எங்கள் வரதராஜப் பெருமாள் கும்பாபிஷேக
மலர் என்றவுடன் கை பர பர வென்று ஏதாவது எழுத வேண்டும் என்று தோன்றினாலும், என்னுடைய இன்னொரு கண்ணான “கல்யாணீம் கருணா
கடாக்ஷ லகரீம்” என்று ஸ்ரீமத் ஆனந்தவல்லீ சௌபாக்ய பஞ்ச ரத்னத்தில் கொண்டாடப்படும்
எங்கள் ஊர் ஆனந்தவல்லீ யும் உடனுறை அகஸ்தீஸ்வரரும் நம் எல்லோரையும் ரக்ஷிக்க
வேண்டும் என்று பிரார்த்தித்து கொண்டு இந்த கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.
எங்கள் ஊரின் சிறப்பே, சங்கீத பிதாமகர் ஸ்ரீ.
செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் இருந்த இடம் என்பதும், ஸ்ரீ
வித்யா உபாசகர் என்று பெயர் பெற்று ஆனந்தவல்லியின் கிருபா கடாக்ஷத்தைப் பெற்று
இன்றும் எங்களை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கும் ஏகாம்பர சிவாச்சார்யார் அவர்களும், எங்கள் வாழ்வில் கல்வி என்ற ஒளி விளக்கை ஏற்றி பிரகாசிக்கச் செய்த, செம்மங்குடி உயர் நிலைப் பள்ளியும், ஜைனர்களுக்குக்
கோவில் உண்டு என்று பறை சாற்றி, எங்கள் ஊருக்கு அருகில்
இருக்கும் ஜைனன் கோவிலையும் சொல்லலாம்.
இதற்க்கு சிகரமாக “இல் வாழ்க்கை பண்பும் பயனும் அது” என்று திருவள்ளுவர்
சொன்னது போல், “அன்பையும் அறனையும்” பெற எங்களுக்கு துணையாக
இருந்த கோவில்கள்.
தஞ்சாவூர் பகுதியில் எந்த
கிராமத்தை எடுத்துக் கொண்டாலும், ஒரு சிவன் கோவில், ஒரு பெருமாள் கோவில், அக்ரஹாரத் தெரு, அதை சுற்றியும் பல தெருக்கள்.
எங்கள் தெருவும் அதற்கு விதி விலக்கல்ல. .
ஆனால் நான் பிறந்து வளர்ந்து
முதலில் “இது தான் உன் வாழ்க்கைக்கு ஆதாரம்” என்று என் பெற்றோர்களால்
காண்பிக்கப்பட்ட என் வரதராஜப்
பெருமாளையும், ஆஞ்சநேய ஸ்வாமியையும். ஆனந்தவல்லியையும் பற்றி எழுதுவதில் எனக்கு கர்வம்
உண்டு.
செம்மங்குடி வரதராஜப் பெருமாள்
“அவ்யாஜ கருணாமூர்த்தி” என்பதில் சந்தேகமில்லை. செம்மங்குடியில் பிறந்து, பல நாடுகளில், ஊர்களில் இருந்தாலும், பல விதமாக உதவிகள் செய்து
இந்தப் பெருமாள் கோவிலை சிறப்புறச் செய்து கொண்டிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு
முன்பு, பெருமாள் கோவிலில் ஸ்ரீ. சாயி பாகவதர் அவர்களால்
நடத்தப்பட்ட ராதா கல்யாணம் அதற்கு ஒரு சாட்சி.
இந்த ராதா கல்யாணத்தின் போது பல பேர் செய்து கொண்ட பிரார்த்தனைகள் நிறைவேறி
இருக்கிறது என்பதும் நாம் பெருமைப் படக் கூடிய ஒன்று.
பல நீங்காத நினைவுகள்:
நான் மேல் படிப்பு படித்து வேலை
கிடைக்காமல், நான் நம் பெருமாளை மனமுருக வேண்டிக்கொண்டு கிடைத்ததுதான் இந்தியன் வங்கி
வேலை. இதை இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது.
எங்கள் பெருமாள் கோவிலில் உள்ள
ஆஞ்சநேயர் முன்பு நின்று கொண்டு, என் அப்பா ஸ்ரீமான். ராமமூர்த்தி சாஸ்த்ரிகளுடன் சேர்ந்து சொன்ன விஷ்ணு
சகஸ்ரநாமம், என் தாயார். ஸ்ரீமதி. அலமேலு அம்மாளுடன்
சேர்ந்து செய்த கார்த்திகை பொரி உருண்டைகள், கோகுலாஷ்டமி
சீடை வகைகள், அது சீக்கிரம் தீர்ந்து விடுமே என்று
தூக்கத்தைத் தொலைத்த நாட்கள்....
