Monday 15 May 2017

எங்கள் வரஹூர் கும்பாபிஷேகம்- 2-4-2017

இந்தக் கட்டுரையை, “வரஹூர் பெருமாள் தான் உனக்கு எல்லாம்”, என்று கை காட்டி, இன்று வரை பெருமாளின் கருணையை எண்ணி எண்ணி, புளகாங்கிதம் அடையும், பல வரஹூர் வாசிகளில் ஒருவனாக, வலம் வரச் செய்த என் பெற்றோர்களுக்கும்,  இந்த கோவில் முன்னேற்றத்திற்காகவும், கிருஷ்ணா லீலா தரங்கிணியை நாடு முழுவதும் பரப்ப பாடுபட்ட பல மகான்களுக்கும், வரகூரில் வேதம் கற்று இந்தியா முழுவதும் பிரபலமான/பிரபலப்படுத்திய பல வேத பண்டிதர்களுக்கும்,  சுவடு தெரியாமல், இந்த கும்பாபிஷேகத்திருக்கு பாடுபட்ட நல்ல உள்ளங்களுக்கும் சமர்பிக்கிறேன்.  

இந்தக் கட்டுரையை நான், டிரஸ்டி ஆக உள்ள, ஸ்ரீ சாந்து மாமா, ஸ்ரீ கணேசன் மாமா அவர்களுக்கும் சமர்பிக்கிறேன்.  தன்னலம் பாராமல், பல சவால்களை சர்வ சாதாரணமாக ஏற்று வெற்றிகரமாக, விக்ரமாதித்யன் போல, சற்றும் மனம் தளராமல், கும்பாபிஷேகத்தை மிக விமர்சையாக நடத்தியது மிகவும் போற்றுதலுக்கும், மரியாதைக்கும் உரியது. 

கிருஷ்ணா லீலா தரங்கிணி இயற்றி, அதை மூலவர் முன்பு பாடி, இந்த ஒரு சிறிய கிராமத்திற்கு, பெருமை சேர்த்த, நாராயண தீர்த்தர், முக்தி அடைந்த வரஹூரில் உள்ள,

-இரட்டைப் பிள்ளையார்க்கும்

-ஆனந்தவல்லி உடனுறை மஹா கைலாசநாத சுவாமிக்கும்

-ஸ்ரீதேவி பூதேவி உடனுறை வெங்கடேச பெருமாள் கோவிலுக்கும்

ஜீர்னோத்தாரண அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் கடந்த 2-4-2017 அன்று மிகச் சிறப்பாக நடை பெற்றது.

வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தைப் பண்ணிப் பார் என்று ஒரு வசனம் உண்டு. அத்துடன் கிராமத்தில் கும்பாபிஷேகத்தை  நடத்திப் பார் என்பதையும் தாரளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். கொஞ்ச நாட்கள் முன்பு, அதாவது இந்த கும்பாபிஷேகம் நடப்பதற்கு, சிறிது நாட்கள் முன்பு, அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.

வரகூரைச் சேராமல் இருக்கும், மற்ற ஊர் காரர்களுக்கு, இந்த ஊரைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக, 4-5 வரிகள் எழுதி விட்டு பிறகு கும்பாபிஷேகத்தைப் பற்றிச் சொல்கிறேன்.

கிருஷ்ணனின் லீலைகளை, அற்புதமாக, கிருஷ்ணா லீலா தரங்கிணி என்ற எளிய சம்ஸ்க்ருத பாடல்களின் மூலம் பிரபலப் படுத்திய, நாராயண தீர்த்தர் என்ற ஒரு யோகி வாழ்ந்து, முக்தி அடைந்த இடம்சம்பிரதாய பஜனையிலோ, ராதா கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளிலோ, தரங்கிணி பாடல்களைப் பாடி, கேட்பவர்களின் நெஞ்சம் குளிரச் செய்வார்கள்.

நம் வீட்டிலேயே, சில தரங்கிணி பாடல்களைப் பாடலாம். ஒவ்வொரு பாடல்களுக்கும் ஒரு பலன் உண்டு.  “க்ஷேமம் குரு கோபாலா” என்ற ஒரு பாடல் போதும், எந்த நேரத்திலும் பாடலாம்.

