Wednesday 15 July 2015

எங்கேயும்... எப்போதும்.. சங்கீதம்... சந்தோஷம்-கோடி நன்றி சொல்வோம் எம்.எஸ்.விக்கு



எம்.எஸ்.வி.யின் பாடல்கள் என்றாலே அதில் ஒரு துள்ளலும், துடிப்பும் நிச்சயம் கலந்திருக்கும். நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம்பெற்ற எங்கேயும், எப்போதும் பாடல் நிச்சயம் கேட்பவர்களை ஆட்டம் போட வைக்கும்.

மனதை மயக்கும் இனிமையான பாடல்களைத் தந்ததாலேயே அவருக்கு மெல்லிசை மன்னன் என்ற பட்டம் கிடைத்தது. கவிஞர்களின் பாடல் வரிகளுக்கு தனது இசையால் உயிர் கொடுத்தவர் எம்.எஸ்.வி

 எத்தனை எத்தனை பாடல்கள்.. எத்தனை உயிரோட்டமான பாடல்கள்.. எண்ணி முடியாது எம்.எஸ்.வியின் பெருமைகளை எடுத்து வைத்தால். ஜாம்பவான்கள் முதல் சாதாரணர்கள் வரை இவருக்குத்தான் எத்தனை எத்தனை ரசிகர்கள். கண்ணதாசனும், இந்த மெல்லிசை மன்னரும் சேர்ந்து விட்டால், அங்கு தமிழ் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும், இசை மழை பொழியும்..

குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும்.. ஆனால் இந்த மெல்லிசை மலர் நமது வாழ்க்கையில் ஒருமுறைதான் பூக்கும்.. ஆனால் பல தலைமுறைகளுக்கும் இதன் வாசம் தொடரும்..

எல்லாவற்றையும் கொடுத்து விட்டு போய் விட்டார் எம்.எஸ்.வி.. மறக்க முடியாத கனத்த நினைவுகளை நம்மிடம் விட்டு விட்டு

-
கவிஞர் வைரமுத்து

மெல்லிசை மன்னரின் இசைமூச்சு நின்றுவிட்டது என்று சொல்வதா? இந்த நூற்றாண்டில் அதிகமாக வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது என்று சொல்வதா? ஒரு பாட்டுச் சக்ரவர்த்தி மறைந்துவிட்டார் என்று சொல்வதா? எங்கள் பால்ய வயதின் மீது பால்மழை பொழிந்த மேகம் கடந்துவிட்டது என்று சொல்வதா? தமிழ்த் திரையிசைக்குப் பொற்காலம் தந்தவரே! போய்விட்டீரா என்று புலம்புகிறேன்

அரை நூற்றாண்டு காலமாய்த் தமிழர்களைத் தாலாட்டித் தூங்கவைத்த கலைஞன் இன்று இறுதியாக உறங்கிவிட்டார். அவரது இசை இன்பத்துக்கு விருந்தானது; துன்பத்துக்கு மருந்தானது. அவரது இசை தமிழின் ஒரு வார்த்தையைக்கூட உரசியதில்லை. எம்.ஜி.ஆர் - சிவாஜி என்ற இருபெரும் பிம்பங்களைக் கட்டியெழுப்பிய இசைச் சிற்பி. திராவிட இயக்க அரசியலைக் கட்டியெழுப்புவதற்கும் அவரது பாட்டு பயன்பட்டிருக்கிறது. தமிழர்களின் வாழ்வின் எல்லாச் சம்பவத்திலும் அவர் பாடல் புழங்காத இடமில்லை. தாலாட்டு முதல் ஒப்பாரி வரை எங்கள் வாழ்வோடு நடந்து வரும் பாடல்கள் மெல்லிசை மன்னர் படைத்தவை. ஒரு நகைக் கலைஞன் ஆபரணம் செய்வதற்காக சுத்தத் தங்கத்தில் கொஞ்சம் செம்பு கலப்பது மாதிரி கர்நாடக இசையில் மேற்கத்திய இசையைப் பொருத்தமாய்க் கலந்து புதுமை செய்தவர். அவர் தொடாத ராகமில்லை; தொட்டுத் தொடங்காத பாடலில்லை

ஒரு சகாப்தத்திற்கு எப்படி விடை கொடுப்பது? நெஞ்சு விம்முகிறது. காற்றுள்ள வரையில் அவர் கானங்கள் வாழும். "வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை எம்.எஸ்.வி"

