ப்பிம்ருதி பார்க்கிறேன்
ஸ்ரீ. ராஜகோபாலன்
“செம்மங்குடி நற்பணி மன்றம் கும்பாபிஷேக மலருக்காக எழுதி
அனுப்பவும்” என்று சொன்னபோது நினைவுகள் ஐம்பது வருடத்திற்குப் பின் சென்றது. எங்கே ஆரம்பிப்பது.
எதை விடுவது என்று. இது பல மலர்கள் சேர்ந்த மலரும் நினைவுகள்
2000 ம் வருடத்திற்குப் பிறகு, தலைமுறை, தலைமுறையாக
இருந்த வீட்டை, கனத்த மனதுடன், விற்று
சென்னைக்கு வந்த பிறகு அடிக்கடி செம்மங்குடி செல்வது குறைந்துவிட்டது. ***. உத்யோகம், பதவி, என்ன செய்வது ?
பகவான் அனுக்ரஹம் அப்படி. ஆனாலும் புரட்டாசி சனிக்கிழமை உற்சவம்
கும்பாபிஷேகம் மற்றும் சிவன் கோயிலில் ஒரு சில விசேஷங்களுக்கு சென்று வருவேன். எல்லாவற்றையும் விட புரட்டாசி சனிக்கிழமை எனக்கு எப்பவுமே ஒரு
ஸ்பெஷல் தான்.
7 ம் வயதில் உபநயனம், எலிமெண்டரி ஸ்கூல். பிறகு ஹை ஸ்கூல். வாழ்க்கையில் படிப்பு
மிகவும் அவசியமாகிவிட்டது. அந்தக் காலத்தில் ப்ரோஹிதர்களுக்கு வருமானம் இப்போது போன்று
இல்லாததால் அப்பாவின் ஆசைக்கு மாறாக அம்மாவினால் படிப்புக்குத் திசை திருப்பப்பட்டு
படிப்பில் ஒரு பிடிப்பு வந்து விட்டது. பள்ளியில்
SSLC பரீட்சையில் முதல் மாணவனாக தேர்ச்சி
பெற்றதும் அதற்க்குக் காரணம். சாஸ்திரிகள்
பையன் என்பதாலும் வேறு ஒரு கேளிக்கைகளுக்கு இடம் கொடுக்காத ஒரு வாழ்க்கை.
சாயங்காலம் கோவில்களுக்கும் போயே ஆக வேண்டும். அப்படித்தான் பெருமாள் மீதும் கோயில்கள்
மீதும் ஒரு ஈர்ப்பு. எனது குடும்பத்தில் நான் மட்டும் செம்மங்குடியில் பிறந்தேன். நான் பிறப்பதற்காக ,என் அப்பா புரட்டாசி சனிக்கிழமை உற்சவம் ஆரம்பித்தார் என்றும்
அடுத்த வருடமே நான் செம்மங்குடியில் பிறந்ததாக (மற்ற சகோதரிகள் சிதம்பரத்தில்) அறிந்ததால் கூடுதல் கவனம். மூலவர் வரதராஜப் பெருமாள் என்றாலும் உற்சவர் சந்தான
கோபாலன் என்று அப்பா சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
அதிலும் என் தந்தையார், புரட்டாசி உற்சவத்திற்க்காக பணம் கேட்டு POST
CARD எழுதி பல பேர்களுக்கு அனுப்புவார். அதை எங்களையும் எழுதச்
சொல்லும்போது வெறுப்பாக இருந்தாலும், இப்போது அதை நினைத்துப்
பார்க்கும்போது, “பணம் இல்லாதபோதும்,
உற்சவங்கள் நடத்துவதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் ?” என்ற எண்ணம் வருகிறது, பணம் அனுப்ப
இயலாதவர்களுக்கும் பிரசாதம் அனுப்புவார். இன்று
பணத்திக்காக மிகவும் கஷ்டப்பட வேண்டாம் என்றாலும்,
பெரியவர்கள் போட்ட ராஜ பாட்டையில் சுகமாக பயணிப்பதை எப்படி மறக்க முடியும் ?