பல கோவில்கள் சிதிலமடைந்து, பூஜை செய்யக் கூட,  ஆளில்லாமல் இருக்க, இன்றும், நாராயண தீர்த்தர் அமைத்துக் கொடுத்த முறையில், சுவாமி புறப்பாடோ, உற்சவமோ,  இங்கு நடந்து கொண்டு இருக்கிறது.  உறியடி உத்சவம் ஒன்று போதும்.  வெண்ணைக் குடத்தை கையில் ஏந்தியபடி பால கிருஷ்ணர், வீதியுலா வருவதைக் காண கண் கோடி வேண்டும்.

இங்கு வந்து ஒரு முறை பெருமாளையும், சிவனையும் தரிசித்து விட்டுக் சென்றால், உங்கள் பிரார்த்தனை நிறைவேறும்.  இது சத்தியம்.

எங்கள் பெருமாள், பயத்தை அல்ல, பயத்தின் மூல காரணத்தை நாசம் செய்யக் கூடியவர். இது நாராயண தீர்த்தர் பாடிய, “பய காரண விநாசா” என்ற பாடல் மூலம், தெளிவாக அறியலாம்.

கும்பாபிஷேக நடந்த நாளிலும், அதற்கு முன்பாகவும், நடந்த மிக அருமையான, ஆச்சர்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், எங்கள் ஊர் பெருமாளின் அளப்பரிய கருணை உங்களுக்குப் புரிய வைக்க முயற்சி செய்கிறேன்

·      யோசித்துப் பார்த்தால், எனக்கே பிரமிப்பாக இருக்கிறது, ஒரு சுமார் 3000 பேர் கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்தனர்.  வரஹூரில், இந்தக் கூட்டம் மிகவும் அதிகம். இருந்தாலும், ஒரு விபத்தோ, அசம்பாவிதமோ இல்லாமல், எல்லோருக்கும் உணவு, தண்ணீர் இவை அனைத்தையும் ஏற்பாடு செய்து தரப்பட்டது. 
·   வேத பிராமணாள் அவர்களுக்கு தங்குவதற்கு இடம் மற்றும் சாப்பாடு மிகப் பெரிய சவால். அத்துடன்,  50 சிவாச்சர்யாள், 30 பட்டாச்சார்யர், இவர்களுக்கும் தங்குவதற்கு இடம், சாப்பாடு, இதுவும் பெரிய சவால் என்றே சொல்லவேண்டும். எல்லோருக்கும் ஒரு விக்னமும் இல்லாலாமல் அழகாக நிர்வாகம் செய்திருந்தார்கள்

·       கோவில் சாமானோ, நல்ல மளிகை சாமான்கள் வாங்க வேண்டும் என்றாலோ, தஞ்சாவூரோ, இல்லை, திருக்காட்டுப்பள்ளிக்கோ அல்லது திருச்சிக்குப் போகவேண்டும்.
 
இது எல்லாம் இருந்தும், ஐந்து நாள் யாக சாலை அமைத்து,  50 வேத பிராமணாள் வந்து 5 நாட்கள் பூஜை பண்ணி, பூர்ணாஹுதி முதற்கொண்டு, அழகாக  arrange பண்ணியிருந்தார்கள். 

ஹோம ஆஹூதிக்காக,  75 தான்யங்கள் + சாமான்கள், மொத்தமாக 40 தட்டுக்கள், ஒரு நாளைக்கு 2 தடவை.  இவ்வளவையும், சரியாக வைத்து, சரியான சமயத்தில் கொண்டு வந்து கொடுத்து, பூர்ணாஹுதி சிறப்பாக நடை பெற, ஒரு dedicated team, அமைக்கப்பட்டது.

சாமான்கள் கிடைத்து, கொண்டு வந்ததைச் சொல்வதா, அதை சரியாக பிரித்து, தட்டில் போட்டு வைத்ததைச் சொல்லவா, அல்லது அதை சரியான நேரத்திற்கு எடுத்துச் சென்ற, அந்த ஒரு team ஐ சொல்வதா ?  அபாரம் !!
ஒரிஜினல் பட்டு, எல்லா பூர்ணாஹுதிக்கும், எல்லா காலத்திற்கும், எல்லா சுவாமிக்கும் வாங்கி இருந்தார்கள்.  எந்த விதத்திலும், compromise ஆகாமல், 100% dedication உடன் அமைந்த கும்பாபிஷேகம் இது.

·        பூஜை அன்று சன்யாசிகள் வந்தால் விசேஷம் என்று கருத  இரண்டு சன்யாசிகள் வந்து, கும்பாபிஷேகத்தை கண்டு,  வந்திருந்தவர்களையும் ஆசிர்வதித்தனர். சத் குரு கடாக்ஷம் என்பது எவ்வளவு அரிது,  சர்வ சுலபமாக எங்களுக்குக் கிடைக்கச் செயதனர்.

·        மிகச் சிறந்த ஜோதிடர் ஒருவர், சாந்து மாமாவிடம், கும்பாபிஷேகம் முடிந்து, சில நாட்கள் கழிந்து  சொல்லும்போது அவர் சொன்னது

“முதல் நாள், சந்நியாசி பூஜை என்று ஒரு “சம்ப்ரதாயம்” உண்டு.  அதற்கு காஞ்சி மகா பெரியவர்,  சூக்ஷ்மமாக வந்திருந்து ஆசிர்வதித்ததையும், சிவன் கோவில் கும்பாபிஷேகத்தில் பக்கத்தில் இருந்து பார்த்ததும் சத்தியம், மேலும் யாக சாலையில் “எதேஷ்டமாக” சாப்பிட்டார்” என்பதையும் சொன்னார்”

இந்த ஜன்மத்தில் வரகூர் காரர்கள் செய்த மிகப் பெரும் பாக்கியம் இது.  அவரை பக்தர்கள் நாம் பார்க்க முடியாவிட்டால் கூட, அவர் நம்மைப் பார்த்தார் அல்லவா, அது போதும்.

·      பாலாலயம் செய்த பொது, மிக சிறிய தொகைதான் இருந்தது. Demonetisation  என்ற ஒரு புதிய அரசாணை  மூலம், பண வரத்து மிகவும் குறைந்து விட்டது.    பழைய நோட்டுக்களை கொடுத்தாலும் வாங்க முடியாத ஒரு நிர்பந்தம். மேலும்  income tax exemption என்று சொல்லக்கூடிய ஒரு 80 G benefit கூட  இல்லாமல்,  ஆரம்பித்த, இந்த திருப்பணி, 22 நாட்களில்,  43 லட்சம், வசூலை  எட்டியது.

·          வேதத்திற்கு முக்யத்துவம் கொடுக்கும், வரஹூரில்,

1.   சுக்ல யஜுர் வேத பாராயணத்திற்கு, கர்நாடகாவில் இருந்து, வேத பிராமணர்கள் வந்திருந்தார்கள்.

2. அதர்வண வேத பாராயணத்திற்கு, ஆந்த்ராவிலிருந்து,  வேத பிராமணர்கள் வந்திருந்தனர்

3.   வரஹுர் பாட சாலை வாத்தியார், வரஹூர்காரர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய சொத்து.  யாக சாலையில், அவரின் அர்ப்பணிப்பு வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒன்று.   இளம் வயதுக்காரரான அவர், தன்னுடைய கணீர் குரலினால், யாக சாலையில் மந்திர உச்சாடனம் செய்து, பக்தி ப்ரவாஹத்தை கூட்டினார்.  முதல் நாளில் யாக சாலை பூஜைகள் முடிய 11 மணி ஆன பின்பும் கூட,  கொஞ்சம் கூட சிரமம் தெரியாமல், பக்தி வெள்ளத்தில்  திளைத்தோம்.

4.   வரகூரில், பாட சாலையில் படித்து வரும், வேத பண்டிதர்களின் “நிறைவான் வேத உச்சாடனம்”  வைகுண்ட நாதனான வெங்கடேச பெருமாளின் செவிக்கு மிகப் பெரும் விருந்து என்று சொன்னால் மிகை ஆகாது.

·    ஒரு பக்தர் சொல்லும்போது,  “யாக சாலை சிவன் கோவிலுக்கும்,  பெருமாள் கோவிலுக்கும் ஒரே இடத்தில் அமைந்தது, மிகவும் உசத்தி. இது போல் அமைவது மிகவும் ஆச்சர்யமான ஒன்று.  சிவ-வைஷ்ணவ பேத மில்லாத ஒரு மிகச் சிறந்த ஊராக, வரகூரை சொல்லலாம்” என்றார்.  யாக சாலை அமைந்ததின் மூலம், அந்த இடம் சுத்தபடுத்தப்பட்டு, நமக்கு ஒரு தோட்டமோ, அல்லது வேறு கோவில் சம்பந்தமான விழாக்களோ நடத்துவதற்காக, ஒரு இடம் கிடைத்து விட்டது என்பதும் ஒரு உண்மை.  ஈசான மூலையில் அமைந்த இடம். இது இன்னொரு பெருமை.
·   
   மிகவும் ஆச்சர்யமான ஒரு ஒற்றுமை, சிவன் யாக குண்டம், மூலவர் “சிவன்” விக்ரஹத்துக்கு “இணையாக” (in line), அம்பாள் யாக குண்டம், அம்பாள் சன்னதிக்கு இணையாக அமைந்ததுதான்.

·  முதல் நாள் ‘அக்னியில்” பெருமாள் எழுந்தருளியது, அந்தப் படத்தைப்  பார்த்தவர்களுக்கு புரியும்.
·  “யந்த்ரம்”-சுவாமிக்குக் கீழே வைக்கக் கூடிய யந்திரங்கள், மிகவும் பக்தி ச்ரத்தையுடன், வர வழைக்க்கப் பட்டு தினமும் நித்ய பூஜை செய்யப்பட்டு சுவாமிக்கு அர்ப்பணம் செய்யப் பட்டது.

இந்த யந்த்ரம் கிடைத்ததே ஒரு அருமையான கதை. எங்கு கிடைக்கும் என்று கேட்டு, ஒரு வழியும் புலப்படாமல் தவித்த போது, கும்பகோணத்தில் ஒரு இடத்தில் கிடைக்கும் என்று விஷயம் தெரிய, அங்கு போய் அவரிடம் பேசியபோது, யந்திரம் செய்பவர்,  “அம்பாள் எந்த திசையை பார்த்து நிற்கிறாள்”, என்று கேட்டார். பின்பு தான் தெரிந்தது, ஒவ்வொரு திசைக்கும் வேறு வேறு யந்திரம் உள்ளது என்று.  யந்திரம் செய்பவர், அதை ஆரம்பித்து செய்யும் வரை சாப்பிட மாட்டாராம். பல கடுமையான விரதம் இருந்து, இந்த யந்த்ரத்தை செய்வர்ர்கள்.

பிறகு அந்த யந்திரத்தை,  ஸ்ரீ வித்யா உபசகர்களிடமும், ஜப ஹோமங்கள் செய்து வரும் ஒரு சிறந்த “சிவசார்யாரிடம் கொடுத்து, அவர்கள் “லலிதா சஹஸ்ரநாமம்” போன்ற பல மந்திரங்கள் சொல்லி, தினமும் சர்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்து,  அந்த யந்திரத்தில், அம்பாளை, 45 நாட்கள் ஆவாஹனம் செய்து, கடைசியில்,  கோவிலுக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டது

சிவன் கோவிலில் உள்ளசுப்ரமணிய சுவாமி யந்திரத்திற்கு, ஒரு அன்பர் தனியாக நன்கொடை கொடுத்தார்.  அம்பாளின் யந்திரத்திற்காக, தன்னுடைய தாலியில் இருந்த 3 குண்டு, ஒரு மோதிரம் கழட்டிக் கொடுத்த ஒரு பெண்மணி- சொல்லிக் கொண்டே போகலாம் !!!!

·        “கைலை வாத்தியம்” என்று ஒன்று உண்டு.  15 பேர் அடங்கிய ஒரு குழு. சென்னையில் இருந்து வந்து அருமையாக வாசித்தார்கள்.  இது கிராமத்து கும்பாபிஷேகத்தில் பார்க்க முடியாத ஒன்று.

·  கேள்வி கேட்காமல் அள்ளிக் கொடுத்த பக்தர்களும்  பெயர் சொல்லாமல் பெருமாளுக்கும், சிவனுக்கும் யந்த்ரம், செய்ய முடிவு செய்த பொது, மஞ்சள் கிழங்கைக் கட்டிக்கொண்டு திருமாங்கல்யத்தைக் கழட்டிக் கொடுத்த, பெண்களும், இந்த க்ஷேத்ரத்திற்கு, பெருமை சேர்க்கும் விஷயம்.

·  வேத பாடசாலை மறைந்து வரும் இந்நாளில்,10-15 வேத பாடசாலை குழந்தைகள் எல்லா வேளையும், யாக சாலை வந்து, கற்றுக் கொடுத்த வேத பாடங்களை அழகாகச் சொன்னது, பார்க்க பார்க்க ஆனந்தம்.  வேத பாடசாலையைப் பற்றிக் குறிப்பிடும்போது,  சமீபத்தில், ஒரு வாஸ்து நிபுணர், (மிகப் பெரிய மகான் கூட) “ஈசான்யத்தில் வேத பாட சாலை வரஹுரில் தான் உள்ளது. எனக்கு தெரிந்து எங்கேயும் பார்க்க வில்லை.” என்றார்.  மேலும் சொல்லும்போது, ”வரஹுரில், வேத பாடசாலை அமைந்திருக்கும் இடம், மிகவும் உயர்ந்த இடம் என்றும் சரஸ்வதி கடாக்ஷம் பரிபூர்ணமாக இருக்கும் இடம் என்றும், இந்த இடத்தில வேதம் படிக்கும் குழந்தைகள், மிகுந்த அறிவோடும், நிறைந்த அறிவோடும் இருப்பார்கள்” என்று சொன்னார்.  இந்த பாடசாலையை அமைத்துக் கொடுத்த நம் முன்னோர்களை நினைத்துப் பெருமைப் பட வேண்டிய விஷயம் இது.

·  ராஷ்ட்ரபதி விருது வாங்கிய வரகூர் கல்யாண சுந்தர சாஸ்திரிகள், ராஷ்ட்ரபதியின் “certificate of honour” விருது வாங்கிய சம்ஸ்கருத பேராசிரியர், வரகூர் எஸ்.  வி. குருசுவாமி சாஸ்த்ரிகள்,  வரகூர் பிரமஸ்ரீ மார்க்க சகாயம் ஆகிய பல வேத வித்வான்களை உருவாகிய ஊர், நமது வரஹூர்.  இதை விட பெருமை வேறு என்ன வேண்டும் ?

·  கடைசியாக, அம்பாளுக்காக, 9 கஜம் புடவை special ஆக தறியில் நெய்யப்பட்டு வந்த புடவை. அதே போல், பெருமாளுக்கு பட்டு வஸ்திரமும் நெய்ததுதான்.

·        இது போல பல பெருமைகள்,  வரகூர் க்ஷேத்ரத்தில், சர்வ சாதாரணமாக, கும்பாபிஷேகம் அன்று அரங்கேறியது.  சொல்லிக் கொண்டே போகலாம்.

· மண்டலாபிஷேகம் முடிவதற்குள் இந்தக் கட்டுரையை பதிவு செய்ய நினைத்தேன்.  அதுவும் பெருமாள் அனுக்ராஹம்தான்.

·    தற்சமயம், சேங்காளிபுரம் சுப்ரமணிய தீட்சிதர் அவர்களின் இராமாயண நவாஹம், (9 days) உபன்யாசம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று 4 வது நாள்.  இந்த உபன்யாசம் முடியும் தினம், மண்டலாபிஷேகம் முடியும் தினம்- இரண்டும் ஒரே நாள் !!!!. இது தெய்வ சங்கல்பமா ? மனித முயற்சியா ?  பல கேள்விகளுக்கு,  ஸ்ரீதேவியை லாவகமாக அனைத்துக் கொண்டு, எல்லோருக்கும் அருள் பாலிக்கும் எங்கள் வரகூர் பெருமாளே பதில்.

·        க்ஷேமம் குரு கோபாலா...... “लोका: समस्ता: सुखिनो भवन्तु”



1 comment:

Unknown said...

Excellent description of the function and preparations. What a beautiful presentation Ramki has made. Ram Ki jai Ho.