Kamala Hassan’s Tribute
திரு எம்எஸ்வி பிரிக்க முடியாத வகையில் தமிழ் திரையுலக வரலாற்றோடு ஒன்றிவிட்டவர். தமிழ் மற்றும் தென்னிந்திய கலாசாரச் சித்தரிப்பின் அங்கம் அவர். எம்எஸ்வி பலரின் வாழ்வின் பின்னணி இசையாகி விட்டவர். அவரது இசை தங்கள் உள்ளங்களில் ஒலிக்க, கடந்த காலத்துக்குரிய ஏக்கத்துடன் அவர்கள் தம் வாழ்வையே நினைவு கூர்கின்றனர். அவரது தலைமுறையையும் காலத்தையும் கடந்த ரசிகர்கள் அவருக்குண்டு. இதற்கு என் மகள் ஸ்ருதி நல்ல ஒரு உதாரணம். அமெரிக்காவில் இசை பயின்று கொண்டிருந்த அவர், திரும்பிவந்தவுடன் திரு எம்எஸ்வியைச் சந்திக்க விரும்பினார். அவர் எம்.எஸ். வி.யின் ரசிகையாகியிருந்தார். எம். எஸ். வி அவர்களின் தோள்களில் புகழ் இலகுவாய் அமர்ந்திருந்தது. தன் புகழையும் பெருமையையும் அலட்சியப்படுத்தி பிறரது வயதையும் பொருட்படுத்தாமல் அவர்களை அவர் அடிக்கடி புகழ்வதுண்டு. அவரது உடலை மட்டுமே நாம் இழந்திருக்கிறோம். அவரது இசை எப்போதும் நம்மோடிருக்கும். தன் இசையால் என் வாழ்வுக்குச் செறிவூட்டிய அவருக்கு என்றும் என் நன்றிகள் உண்டு. அன்பன் கமல் ஹாஸன்

அவரது பாடல்கள் இன்றும் நேயர்கள் மனதில் மறையாமல் இருப்பதற்கு அவர் இசை கருவிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்காமல் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசை அமைத்தது. அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் என்றுமே மறையாது என்றும் காலத்தால் அழியாது நிலைத்து நிற்கும். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
எம்.எஸ்.வி மறைவுக்கு எஸ்.பி.பி
எனது ஆசான்... எம்.எஸ்.விஸ்வநாதன் எனது ஆசான், எனது தந்தை, எனது இசை. எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்துவிட்டார்.

அவருக்கு நடந்து கொண்டிருக்கும் இறுதி அஞ்சலியில் கூட கலந்து கொள்ள முடியாத நிலை எனக்கு வர வேண்டுமா? அந்த அளவுக்கு சிறிய நல்லதைக் கூட நான் எனது வாழ்நாளில் செய்யத் தவறிவிட்டேனா என்ன. இந்த நேரத்தில் தானா அமெரிக்காவில் இருக்க வேண்டும்.

நானும், இந்திய சினிமாவும் அனாதையாக நிற்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். கண்ணதாசனும் வாலியும் எழுதி வைத்த பாடல்வரிகளுக்கு மேலிருந்து அவர் இசையமைக்க இருக்கும் தெய்வீக இசையை கேட்க முடியுமா?

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ' வானில் முழு நிலவாக இருக்கிறார் அவர்" என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

எம் எஸ் விஸ்வநாதன் உருகி உருகி இசையமைத்த "மத்யமாவதி'யில் "முத்துக்களோ கண்கள், தித்திப்பதோ கன்னம்' "ஆபேரி'யில் "மலர்ந்தும் மலராத பாதி மலர் போல', "தங்கரதம் வந்தது வீதியிலே' பிருந்தாவன சாரங்கியில் பொன்னொன்று கண்டேன், பெண்ணங்கு இல்லை' என்ற மகத்தான வெற்றிபெற்ற பாடல்களை தமிழக மக்களால் என்றென்றும் நினைவில் இருக்கும்.

இசையின் சக்கரவர்த்தி மெல்லிசை மன்னர் எம்எஸ்வி அவர்கள் நம்பிடையே இல்லை.அவர் விட்டு சென்ற அவரின் இசை இந்த பிரபஞ்சம் முழுவதும் இசைக்கும்.பாசமலர் திரையில் இடம் பெற்ற அணைத்து பாடல்களும் வெற்றி பெற்ற பாடல்கள்தான்,அதில் மலர்ந்தும் malaraatha பாதி மலர்போல என்ற பாடலின் இசை என்னை மிகவும் கவர்ந்த பாடலாகும்.அண்ணன் தங்கை பாசத்தை விளக்கும் அருமையான கவியரசர் கண்ணதாசன் அவர்களின் வரிகளுக்கு மெல்லிசை மன்னர் தந்தான் இசை மிகவும் அருமை.மெல்லிசை மன்னரின் புகழ் என்றும் அழியாது,பல யுகங்களை கடந்து வாழும்.எங்கோ ஒரு முலையின் அவரின் பாடல் ஒலிக்கும் பொது அவரின் நினைவு நமது மனக்கண்ணில் வந்து செல்லும்.
உணர்வுகளை தொடக்கூடிய இசையை படைத்தவர். அதோ அந்த பறவை போல என்ற உற்சாகத்தையும் ஆடலுடன பாடலும் சுகம்தான், எங்கேயும் எப்போதும் நல்ல சங்கீதம் சந்தோஷம் தரும் என்பதையும், படைத்தானே, போனால் போகட்டும், எங்கே நிம்மதி என்று விரக்தியையும், தமிழுக்கும் அமுதென்றும், எங்கள் வாழ்வும் மங்காத தமிழுக்கு போற்றுதலும், மலர்ந்தும் மலராத மலரையும், அத்தைமடி மெத்தையடி என்று தாலாட்டையும், காலங்களில் அவளை வசந்தமாகவும், அத்தான் என்னத்தான் என்றும், அன்புள்ள மான்விழியே என்று காதலையும், புல்லாங்குழல் கொடுத்த மூங்கிலிலும், ஆயர்பாடி மாளிகையிலும், உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்று பக்தியையும் தத்துவத்தையும்... ம்ம் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அற்புதமான பாடல் வரிகளின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் சிறிதும் கலைத்துவிடாமல் அந்த பாடல் வரிகளை தன்னுடைய இனிய இசையால் இறவாப்புகழ்பெற வைத்த அற்புத மனிதன். தமிழிசைப் பிரியர்களையும், பாமரர்களையும், குழந்தைகள் முதல் பெரியோர் வரை தன்னுடைய இசைகேட்டு (புவி) அசைந்தாட செய்தவர். அவருடைய இசையை போற்றி பாதுகாப்பது நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும். கனத்த மனத்துடன், நான் நன்றி சொல்வேன் அந்த மன்னனுக்கு.
மனிதகுலம் தோன்றிய இந்த பல்லாயிரம் ஆண்டுகளில் அவர் பிறந்து வாழ்ந்து, இசைப் பொக்கிசங்களை வழங்கிய இந்த கால கட்டத்தில் நானும் பிறந்து அவரின் பாடல்களை கேட்டு மகிழும் பெரும் பாக்கியத்தை கொடுத்த அந்த ஆண்டவனை நன்றியோடு வணங்குகிறேன். ஏழு பிறப்பு என்பது உண்மை என்றால் அந்த ஏழு பிறப்பிலும் அவர் பிறந்து இசை வழங்க தொடங்கும்போது நானும் பிறந்து அவரது இசையை மீண்டும் மீண்டும் கேட்கும் அந்த பெரும் பாக்கியத்தை இறைவன் வழங்க பிரார்த்திப்பேன்.
எனது வாழ்க்கையின் பல நிகழ்வுகளை, அவரும் கவிஞரும் இணைந்து கொடுத்த பல பாடல்கள் நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். அவரது இசையின் ரசிகர்கள் வேறு இசையை பேருக்குத்தான் ரசிப்பார்கள். பின்னணி இசையிலும் இன்று இருப்பது போல அல்லாமல் கதையின் பாத்திரங்களின் எண்ணங்கள், செயல்கள் இவற்றுக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் இருக்கும் அவரது திறன் வியப்புக்கு உரியது.
ஒப்பிடமுடியாத ஒரு இசை. காலத்தால் மறக்க மறைக்க முடியாத இசை. மகிழ்ச்சி , துக்கம், தத்துவம் அனைத்திற்கும் பொருத்தமான இசை. உங்கள் இசையை மீண்டும் மீண்டும் கேட்டு நாங்கள் எங்களை ஊக்கபடுத்தி கொள்கிறோம். நீங்கள் இந்த உலகிற்கு தந்த இசைக்கு பதிலாக தர எங்களிடம் எதுவுமே இல்லை. உங்களை தாழ்மையுடன் இந்த தருணத்தில் வணங்கி எங்கள் மரியாதையை சமர்பிக்கிறோம். உங்கள் புகழ் எம்.ஜி.ஆர் , சிவாஜி,கண்ணதாசன் போல இந்த உலகில் நிலைத்து நிற்கும்....

No comments: