இன்று பௌர்ணமி, (5-9-2017) கொஞ்சம் அபிராமி அன்னை
நினைவேந்தல்
என்னதான் ஆயிரம் செய்யுள் இருந்தாலும், அம்பாள் மேல்
தமிழில், அட்டகாசமான/மனதை வருடக்கூடிய “ஒரு செய்யுள் தொகுப்பு”, அபிராமி அந்தாதி
என அடித்துச் சொல்லலாம்.
தமிழில், தேவாரம், திருவாசகம் என்றும், ப்ரபந்தம்
என்றும் இருக்க, பெண் தெய்வத்திற்கு என்று தனியாக ஒரு தமிழ் அந்தாதி என்று ஒன்று
இருக்கிறது என்பதால் கூடுதல் பெருமை.
அபிராமி பட்டரைப் பற்றி, வாகீச கலாநிதி ஸ்ரீ கி. வா,
ஜகன்னாத அய்யர் அவர்கள் சொல்லும் வார்த்தைகள் இது:
“உபாசனையில் சிறந்து
விளங்கிய அபிராமி பட்டர், சரியை, சிறியை என்னும் இரண்டு சோபானமும் கடந்து யோக
நிலையில் யாமளையின் திருக்கோலத்தை ஆதார பீடங்களில் கண்டு கண்டு இடைப்பட்ட
கிரந்திகளைத் தாண்டி சென்று, பிரம்மாந்திரத்தில், சஹஸ்ர கமலத்தில், ஒளி மயமாக,
எழுந்தருளி இருக்கும் லலிதாம்பிகையின் திருவருள் இன்பத்தில் திளைத்து,
பித்தரைப்போல, ஆனந்த அதிசய வெறிமூண்டு உலவினார்”
இதற்கு மேல், அவர்
எழுதிய இரண்டு வரிகள் தான் TOP CLASS
“இவர் நிலையைப் பார்த்து ஏசுபவர்கள், ஏசுவதை காதில்
வாங்காமல் அபிராமி சமயம் நன்றென்று கடை பிடித்து, “உள்ளதே விளைந்த கள்ளால் உண்டான
களியிலே” பெருமிதத்தோடு மிதந்து வந்தார்”
கி. வா. ஜ அவர்களின்
தமிழின் ஆளுமையைப் பாருங்கள்
என்னைக் கேட்டால், மேற்
சொன்ன இந்த வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டாலே, பாதி அபிராமி பட்டராக
ஆகி விடலாம்
திருக்கடையூர் செய்த
புண்ணியம், மார்கண்டேயருக்கு மோக்ஷம் கொடுத்த இடம் என்பதும், அபிராமி பட்டருக்கு
அருளிய இடம் என்பதும் அம்பாள் பிரத்யக்ஷமாக எழுந்தருளி, அருள் பாலித்த இடம்
என்பதும் விசேஷம். அம்ருதகடேஸ்வரர் என்று இருக்கும் சிவ பெருமான், சற்று தள்ளி
நின்று, தன “உடனுரையை முன்னிலைப் படுத்தி, அருள் பாலிக்கும் இடம். சுவாமி என்னவோ
இரண்டாம் பக்ஷம் தான். அபிராமிக்கு முதல் இடம்.
திருமயிலை கற்பகாம்பா கபாலி மாதிரி..
அபிராமி அந்தாதிக்கும்
எனக்கும் பல தொடர்பு உண்டு
பழைய நினைவுகளைத்
தோண்டிப் பார்க்கும் போது,
ஆதி பராசக்தி என்று ஒரு படம் வந்தது.
அதில் “சொல்லடி அபிராமி” என்று ஒரு பாட்டு, T.M.சௌந்தர ராஜன் அவர்கள் பாடுவார். அப்போது
அபிராமி பட்டராக நடித்தவர், ஒரு உரியின் மேல் ஏறி நிற்க, இந்தப் பாடலை, கேதார கௌள ராகத்தில் பாட, அம்பாள் தன்னுடைய தோடை கழற்றி, வானத்தில் எறிய, அமாவாசை, பௌர்ணமியாக மாறும்.
அபிராமி பட்டராக நடித்தவர், ஒரு உரியின் மேல் ஏறி நிற்க, இந்தப் பாடலை, கேதார கௌள ராகத்தில் பாட, அம்பாள் தன்னுடைய தோடை கழற்றி, வானத்தில் எறிய, அமாவாசை, பௌர்ணமியாக மாறும்.
இந்த காட்சி, என் மனதை விட்டு அகலாமல் போனது. 25 வருடம் கழித்து நினைத்துப் பார்த்தாலும், என்
பக்தியை உரம் போட்டு வளர்த்த பல நிகழ்சிகளில் இதுவும் ஒன்று.
கருமண்டபம் என்ற ஒரு இடத்தில், (திருச்சியில்),
தேசியக் கல்லுரி அருகே, நாங்கள் வசித்து வந்த (வரும்) இடத்தில, ஒரு கீத்து கொட்டகை
சினிமா தியேட்டர். புதிதாக வந்தது. நான் அப்போது +2 படித்துக் கொண்டிருந்த நேரம்.
முதல் படம் “ஆதி பராசக்தி” போட்டார்கள்.
முதல் டிக்கெட் வாங்கி அந்தப் படைத்திருக்கு போனேன். அந்தப் படம் முன்னமே பார்த்திருந்தாலும் கூட,
புது தியேட்டர், முதல் படம், முதல் டிக்கெட் என்ற பெருமையைத் தட்டிச் சென்றது
மற்றொரு சமயம், துபாயில் வேலை பார்த்துக்
கொண்டிருந்த பொது, பால குமாரனின் “என் கண்மணித்தாமரை” என்ற ஒரு நாவல் , என்னுடைய அருமை நண்பர், சுப்பு
என்னிடம் கொடுத்தார். AGATHA CHRITY, LEN DEIGHTON, போன்ற
பல ஆங்கில நாவல்களைப் படித்து ஓய்ந்து போன நேரத்தில், இந்த புத்தகம்
கிடைத்தது. ஏதோ கொடுத்தாரே என்று படிக்க
ஆரம்பித்து முடிக்கும்போது, பால குமாரனின் எழுத்தின் மேல் ஒரு பிரமிப்பும்,
அபிராமி பட்டரின் கதையில் இருந்த ஒரு ஆழமான உண்மையும்/உணர்வும், என்னை திக்கு
முக்காடச் செய்தன. என்னை புரட்டிப்
போட்ட புத்தகம் “என் கண்மணித் தாமரை”.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், 3-4 நாட்கள் பைத்தியம் பிடித்தார் போல்
இருந்தேன். கமல ஹாசன் ஒரு படத்தில்
“அபிராமி அபிராமி” என்று அலைவாரே- அது போல.
பிறகு நான் குடும்பத்துடன், துபாயில் வசித்து
வரும்போது, என் நண்பரி மூலமாக தெரிந்த வீட்டில், அபிராமி அந்தாதி சொல்லிக்
கொடுக்கிறார்கள் என்று தெரிய வர, என் மகளை அழைத்துச் சென்று, அபிராமி அந்தாதியை கற்பிக்க
வைத்தேன். இன்று என் மகள், அபிராமி அந்தாதியைப் (புத்தகத்தப் பார்க்காமல்), 5-5 அந்தாதிகளாய் வேறு வேறு ராகத்தில்
பாடுவாள். என் மகளுக்கு நான் கொடுத்த
சொத்து இது என்று சொல்வதில் எனக்கு கர்வம் உண்டு.
ஒரு மாதம் முன்பு, என்னுடைய அருமை நண்பர்,
பிருந்தா மாணிக்கவாசகம் அவர்களின் புதல்வி அருள் ப்ரியா அவர்கள், மயிலாப்பூரில்,
அபிராமி அந்தாதி முழுவதும் பாட, (அதற்க்கு ஸ்ரீ கணேச சர்மா அவர்கள் முன்னுரை
வழங்கினார்), அதற்கு, என் மகள் PRAYER
பாடினாள்.
புலவர் கீரன் தன்னுடைய சொற்பொழிவில், அபிராமி
அந்தாதியப் பற்றி சொல்லாமல் இருக்க மாட்டார். அதில் சொல்லுவார் “அடியவர்களோடு கூடி
ஒரு வாழ்க்கை வாழ்ந்தால்தான், நம் வாழ்கை செம்மையாக இருக்கும் என்பதை, “நல்லோர்
இணக்கம்” என்று கூறி, அபிராமி
அந்தாதியில்
இருந்து ஒரு அந்தாதியைக் குறிப்பிடுவார்>
சென்னியது உன்
பொற்றிருவடித் தாமரை- சிந்தையுள்ளே
மன்னியது உன்
திருமந்திரம்-சிந்துர வண்ணப்பெண்ணே
முன்னிய நின்
அடியாருடன் கூடி, முறை முறையே
பன்னிய தென்று முன்றன் பரம ஆகம பத்ததியே
இதற்கு அர்த்தம் தேவை இல்லை
இன்னொரு அந்தாதி
“
சொல்லும்
பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப்
பூங்கொடியே ! நின் புது மலர்த்தாள்
அல்லும் பகலும்
தொழும் அவர்க்கே அழியா அரசும்
சொல்லும் தவ நெறியும் சிவலோகமும் சித்திக்குமே
இதற்க்கு அர்த்தம் அவசியமே இல்லை. மிகவும்
எளிமையான தமிழில், ஆழமான அர்த்தத்துடன் அமைந்த வரிகள். புத்தம் புது மலர் போல் இருக்கும் உன்
திருவடிகளை பற்றுவோர்க்கு......மேலே உள்ள அந்தாதியில் இருக்கும் கடைசி வரியைப்
பார்க்கவும்.
இந்த அந்தாதி, காளிதாசனின் மிகப் பிரபலமான “வாகர்தாவிவ”
என்ற சம்ஸ்கருத ஸ்லோகத்தின் தமிழாக்கமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
காளிதாசனின், சம்ஸ்க்ருத ஆளுமை, அபிராமி
பட்டரின் தமிழ் ஆளுமை – இரண்டுக்கும் எடுத்துக்காட்டாக, இன்னொன்று-
உடையாளை
ஒல்கு
செம்பட்டுடையாளை
ஒளிர் மதிசெஞ்சடையாளை
வஞ்சகர் நெஞ்சடையாளை
தயங்கு நுண்ணூல்
இடையாளை
எங்கள் பெம்மான்
இடையாளை
இங்கு என்னை இனிப்
படையாளை
உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே
என்ன அட்டகாசமான அந்தாதி. அமுதினைப் பொழியும்
தமிழ்.
நேற்று, ஆஸ்திக
சமாஜத்தில் (5-9-2017) (ஆழ்வார்பேட்டை), ஸ்ரீ சுந்தர குமார் அவர்களின், சௌந்தர்ய
லஹரி உபன்யாசம் கேட்கும் பாக்கியம் கிடைத்தது. அதில், அவர் காளிதாசனைப் பற்றிச்
சொல்லும்போது,
“சியாமளா தண்டகத்தில், முதல் செய்யுளாக இருக்கும்
மாணிக்க வீணாம் என்று தொடங்கும் செய்யுளில், முழுவதும், “மா” வில் இருக்கும். அவர் மாதங்கி என்ற ஒரு வார்த்தையை முதலில் தேர்ந்து எடுத்து,.அதற்கு ஈடாக, ம வில் தொடங்கும் மற்ற வார்த்தைகளை தொகுத்துக் கொடுத்தார்”
மாணிக்க வீணாம் என்று தொடங்கும் செய்யுளில், முழுவதும், “மா” வில் இருக்கும். அவர் மாதங்கி என்ற ஒரு வார்த்தையை முதலில் தேர்ந்து எடுத்து,.அதற்கு ஈடாக, ம வில் தொடங்கும் மற்ற வார்த்தைகளை தொகுத்துக் கொடுத்தார்”
மாணிக்க வீணாம்
உபலாலயந்திம்
மதாலஸாம் மஞ்சுளா வாக்
விலாசாம்
மாஹேந்திர நீலத்யுதி
கோமளாங்கிம்
மாதங்க கன்யாம்
மனஸா ஸ்மராமி
காளிதாசன், பட்டர் – இருவருமே ASTHIKA’S
DELIGHT என்று சொல்லலாம்.
கடைசியாக, எனக்கு மிகவும் பிடித்த அந்தாதி
நாயகி, நான்முகி,
நாராயணி, கை நளின பஞ்ச சாயகி
சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு வாய்ஆகி
மாலினி, வாராகி, சூலினி, மாதங்கிஎன்று ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே
இதன் விளக்கம் “இலக்கிய பீடம்” என்ற இதழில்
திருமதி தேவகி முத்தையா (august 2006 edition) அவர்கள் ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். அதை என்
நண்பர், பசுபதி அவர்கள், அவரின் “blog” ல் வெளியிட்டு இருந்தார்
“அகில உலகத்திற்கும் நாயகி ஆனவளே
நான்கு முகங்கள் உடையவளே
நாரத்தில் (தண்ணீர்) இருப்பிடம் கொண்ட நாராயணின்
சஹோதரியாக, விஷ்ணு துர்கையாக இருப்பவளே, சம்புவின் சக்தியான சாம்பவியே,
எப்பொழுதும் மங்களத்தைச் செய்வதால், சங்கரி என்னும் பெயரை உடையவளே. கருமை நிறம்
பொருந்திய சியாமளா தேவியே, நச்சினை வாயில் கொண்ட நல்ல பாம்பை மாலையாகக் கொண்டவளே.
பன்றி முகத்தைக் கொண்டு, வாராகி என்னும் சக்தியாக இருப்பவளே, சூலத்தைக் கரத்தில்
கொண்ட சூலியே. யாழ்ப்பாணர்கள் எனும் இசை வாணர்கள் குலத்தில், மதங்க மாமுனியின் திருமகளாக
உதித்த மாதங்கியே
கொஞ்சம் மூச்சு விட்டுக்கொள்வோம்:....ஸ்ஸ்
அப்பாடா....
இவ்வாறு பல் வேறு வடிவங்களில் ஒளி வீசி, ஏக
சக்தியாக திகழும் அத்தகைய புகழினை உடைய உனது திருவடிகள் எம்போன்ற அடியார்க்கு
அரணாக அமையும், எந்நேரமும் காத்து நிற்கும்.
இதே அந்தாதியை, ஸ்ரீ. கி.வா.ஜா எப்படி
கையாள்கிறார் என்று பார்ப்போம்.
அம்பிகையே, ப்ரம்மாவிடத்தும், திருமாலிடத்தும்
இருந்து, ஸ்ருஷ்டி, ஸ்திதி ஆகிய தொழிலை நடத்துகிறார். ஆதலால், நான்முகி என்றும், நாராயணி என்றும் கூறினர்.
பிரம்ம சக்தியை “பிரம்மி” என்றும், விஷ்ணு
சக்தியை, “வைஷ்ணவி” என்றும் கூறுவார்.
நான்முகி- காகினிஎன்னும் அம்பிகையின் மூர்த்திர
எனலுமாம்.
ஸ்வாதிஷ்டானத்தில், 6 இதழ் தாமரையில் காகினி என்றும் திருநாமத்துடன்
பொன்னிறம் பூண்டு நான்கு முகங்களோடு அம்பிகை வீற்றிருப்பதாக கூறுவார் யோகா நூலார்.
லலிதா சஹாஸ்ரனமத்தில்- வரும் சதுர் வக்த்ர
மனோஹரா.. மேற்சொன்ன விளக்கத்திற்கு ஏற்றார் போல் இருக்கும்.
வாராகி- பராசக்தி வராகனந்தநாதர் என்பவருக்கு,
வராஹத் திருமுகத்துடன் தரிசனம் தந்தமையால், வாராகி என்னும் பெயர் பெற்றார்.
இவர் 79 வது பாடலான “விழிக்கே அருளுண்டு” பாடலைப் பாடும்போது,
அம்பாள் நேரே வந்து தன்னுடைய “தோடை” கழட்டி வானத்தில் எறிந்ததாகவும், அதன் பிறகு வரும் பாடல் எல்லாம், அபிராமியைப்
பார்த்துக்கொண்டு பாடினார் என்று சொல்லி,
என் நினைவேந்தலை முடித்துக் கொள்கிறேன்
No comments:
Post a Comment