Wednesday, 3 September 2025

தமர்

 

அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை

நமக்கு பயம் என்பது, பொழுது விடிந்தால், பொழுது அஸ்தமித்தால் வந்து விடுகிறது. அதனால் தான் பாடும்போது கூட, பயத்தை விட்டு, நல்ல தைர்யமாக எதையும் எதிர் கொள்ளும் அந்த பக்குவத்தைக் கொடு என்று பாடுகிறோம்.  நாராயண தீர்த்தர், தன்னுடைய தரங்கத்தில், அந்த ஸ்ரீநிவாசன், பயத்தை மட்டுமல்ல, பயத்தின் மூல காரணத்தையும் வேரோடு அறுத்து விடுகிறார். என்று பாடுகிறார்.

LKG படிக்கும் பையனுக்கு, டீச்சர் சொன்ன ஹோம் வொர்க் அல்லது ப்ராஜெக்ட் ஒழுங்காக பண்ணவேண்டும் என்ற பயம். வயதானவருக்கு, பாத் ரூமில் வழுக்காமல் போய் வர வேண்டும் என்ற  பயம்.

எல்லா வயதிலும் பயம் இருக்கிறது. பாரதியார் பாடினார், அச்சம் இல்லை அச்சம் இல்லை என்று. ஆனால் அவராலேயே அவ்வாறு இருக்க முடியவில்லை. ஆங்கிலேயருக்கு பயந்து பாண்டிச்சேரிக்கு சென்றார்.

அந்த காலத்தில் சந்திரபாபு பாட்டு ஒன்று உண்டு. "ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே"

என்றைக்காவது ஒரு நாள் பயமோ, கவலையோ, பொறாமையோ இல்லாமல் தூங்கி இருக்கிறோமோ ?  ம்ஹூம்

திருநாவுக்கரசர் சொல்கிறார், நாம் பயப்படவே வேண்டாம், இப்போது மட்டும் அல்ல. எப்போதுமே . அதுதான் இந்தப் பகுதி. 

அவர் சொல்கிறார் – “மேலே பூசிய வெண்ணீறும், சுடர் விடும் சந்திரனைப் போன்ற சூடாமணியும், புலித்தோல் உடையும், சிவந்த நிறமும், காளை வாகனமும், பாம்பும், கங்கை நதியும் கொண்ட அவர் இருக்கும்போது “நாம் அஞ்சுவது இல்லை, நமக்கு அஞ்ச வருவதும் இல்லை”

சரி, இப்படிச் சொல்கிறாரே, இவர் என்ன பயத்தைப் பார்த்தது இல்லையா ? பெரிய குடும்பத்தில் பிறந்து, செல்வசெழிப்பில் வளர்ந்து, சொடுக்கினால் வேலைக்காரர்கள் பத்து பேர் வர வாழ்ந்தவரா ? அதுதான் இல்லை

-    இவர் இளமையில் தாய் தந்தையை இழந்தவர்

-    அக்காவில் அரவணைப்பில் வாழ்ந்தவர்

-    அக்காவும், தன் கணவனை இழந்தவர்

-    வறுமை தாண்டவமாடும் ஒரு நிலை

சரி. இந்த வாசகத்தை எப்போது சொன்னார். ஏதோ ஜாலியாக இருக்கும்போது, ஊருக்கு உபதேசம் செய்வார்களே அது போலவா. ..அதுவும் இல்லை

சமண மதத்தில் இருந்து சைவ மதத்திற்கு, மாறிய திருநாவுக்கரசருக்கு, பல வித துன்பங்களை தந்து பல்லவ மன்னன். கடைசியில் யானையை வைத்து, அவரை மிதித்து, கொல்லச் சொல்கிறான். அந்த யானை அவரைப் பார்த்து வேகமாக வருகிறது.

கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்.  தெருவில் போய்க் கொண்டு இருக்கறோம்.  ஒரு நாய் வேகாமாக குறைத்துக் கொண்டு வருகிறது.  நாம் என்ன செய்வோம்

கல்லை எடுப்போம் அல்லது தெறித்து ஓடுவோம்..

யானை வருகிறது என்றால்.  நாவுக்கரசர் அமைதியாக சொல்கிறார். "அஞ்சுவது யாதோன்றும்....) யானை அவரை வலம் வந்து அமைதியாக நின்று கொண்டு இருக்கிறது

இதை எழுதும்போது, பிரஹலாதன் கதை நினைவு வருகிறது. எத்தனை துன்பம் வந்தாலும் “நாராயணா” என்று சொல்லி அந்தப் பெருமாளின் அனுக்ரஹம பெற்றான்.

திருநாவக்கரசர் அவர்  பாடலில்

“சுண்ண வெண் சந்தனச் சாந்தும்.....என்று ஆரம்பிக்கிறது, அதில் ஒரு இடத்தில் “உடையார் ஒருவர் தமர்” என்கிறார். தமர் என்றால் உறவினர் என்று பொருள் பட சொல்கிறார்.

அந்த சிவபெருமான் என் உறவினர் என்கிறார்.

அவர் ஏன் உறவுடா. எப்போ கூப்டாலும் வருவார். நான் ஏன் அஞ்ச வேண்டும் ..... என்ற பாணியில் சொல்கிறார்.

திட பக்தி நமக்கு வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் ஒவ்வொரும் கட்டத்திலும் நமக்கு புராணங்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

சபரி மலையில், ஏன் தந்தையுடன், நான் சில முறை சென்றாலும், பல பக்தர்கள், கார்த்திகை மாதம் மாலை அணிந்து, மிகவும் ஸ்ரத்தையாக, என் தந்தையாரை குருசாமியாக ஏற்று, அவர் என்ன சொன்னாலும் தட்டாமல், “அவர் தான், எங்கள் கண் கண்ட தெய்வம்” என்பதில் உறுதியாக இருப்பார்கள். இது தான் திட பக்தி. இப்படி இருக்கும்போது – அவர்கள் மன நிலை, திருநாவுக்கரசர் நிலைதான் 

அஞ்சுவது யாதொன்றும் இல்லை. அஞ்ச வருவதும் இல்லை

 

No comments: