது நன்றியை சொல்லி இருப்பாரோ என்று/”