அப்பா என்னை எக்காலத்திலும் சனிக்கிழமை ஊற்சவத்தை நிறுத்தக்கூடாது என்றும் சங்கல்பம்
“ஸ்வர்ணபுரி மஹா ஜனங்களுக்காக” என்று செய்யவேண்டும்
என்று சொன்னதற்கு ஏற்ப எல்லாருடைய ஈடுபாட்டினால் இன்று வரை சிறப்பாகப் பெருமாள் நடத்த்திக்
கொண்டு இருக்கிறார்.
சித்திரை மாதம் ஒன்றாம் நாள் பஞ்சாங்க படனம். பனை ஓலை விசிறி, சுண்டல் , மறக்கமுடியுமா? தேவுடு மாமாவாத்து உபயம் அது. புரட்டாசி சனிக்கிழமை அலங்காரம் பெரிய விதவான்களின் கச்சேரி மற்றும் உபன்யாசங்கள். ஸ்ரீ வாஞ்சியம் ராமச்சந்திர பாகவதரின் பஜனை.
“உபசாரமு” என்கிற தியாகராஜர் கிருதிக்கு
அவர் ஆடும்போது பெண்கள் வெட்கப்பட
வேண்டும். கல்யாண பட்டாச்சாரியார் அவர்கள் ஒவ்வொரு ஏகாதசியிலும்
ராமாயணம் உபன்யாசம் நம் பெருமாள்
கோயிலில் ஆரம்பித்தார் என்று நினைக்கிறன்.
ஸ்ரீ. பட்டாலு மாமா வின் வேங்கடாசலபதி மற்றும் பார்த்தசாரதி
அலங்காரங்கள் இன்றும் என் கண்முன்னே நிற்கிறது. உற்சவ அலங்காரம் மிகவும் அருமையாக
இருக்கும். அந்த உற்சவருடன் வீதி உலா. பிறகு
பிராஹாரத்தில் ,அனைவருக்கும் புளியோதரை, வடை சுண்டல். பசுமை (காரம்) நிறைந்த நினைவுகள். அரசவனங்காடு சந்தானம் மாமாவை நினைவு கூறவேண்டும். அவரும் எல்லா வீட்டிற்குச் சென்று அரிசி பருப்பு எல்லாம் வாங்கிக்
கொன்டு வருவார். கார்த்திகை மாதம் சொக்கப்பானை. சிவன் கோயிலுக்கு பிறகு பெருமாள் கோயில் அதை ஏற்றிக் கொண்டு
வீட்டிற்கு வந்து விளக்கு ஏற்றி சாப்பாடு. சொக்கப்பானையில் வெடி போட்டு வெடிக்கும் போது ஒரு அல்ப/அலாதி திருப்தி
மார்கழி மாதம் காலையில் 5 மணிக்கெல்லாம் பாட்டு போட (இசைத்தட்டு) ஆரம்பித்து
விடுவார்கள். டி.எம்.எஸ் ஸின் “திருப்பதி மலைவாசா” வும் சீர்காழி யின் “சின்னஞ்
சிறு பெண் போலே” வும் “மாணிக்க வீணாம் உபலாலயந்தீம்” என்று கடினமான ஷியாமளா
தண்டகத்தை, மின்னல்
வேகத்தில் பாடும் டி.கே.பட்டமாளின் வசீகரக் குரலும், MLV யின் திருப்பாவை, சிவானந்த விஜயலக்ஷ்மி யின் அருமையான பாட்டுக்கள், ஆண்குரலில் திருவெம்பாவை, மஞ்சக்குடி ராஜகோபால சாஸ்திரிகளின் சுப்ரமண்ய புஜங்கம்…..
எதைச் சொல்ல, எதை விட. காலையில் இந்தப் பாட்டுக்களால் தூக்கம் கலைந்து எழுந்து, மார்கழி மாதத்தை திட்டிவிட்டு, பிறகு முழுவதும் போர்த்திக்கொண்டு
தூங்குவது அலாதி திருப்தி. மேலத்தெரு, கீழத் தெரு பஜனை. “தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்ற
தேவாரப் பாட்டு, அதில் தவறாகப் பாடுவர்களுக்கு உடனே திட்டு கிடைக்கும். பஜனை
முடிந்தவுடன் சுட சுட பொங்கலும் கிடைக்கும். இப்போது நினைத்தாலும் சுகம்..
எப்படி இசைத்தட்டிலிருந்து பாட்டு கேட்கிறது என்று HMV விளம்பரதில் ஒரு நாய், ஸ்பீக்கரின் வாயைப் பார்த்துக் கொண்டு இருக்குமே,
அதுபோல் ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருப்பேன். ஒவ்வொரு இசைத்தட்டுக்கும், அது இசைப்பதற்க்கு, ஒரு ஊசி இருக்கும். அதற்க்கு
ஒரு டப்பா இருக்கும். சின்ன பென்சில் கூட வைக்க முடியாத அந்த டப்பாவிற்கு அடித்துக்
கொள்வோம். மொத்தத்தில் செம்மங்குடி பெருமாள் கோயில் அனுபவம் சொல்லி மாளாது. மார்கழி மாதம் முடிந்தவுடன் கடைசி நாளில்
சினிமா பாட்டும் போடுவார்கள்.
ஸ்ரீனிவாஸ பாட்டச்ச்சார்யார் பற்றிச் சொல்லவில்லை என்றால் இது
முழுமை ஆகாது. Dedication என்னும் பதத்திற்கு ஒரு உதாரணம். விடியற்காலை முதல் அர்த்த
ஜாமம் வரை பிரசாதம் எடுத்துக்கொண்டு போவதே அழகு. தோள் பட்டையை விட்டு பிரசாதம் கிழே இறங்காது. அவரால் தான் பெருமாள், பெருமாளால் தான் அவர். பிரிக்க முடியாத பந்தம், பூமா மாமியின் புளியோதரை மிகவும் பிரமாதமாக இருக்கும்.
தில்லானா மோகனாம்பாள்,
மனோரமா சொல்வதுபோல், இந்த பிரசாதம் பூமா மாமியின் கை வண்ணமா
இல்லை.......எல்லோருக்கும் வருமா ? என்று கேட்பதுபோல்..
பாபு மாமாவைப் பற்றியும் சில வரிகள். மாலை 6.45 மணிக்கு, தீபாராதனைக்காக,
கோவிலுக்கு வந்து விடுவார். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது எல்லோருக்கும் விஷ்ணு
சகஸ்ரநாமம் புத்தகம் வாங்கிக்கொடுத்து, கற்றுக் கொள்ள
வைத்தார். யக்ஞராமன் தலைமையில் சாயந்தரம் நித்ய
பாராயணம். சிறுவர்களை பக்தி மார்கத்தில் ஈடுபடுத்தியதற்க்கு அவர்தான் முக்கிய
காரணம். பக்கத்தாத்து கிருஷ்ணமூர்த்தி மாமா அர்த்த ஜாமத்திற்கு ஆஜர். அவர்தான் மணி
அடிப்பார். பிறகு வெளியில் இருப்பவர்களுக்கு தயிர் சாதம் வினியோகம்.
மற்றவர்களும் எழுதுவார்கள் என்பதனால் இத்துடன் என் நினைவுகளை
முடித்துக் கொள்கிறேன் பல வருடங்களுக்கு பிறகும் செம்மங்குடியில் கும்பாபிஷேகம் விமர்சையாக
நடப்பதுற்கு காரணம் செம்மங்குடி மஹா ஜனங்கள்தான். அவர்கள் அத்துணை பேருக்கும் அடியேனின்
நமஸ்காரங்கள்..
***2 மாதம்முன்பு பூர்வீக வீட்டை திரும்ப வாங்கி விட்டேன்
No comments:
Post a Comment