பெருமாள் கோவில் தோட்டத்தில், பூ பறித்துக் கொண்டு
வரச் சொல்லும் என் அப்பாவின் வேண்டுகோளை சிரமேற்றுக்கொண்டு,
ஓடி ஓடி ஸ்ரீ கணேச மாமாவிற்க்கு போட்டியாக, பூக்களை பறித்து
கொண்டு வந்தது. படிப்பதற்க்கு சீக்கிரம் எழுந்தேனோ இல்லையோ,
பூ பறிப்பதற்கு, விடியற்காலையில் பூந்தோட்டதில் ஆஜர் !!
ராம நவமி யன்று கிடைக்கும், பானகம், நீர் மோர், குடை, பனை விசிறி
உட்பட எல்லாம் எங்களுக்கு வருஷத்தில் ஒரு நாள் கிடைக்கும் பொக்கிஷம்.. ஏகப்பட்ட
மாலைகளுடன் ஸ்வாமிக்கு ஸ்பெஷல் அலங்காரம். ஸ்ரீ ராம நவமி உத்சவத்தில், அக்கா மைதிலி காலத்தில் ஸ்ரீமான் நடேச ஐய்யர் கோவிலில் அமர்ந்திருக்க
அந்த வயது ஒத்த குழந்தைகள் உட்பட “ராம” நாமம் ஜபிக்கச் செய்வார். கடிகாரம்
வைத்துக்கொண்டு, ஒரு மிடுக்குடன், அதே
போல் எங்களுக்கு பயம் கலந்த மரியாதையுடன் இருந்த அவரின் ஆளுமை மறக்க முடியாது.
குழந்தைகளுக்கு அவர் காட்டிய அபரிமிதமான அன்பு, தாராளமாக
தரும் கல்கண்டு இத்யாதிகள். மறக்க முடியமா
?
புரட்டாசி சனிக்கிழமை வந்தால்
எங்கள் பெருமாள் கோவில் கோலாகலம் தான். அக்ரஹாரத்தில் உள்ள எல்லோரின் பங்கும்
இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்த்தில் என் அப்பா ஸ்ரீ ராமமூர்த்தி சாஸ்த்ரிகளும், பட்டாமணியராத்து ஸ்ரீ
சந்தான மாமாவும் சேர்ந்து “கோவில் கட்டளை” போல் ஒரு அமைப்பை ஏற்படுத்தி, வருடா வருடம் எல்லா புரட்டாசி சனிக்கிழமை உற்சவம் விமர்ஸையாக நடக்க
வித்திட்டார்கள். அதன் பலன் புரட்டாசி உற்சவம் இன்றும் ஜாம் ஜாம் என்று நடக்கிறது. எத்தனை பஜனைகள், சீதா
கல்யாணம், ராதா கல்யாணம், கச்சேரிகள், ஊரே கோலாகலம்தான். அந்த ராதா கல்யாண உற்சவங்கள் போட்ட விதை தான்
“அஷ்டபதி” கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு வெறி. அதற்க்கு பிள்ளையார் சுழி போட்டவர் எங்கள்
அபிமான குருநாதர் ஸ்ரீ. கோபால் சார் தான். “பாட்டுக்கார அய்யா” நாங்கள் அன்புடன் அழைக்கும் ஸ்ரீ செம்மங்குடி
ஸ்ரீனிவாச அய்யர் அவர்களின் புதல்வர் அவர், என் தாயார்
ஸ்ரீமதி அலமேலு அம்மாளுக்கு முத்துசாமி தீக்ஷதரின் “கமலாம்பா நவா வர்ண கிருதிகளை”
கற்றுக் கொடுத்திருக்கிறார். அதனால் சனிக்கிழமை பஜனை என்றால் இரவு 11 மணிக்கு
முடியும். எங்கள் ஸ்ரீ. ஸ்ரீனிவாச பட்டாச்சார்யாரும் பொறுமையுடன் இருந்து பிறகுதான்
அர்த்த ஜாம பூஜை நடக்கும். அவர் கொடுத்த உற்சாகத்தை என் வாழ் நாளில் மறக்கமுடியுமா?
வெள்ளிக் கிழமை கோலம் போடுவதற்க்கு
போட்டா போட்டி. மீனாக்ஷி மாமி, ஜயா மாமி, ருக்மிணி மாமி மற்றும் என் அம்மா என்று
பல பேர் அதில் முக்கிய அங்கம் வகிப்பார்கள். அப்புவாத்து சரஸ்வதி மாமியின் “கோமாளி மணி
அடிக்கும் கோலம்” மிகவும் பிரசித்தம். அப்புவாத்து லலிதா அக்காவின் முத்துப்
பாவாடை, முத்தங்கி ஏகப்பட்ட அலங்கார ஆபர்ணங்கள். இரவு 11 மணி வரை கோலம் போடுகிறேன் பேர் வழி
என்று அரட்டை அடித்து வீட்டில் திட்டு வாங்கியதை மறக்க முடியுமா ?
கார்த்திகை மாதத்து
“சொக்கபானை”. மார்கழி மாதத்து விடியற்காலை பனியில் தவ்ழ்ந்து வரும் பெருமாள்
கோவிலில் “இசைத்தட்டு” பாடல்கள். கொஞ்சம் சீரகம், மிளகு தாளித்து, செய்யும்
பொங்கல். மார்கழி மாதம் முழுவதும் தினமும் வீட்டில் பொங்கல் தான். அலுக்கவே
அலுக்காமல் “தேவாம்ருதம்” போல் அதை சாப்பிடுவோம். அதற்குப் பிறகு இன்று வரை அப்படி
ஒரு அமிர்தம் கிடைக்கவே இல்லை. இந்தப்
பக்கம் மார்கழி மாத திருப்பாவை, திருவெம்பாவை, அந்தப் பக்கம் “விஸ்வநாத ஆசாரி” புடை சூழ பாடிக்கொண்டு வரும் தேவாரம் {தில்லை வாழ் அந்தணர்க்கும் அடியார்க்கும் அடியேன்}.
இது போதாது என்று என் தம்பி ராஜகோபாலன் தோழர்களுடன் “ராதே ராதே” என்று பாடிக்
கொண்டுவர, பொங்கல் மணத்துடன், தெய்வீக
மணமும் கலந்து வரும்.
மார்கழி மாதத்தில் வாசலில்
கோலம் போடுவது என்பது ஒரு பெரிய சவால். யார் வீட்டில் முதலில் கோலம் போடுவது
என்பது முதல், பெரிய கோலம் யார் போட்டிருக்கிறார்கள், என்ன டிசைன், எத்தனை புள்ளி கோலம், வளைவு சுளிவுகள், என்பது வரை. மார்கழிப் பனிக்கும், பூசனிப் பூக்களை
அழகாக நடுவில் வைத்து, அதற்க்கு மேலும் அழகூட்டும்
கோலங்களும், நெய் மணக்க வரும் பொங்கல் வாஸனையும்.. அடடா.
எங்கள் கிராமம் தேவ லோகம்.....
சிறிய வயதில் “போகிற போக்கில்”
கற்றுக் கொண்ட பாடல்கள் என் வாழ் நாளில் ஒரு ஆசிரியையாக பல குழந்தைகளுக்கு பக்திப்
பாடல்களைக் கற்றுக் கொடுப்பதன் மூலம், நான் பிறந்த வீட்டுக்கு (செம்மங்குடிக்கு) பெருமை தேடி தருகிறேன் என்பதில் எனக்கு மிகவும்
மகிழ்ச்சி. திருப்பாவை, திருவெம்பாவை எல்லாம் கற்றுக் கொண்டு
பள்ளியில் முதல் பரிசு வாங்கியதை எப்படி மறக்கமுடியும் ?
எங்கள் பெருமாளுக்கு ஒரு கொலுசு
வாங்கிப் போட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது எங்கள் கிராமத்து ஜனங்களுக்கே
தெரிந்த ஒரு ரகசியம்.
எங்கள் ஊர் பெருமையை சொல்லி
மாளாது. இப்போது நினைதாலும் ஆச்சர்யமாக
இருக்கிறது. எங்கள் மூதாதையர் ஆசை ஆசையாக, மிகவும் கஷ்டப்பட்டு,
திரவியம் சேர்த்து, எத்தனை கும்பாபிஷேகம் நடத்தி
இருப்பார்கள் ? இப்போது இருக்கும், பஸ், ரயில், தொலை தொடர்பு, ஏன், மின்சாரம் கூட இல்லாத நிலையில் நடத்திய உற்சவங்கள் எத்தனை எத்தனை ? அவர்களையும் இந்த நிமிடத்தில்
நினைவு கூர்ந்து,
எல்லோருக்கும் வரதராஜப் பெருமாளின் கடாக்ஷம் கிடைக்கவேண்டும் என்று
பிரார்திக்கிறேன்.
No comments:
Post a Comment